ஒகேனக்கல்லில் ஒரு நாள்


பதினைந்து ஆண்டுகள் இருக்கும் ஒகேனக்கல் சென்று. பதின் வயதில் ஒருமுறை பைக்கில், இருபதுகளின் இறுதியில் ஒருமுறை உறவுகளோடு... இந்த முறை 15 நிமிட அவகாசத்தில் திட்டமிட்டு, மூன்று மணி நேரத்தில் பயணம் துவங்கினோம்.

நண்பர் பழமைபேசியின் வருகையையொட்டி வருடம் ஒருமுறை இப்படி பயணம் உண்டு. இந்த முறை என் கல்லூரித் தோழன் சீனி உடன் இணைந்துகொண்டான். 24 வருடங்கள் கழித்து நாங்கள் சந்தித்துக்கொள்கிறோம். உடன் ஆரூரன் மற்றும் ஜெயபாலன்.

ஈரோடு - பவானி - மேட்டூர் - மேச்சேரி - பெண்ணாகரம் - ஒகேனக்கல். மேட்டூர் அணைக்கட்டு அருகே மலையேறும்போதே மழை வெளுத்து வாங்கியது. முதல் கொண்டை ஊசி வளைவு சென்று திரும்பும்போது சொட்டு மழையில்லை. திரும்பி மேலே ஏறுகையில் வெளுத்து வாங்கியது. வெறும் 100 மீட்டர் தொலைவிற்குள் இத்தனை பெரிய மாயம். சாலையில் செல்ல முடியாமல் மழைக்கு ஒதுங்கி நிற்பவர்களிடம் ஒரு 100 மீட்டர் நகர்ந்துட்டா மழை இல்லை என்று சொல்லக்கூட அவகாசம் தராத மழை.

பதினாறு கண் மதகிற்கு புதிய பாலம் கட்டியிருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். மீண்டும் மழை தொடங்கியது. கிட்டத்தட்ட மேச்சேரிக்கு அருகே வரையிலும் மழை. மேச்சேரி - பெண்ணாகரம் சாலை அற்புதமாக இருக்கின்றது. ஒகேனக்கல்லை அடைய இரவாகிவிட்டது. அந்த ஊர் நண்பர் தங்குவதற்கு ஒரு விடுதியை பரிந்துரை செய்தார். தங்குவதற்கு வசதியான இடம் தான்.

ஒகேனக்கல் : ஒரு அருவியை மையப்படுத்தி காவிரி ஆற்றை மட்டுமே நம்பியிருக்கும் ஊர். ஒரு சாலை, இரண்டு மூன்று வீதிகள்... அவ்வளவுதான். ஒகேனக்கல்லை ஊர் என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. விடுதி, உணவகம் என சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பியிருக்கும் மையம். இரவிலும் அதிகாலையிலும் அமைதி காக்கிறது. பகலில் பரபரப்பாகிவிடுகிறது. ஆண்டு முழுதும் பயணிகள் வந்து போகிறார்கள்.

அங்கிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் இருக்கும் ஊட்டமலை கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கிறார்கள். மீன் பிடித்தல், பரிசல் இயக்குதல், பரிசல் தயாரித்தல், ஆயில் மசாஜ், உணவு தயாரித்துக் கொடுத்தல் ஆகியவையே முக்கிய வாழ்வாதாரங்கள். சாலையோரம் இருக்கும் பெரும்பான்மையான வீடுகளின் முகப்பிலும் அரசு உதவியுடன் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.


மகிழ்ச்சியானது அங்கு காத்திருக்கும் கல்லூரிப் பேருந்துகள். தர்மபுரிப் பகுதிகளிலிருக்கும் பல்வேறு கல்லூரி நிறுவனங்களின் பேருந்துகள் அந்தக் கிராமம் வரை இயக்கப்படுவது நம்பிக்கை தரும் ஒன்று.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் அரட்டை. பேசுவோம் பேசுவோம் பேசிக் கொண்டேயிருப்போம். ஃபேஸ்புக், ப்ளாக் ஆகியவற்றில் இயங்குவதால் பேசவா விசயம் கிடைக்காது. ஆக எங்கள் சந்திப்புகள் என்பது பலவற்றையும் கலந்து கட்டி பேசிக்கொண்டேயிருப்பது. நல்ல சாப்பாடு, அருவிக் குளியல் மற்றும் ஆயில் மசாஜ் இந்தப் பயணத்தின் கூடுதல் நோக்கம்.

