தாம் புத்திசாலி எனும் எண்ணம் சிலருக்கு வலுவாக இருக்கும். பலருக்கு அதுவே மனதின் அடி ஆழத்தில் மென் புழுதியாகப் படிந்திருப்பதுண்டு. புத்திசாலி என்பதற்கு அளவுகோல் எதுவும் வைக்க முடியாது. அப்படியே அளவுகோல் என ஒன்றை வைத்தாலும், அது மிகப் பெரும்பான்மையானோருக்கு உடன்படக்கூடியதாக இருக்காது. பலருக்கு உடன்படாதது எப்படி பொதுவானதாகும்? தாம் புத்திசாலியென அடி மனதில் படிந்து கிடப்பதை சிலர் அதன் விதமாகவே அழகு பார்ப்பதுண்டு, சிலர் விரல் நுனிகளால் அதில் கோலமிட்டு புன்னகைப்பதுண்டு. வெகு சிலர் மட்டுமே ‘ஃப்பூ’ என ஊதி விட்டு அதனைக் கடந்து செல்வர்.
தன்னை ஏதோவொரு கணத்தில் புத்திசாலி எனச் சொல்வோர் அனைவருக்கும் பொது ஒற்றுமை ஒன்று உண்டு. அது, யாரோ ஒருவர் தன்னை ஒரு காலகட்டத்தில் ஏமாற்றிவிட்டதாக விரல் சுட்டுவது. ஏமாற்றப்பட்டது என்பது, பிள்ளைப் பிராயத்தில் மிட்டாய் தருவதாகச் சொல்லி தாராது போன நட்பு தொடங்கி, பருவ வயது காதல், மண வாழ்க்கை, பாகப்பிரிவினை, கொடுக்கல் வாங்கல், பணியிடம், தொழில் உள்ளிட்டவற்றில் யார்யாரோ தம்மை ஏமாற்றியதாக ஒவ்வொருவரிடமும் ஓர் பட்டியல் உண்டு. பட்டியலில் இடம் பெற்ற பெயர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் வேறுபடலாம். அதே சமயம், ஏமாந்தவர்களின் பட்டியல் அத்தனை சிறியதும் அல்ல.
இது எப்படி நிகழ்ந்தது எனக் கேட்டால், தன்னைப் பார்த்தாலே அவர்களுக்கெல்லாம் ஏமாற்றத் தோன்றியிருக்க வேண்டுமென ஒரே மாதிரி பதிலை பலரும் சொல்வதுண்டு. ”அது எப்படி ஒருவரைப் பார்த்தாலே ஏமாற்றத் தோன்றும்?!” எனும் கேள்வியை அவர்கள் ஏற்பதில்லை. ஏமாற்றப்பட்டது குறித்துப் பேசும்போது, தாம் அறிவித்த அல்லது தம் அடி மனதில் புழுதியாகப் படிந்திருந்த ‘புத்திசாலி’த்தனம் மிக லாவகமாக மறைக்கப்படும்.
தமக்கு நிகழ்ந்த ஏமாற்றத்தையொட்டி, தானே தன் மீது பச்சாதாபம் தேடுவது முதல் வன்மத்துடன் பழி வாங்குவது வரை பலவிதமான வினைகள் இங்கு ஆற்றப்படுவதுண்டு. அதைவிடுத்து, அந்த ஏமாற்றம் ஏன் நிகழ்ந்தது என்று சிந்திப்பது மிகக் குறைவு.
இங்கு இரண்டு வகையினர் உண்டு. ஒன்று ஏமாற்றுவோர் மற்றொன்று ஏமாற்றப்படுவோர். இவர்கள் எல்லா நேரங்களிலும் இதில் ஏதோ ஒரு வகையில் மட்டுமே நிலைத்து நிற்பது போல் கட்டமைக்கப்படுகின்றனர். அவர்களின் நிலைகள் சில நேரங்களில் மாறுவதுண்டு. அதே சமயம், வகை மாறினாலும், அது தற்காலிகம் என்று சொல்வதுபோலே, மீண்டும் தம் வகை இதுதான் என எது தனக்கு வசதிப்படுகின்றதோ அதில் நின்றுகொள்வர்.
ஏமாந்த, ஏமாற்றப்பட்ட மற்றும் ஏமாந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் அனைத்திலும் பெரும் பங்கு வகித்தது ஏமாற்றியவரா அல்லது ஏமாற்றப்பட்டவரா எனும் கேள்விக்கு ’ஏமாற்றியவர்’ என எளிதாகப் பதில் அளித்துவிடுகின்றனர். அது அவர்களுக்குப் பிடித்த பதில்தானே தவிர, அதுவே உண்மையாக இருப்பதில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஏமாறுவதில் பெரும் பங்கு வகிப்பது ஏமாற்றப்படுகிறவரே. காரணம் ஏமாற்றப்படுவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் அவர்கள் தன்னகத்தே கொண்டிருப்பார்கள்.
