கோபத்தை மட்டும் வேகமாய்
உடனுக்குடன் வெளிப்படுத்தும் மனது, அன்பையையும், நன்றியையும்
அதே வேகத்தில் வெளிப்படுத்துவதில்லை!
-0-
இன்றைக்கு தேதி கிழிக்க மறந்து
போனேன். அதனால் நேற்றிலேயே வாழ்ந்துவிட்டேன்.
#அடங்கப்பா எத்தன பல்பு! :)
-0-
பைக்ல இன்டிக்கேட்டர் இருப்பது
ஆயுதபூஜைக்கு பொட்டு வெச்சு பூ
மாட்டுறதுக்கு மட்டும்னு பலபேரு நினைக்கிறாங்க போல!
-0-
ஞாயிறு பிற்பகல் நகரப்
போக்குவரத்தைப் பார்த்தால், 50 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டதுபோல் தோன்றுகிறது.
-0-
குடும்பத்தில் காட்டும் எல்லாக் கோபங்களுக்குப் பின்னாலும்
ஒரு அன்பு இருக்கின்றதென்பதை தெரிவிக்க
மறந்து விடுகிறோம்
-0-
தெளிவாக இருக்க முயல்வது
போன்ற கிறுக்குத்தனத்திற்கு நிகர் ஏதும் இல்லை!
-0-
டாஸ்மாக் வாசலில் தள்ளுவண்டியில் ’கம்மங்கூழ்’
விற்பவன் ஏமாளியாகவும், புத்திசாலியாகவும், கருணை மிகுந்தவனாகவும் தெரிகிறான்.
-0-
நெருக்கடி மிகுகையில், விதவிதமாய்ப் பற்றும் கரங்களில் கடவுளை
உணர்கிறேன்!
-0-
கம்மஞ்சோற்றை முதன் முதலில் படைத்தவன்/ள், ரொம்ப நாள்
டாவடிச்சு போக்கு காட்டிய ஜீவனிடமிருந்து
சூடாகாவோ / சில்லுனோ முத்தம் வாங்கிய ஒரு
நேசிப்பு மிகுந்த தினத்தில்தான் உருவாக்கி,
இப்படி பழைய சோறாக குடிக்க
வேண்டும் என பக்குவமும் சொல்லியிருக்க
வேண்டும்!
-0-
எல்லா கேள்வி, புகார்களுக்கு
ஒற்றை முத்தம் பதில், தீர்வாக
அமைந்து விடுவதுண்டு. சில பொழுது இல்லாத
கேள்வி, புகார்களை எழுப்பியும்விடும்!
-0-
எதாச்சும் தத்துவத்தைப் போட்டு கீழே ”-யாரோ”
இப்படிப் போடுறாங்களே, இந்த ”-யாரோ”ங்கிறது
யாரா இருக்கும்?
-0-
போனில் ”அஞ்சே நிமிசத்துல
கூப்பிடறேங்க”னு சொன்ன ஒருத்தரைக்கூட,
அஞ்சேகால் நிமிசத்துலகூட நான் கூப்பிட்டதேயில்லை #நல்லா
வருவடா (மீ –>என்னை)
-0-
தென்னை உண்டு இளநீர்
குடிப்பதில்லை, பனை உண்டு நொங்கு
உண்பதில்லை..... ஆனாலும் பிள்ளைகள் வளர்கிறார்களாம்.
நாங்கள் வாழ்கிறோமாம்!
-0-
ஒவ்வொரு தினத்தையும் இன்பத்திலோ,
துன்பத்திலோ நனைத்து உலரப் போடுகிறோம்!
சில தினங்கள் மட்டும் அவ்வளவு எளிதில்
உலர்வதில்லை!
-0-
பம்ப்செட் தண்ணி எடுக்கலைனா சாணியைக்
கரைச்சு ஊத்தினா தண்ணி எடுக்கும்னு
கண்டுபிடிச்ச விஞ்ஞானி நம்ம தமிழக விவசாயியாகத்தான்
இருப்பார்!
-0-
டீ கடக்கார அண்ணே,
சூரியன் சார் புண்ணியத்துல கொதிக்கிற
பைப் தண்ணிய புடிச்சு தூளு
சக்கரை போட்டு டீ தர்றீங்களே,
ஒரு எட்டணா குறைச்சிக்கபடாதா?