ஆற்றின் நடுவில் இருக்கும் ஒரு தீவிற்கு அழைத்துச் செல்வதாக இரவே சொன்னார்கள். அந்த உள்ளூர் நண்பரும் அதையே பரிந்துரை செய்தார். நாங்கள் செல்வதற்கு முதல் நாள் வரையில் ஆற்றில் வெள்ளம் இருந்ததாக அறிந்தேன். அன்று குறைந்திருந்தது. ஆட்டோவில் பரிசலை ஏற்றிக்கொண்டு, எங்களை ஏற்றிக்கொண்டு வனத்தின் வழியே சற்று பயணித்து பரிசலை ஆற்றில் விட்டு அதன் வழியே நீரோட்டத்தின் வழியே பயணித்து வரலாம். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. இந்த மாதிரியான பயணங்கள் அனுமதிக்கப்பட்டவை அல்ல. அவர்கள் தம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அனுபவத்தில் இயக்குகிறார்கள். ஆனால் வெளியூரிலிருந்து பயணிகளாகச் செல்வோருக்கு அது பாதுகாப்பானதாக இல்லை.


கேரளாவின் வனத்திலிருந்து, கபினி அணையை அடைந்து அங்கிருந்து கபிலா நதியாகப் பயணித்து காவிரியில் கலந்து பிலி குண்டு வழியே தமிழகத்திற்குள் நுழைந்து ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு விரைகிறது இளம்பச்சை நிறத் தண்ணீர். எந்தச் சலனமும் காட்டாமல் மௌனம் காக்கும் இடத்தில் ஆழம் ஐம்பது அடிகள் வரை கூட இருக்கலாம் என்கிறார் பரிசல்காரர். மௌனமாய் இருக்கும் இடத்தில் உள்ளே நீர் விரைந்து நகர்ந்து கொண்டிருக்கலாம். பாறைகள் தென்படும் இடத்தில் சலசலக்கும் தண்ணீர் தன் வேகத்தையும், வெறியையும் காட்டுகிறது. நீரால் நீர் அழுந்தி தாழ் நிலம் நோக்கிப் பாயும் வேகம் அது.

நதியின் இரு மருங்கிலும் நாம் பெயரறிந்திராத ஆயிரக்கணக்கான மரங்கள். அடி பெருத்து, வேர் அரித்து என்றும் நதியோடு பிணைந்து கிடக்கும் மரங்கள். மென் பச்சை நிறத்தில் சுழித்தும் சீறியபடியும், மௌனித்தும் நதி தன் போக்கில் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒருபுறம் தமிழக எல்லை, மறுபுறம் கர்நாடகா என பச்சைகளின் நடுவே பாயும் நதி மிகப் பெரும் ஆசான். அதன் மௌனத்திலும் இரைச்சலிலும் கற்க ஆயிரம் பாடங்கள் உண்டு.

காவிரி நதி பிரிந்தும் பிணைந்துமென வேடிக்கை காட்டுகிறது. பிரிகின்ற இடங்களில் நடுவே ஒரு தீவு போன்ற நிலப்பரப்பை விட்டுச் செல்கிறது. அவையெங்கும் மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இனம் புரியாதொரு அமைதி நிலவுகிறது. தண்ணீரின் அளவு அதிகரித்தால் அந்த தீவுகளும் மெல்ல மூழ்கத் தொடங்கும்.



இப்போதுதான் அந்தப் பயணத்தின் முழு வடிவம் ஓரளவு புரிகிறது. பரிசலில் பயணித்து அந்தத் தீவில் தங்கியிருந்து திரும்புதல். இரவுகளில் தங்க ஏற்பாடுகள் செய்ய முடியும் என்கிறார்கள். கேம்ப் ஃபயர்என்கிற ஆசையை, பரிசல்காரர்கள் பலரும் பகிர்கிறார்கள். அங்கேயே சமைத்தும் தருகிறார்கள். நடுவே தீவு இரு பக்கத்திலும் ஆறு சலசலக்கிறது. பார்க்க அனுபவிக்க பெரும் சுவாரஸ்யம்தான்... ஆனால் காலின் கீழே ஒரு நதி நகரும் உணர்வுதான்!!!

மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பவில்லை. கபினியின் நீர் திறப்பு குறைந்துள்ளது. ஆகவே திடீர் வெள்ளத்திற்கு வாய்ப்பில்லை என்பது நம்பிக்கை. எனினும் சுற்றுலாப் பயணிகளில் பலர் வெகு எளிதாக ஆற்றை, அதன் வலிமையைக் குறைத்தும் மதிப்பிடலாம். எப்போதும் கர்நாடக அணையிலிருந்துதான் நமக்கு நீர் வரும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் தமிழக வனத்திலேயே மழை பெய்து, ஓரிரு நாட்கள் பெரும் வெள்ளம் வந்தது நினைவிற்கு வந்தது.

பரிசல் இயக்குவோர் உள்ளூர்க்காரார்கள் என்பதால் மிகுந்த நம்பிக்கையோடு ஆற்றைக் கையாள்கிறார்கள். அந்தப் பகுதியெங்கும் பரிசலில் வந்து வலை வீசி மீன் பிடிக்கிறார்கள். பரிசலில் மீன் பிடிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. துடுப்பு போட்டு நதியின் போக்கிற்கு எதிராகவும் கூடச் செல்ல முற்படுகிறார்கள். அவர்களால் எந்தச் சூழலையும் கையாள முடியும். பிறப்பு முதலே ஆற்றோடு புழங்குகின்றவர்கள். நீர் மட்டம் குறித்து அவர்களுக்கு ஒவ்வொரு அங்குலத்திலும் அளவு தெரியும். ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அம்மாதிரியான சூழல்கள் மிக நிச்சயமாக கையாள்வதற்கு உகந்ததல்ல.

தீவு முழுக்க தாரை தாரையாய் நீர் ஓடிய தடங்கள். முந்தைய நாள்வரை ஓடிய நீர் ஆங்காங்கே தேங்கியபடியும். மரத்தின் வேர்கள் மிரட்டும் வண்ணம் முறுக்கிக் கிடக்கின்றன. எங்கோ வெட்டப்பட்ட மிகப் பெரிய மரமொன்று தீவின் மத்தியில் இரண்டு மரத்திற்கு இடையே சிக்கிக்கொண்டு கிடக்கின்றது. தண்ணீர் வருகையில் நனைவதும், வெயில் வருகையில் உலர்வதுமான வாழ்க்கை.


எங்களைப் போன்றே இருபது முப்பது பேர் நான்கைந்து பரிசல்களில் வந்து தீவில் உலவிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் சமையல் நடக்கிறது. பரிசலில் மசாஜ் செய்வோரை அழைத்து வந்தவர்கள் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளலாம். தீவின் கரையோரம் குளித்துக்கொள்ளலாம். குளிக்கும் இடத்தில் மணலாகவும், தண்ணீரின் வேகம் குறைவாகவுமே இருக்கின்றது. சுவாரஸ்யமான, சுகமான அனுபவம்தான். ஆனால் காவிரி எனும் பெரும் நதியின் மத்தியில் இருக்கிறோம் என்பது மட்டுமே செல்லமாய் மிரட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த தீவின் இன்னொரு குறிப்பிடத் தகுந்த அழகு பரவிக் கிடக்கும் கூழாங்கற்கள். தூக்கவே முடியாத பருவத்திலிருந்து தேய்ந்து மணலாகும் பருவம் வரையென அழகழகான கூழாங்கற்கள். கையோ காலோ உரசினால் அத்தனை மிருதுவாக இருக்கிறது. தங்களுக்குள் நதியின் குளுமையை எப்போதும் பதுக்கி வைத்திருப்பவை அவை.


கைகள் ஒவ்வொரு கல்லையும் வருடும்போது, அது உடைந்து புரண்ட இடம் எதுவாக இருக்கும், அதன் பயணத்தொலைவு எவ்வளவாக இருக்கும், எத்தனை நூற்றாண்டுகள் உருண்டிருக்கும் என்பதிலேயே மனம் உழலத் தொடங்குகிறது. இயற்கையின் ஆகச் சிறந்த படைப்புகளில் என்னளவில் கூழாங்கற்களுக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு.

அனுமதியின்றி ஆற்றின் நடுப்பகுதிக்குள் உட்புகுகிறோம் எனும் கூச்சம் அந்த தீவில் நுழைவோரில் எத்தனை பேருக்கு இருக்குமெனத் தெரியவில்லை. சமதளத்து நிலத்தை ஒழுங்கீனங்களோடு கையாளும் அதே சராசரி மனோபாவத்துடனேயே இங்கும் அந்த துண்டு நிலத்தைக் கையாள்கிறார்கள் என்பதற்கு நிறையச் சான்றுகளை விட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு வீசப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக்களும், கண்ணாடிப் பாட்டில்களும் பட்டவர்த்தமான உதாரணங்கள்.