எந்தவிதமான பணம் ஈட்டுவது சார்ந்த ஏமாற்றங்களுக்குப் பின்னாலும், மிகப் பெரிய பேராசை ஒன்று இருந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அந்தப் பேராசையை வசதியாக மறைத்தபடி, ஏதோ தாங்கள்தான் உலகின் அதிசிறந்த அப்பிராணி போலவும், நியாயமான ஒன்றையே தாங்கள் அடைய முற்பட்டதுபோலவும், தங்களைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றியதாகவும் அவர்கள் நடந்துகொள்வதுண்டு. பொதுவாக நிதி மோசடிகளில் ஏமாற்றும் திட்டத்தோடு வருகின்றவர்கள் பெரும்பாலும் தனித்த மனிதர்களைக் குறி வைக்கமாட்டார்கள். பறவைகளுக்கு வலை விரிப்பதுபோல், தோதான இடத்தில் வலை விரிப்பார்கள். அவர்களுக்கு இதில் சிலரோ பலரோ சிக்குவார்கள் என்று தெரியும். ஆனால் யார் யாரெனத் தெளிவாகத் தெரியாது. ஆனால் ஏமாறுகின்றவர்கள் தம்மைத் தாமாக வெளிப்படுத்தி, தாம் சிக்குவதற்கு எந்த வலை சிறந்தது என்று மிக எளிதாகத் தேர்ந்தெடுத்து விடுவதுண்டு.
ஏமாறுதலில் அடுத்ததாகப் பெரும் பங்கு வகிப்பது அறியாமை. பெற்றிருக்க வேண்டிய அறிவினைப் பல்வேறு காரணங்களால் பெற முடியாது போவது ஒருவகையென்றால், பெற மறுப்பது மற்றொரு வகை. அறிவியல் அவ்வளவாக வளர்ச்சியடைந்திடாத காலத்தில் அறியாமையோடு இருப்பதற்குப் பல்வேறு சமாதானங்கள் இருந்தன. இன்றைய காலகட்டத்தில் அறியாமைக்குப் பெரிதும் காரணமாக இருப்பது, அறிந்துகொள்ள முற்படாததே. ஒருவரே நேரடியாக எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியுமா என்றால் 'ஆம்' என்று சொல்வது நியாயமான பதிலாக இருக்காது. எந்த ஒன்றிலும் அறிந்தவர்கள், அதில் குறைந்தபட்ச அறிவு பெற்றவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று பலரும் உண்டு. தன்னால் அறிந்துகொள்ள முடியாது என்றால் இவர்களில் யாரையேனும் துணைக் கொள்ளலாம். அதைவிடுத்து அறியாமை என்னுடைய அடையாளம் என்போரும், தாம் ஏமாறுவதற்குத் தயார் என்று சிவப்புக் கம்பளம் விரிப்பதும் நிதர்சனமான உண்மை.
அறியாமை போன்றே இருக்கும் மற்றொன்று அறிவுக் குறைபாடு. தான் ஈடுபட வேண்டியதில் மிக மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருப்பதில் திருப்தி கொள்வது, அறிந்தது போதும் என நினைப்பது, சில பல காரணங்களால் மனத்தடை ஏற்படுத்திக்கொண்டு மேலும் அறிந்துகொள்ள மறுப்பது ஆகியவை அறிவுக் குறைபாட்டிற்குக் காரணமாகின்றன. அறிவுக்குறைபாட்டோடு எதை அணுகினாலும், புரிதலின்மை ஓங்கி நிற்கும், புரிதலின்மை ஓங்கியிருக்கும் இடத்தில் முழுமையான புரிதலோடு வருகின்றவர் எளிதாக தனக்கான இடங்களைக் கைப்பற்றுவர். அவர்கள் ஏதேதோ செய்து ஏமாற்றி அந்த இடத்தை அடைந்துவிட்டதாகக் கருதுவதும் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் வகையன்றி வேறென்ன?
