இறக்கி வைக்கும் கணம்


விடியல் மிகப் பிடித்தமான ஒன்றெனக்கு. காலை 4.57க்கே விழிப்பு வந்துவிட்டது. அப்படியே உருண்டபடி கை பேசி வழியே உலகத்தோடு உறவாடிவிட்டு, எழுந்து பல் துலக்கி தொலைக்காட்சியை முடுக்கியபோது வாசிக்கலாமே எனத் தோன்றியது. பின்னர் படித்துக்கொள்ளலாம் என அவ்வப்போது மடிக்கனிணியில் சேமித்து வைக்கப்பட்டதில் தொடங்க விரும்பினேன்.

இதுதான் என்றில்லாமல் எதையாவது படிப்போம் எனச் சொடுக்கினேன். வண்ணதாசனின் “தண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள்” சிறுகதை திரையில் நிரம்புகிறது. வாசிக்க வாசிக்க அந்த காந்தி டீச்சர் மனதுக்குள் நிரம்புகிறார். யானை கண்டு மிரளும் நமசு.... காந்தி டீச்சர் என அழைக்கும் நமசு அப்பா, காந்தி டீச்சர் வீட்டில் மறந்தும்கூட டீச்சர் என அழைக்காமல் காந்தி என்றே அழைப்பது. ஒரு இக்கட்டான தருணத்தில் நமசுவின் அக்கா சரசு காந்தி டீச்சர் வீட்டிலிருந்து வெங்காயச் சருகு புடவையோடு வருவதும், ஊஞ்சலில் தன் அப்பா அணைப்பில் சரசு சுருளும் தருணத்தில், சாப்பிடுகிற கையோடு நமசு அம்மா காந்தி டீச்சர் மடியில் படுத்து அழுவதுமென நெகிழ்ந்து குழைய எத்தனையெத்தனை தருணங்கள் அந்தக் கதையில். முடித்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சோடு இலக்கற்று வெறித்துக் கொண்டிருக்கிறேன்.

படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும் தம்பியின் மகள் உருண்டு காலைத் தூக்கி என் மகள் மேல் போட்டுக்கொள்கிறாள். முந்திய இரவு தம்பி மகள் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. இன்னும் மழலை இழையோடும் குரலில் மெல்லிய குரலில் அருகில் படுத்திருந்தோரிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கு விட்டுவிட்டுக் கேட்டது. கதை கேட்டவர்கள் வெடித்துச் சிரித்து அவள் சொன்ன கதையைச் சொல்ல ஆரம்பித்தார்கள். வெட்கத்தில் தலையணைக்குள் புதைந்துகொண்டாள்.

கதை வேறொன்றுமில்லை ”ஒரு ஊரில் பூசணிச் செடி ஒன்று இருக்கிறது. அந்த வழியாக பாரி மன்னன் தேரில் போகிறான். போகும்போது பூசணிச் செடி தளதளப்பாய் இருக்கிறது. பாரி மன்னன் போய்விட்டு திரும்பிவரும்போது பூசணிச் செடி வாடிப்போய்விடுகிறது. அதைப் பார்த்த பாரி மன்னன் தேரை அந்த பூசணிச் செடிக்கு கொடுத்துவிட்டு பஸ் பிடிச்சு ஊருக்கு வந்துவிடுகிறான்”.

காபி கொண்டு வந்த மனைவியிடம், ”பாவம் அந்த பூசணிச் செடி, பாவிப்பய பாரி மன்னன் தேர் கொடுத்ததுக்குப் பதிலா ஒரு போர் போட்டுக் கொடுத்திருக்கலாம்” எனச் சொல்கிறேன். கதை நினைவுக்கு வர உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை மெல்லமாய் தலை கலைத்து முத்திவிட்டுச் செல்கிறார். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைவிட பூசணிச் செடிக்குத் தேர் கொடுக்குமாறு பாரியைப் பணிய வைத்தவளின் பெருங்கருணை மகிழ்ச்சியளிக்கிறது.

காந்தி டீச்சரிடமிருந்து மெல்லிய தலையசைப்பில் விடைபெற்று அடுத்த சுட்டியைச் சொடுக்குகிறேன். அதுவும் வண்ணதாசன் கதை. ஏற்கனவே நெகிழ்ந்திருக்கும் நான் இன்னும் நெகிழ்ந்துபோகத் தயாரில்லை. வேறு எதாச்சும் தேடலாமா என நினைக்கிறேன். இல்லை… வாசி என வண்ணதாசன் இழுக்கிறார். எப்படி இந்த மனிதனுக்கு மட்டும் இப்படிப்பட்ட மனிதர்கள் வாய்க்கிறார்கள். ஒவ்வொருமுறை அவருடைய கதை வாசிக்கும்போது, அதில் நான் அவரையும் தேடுவேன். இதில் யாராக இந்த மனுசன் இருப்பாரெனத் தேடுவேன்.

ஒரு பறவையின் வாழ்வு. பால்காரர் என நினைத்துக் கதவு திறக்கும் நீலாவுக்கு முன் இரு கைகளையும் அணைத்துக்கொள்ளும் ஆவலோடு விரித்து நிற்கும் ஜானகி நிற்கிறாள். அவளோடு நாமும் அந்த வீட்டுக்குள் நுழைகிறோம். சுந்தரம், சீலன் என எல்லோரையும் ஆச்சரியமாய்ப் பார்க்கிறோம். அந்தக் கடிதம் சுமந்து வரும் சேதிகளின் கனம் எப்படி நம்மை மட்டும் அழுத்தாமல் விட்டு வைக்கும். அந்த இறகு மனதை வருடிக் கொண்டேயிருக்கிறது. பயந்ததுபோலவே மனதை நெகிழ்த்தவும், கனத்துப்போகவும் செய்துவிடுகிறார் வண்ணதாசன்.