-0-
மதிய சோற்றைவிட குழம்பு,
ரசம் இருமடங்காக இருக்கும் நாட்களில் சமூகம் ஏதோ சேதி
சொல்லவிரும்புவது புரிகிறது. #வெயில்ல யோசிக்கத்தான் முடியல
-0-
வாசிக்கிற லட்சணத்துல பார்த்தா, கையில் இருக்கும் புத்தகங்களை
வாசித்து முடிக்கவே இன்னொரு ஜென்மம் தேவைப்படும்போல
இருக்கே! #சோம்பேறித்துவம்
-0-
நமக்கு ’கெடுதல் நிகழப்போவதாக’
மனது கற்பனை செய்த அளவிற்கு,
நிஜத்தில் நிகழ்ந்திருக்குமானால் நம் எவராலும் வாழ்ந்து
கொண்டிருக்கவே முடியாது!
-0-
பிறழ்வும் இனிதே! பிடித்திருக்கும் தருணங்களில்.
-0-
சட்டத்திற்குள் அடங்குவதே அழகு என்பதும் மாயை.
-0-
இருப்பதை விட, நம்மை கூடுதல்
அழகாய் காட்டும் நிழற் படங்களை வெளியிடுவது
ஒரு வித போதையோ?
-0-
கெட்டவனா/ளா இல்லாம இருக்கிறதுதான்
பெரிய விசயம்!
-0-
விடியலின் வர்ணம் ஊருக்கு ஊர்
வேறுபடத்தான் செய்கிறது
-0-
காலை மினுமினுக்கும் மேக்கப்பில்
பார்க்கும் முகங்களைவிட, களைத்து வாடிய மாலை
நேரத்து முகங்கள் வெகு இயல்பாய், கூடுதல்
அழகாய் இருக்கின்றன
-0-
கொதிக்கும் வெயிலில் பெட்ரோல் தீர்ந்து வண்டியைத் தள்ளுபவன் துரதிருஷ்டசாலியாகவோ, பாவப்பட்டவனாகவோ மட்டுமே இருக்க வேண்டும்
என்பதில்லை. சரியான நேரத்துக்குப் பெட்ரோல்
போடாத சோம்பேறியாகவும் கூட இருக்கலாம். இறங்கும்
இடம் தெரியாத பயணங்களும், வாழ்வில்
தவிர்க்க முடியாதவை!
-0-
யுத்தமில்லா உலகை, போர் மூலமா
தீர்மானிக்க முடியும்?
-0-
"சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்ததுபோல்"
# இப்படி யாருய்யா கற்பனை செஞ்சது. ஒரு
மாதிரி ”பிசுபிசு”னு இருக்காது
-0-
விளையாட்டா கன்னத்தில் அடித்த மகளுக்கு முத்தம்
தந்தால், ”இதுக்கு திருப்பி அடிச்சேயிருக்கலாம்”ங்குது # கரண்ட் இல்லாட்டியும் பல்பு
மட்டும்
-0-
காதுல செல்போன் வெச்சுட்டு
போஸ் கொடுத்த ரியல் எஸ்டேட்
ஆளுக, இப்ப டேபிள்ல லேப்டாப்
வெச்சுட்டு போஸ் கொடுக்கிறாங்க #டெக்னாலஜி
இம்ப்ரூவ்டாம்
-0-
ஒரு வேலை ரொம்ப
கடியா இருக்கும்னு 10 நாளா தள்ளிப்போட்டேன். வேறு
வழியின்றி இன்றைக்கு எடுத்தேன். 4 மணி நேரத்தில் ஓவர்
#கேடுகெட்ட முன்முடிவு
-0-
தோல்விகள், துன்பங்கள் என வலிக்கவலிக்க சுயசரிதை
எழுதும் வாய்ப்பு வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே
அளிக்கப்படுகிறது!
-0-
சில பிரச்சனைகள் எந்த
ஒப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டது!
-0-
இணைய சமூகதளங்களில் சாதி,
கட்சி, சினிமா என மக்கள்
அடித்துக் கொள்வதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட, இவர்களுக்கு
சாதி / அரசியல் / சினிமா குறித்த உணர்வுகளை
ஊட்டிய தலைகள்(!), தங்கள் எதிரிகளைச் சந்தித்தால்
நிகழ்ந்துவிடாது...
