ஆசை தோசை அப்பளம் வடை

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் மட்டும் மகள்கள் விரும்புவதை நிறைவேற்றிவிட கொஞ்சம் கூடுதலாய் விரும்புகின்றனர். தம்பி மகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன் அப்பாவின் முகம் முழுதும் ஒப்பனைகள் செய்து, உதட்டுச்சாயம் பூசி, புருவம் சுற்றி பொட்டு வைத்து கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு விடுமுறை மதியத்தில் எவரோ கதவைத் தட்டியிருக்கின்றனர்.

அந்த அழகிய தருணம் குறித்து என் மனைவி விவரித்துக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்த என் மகளுக்குப் பொறுக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு நான்தானா கிடைத்தேன்!? மதியம் பசியாறிவிட்டு அமர்ந்திருந்த என்மேல் பாய்ந்தவளின் ஆசை சரிதான். ஆனால் அது ஆசை மட்டுமில்லை, பேராசை. பேராசை என்றுமே தவறுதானே?. உறங்காமல் இருந்ததாலோ என்னவோ முகத்தை விட்டுவிட்டு முடிமேல் ஆசை கொண்டு அதை வடிவம் மாற்ற விரும்பிவிட்டாள். 

”அப்பா… உங்களுக்கு ஸ்பைக் ஹேர் ஸ்டைல் பண்றேம்பா” என்றவள் என்னை அமேசான் காடுகளில் தினமும் குளித்து முடி உலர்த்துவன் என்று நினைத்தாளோ!? அல்லது தன் தந்தையாகப்பட்டவனுக்கு தன் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்கூட முடி இருக்கலாம் என்று நினைத்தாளோ!? தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் நினைப்பும் ஆசையும் அவள் கண்ணை மறைத்திருக்க வேண்டும்.

சீப்பை எடுத்து அங்குமிங்கும் கிடந்த முடிகளை என்னென்னவோ செய்ய முயற்சித்து, எதுவும் செய்யமுடியாமல், தனது தோல்வியையும் ஒப்புக்கொள்ள முடியாமல் துவண்டு சோர்ந்து விட்டாள். என்னை மாதிரி ஆட்களுக்கு முடிவெட்டுவோர் எத்தனை சிரமப்படுவார்கள் என்பது அவளுக்கு கொஞ்சம் ஆறுதலை அளித்திருக்கலாம். அடுத்த முறை தப்பித்தவறி எர்வாமாட்டீன் விளம்பரம் வந்தால் தாவிப்போய் தொலைக்காட்சியை அணைத்துவிட வேண்டும்.

முடி குறைவாய்ப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மகள்களின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போவதும் எத்தனை துன்பமென்று!.

-

4 comments:

vasu balaji said...

:( aamaam

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - இந்த முடி வெட்டிக்கறதெல்லாம் மூனு மாசத்துக்கு ஒருக்கா வச்சிக்க்லாம் -நமக்கெல்லாம் எதுக்கு முடி வெட்டணும் - சரியா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

mohamed salim said...

சீப்பை எடுத்து அங்குமிங்கும் கிடந்த முடிகளை என்னென்னவோ செய்ய முயற்சித்து, எதுவும் செய்யமுடியாமல், தனது தோல்வியையும் ஒப்புக்கொள்ள முடியாமல் துவண்டு சோர்ந்து விட்டாள். என்னை மாதிரி ஆட்களுக்கு முடிவெட்டுவோர் எத்தனை சிரமப்படுவார்கள் என்பது அவளுக்கு கொஞ்சம் ஆறுதலை அளித்திருக்கலாம். அடுத்த முறை தப்பித்தவறி எர்வாமாட்டீன் விளம்பரம் வந்தால் தாவிப்போய் தொலைக்காட்சியை அணைத்துவிட வேண்டும்.

:​-))))))))))

ஜா.முஹையத்தீன் பாட்ஷா said...

ha..haa..haa. azhaku