சின்ன பல்பு
வழக்கம்
போல்தான் பொழுது விடிந்தது. ஆனால் இன்றைய செய்தித்தாள் இப்படியெல்லாம் செய்யுமெனக்
கனவில் கூட நினைக்கவில்லை. (கனவுல எத்தனையைத்தான் நினைக்கிறதாக்கும்). காலையில் மேலோட்டாமாக
செய்தித்தாளை புரட்டும் போது…
ஐந்தாம் பக்கத்தில் ஒருவரின் கருப்பு வெள்ளைப் படத்தோடு செய்தியும் வெளியாகியிருந்தது. அது மகிழ்ச்சியான சம்பவம் குறித்த படமும் செய்தியும். அந்தப்படத்தில் இருந்தவர்
எங்களுக்கு உறவினர்.
அதே செய்தித்தாளில் மூன்றாம் பக்கத்தில் ஒரு குழு வண்ணப்படம் வெளியாகியிருந்தது. நாட்டுக்கோழியில் பணம் கட்டிவிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அண்ணாந்து பார்க்கும் கூட்டத்தின் படம் அது. அதில் ஒரு ஓரத்தில் ஒருவர் இருந்தார். அவரும் எங்களுக்கு உறவினர்.
இப்ப மேட்டர் என்னான்னா....
அஞ்சாம் பக்கத்தில் கருப்பு வெள்ளை படத்தில் இருந்தவர் வீட்டுக்காரம்மாவுக்கு சொந்தக்காரரு.....
மூணாம் பக்கத்தில கலர் படத்தில கலெக்டர் ஆபிஸ் வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தவர் என்னோட சொந்தக்காரரு....
இது போதாதா, ஒரு குடும்பத்தில் பரபரப்புக்கும் கொண்டாட்டத்துக்கும்.....
இதனால் அறியப்படும் நீதி யாதெனில்……..
இனிமே அந்த ******** பேப்பரை வாங்குவதில்லை என முடிவு செய்திருக்கிறேன்! அப்படியே வீட்டுக்காரம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து வாங்கினாலும்..... அதை நான் படிக்கப்போவதில்லை......... என அந்த
பேப்பர் மேலேயே சத்தியம் பண்ணியிருக்கேன்.
பெரிய பல்பு
என்னைப்
பொறுத்த வரையில் பிள்ளையைப் பெற்று வளர்த்து, ஃபீஸ் கட்டுவதைவிடச் ரொம்பச் சிரமமானது,
காலையில் எழுப்பி, பல் துலக்க வைத்து பள்ளிக்கு கிளப்பிவிடச் செய்வதுதான்.
தொடர்ந்து
மூன்று நாட்கள் விடுப்பை என் அம்மாவின் வீட்டில் கொண்டாடிவிட்டு, மகள் முதல் நாள் இரவுதான்
வீடு திரும்பியிருந்தாள். பள்ளி செல்ல காலையில் சீக்கிரம் எழுப்ப வேண்டுமே என்று முதல்
நாள் இரவு கொஞ்சம் முன்னதாகவே உறங்கவைத்தோம். காலையில் எழுப்ப வழக்கப்போல் ஒரு யுத்தமே
நடத்தி, வழக்கம்போல் தோற்று, வழக்கம்போல் அவளாகவே எழும் நேரத்திற்கு இரண்டு நிமிடம்
முன்னதாக எழுந்ததை ஒரு மிகப் பெரிய சாதனையாக கொண்டாட முயற்சி செய்துகொண்டிருந்தேன்.
மகளோ வழக்கம்
போல் பல் துலக்குவதும், குளிப்பதும் தனக்கானது இல்லை என்பது போல்ஒரு பாடப்புத்தகத்தை
எடுத்துப் புரட்டிக் கொண்டேயிருந்தாள்.
”கண்ணு நேராச்சு… கெளம்பு பார்க்கலாம்”
”கண்ணு நேராச்சு… கெளம்பு பார்க்கலாம்”
“இருங்ப்பா…
ரிவிசன் பண்ணிட்டிருக்கேன்”
அப்பவே
அந்த வார்த்தையில் கொஞ்சம் சுதாரிச்சிருக்கனும். (நாமதான் கொஞ்சம் ட்யூப்லைட் ஆச்சே)
மூன்று
நாட்களாக, ஹோம்வொர்க் செய்கிறேன் என புத்தகப்பையை எடுத்துச்சென்றும், அம்மா வீட்டில்
ஒன்றுமே செய்யவில்லை என அம்மா ஏற்கனவே புலம்பியிருந்தார். அந்தக் கடுப்போடு….
“அப்ப
மூனு நாளா என்னதான் பண்ணினே” கொஞ்சம் கோபமும் வந்தது.
கடிகார
முள் எட்டு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது.
”மூனு
நாள் ஊர்ல இருந்தேன்”
“அப்போ…..
படிச்சிருக்க வேண்டியதுதானே”
”அப்பா…..
எல்லாம் நேத்தே படிச்சு முடிச்சுட்டேன்”
“அப்புறம்
இப்ப எதுக்கு படிச்சிட்டிருக்கே, கிளம்பாம!?”
“நான்
இப்ப படிக்கிறேனு உங்ககிட்ட சொன்னனாப்பா. ரிவிசன் பண்றனுதானே சொன்னேன். நேத்து படிச்சதை
இப்ப படிக்கிறதுக்குப் பேரு ரிவிசன்ப்பா”
கொஞ்சமும்
அலட்டிக்கொள்ளாமல், என் முகம் வித்தியாசமாக மாறுவதை மட்டும் குறுகுறுவென பார்த்துக்கொண்டேயிருந்தாள்
“அடேய்ய்ய்ய்ய்ய்…..
உனக்கு இதும் வேணும்… இன்னமும் வேணும்டா” என என்னையே பார்த்து பயங்கரமாக கத்தினேன்
ஆனால் கவனமாக, வெளியில் துளிகூட சத்தமே வராமல்.
-
7 comments:
எல்லோருக்கும் இருக்கும் அனுபவம், சுவை பட சொல்லி உள்ளீர்கள்... நன்றி...
சிந்தனாவாதிக்கே பல்பு கொடுத்துட்டாங்களே...:))
பல்பு வாங்கலியோ பல்பு......
மொத்த யாவாரமால்ல இருக்கு:))))))))))
பெரிய பல்ப் ரொம்பப் பிரகாசம்:))!
ஹ...ஹா... அருமை
நதிவதனா! நீ கலக்குற செல்லம்! :)
Post a Comment