ஒவ்வொருவரையும் சுற்றி 360 டிகிரி சுற்றளவிலும் போட்டி ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்றது. ஒருவர் மட்டுமே தேவையுள்ள இடத்திற்கு ஓராயிரம் பேர் போட்டியிடும் நிலை முக்கியமான அனைத்துத் தளங்களிலும் உண்டு. அந்தப் போட்டிக்குத் தன்னை முழுமையாகத் தகுதிப்படுத்திக் கொள்ளாததும், தம்மைப் போதுமான அளவு வளர்த்துக் கொள்ளாததும், அந்த இடத்தை வேறொருவர் கைப்பற்றிட எளிதில் வழி வகுக்கின்றன. நானும்தான் விரும்பினேன், அதற்காக உழைத்தேன், தகுதிப்படுத்திக் கொண்டிருந்தேன், ஆனால், எனக்கு வேண்டுமென்றே வழங்கப்படவில்லை என்பது பெரிதும் உடனிருப்போரை சமாதானப்படுத்தும் எளிய வழியாக வேண்டுமானால் இருக்கலாம். அந்தச் சமாளிப்புகள் ஒருபோதும் அவர்களைச் சமாதானப்படுத்தாது. ஒருவேளை அதுவே அவர்களைச் சமாதானப்படுத்துவதாக அவர்கள் கருதினால், அது அவர்களை அவர்களே ஏமாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை.
தகுதிப்படுத்திக்கொள்ளாமை ஏமாறுவதில் ஒருவகை என்றால், அதற்கு இணையான மற்றொருவகை வழங்கப்படும் வாய்ப்பினை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிடுவது. வாய்ப்பு எப்போதும் தன்னை அலங்கரித்துக்கொண்டும், வெளிச்சமிட்டுக்கொண்டும் வருவதில்லை. சில நேரங்களில் மேகத்தில் மூழ்கிய நிலவொளிபோல் மங்கலாக இருக்கும். சில நேரங்களில் மின்மினி போல் கண் சிமிட்டும். சில தருணங்களில் அது தன்னைத் திடமாக அறிவிக்கும். வாய்ப்புகள் எந்த வடிவில் வந்தாலும், தெளிவாகவோ, தெளிவற்றதாகவோ இருந்தாலும் அதனைப் பயன்படுத்திக்கொள்ள தன்னைத் தயார்படுத்தி வைத்திருப்பதுவும், திடப்படுத்தி வைத்திருப்பதுவும் மிகவும் முக்கியம். பெரு வெளிச்சமாக வருமென எதிர்பார்த்திருப்பது, மின்மினியாய் சிணுங்கும்போது அதனை இனம்கண்டு, வாய்ப்பினை ஏற்று, தன்னை நிரூபித்தல் மட்டுமே தன்னையே ஏமாற்றிக்கொள்வதைத் தவிர்க்கச் செய்யும்.
தனக்கென்றிருக்கும் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட மறப்பதுவும், மறுப்பதுவும் தான் அடைய வேண்டிய நிலை, இடம் ஆகியவற்றைத் தடுக்கவே செய்யும். வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமை என்பது, அந்த வாழ்தலில் தனக்குத் தேவையானதை அடைய தனக்கு இருக்கும் அடிப்படை உரிமையை உணர்தலே. தான் உரிமையை நிலைநாட்ட மறுக்கும் இடங்களில் வேறொருவர் எளிதாக அந்த உரிமையை எடுத்துக்கொள்வார். காரணம் உரிமைகள் என்பது யாரோ ஒருவரால் செலுத்தப்படவேண்டிய ஓர் இயங்கு ஆற்றல். இயங்கிக் கொண்டிருப்பதைப் பயன்படுத்த வேண்டியவர் பயன்படுத்தத் தவறினால் அல்லது மறுத்தால் அந்த இயக்கம் ஓய்ந்து போய்விடாது, தன்னை இயக்கத் தகுதியானவரை அனுமதித்துத் தொடர்ந்து இயங்குவதையே விரும்பும். அதுவே நியதி. நான் என் உரிமையை அங்கே நிலைநாட்டியிருக்க வேண்டும், நான் தவறவிட்டதால் எல்லாம் என் கைவிட்டுப் போய்விட்டது, நான் ஏதோ ஒருவகையில் வஞ்சிக்கப்பட்டேன் எனும் சமாதானங்களால் யாருக்கு என்ன பயன் இருந்துவிட முடியும்?
ஏமாற்றங்களில் உச்சம் பெற்றிருப்பது மூடநம்பிக்கை. மூடநம்பிக்கைகளின் ஆயுட்காலம் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்துவதுண்டு. இது எப்படி இத்தனை காலமும் செழிப்பாக இருந்து கொண்டிருக்கின்றது? நியாயமாகச் செய்ய வேண்டிய ஒன்றைச் செய்ய மறுத்து, எந்தவகையிலும் ஏற்க முடியாத, ஏற்கக் கூடாத, விளைவுகளை ஏற்படுத்தாத ஒன்றை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், சிறப்பாகிவிடும் என நம்புவது யாருடைய பிழை?
ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்களைத் தேர்ந்தெடுப்பதைவிட, ஏமாறுபவர்கள்தான் ஏமாற்றுபவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment