அவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்

இப்பொழுதெல்லாம் மாதத்திற்கு இரண்டு முறை நடைபெறும் எங்கள் அரிமா சங்கக் கூட்டத்திற்கு என் மகளின் வருகை தவிர்க்க முடியாததாகிவிட்டது. அங்கு குழந்தைகளுக்கென தனியாக நடத்தப்படும் விளையாட்டுகளே முக்கியக் காரணம்

வழக்கம்போல் அன்றைக்கும் மிகச்சரியாக தாமதமாகவே அவளை அழைத்துக்கொள்ள வீடு சென்றேன். காத்திருந்து காத்திருந்து அழைத்துச் சலித்தவள், நான் செல்லும்போது வாசலில் காத்திருந்தாள். போனவேகத்தில் பைக்கில் ஏற்றிக்கொண்டு சிறிது தொலைவு கடந்தபோது வழக்கம்போல் வயிற்றைப் பிணைத்து பிடித்திருப்பவளின் கையில் ஏதோ ஒன்று கூடுதலாக இருப்பதை உணர முடிந்தது. பார்த்தால் செல் போன். பயன்படுத்திய ஒரு பழைய சிறிய போனில் எதற்கும் வீட்டிலிருக்கட்டுமே என ஒரு சிம் போட்டுவைத்ததை, ஆரம்பம் முதலே அது தன்னுடைய செல்போன் என சிரத்தையாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறாள்.

பலமாதங்களாக அதில் இருப்பது ரூ.3.73 மட்டுமே என்பதாலும், அதுவும் குறையாமலே இருப்பதாலும், அந்த செல் குறித்து பெரிதாக மெனக்கெடுவதில்லை. எப்போதாவது யாரிடமோ அவள் “என் போன்ல மூனு ரூபா எழுபத்தி மூனு காசு… அதும் எப்போ புடிச்சு அப்படியே வெச்சிருக்கேன் தெரியுமா?” எனச் சொல்வதைப் புன்னகையோடு கேட்டு நகர்வதுமுண்டு.

”எதுக்குடா செல் எடுத்துட்டு வந்தே”

”உங்களுக்கு கூப்ட்டுட்டு வெச்சிருந்தேம்பா, அப்படியே எடுத்துட்டு வந்துட்டேன்”

”செரி குடு” என வாங்கி அப்பொழுதே அணைத்து என் கால்சட்டைப் பையில் போட்டுக்கொண்டேன். அதில் ஏதோ ஒரு அற்ப திருப்தியையும் உணர்ந்தேன். குழந்தைகளுக்கு எதுக்கு செல்போன் எனும் பிற்போக்கு(!) எண்ணம் என்னுள் கொஞ்சம் அதிகம்!

***

எங்கள் சங்கத்திற்கென்று புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி புதிய கட்டிடத்தில் முதலாவது கூட்டம் அது. கூட்டம் நிறைவடைந்து. மூன்றாவது மாடியில் உணவரங்கம். முதல் கூட்டம் என்பதால் உணவு பரிமாறும் இடத்தில் ஒழுங்குபடுத்த முடியவில்லையென்பதால் கூட்டம் ஒருமாதிரி அல்லாடியது.

உணவுக் கூடத்தில் தட்டேந்திக் கொண்டிருந்தபோது மகள் தேடிவந்தாள்.

“சாப்ட்டியாடா குட்டி”

“சாப்ட்டேம்பா”

“செரி இரு…. சாப்ட்டு வந்துர்றேன்”

”என் செல்லக் குடுங்ப்பா” என அவளாகவே என் காற்சட்டைப் பையில் கைவிட்டு எடுத்துக்கொண்டாள்.

நான் சாப்பிட்டு கையளம்பும்போது, கட்டிடப் பொறுப்பு அலுவலர், ”சார் லிப்ட்ல யாரும் ஏறாம பார்த்துக்குங்க, ஜென்ரேட்டர்ல ஓடுது, மேலே போய் ஆஃப் பண்றேன்” என என்னை நிறுத்திவிட்டு ஓடினார்

நான் நின்ற இடத்தில் லிப்ட் மூடியிருந்தது. பொத்தானை அழுத்த வந்தவர்களை, ”படியில எறங்கிடுங்க, ஆஃப் பண்ணப்போயிருக்காங்க” எனத் திருப்பிவிட்டேன்.

