ஒருபோதும் அனுபவித்திராத புதிய உலகம் ஒன்றின்
கதவுகளைத் திறந்து வைத்து, ’வந்து பாருங்கள்!’ என அழைத்தால்
யாருக்குத்தான் ஆர்வம் இருக்காது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே நெருங்கிய
உறவினரால் ‘தவறவிடாமல் சென்று பார்த்து வாங்க’ என வற்புறுத்தப்பட்ட உலகம் அது. எனினும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.
உண்மையில் அமைத்துக் கொள்ள நான் முயற்சி செய்யவில்லை.
அதை உருவாக்கியவர் சமீபத்தில்தான் என்னுடன் ஃபேஸ்புக்
நட்பில் இணைந்திருந்தார். அவரின் தொடர் செயல்பாடுகளைக் கவனித்து வந்த நேரத்தில்
அண்ணன் சிவக்குமார், அவருடைய எண்ணைக் கொடுத்து, உங்களை
அழைக்க விரும்புகிறார், பேசுவார் என அறிமுகம் கொடுக்க,
சிறிது நேரத்தில் அழைத்தார். ஒரு தேதியைக் குறிப்பிட்டு, தமது நிறுவனத்திற்கு VisiValue Added t வர
அழைத்திருந்தார். உடனடியாக தேதியை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், அந்த தேதியில் முடிந்தவரை வந்துவிடுகிறேன் எனச் சொல்லியிருந்தேன். இரண்டு
நாட்கள் முன்பு அழைத்து குறித்த தேதியில் வந்துவிடுகிறேன் எனச் சொன்னேன்.
உண்மையில் Value Added Visit என்றால் என்ன செய்ய வேண்டும்
என்பதுள்ளிட்ட எதுவும் தெரியாமல், அந்த உலகத்தினை அறியும்
ஆர்வத்தில் 06.02.2020 வியாழக்கிழமை சரியான நேரத்திற்குச்
சென்றடைந்தேன். உடன் மகளும் வந்திருந்தார்.
அந்த உலகம் திருப்பூர் ”சாய்
கிருபா சிறப்பு பள்ளி”. உருவாக்கி நடத்தி வருபவர் திருமதி.
கவின் திருமுருகன்.
அந்த உலகம் ”எதிரெதிரே இருக்கும்
இரண்டு கட்டிடங்களில் இயங்குகின்றது. சுமார் 150 பிள்ளைகள்
வந்து போகிறார்கள். 30-40 பேர் வேலை செய்கிறார்கள். வருகின்ற
பிள்ளைகள் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருப்பார்கள்” என்று எவரும்
கூறிக் கடக்கும் வகையில்தான் மேலோட்டமாய் தெரிகின்றது.
வாசலில் நின்றபடி இரண்டு பூச்செண்டுகள், தம் பள்ளியின் தயாரிப்பில் உருவான அழகிய காகித பூங்கொத்தோடு நின்றிருந்தார்கள். அவர்களின் கைகளைப் பற்றி வணக்கம் சொல்லி உள்ளே நுழையும்போதே அந்த உலகத்திற்குள் பொருந்த நான் ஏறத்தாழ தயாராகியிருந்தேன்.
முதலில் திருமதி கவின் அவர்களுடன் உரையாடல்
தொடங்கியது. இந்த உலகத்திற்குள் நுழைந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை
தேர்ந்த முறையில் வரிசையாக பகிர்ந்து கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் அவர்
கேட்ட முதல் மற்றும் முக்கியமான கேள்வி, “இந்த மாதிரி
குழந்தைகளை பார்த்திருக்கீங்ளா, அனுபவம் உண்டா!?”. என்னிடம் பதில் இல்லை.
சந்தித்ததென்றால், போகிற வருகிற வழியில்
சந்தித்ததைச் சொல்வதா? யார் வீட்டிலேனும் எப்பொழுதேனும்
பார்த்ததைச் சொல்வதா? ஏதேனும் காட்சிகளில் கண்டதைச் சொல்வதா?
ஆகவே ”இல்லைங்க... எந்த அனுபவமும் இல்லை!”
என்றேன். ‘வந்து பாருங்க’ என உள்ளே அழைத்துச் சென்றார்.
கவின், 2014ம் ஆண்டு முதல் இந்தப் பள்ளியை நடத்தி வருகிறார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் சும்மா இருக்கோம், எதாவது செய்ய வேண்டுமே என்கிற எண்ணத்தில் ஒரு சிறப்பு பள்ளிக்கு ஒரு மணி நேரம் தன்னார்வலராக செல்லத் துவங்கியவர், அதை தினசரி சுமார் நான்கு மணி நேரமாக நீட்டித்திருக்கிறார். இரண்டரை ஆண்டு கால அனுபவத்திற்குப் பிறகு, இந்தக் குழந்தைகளுக்கு சிறப்பாக செயல்பட வேண்டுமென நான்கு குழந்தைகளோடு ஒரு சிறப்பு பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். அது தற்போது 150 குழந்தைகளை வாழ்விக்கும் அற்புத உலகமாக மாறியிருக்கிறது.
”சாய் கிருபா சிறப்பு பள்ளி” ஆட்டிசம் (autism)
மற்றும் டவுன் சின்றோம் (down syndrome) எனச்
சொல்லக்கூடிய மதியிறுக்கம் மற்றும் மன நலிவு உள்ளிட்டவைகள் சார்ந்த பல்வேறு
சவால்கள் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு புகலிடம் அல்லது வாழ்விக்கும் உலகம்.
ஆட்டிசம் குறித்து ஓரளவு வாசித்திருந்தாலும், அந்தக்
குழந்தைகளை நேரில் கண்டதில்லை, அதே போல் டவுன் சின்றோம்
குறித்து எந்த அனுபவமும் எனக்கிருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ள கூச்சமாக
இருந்தாலும் அதுதான் உண்மை.
இம்மாதிரியான குழந்தைகளை இதுதான் அவர்களுக்கான பிரச்சனை என்று இனம் கண்டு பார்த்திருக்கவில்லையே தவிர, பல தருணங்களில் சந்தித்திருக்கின்றேன். சரியாக பேச்சு வராத, கடுமையாக குறும்பு செய்யும், அடம் பிடிக்கும், எப்போதும் ஒடுங்கிப் போகும், வளர்ச்சி சரியில்லாத, நிற்க முடியாத, தலை பருத்த, தலை ஆடிக்கொண்டிருக்கும், நடக்க முடியாத, எச்சில் ஒழுகியபடி இருக்கும் இவர்களைக் கடந்துதான் வந்திருக்கிறேன். ஆனால் உண்மையில் ’அவர்களுக்கு என்ன?’ எனும் புரிதல் இருந்ததில்லை.
சமீபத்தில்தான் பள்ளியை சற்று விரிவாக்கம்
செய்திருக்கிறார்கள். வயது மற்றும் குறைபாடுகளை வைத்து தனித்தனி வகுப்புகளாக
பிரிக்கப் பட்டுள்ளன. மூன்று வயது முதல் 33 வயது வரை அங்கு
பயிற்சி பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு வகுப்பறையிலும் இரண்டு மூன்று ஆசிரியைகள்.
ஆசிரியைகளில் பலர் அந்தக் குழந்தைகளின் அம்மாக்கள். ஆசிரியைகளுக்கு ஒரு நிமிடம்
கூட ஓய்வு கிடைக்காத அளவு பிள்ளைகள் வேலை வாங்குகிறார்கள். அழகிய சீருடையில்
ஒவ்வொரு குழந்தையும் பூவாய் சிரிக்கின்றன. 80% பிள்ளைகளுக்கு
பேச்சு வரவில்லை.