பிஸ்கட் காகிதங்கள், தண்ணீர் பாட்டில்கள், ஸ்னாக்ஸ் பாக்கெட்டுகள், கேரி பேக்குகள், சீகைக்காய் பாக்கெட்டுகள் என எல்லாவித ப்ளாஸ்டிக்களையும் தயவு தாட்சயண்யம் இன்றி விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். அங்கு புழங்கும் மனிதர்களின் எண்ணிக்கைகளை ஒப்பிடும்போது இவை அநியாயமான அளவு. அவையாவும் மேட்டூர் அணைக்கு வந்து காவிரி வழியாகவும், கால்வாய்கள் வழியாகவும் நம்மை ஏதோ ஒரு மட்டத்தில் நெருங்கவே செய்யும்.

பாட்டில் பொறுக்கிறவர்கள் அவ்வப்போது வந்து எடுத்துச் சென்றுவிடுவார்கள் என பரிசல்காரர் சொல்கிறார். எனினும் நிறைய பாட்டில்களைக் காண முடிந்தது.

கண்ணாடிப் பாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன. முழுப்பாட்டில்களாக விட்டு கூழாங்கற்கள் நகர்வில் உடைந்தவை சில பாட்டில்களாக இருக்கலாம். பெரும்பாலான பாட்டில்கள் தூக்கி எறியப்பட்டு உடைக்கப்பட்டவை. குடித்துவிட்டு அந்தக் குப்பியை ஓங்கியடித்து உடைப்பதில் இருக்கும் வன்மம் இதுவரை புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லவும், மீன் பிடிக்கவும் பரிசல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக சுமார் 400 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.


ஒகேனக்கல் தேவைக்கு மட்டுமல்லாது கர்நாடகா மற்றும் கேரளாவின் பல பகுதிகளுக்கும், இங்கிருந்து மூங்கில் பரிசல்கள் செய்து அனுப்படுகின்றன. பச்சை மூங்கில்களை மெலிதாகச் சீவி, அந்த சிம்புகளைக் கொண்டு பரிசல்கள் வேயப்படுகின்றன. அதன்மேல் உறுதியான பாலித்தீன் ஷீட் போர்த்தப்பட்டு தார் பூசப்படுகிறது. மேலும் அதன் மேல் மற்றொரு ஷீட் போர்த்தப்பட்டு அதன் மீதும் தார் பூசப்படுகிறது.



இப்படித் தயாரிக்கப்படும் பரிசல்கள் 4500 முதல் 6000 ரூபாய் வரை விலை போகின்றன. ஒகேனக்கல்லிற்கு மறுபுறம் இருக்கும் கர்நாடக வனத்தில் இருக்கும் மூங்கில்களே இதற்காகப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இரண்டு நபர்கள் முழு மூச்சாக வேலை செய்தால் ஒரு நாளில் ஒரு பரிசல் தயாரிக்க முடியும் என்கிறார்கள்.

இவற்றிற்கு மாற்றாக ப்ளாஸ்டிக் பரிசல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை தோல்வியடைந்ததாகவும் சொல்கிறார்கள். ப்ளாஸ்டிக் பரிசல்கள் இயக்குவதற்கு எளிதாக இருந்தாலும், காற்று வீசும்போது கட்டுப்படுத்த முடிவதில்லையென்பதால் மீண்டும் மூங்கில் பரிசல்களுக்கு மாறிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

தீவிலிருந்து மதியம் அறைக்குத் திரும்பும்போதே பசி ஆட்சி செய்து கொண்டிருந்தது. நண்பர் ஜெயபாலனின் சகோதரர் அளித்த விருந்தோம்பல். பசியும் ருசியும் போட்டி போட... மீனும் சோறும் என இரையெடுத்த மலைப்பாம்பு போல ஆனோம். மாலையே கிளம்பும் திட்டமிருந்தது. ஓய்வெடுத்துவிட்டு அருவியா, அருவிக்கு போய்விட்டு வந்து ஓய்வா என்பதில் அருவியைத் தேர்ந்தெடுத்தோம்.



வார நாள் என்பதால் மிக குறைவான மக்கள் நடமாட்டம் மட்டுமே. போகும் வழியெங்கும் சாப்பாடு செஞ்சு தரனுமா? மீன் பொரிச்சுத் தரனுமா என பெண்கள் கேட்கிறார்கள். மீன் மற்றும் உணவுப் பொருட்களைக் கொடுத்தால் விரும்பிய வண்ணம் சமைத்தும் தருகிறார்கள். ஆயில் மசாஜ் வேண்டுமா என வரிசையாய் ஆண்கள் கேட்கிறார்கள்.