இத்தனைக்கும் அவர்களின் கல்வியறிவு (கல்விக்கும் பக்குவத்திற்கும் தொடர்பில்லையெனினும்) இங்கேயிருப்போரைவிட சிறிது குறைவாகவும்கூட இருக்கலாம்!
-0-
நெருக்கடியான தருணங்கள் வாழ்க்கை குறித்த புரிதலோடு, அன்பாய்,
பரிவாய், கதகதப்பாய்ப் பற்றும் கரங்களையும் இனம்
காட்டுகிறது!
-0-
IPL மேட்ச் பார்த்துட்டிருந்த நண்பர்
இன்னுமா Nokia போன் வெச்சிருக்கீங்னு கேட்டாரு,
நான் இன்னுமா IPL பாக்றீங்கனு கேட்டேன் #ஏன் முறைக்கிறாரு!
-0-
ரொம்ப பிசியா இருக்கிற
ஆஸ்பத்திரில ஒருபொழுது இருந்து பார்த்தாத் தெரியும், உடல் ஆரோக்கியத்தோட வாழ்ந்துட்டு
இருக்கிறதே எத்தனை பெரிய வரம்னு!
-0-
காதுகள் இரண்டாக இருக்கும்
போதிலும், வாய் ஒன்று மட்டுமே
இருப்பதென்பது ஏனோ அடிக்கடி மறந்து
போய்விடுகிறது!
-0-
மன இடுக்கெங்கும் நிரம்புகிறது
வெயில்!
-0-
ரயில்ரோட்டோரம் கெடக்குற இரும்பை பேரீச்சம்பழத்துக்கு போட்டாலே,
இந்தியாவுல இருக்கிறவங்களோட இரும்புச் சத்துக்குறைபாட்டை சரி செய்திடலாம்.
-0-
நிஜமா சொல்றேன் “ஓசி
சோத்துக்கு” ருசி அதிகம்! :)
-0-
தெருவில் சண்டை போடுபவனுக்கு எப்போதும்
சண்டை முக்கியமில்லை வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்!
-0-
குளிர்காலத்துல பேங்க் போனா A/cயை 16லவெச்சு
முக்காமணி நேரம் வெயிட் பண்ணவெச்சாங்க,
இன்னிக்கு போனா A/cயை 30லவெச்சுட்டு 3 நிமிசத்துல துரத்துறாங்க?
-0-
ட்விட்டர்ல யார்யாரையோ நான் ஃபாலோ பண்றேன்,
யார்யாரோ என்னை ஃபாலோ பண்றாங்க,
என்னை நான் ஃபாலோ பண்றேனானு
மட்டும் தெரியல!
-0-
90 நிமிசம் லேட்டா வர்ற
ரயிலுக்கு என்னத்த "பயணிகளின் கனிவான கவனத்திற்கு" வேண்டியிருக்கு.
"கடுப்பான கவனத்திற்கு"னு வேணா சொல்லுங்க.
-0-
அதென்ன சூரியன் சார்,
சினிமா தியேட்டர் வாசல்ல மணிக்கணக்கா நிக்கிறவங்கள
விட்டுட்டு, ஒன்னேகால் நிமிசம் சிக்னல்ல நிக்கிறவனை
இப்படி சுடுறீங்க!
-0-
பல நேரங்களில் வேலை
செய்வது சிரமமில்லை. வேலை குறித்த முன்முடிவுதான்
சிரமப்படுத்துகிறது!
-0-
முதலில் தன்மீதும், அடுத்து
பிறர்மீது குற்றம் காணாத மனிதன்
சர்வநிச்சயமாக முன்னேறியே தீருவான்.
-0-
எங்கூர்ல கரண்ட் இருக்குனு சொன்னவங்களை
விட, இப்போ எங்கூர்ல மழை
பெய்யுது, குளுரடிக்குதுனு சொல்றவங்க மேலதான் ரொம்பப் பொறாமையா
இருக்கு!
-0-
எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கும், பல
நேரங்களில் அது தெரிவதில்லை, சில
நேரங்களில் தெரிந்து கொள்வதில்லை!
-0-
வாழ்க்கையிலுள்ள புதிர்களின் முடிச்சவிழும் தருணம் பயம் நிரம்பியது
-0-
தன்னை நோக்கி தட்டப்படும்
கைகளை பாராட்டு என நினைக்கும் கொசுவுக்குத்
தெரிவதில்லை ”இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்”
என்பது
-0-