கவின் ஒவ்வொரு அறைக்கும் அழைத்துச் சென்று, பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்தும்போது புதியவரின் வருகையை இனிதே அங்கீகரிக்கிறார்கள். என்னைவிட என் மகளின் வருகையை அழகாய்க் கொண்டாடுகிறார்கள். அந்தப் பள்ளிச்சூழல் முழுக்க பெரும்பான்மையாக பெண்களே இருக்கின்றனர். கை குலுக்கல்களை மீண்டும் மீண்டும் விரும்புகிறார்கள். பாடுகிறார்கள். கத்தி கூச்சலிட்டுக் காட்டுகிறார்கள். சைகை செய்கிறார்கள். சிலர் அமர்வதே சிரமம் என்பதால் அதற்கான பிரத்யேக நாற்காலியில் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஒவ்வொருவரும் இந்தப்
பள்ளிக்கு வந்தபோது இருந்த நிலை வேறு, இன்று இருக்கும் நிலை
வேறு. மனித சமூகத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மிக உயரிய மாற்றம் என்றால் இந்தப்
பிள்ளைகளை, வந்த நிலையிலிருந்து இந்த நிலைக்கு
மேம்படுத்தியிருப்பதை உதாரணமாகச் சொல்லத் தோன்றுகிறது.
ஒரு சிறுவன் என்னை சைகையால் அழைத்து தன் அருகில் அமர
வைத்துக் கொள்கிறான். அவனை செல்ஃபி வீடியோ எடுத்துக் காண்பிக்கிறேன், தன்னை
அடையாளம் கண்டு, தன்னை “நானு... என்னு”
என்று அடையாளம் சுட்டுகிறான். ஒரு பெண் குழந்தை என் மற்றும் மகளின்
உள்ளங்கையை மீண்டும் மீண்டும் வாங்கி தன் காதில் பொத்தி விதவிதமாய் சிரித்துப் பார்த்து,
அந்த ஒலி அதிர்வுகளை உணர்ந்து மகிழ்கிறது.
ஒவ்வொரு குழந்தை குறித்தும் கவின் அறிமுகம்
கொடுக்கிறார். அவர்கள் வெறும் காட்சிக்குரியவர்கள் என்பதாக எந்த மனவோட்டமும்
ஏற்பட்டுவிடாதவாறு அழுத்தமான அறிமுகம். அது நேசிப்பின் வெளிப்பாடு. ஒவ்வொரு
அறைக்குள் அவர் நுழையும்போதும், ஏதோ ஒரு குழந்தை அம்மா என அவரை
அழைக்கின்றது. விதவிதமான உணர்வுகளோடு அவரை நெருங்கும் பிள்ளைகளை அத்தனை ஆதூரமாய்
அணைத்து தழுவுகிறார். நான் பார்த்ததில் உணர்ந்த மிக நெகிழ்வான அணைப்பென்பது
அதுதான். கொஞ்சி முத்தமிடுகிறார். உண்மையில் கவின் அந்த உலகத்தில் இணைந்திருக்கவோ,
இயங்கவோ இல்லை. தான் விரும்பிய உலகத்தை உருவாக்கி மிகக் கனிவாக
வாழ்கிறார்.
அங்கிருந்து முதல் தளத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
எல்லாப் பிள்ளைகளும் பயன்படுத்தும் விதமான பல்வேறு உடற்பயிற்சி, விளையாட்டு
கருவிகள். ஒவ்வொன்றிலும் கற்றல் நிகழ்கிறது. பிள்ளைகள் உரம் பெறுகிறார்கள்.
ஒவ்வொன்றும் தேடித் தேடி அங்கு நிறுவப்பட்டிருக்கின்றது. இன்னும் விசாலமான இடம்
கிடைக்கும்போது அது மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கி நகரும்.
பெரும் பிரமிப்போடும், கனத்த மனதோடும் கீழே
வருகிறோம். எதிரில் இருக்கும் தொழிற்பயிற்சி மையத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகள் கொண்ட பிள்ளைகளுக்கு அடிப்படைக் கல்வி கொடுத்து,
அவர்களுக்கு பலவிதமான தொழிற்பயிற்சிகள் வழங்கி வரும் மையம் அது.