லிப்ட் அணைக்கப்பட்டது. ஒரு சின்ன சந்தேகம் வந்தது. மூன்றாவது தளத்தில் மூடியிருந்தாலும் வேறு தளத்தில் அணைக்கும் போதுயாராவது ஏறியிருந்தால் என்னாகும் என்று.

அவரைக் கேட்டேன், “வேற யாராச்சும் லிப்ட்ல இருந்தா”

”எங்கேயிருந்தாலும் அடுத்த ஃப்ளோர்ல நின்னுடும் சார்”.

வீட்டுக்குக் கிளம்ப மகளைத் தேட ஆரம்பித்தேன். உணவரங்கத்தில் காணவில்லை. கீழே விளையாடிக் கொண்டிருக்கலாம் எனக் கீழே வந்தேன். எந்தத்தளத்திலும் இல்லை.

ஒரு கணம் வயிற்றில் ஒரு பந்து உருண்டது. ஒருவேளை லிப்டில் இருந்தால்? மீண்டும் மேலே வரை ஒவ்வொரு தளமாக லிப்ட் திறந்திருக்கிறதா எனத் தேடியபடி ஓடினேன். எந்த அறிகுறியும் இல்லை. லிப்டில் இருக்கக்கூடாது என நினைத்துக்கொண்டே அவளிடம் இருந்த போனுக்கு அழைத்தேன்

“அப்பா…. லிப்ட்ல இருக்கோம்ப்பா, கரண்ட் போயிடுச்சாட்ருக்குது, இப்ப என்ன பண்றது”

வாழ்க்கையில் முதன் முறையாக நிஜமாகவே மூச்சு அடைப்பதை உணர்ந்தேன்.

“நீ மட்டும்தான் இருக்கியா?”

“இல்லப்பா ஆறேழு பேர் இருக்கோம்”

கொஞ்சம் மூச்சடைப்பு தளர்ந்தது

”சரி… சரி…. ஒரே நிமிசம் பொறு, இப்ப ஆன் பண்ணச் சொல்றேன்” என்று சமாதானம் சொல்லிவிட்டு பணியாளரைத் தேடினேன். காணவில்லை. தேடினேன். தேடினேன்… தேடினேன்…. பதட்டத்தைக் கண்டு பலர் தேடத் துவங்கினார்கள். ஒருவழியாகக் கிடைத்தார்.

அதற்குள் மகளிடம் இருந்து அழைப்பு

“எப்பப்பா ஆன் பண்ணுவாங்க!?”

எனக்கு ஏனோ பயம் கூடியது.

“பொறு…பொறு…. இதோ வெறும் அரை நிமிசத்துல ஆன் ஆயிடும்டா”

அரை நிமிடம் அவ்ளோ நீண்ண்ண்ண்ண்………………டதா!?

லிப்ட் இயங்க ஆரம்பித்தது. வேறொரு தளத்தில் இறங்கி மேலே ஓடி வந்தாள்.

எதும் கேட்காமல், மெல்ல அணைத்தவாறு அழைத்துக்கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தேன்

இப்போது எதுவும் சொல்லவோ திட்டவோ கூடாது எனத் தீர்மானத்தோடு வார்த்தைகளை விழுங்கிக் கொண்டேன். குழந்தைகளிடம் செல்போன் இருக்கலாம் எனும் முற்போக்கு(!) புத்தி வந்தது.

வண்டியை எடுத்து சிறிது தொலைவு சென்றபின்

”எத்தனை பேருப்பா இருந்தீங்க?”

“ஏழு பேருப்பா”

”எல்லாமே கொழந்தைங்க தானா?”