வண்ணதாசனின் மனிதர்கள் மட்டும் கூடுதல் ஈரத்தோடே இருப்பதாக உணர்கிறேன். எப்போது வாசித்தாலும் அவரின் கதை மாந்தர்களில் ஒருவராய் நாம் மாறிவிடயியலுமா என நினைப்பதைத் தவிர்க்க முடிவதில்லை.

நேரம் கரைகிறது. மகள் ஓடி வந்து ஏதோ ஒன்றைச் செய்து வைத்திருப்பதாகவும் அதை உடனே பார்த்தாகவேண்டுமென்று இழுத்துச் செல்கிறாள். ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் நிரப்பி மூன்று காசுகளை வைத்து அதன் மேல் நீரோடு கவிழ்த்து வைத்து தம்பி மகளிடம் எதோ வித்தை காட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். எனக்கும் விளக்குகிறாள். புரிந்த மாதிரி தலையாட்டுகிறேன். சற்று நேரம் கழித்து இன்னும் சற்று மெனக்கெட்டு புரிந்து கொண்டிருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. எத்தனையெத்தனை நிகழ்வுகளை புரிந்தும் புரியாமலும் கடந்துபோக இப்போதிருக்கும் காலம் நம்மை பழக்கிவைத்து விட்டது.

அலுவலக வாயிலில் நின்று சாலையை நோக்கிக்கொண்டிருக்கிறேன். வழக்கத்தை விட மனது நெகிழ்ந்திருக்கிறது. நேராக வந்த கார் ஒன்று வலது ஓரமாக ஒதுங்கிறது. பின்னால் வந்த பைக் நபர் தடக்கெனத் தடுமாறி நிற்கிறார். பக்கவாட்டில் வந்து கார்காரரைக் கண்டபடி திட்டுகிறார். கை காட்டாமலோ விளக்குப் போடாமலோ திரும்பிவிட்டார் போலும். நொடிப்பொழுது நிகழ்வுதான். இத்தனைக்கும் மெதுவாக வந்த கார்தான். அத்தனை திட்டுமளவிற்கான பெரிய குற்றமில்லையென என் புத்தி நினைக்கிறது. திட்டும் நபருக்கு விடியலிலிருந்து சேர்ந்த வேறு காரணங்களும் இருக்கலாம். முன் இடது பக்க இருக்கையில் இருக்கும் சிறுமி அதிர்ந்து போய் பைக் ஆளைப் பார்க்கிறாள். பைக் ஆள் நகரும் வரை ஒருவரும் இறங்கவில்லை. 




கதவைத் திறந்துகொண்டு சிறுமி முதலில் இறங்குகிறாள். அவள் முகம் இருண்டிருக்கிறது. ஓட்டுனர் இருக்கையிலிருந்து முதிர் இளவயது நபர் இறங்கிறார். அப்பட்டமான கிராமத்து நபராய்த் தெரிகிறார். சிறுமி கண்ணாடி மூடப்பட்ட பின்பக்கக் கதவைத் திறந்துவிடுகிறாள். ஒரு பாட்டி வயிறு புடைத்த வயர் கூடையோடு இறங்குகிறார். முன்பக்கக் கதவு கண்ணாடியை காலை உதைந்துகொடுத்துக்கொண்டு ஏற்றுகிறாள். அவர் பாட்டியிமிருந்து பையை வாங்கிக்கொள்கிறார். பையில் பிளாஸ்க் ஒன்று நீட்டிக்கொண்டிருக்கிறது. புரிந்துவிட்டது, அருகிலுள்ள மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அநேகமாக அந்தச் சிறுமியின் அம்மாவுக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கலாம், இவர்கள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்திருக்கிறார்கள் என நானாக கற்பனை செய்துகொள்கிறேன். கற்பனையிலும் கூட ஒரு குழந்தைப் பிறப்பையே மனம் நினைக்க விழைகிறது. ஒருவேளை அந்தச் சிறுமியின் தாய் வேறு ஏதாவது காரணத்திற்காகவும் கூட மருத்துவமனையில் இருக்கலாம். இந்த கற்பனைகளுக்கு அடங்காத ஏதாவது ஒன்றாகவும் அல்லது அப்படி எதுவுமே இல்லாமலும் கூட இருக்கலாம்.

வண்ணதாசனின் பாத்திரங்கள் விடைபெற இந்த மூவரும் மனதில் இடம் பிடித்துக்கொண்டார்கள். அந்த நபர் திட்டிவிட்டுச் சென்றதை அந்தச் சிறுமி, அந்த நபர், அந்த பாட்டி மூவரும் இந்த தினத்தின் எந்தக் கணத்தில் இறக்கி வைப்பார்கள்.

-


4 comments:

vasu balaji said...

you made my day:)

சேக்காளி said...

//அந்தச் சிறுமி, அந்த நபர், அந்த பாட்டி மூவரும் இந்த தினத்தின் எந்தக் கணத்தில் இறக்கி வைப்பார்கள்?//
ஒரு வேளை நீங்கள் சொன்னது போல் அந்த சிறுமியின் அம்மாவிற்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்குமாயின், அந்த சிசுவை காணும் போது அத்தனை பிரச்னைகளும் மறந்து விடாதா என்ன.
//படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும் தம்பியின் மகள் உருண்டு காலைத் தூக்கி என் மகள் மேல் போட்டுக்கொள்கிறாள்//
இதை காணும் போது மயிலிறகு வருடல் சுகம் வாய்த்திருக்கும் தானே.

test said...

வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

Unknown said...

superb artical ...