நுழைவாயில் அருகில் ஒரு மாணவன் தேங்காய் மட்டை
உரித்துக் கொண்டிருந்தான். பல நிழற்படங்களில், காணொளிகளில் பார்த்த
முகம். முகுந்தன் என அறிமுகம் செய்து வைக்கப்பட்டான்.
வலது பக்க முதல் அறை சமையல் கூடம். 18 வயது
நிரம்பிய பிள்ளைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். எள்ளும் கருப்பட்டியும்
போட்டு இடித்த எள்ளு மாவு உருண்டைகள் தயாராகிக் கொண்டிருந்தன. ஒரு மாணவன் உருண்டை
பிடித்து கொண்டிருந்தான். பாத்திரங்களில் தக்காளி சாதம், எலுமிச்சை
சாதம், தயிர் சாதம் ஆகியவை தயாராக இருந்தன. மீல்ஸ் ஆன்
வீல்ஸ் எனும் திட்டம் இந்தப் பிள்ளைகளால் நடத்தப்படுகிறது. இந்த மூன்று உணவு
வகைகளும் வெளியில் அவர்களாலேயே விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
அதில் தயிர் சாதம் மட்டும் தாளிக்கப்படாமல் இருக்க, அதற்கான
வடைச்சட்டி அடுப்பில் வைக்கப்பட்டு எண்ணெய் ஊற்றப்பட்டது. அதில் ஈடுபட்டிருந்த
இளைஞன் எண்ணெய் முழுதும் காயும் வரை காத்திருந்து கடுகு போட்டார். கடுகு போட்ட
பிறகு ஒரு கடுகு விடாமல் வெடிக்கும் வரை காத்திருந்து கறிவேப்பிலை போட்டு, வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு, கிளறிவிட்டு,
போதுமான உப்பு போட்டு வெந்ததும் இறக்கி நேராக தயிர் சாதம் இருந்த
பாத்திரத்தில் ஊற்றிவிட்டு, வடைச்சட்டியை அங்கேயே
வைத்துவிடாமல், நேராக சிங்கில் வைத்து தண்ணீர்
திறந்துவிட்டுவிட்டு, தயிர் சாதத்தை கிளற ஆரம்பித்தான். அந்த
பொறுமையும் நிதானமும் அழகிய கவிதையாய் மனதில் ஆழப் பதிந்தது.
இடது பக்க அறை அங்காடியாக மாற்றப்பட்டு, அங்கிருக்கும்
பிள்ளைகள் மூலம் நடத்தப்படுகின்றது. வீட்டிற்கு தேவையான பல பொருட்கள் இங்கு
விற்பனை செய்யப்படுகின்றன. சில பொருட்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு,
சிறிய பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நாங்கள்
சென்றிருந்தபோது மூட்டையில் இருந்த நாட்டு சக்கரை அரைக் கிலோ பைகளாக
மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அதைச் செய்து கொண்டிருந்த மாணவனைக் கவனித்தேன். ”ஒவ்வொரு பையிலும் 500 கிராம் சர்க்கரை போட வேண்டும்,
நீங்கள் கவனித்துப் பாருங்கள், ஒரு பையில்கூட 498,
499, 501, 502 கிராம் என்றெல்லாம் இருக்காது. அனைத்திலும் 500
கிராம் மட்டுமே கச்சிதமாக இருக்கும்” என்றார்
கவின். எடை இயந்திரத்தில் வைத்திருந்த காகித பையில் நிரப்பப்பட்ட சர்க்கரை அளவு
மிகச்சரியாக 500 காட்டிக்கொண்டிருந்தது.
