கசியும் மௌனம்

ஒரு மௌனத்தின் முடிச்சுக்குள்
மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும்
என் நாவிலிருந்து ஒரு சொல்லைப்
பறித்துவிடத் துடிக்கிறீர்கள்

பிறந்த குழந்தையின்
முதல் அழுகை சிதறும் நேரத்தில்
மரணம் மொய்க்கும் சொற்களைக்
கோர்க்க நிர்பந்திக்கிறீர்கள்

ஒரு முத்தத்தின் உச்சத்தில்
முயங்கிக் கிடக்கையில்
துரோகக்கறை தோய்ந்த சொற்களை
பொறுக்கச் சொல்கிறீர்கள்

நீள் பயணத்துக்கு ஆயத்தப்படுகையில்
காலணிகளைப் பிடுங்கிக்கொண்டு
முற்சொற்களை அணிந்து
நடைபயில பணிக்கிறீர்கள்

நிதானித்துக் கொண்டிருக்கிறேன்
பேச்சு உளி கொண்டு
மௌனத்தின் உச்சியில்
இடைவிடாது அடிக்கிறீர்கள்

மௌனத்தின் இறுக்கத்தில்
மூச்சுத்திணறிப் பிதுங்கும் சொல்
மரணத்தில் மூழ்கி
உதித்து வெளியேறலாம்

இப்போதும்கூட மௌனத்தின்
அடர்த்திக்குள் மூச்சு முட்டியபடி
மௌனமே எனது மொழியெனும்
வார்த்தைகளை கசியவிடுகிறேன்

*

2 comments:

Prapavi said...

அருமை!

ezhil said...

அருமையான மௌனம்....