”இல்லப்பா, நாங்க நாலு பேரு ஃப்ரெண்ட்சு, பெரியவங்க மூனு பேர்ப்பா”

”ஆஃப் ஆனவுடனே அவங்க போன் பண்ணியிருக்க வேண்டியதுதானே” அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை, அவளிடம் கேட்டேன்.

”அவங்களும் கூப்பிட்டாங்கப்பா, ஒருத்தருமே எடுக்கலையாம்”

கூட்டத்திற்கு சைலண்ட்-ல் தூங்க வைக்கப்பட்ட போன்கள் விழித்திருக்காது எனப் புரிந்தது.

“லிப்ட் நின்னவுடனே என்ன நினைச்சீங்க?”

“கரண்டு போயிருக்கும்னுப்பா”

”பயமா இல்லையா?”

”இல்லப்பா”

”அப்புறம் எதுக்குடா போன் பண்ணி எப்பப்பா ஆன் பண்ணுவாங்கனு ரொம்ப இதாக் கேட்டே”

அங்கையே எவ்ளோ நேரம் நிக்கிறதாம். போர் அடிச்சுது அதனாலதான் கூப்பிட்டேன்




மவனே, இந்த ”போர் அடிக்குது”ங்ற வார்த்தையை கண்டுபிடிச்சவன் மட்டும் எனக்கு எதிரில் அப்போது வந்திருந்தால், கொலைக்கேசு ஆனாலும் சரினு வண்டிய அப்படியே ஏத்திக் கொலை செய்திருப்பேன். அப்போது தென்படவில்லை, அவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 
*-*

13 comments:

ஆர்வ கோளாறு (இதுக்கு 'க்' போடணுமா?) said...

LOL! cool kid

vasu balaji said...

எப்பயாச்சும் குட்டிம்மாட்ட பேசி ஜெயிச்சதா இடுகை வருமான்னு பார்க்கறேன். நோ வே:)))

வில்லவன் கோதை said...

நல்ல பதிவு ! பாராட்டுக்கள் !
வில்லவன்கோதை

வில்லவன் கோதை said...

நல்ல பதிவு ! பாராட்டுக்கள் !
வில்லவன்கோதை

ராமலக்ஷ்மி said...

நல்ல அனுபவம்:))!

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - செல்ல மகள் லிஃப்டில் மாட்டிக் கொண்டு - போரடிக்கும் சூழ்நிலையில் - தாஙகள் பட்ட பாடு - நினைத்தாலே நெஞசம் நடுங்குகிறது - செல் ஃபோன் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சத்ரியன் said...

அப்பன்மார்களுக்கு புத்தி வரும்னு நம்பறேன்.

கதிரிடமிருந்து இன்னொரு அனுபவ விழிப்புணர்வு பதிவு.

பகிர்வுக்கு பாராட்டுக்கள் கதிர்.

க.பாலாசி said...

புள்ள ஒண்டியா மாட்டிருந்தா என்னாவறதுன்னு நெனச்சாவே பக்.பக்..னு இருக்கு...

'பரிவை' சே.குமார் said...

பாப்பாகிட்ட அண்ணன் பேசி ஜெயிக்கவே முடியாதுன்னு ஆயிப்போச்சி...

இருந்தும் பாப்பா தனியாக லிப்டில் மாட்டிக் கொள்ளவில்லை என்பது மனசுக்கு ஆறுதலாக இருந்தது...

இராஜராஜேஸ்வரி said...

குழந்தைகளிடம் செல்போன் இருக்கலாம் எனும் முற்போக்கு(!) புத்தி வந்தது.

Anonymous said...

nice blog..

Unknown said...

ஹ..ஹா..கண்டுபிடிச்சீங்களா அவனை..
ஆனா அவளுக்கு அன்னைக்கு போர் அடிச்சதால் தான் போன் அடிச்சுருக்கா...

Durga Karthik. said...

அந்த போனில் விளையாட வேண்டியது தானே பாப்பா.இருந்தாலும் இந்த அப்பாக்கள் குழந்தைகளோடு போகும் போது மட்டும் சில இக்கட்டுகள் ஏனோ?