அங்காடியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதே சுவையான
முறுக்குடன் சூடான சுக்கு தேநீர் வந்தது. உணர்ச்சி வசப்பட்டோ, மிகைப்படுத்தியோ
எல்லாம் சொல்லவில்லை. சுக்கு கொத்தமல்லி கருப்பட்டி கலந்த அந்த தேநீரின் ருசியை
இதுவரை எங்கும் உணர்ந்ததில்லை என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். முறுக்கு மற்றும்
தேநீர் அந்தப் பிள்ளைகளால் தயாரிக்கப்பட்டதே.
அடுத்த அறையில் அழகிய வேலைப்பாடுகளுடன் காகித பைகள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான பயிற்சியும், தயாரிப்பும் நடக்கின்றது. எனக்கு காலையில் வழங்கப்பட்ட காகித பூங்கொத்தும் அவர்களின் தயாரிப்புதான். அங்கும் பிள்ளைகள் கற்றுக் கொண்டு தயாரிக்கிறார்கள். இடையிடையே அவர்களுக்கான பலவிதமான கற்பித்தல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மற்றொரு அறையில் ஒரு பக்கம் பிள்ளைகள் காய்கறி நறுக்குகிறார்கள், இன்னொரு பக்கம் எட்டாம் வகுப்பு பாடம் உள்ளிட்ட பல நிலைகளுக்கான கற்பித்தல் நிகழ்கிறது.
அனைத்தையும் பார்வையிட்ட பிறகு, மீல்ஸ்-ஆன்-வீல்ஸ்
திட்டம் நிகழும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். ஆர்டிஓ அலுவலகம் அருகில்
ஒரு ஆம்னி வேனில் சாய் கிருபா மையத்தில் சமைக்கப்பட்ட தக்காளி, எலுமிச்சை, தயிர் சாதம் ஆகியவை விற்பனை
செய்யப்படுகின்றன. விற்பனையில் ஈடுபடுபவர்களும் சிறப்பு பிள்ளைகளே. தினசரி
வாடிக்கையாளர்கள் சாப்பிட வருகிறார்கள். அவர்களுக்கான குடிநீர், நாற்காலி வசதி உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சாப்பாடு
பரிமாறும் இடத்தில் சிந்தும் பருக்கைகள் உடனுக்குடன் சுத்தம் செய்யப்படுகின்றன.
அந்தக் காட்சி ஆகச்சிறந்ததொரு அழகியல். ஞாயிறு தவிர்த்து அனைத்து நாட்களும் உணவு
விற்பனை நடைபெறுகின்றது.
சமையல் தேவைகளுக்காகவும், பிள்ளைகளுக்கு கற்றுத் தருவதற்காகவும் சுமார் முக்கால் ஏக்கர் பரப்பில் கடினமான முயற்சிகள் மேற்கொண்டு இரசாயனம் கலக்காமல் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். மண் புழு உரம் தயாரிக்கப்படுகிறது. தேவைக்குப்போக மிஞ்சும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அங்காடி, கைவினைப் பொருட்கள்,
உணவு தயாரிப்பு, விவசாயம், விற்பனை ஆகிய அனைத்தும் எந்த விதத்திலும் வருமானத்தை எதிர்பார்த்து
செயல்படுத்தப்படவில்லை. அவை அந்தப் பிள்ளைகளை தகுதியும், திறனும்
உள்ளவர்களாக மாற்றும் காரணியாகவே நிகழ்த்தப்படுகின்றன. இவற்றில் 18 வயது நிரம்பிய பிள்ளைகள் மட்டுமே அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு
குறிப்பிட்ட அளவில் சம்பளமும் வழங்கப்படுகின்றது. இந்த தகுதி மற்றும் திறமையின்
மூலம் அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு எதிர்காலம் உறுதியாகின்றது என்பது எத்தனை
அற்புதமான செயல் என்பதை நினைக்க திருமதி கவின் மீது அலாதியான மரியாதை கூடுகிறது.
