ஒரு கணமும் உறையாப் பேனா மைச் சொட்டுகளும்








இரவு பகலாய் நெய்தலோ
எதுகை மோனைகள் கோர்த்தலோ
அடித்துச் சிதைத்துத் திருத்துதலோ
சல்லடை கொண்டு சலித்தலோ
அவசியமில்லை ஓர் கவிதை சமைக்க

ஆனந்தக் கண்ணீரை நினைவூட்டும்
இரு சொட்டுப்  பனித்துளிகள்

ஊளமூக்கைப்  புறங்கையால் துடைத்து
உதடுகளில் மீசை வரையும் மழலை

அம்மாவின் கழுத்து கவ்வி
தொட்டிலாடும் நாய்க்குட்டி

விரைந்து கடக்கும் யாரோ ஒருத்தி
விட்டுப்போன மல்லிகை வாசனை

அடிவயிறு தாங்கும் நிறைமாதக்
கர்ப்பிணியின் கைகளில் படியும் துடிப்பு

புல் வேர் கருகும் வெம்மைச்  செம்மண்
போர்த்தும் முதற் பெருமழை

தேர்நோம்பித் திருவிழாவில் பிள்ளையின்
தலைகோதும் பள்ளிப் பருவத் தோழி

கை குலுக்களில் சிகரெட் வாசனையை
பூசிப்போன விற்பனை பிரதிநிதி

நம்பிக்கையின் முனைகளை மட்டும்
சிதைத்த ஒரு சின்னத் துரோகம்

இதில் ஏதோ ஒரு கணமும்
உறையாப் பேனா மைச் சொட்டுகளும்
ஒரு வெற்றுத்தாளும் போதும்
ஒரு கவிதை சமைக்க
 
-

8 comments:

கும்மாச்சி said...

நல்ல கவிதை. உண்மை எந்த பொருள்கொண்டும் கவிதை சமைக்கலாம்.

Ramani Prabha Devi said...


அற்புதம்.. வரிகளும் எண்ணங்களும்...

Anonymous said...

wow.. superb.. true sayings.. exact feeling with good expressions...

ராமலக்ஷ்மி said...

அருமை.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அருமையான கவிதை - உண்மை கவிதை சமைக்கக் கரு தான் தேவை - அழகான சொற்களில் கருவினைக் கவிதையாக மாற்றலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Veera D said...

எளிமை வியாபித்த கவிதை வரிகள்....அழகு...அழகு...பேரழகு....

-வீரா

Arun Prasath said...

appadi ezhudha dhan muyarchikkiren

Namakku munnadhu dhan varukiradhu

Anonymous said...

அம்மாவின் கழுத்து கவ்வி
தொட்டிலாடும் நாய்க்குட்டி!!!! nice lines