சமையல் குழுவின் தயாரிப்பில் சோறு, சாம்பார், அவரை பொறியல், ரசம், தயிர் என மதிய உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது முகுந்தன் ஓடி வந்து, ’நான் சாப்பிட்டேன், நல்லாருக்கு, சாப்பிடுங்க!’ எனச் சொல்லிப் போகிறான். அது சொற்களாய் உச்சரிக்கப்படவில்லை. மனதைப் பரிமாறுதல் என்பதே அந்த செயல்.
எனக்கு ஒன்றும் பெரிதாகப் பேசத் தோன்றவில்லை. மனம்
முழுக்க ஆச்சரியங்களும், நெகிழ்வான உணர்வும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. உணவு
முடிந்ததும் நேரத்தை செலவிட்டு வந்தமைக்காக நன்றி என்கிறார் கவின். கவின் நன்கு
உயரமானவர். அது வெறும் உடலின் உயரமல்ல. அர்ப்பணிப்பின், தாய்மையின்,
.........., ......, ......( இன்னும் எத்தனை சொற்கள் வேண்டுமானாலும்
இதில் நிரப்பிக்கொள்ளலாம்) உயரம். தம் வாழ்வையே இந்தப் பிள்ளைகளை
மனிதர்களாக்குவதற்காக, அவர்களின் மேன்மைக்காக
அர்ப்பணித்திருக்கும் அவரிடமிருந்து நன்றி பெறுவதில் எனக்கு துளியும் உடன்பாடு
இல்லை, ஆகவே ’உங்கள் அர்ப்பணிப்பின்
முன் இந்த அரைநாளை எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. ஆகவே நன்றியை நீங்களே வைத்துக்
கொள்ளுங்கள்!’ என்று விடைபெறுகிறேன். உண்மையில் எனக்கும்,
என் மகளுக்கும் புதியதோர் உலகத்தை அறிமுகம் செய்து, அதற்குள் அனுமதித்த அவருக்கு நன்றி சொல்கிறேன்.
திருப்பூரில் அத்தனை அற்புதங்களைச் செய்துவரும் கவின், ஈரோடு
பெருந்துறை ரோட்டில் இருக்கும் கவின் மருத்துவமனை நிறுவனர் மறைந்த மருத்துவர்
இளங்கோ அவர்களின் மகள். அவர் ஈரோட்டின் மகள் என்பதில் மிகுந்த பெருமையும்
மனநிறைவும்.
கவின் குறித்து மிக முக்கியமாகச் சொல்ல வேண்டியது, சாய்
கிருபா பள்ளிக்கு என சொந்தக் கட்டிடத்தில் விசாலமான பள்ளியை அமைக்கும் வரை ஒரு
சபதம் எடுத்திருக்கிறார். முதலில் கேட்பதற்கு எளிமையாகத் தோன்றலாம். ஆனால் மிக
வலிமையான, சற்றே சுய வதை கொண்ட சபதம் அது. தெரிந்து கொள்ள
விரும்புவோர் நேரில் சந்தித்து தெரிந்து கொள்வதே சரியானது.
எதை அடிப்படையாகக் கொண்டு Value Added Visit என என்னை அழைத்தார் எனத் தெரியவில்லை. உண்மையில் நான்தான் Value
Added ஆகி அங்கிருந்து திரும்பினேன்.
தொடர்புக்கு : சாய் கிருபா சிறப்பு பள்ளி
29, ஈஸ்வரன் நகர், காந்தி நகர்,
திருப்பூர்-641603. மொபைல் : 9362161671,
7601829295
- ஈரோடு கதிர்
2 comments:
அநேக வருடங்களுக்குப் பிறகு வலைப்பூவில் ஏதேனும் இடுகையிடலாம் என்று வந்தபோது, உங்களின் பதிவை வாசித்தேன். நேரில் சென்ற அநுபவமும் விழி ஓரம் ஈரமும் கொண்டேன். கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டுமென்று உறுதியும் கொண்டேன்.
நன்றி கதிர்.
வாசித்ததும் value added ஆன உணர்வு தான் எங்களுக்கும்.
நெகிழவைக்கும் பதிவு!
Post a Comment