இந்த வருடம் மே மாத சீசன் மிக நன்றாக இருந்ததாகத் தெரிவித்தனர். பொதுவாக மே மாத வருமானம் தான் பெரும்பாலானோருக்கு ஒரு வருடத்தின் செலவுகளைத் தீர்மானிக்கின்றன. வழக்கமாக மே மாதம் வறட்சியில் காய்ந்து போயிருக்கும். இந்த முறை கோடை மழை தமிழக வனப்பகுதிகளில் நன்கு பெய்ததால், அருவியில் நீர் இருக்க, சீசன் மிகப் பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்திருக்கிறது. மற்றபடி வார நாட்கள் மட்டுமே ஓரளவு பயணிகள் வந்து போகின்றனர்.

நீர் வரத்து மட்டுப்பட்டிருந்ததால் அருவியில் குளிக்க அனுமதியளித்திருந்தார்கள். அருவிக்குச் செல்லாமல் ஓரமாய் பிரிந்தோடும் சிற்றோடை நீரில் அமர்ந்தபடி தண்ணீரை அள்ளியள்ளி மேலே விட்டுக்கொண்டபடி சிலர் குளித்துக் கொண்டிருந்தனர்.

படியிறங்கினால் அருவி. இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு பாதுகாப்பு நிறைந்த பகுதி. கூட்டம் இல்லாததால் மகிழ்வாய் பொறுமையாய் குளிக்க முடிந்தது.

அருவிக்கு மேற்புறத்தில் தொங்கு பாலம் அமைத்து அருவியைப் பார்வையிட அனுமதிக்கிறார்கள். அங்கிருந்து பார்க்கும்போது, பிரவாகம் எடுத்துச் சரியும் அருவிக்கு முன், நாங்கள் குளித்த அருவி மிகச் சிறியதாகத் தெரிகிறது.


பேரருவியாய்ப் பாயும் நீர் புகையாய் மேலெழும்புகிறது. ஒஹேஎன்றால் கன்னடத்தில் புகை என்றும், அதன் அடிப்படையில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாக பரிசல்காரர் சொன்னது நினைவிற்கு வந்தது.

காடுகளையும் வனங்களையும் கடந்து, தன்னத் தானே சலித்து, ஒவ்வொரு கணத்திலும் தன்னைப் புதிதாக்கிக்கொள்ளும் காவிரி தமிழக எல்லைக்குள் முதன்முதலாக ஒகேனக்கல்லில் வீறு கொண்டு விழுகிறது. அது விழும் கணம் தோறும், அது சார்ந்த ஒவ்வொருவரின் வாழ்வும் நிமிர்ந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர் பாசனத்தில் வாழ்வமைந்த எனக்கு என்றுமே காவிரி மிகுந்த பிரியத்திற்குரியது. இந்த முறை என்னவோ இன்னும் நெருக்கமாய் மாறியிருக்கிறது. <3 span=""> நனைந்த மனதோடு வீடு நோக்கி...

பயணத்தில் உடன் வந்த நண்பர்களுக்கு நிறைந்த பிரியங்கள்.... வாசிப்பினூடே வருவோருக்கும்!

ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்? - விமர்சனம்

கிளையிலிருந்து வேர் வரை வெளியாகி மூன்று ஆண்டுகளைக் கடக்கவுள்ள நிலையில், பூங்கொடி பாலமுருகன் அவர்களின் விமர்சனம்

ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்? நெஞ்சைப் பிளந்து, உணர்ச்சிகளைக் கிளறி கண்கள் பனிக்கச் செய்யலாம்; கதறியழவும் வைக்கலாம்; கடல் பார்த்த சிறு பிள்ளை போல் கைதட்டி மகிழ வைக்கலாம்; செய்யும் பிழைகளை விரல் நீட்டிச் சுட்டலாம்; நாம் காணாத உலகங்களை கண்ணெதிரே நிறுத்தலாம்; கண்ட காட்சிகளை கவிதைப்படுத்தவும் செய்யலாம்; இன்னும் எத்துணையோ செய்யலாம். அத்துணையும் திறம்பட செய்கிறது ஈரோடு கதிர் அவர்களின் கிளையிலிருந்து வேர்வரை நூல்.

இலக்கியவாதிகள் மட்டும் புரிந்து கொள்ளும் ரகம் இல்லை. பாமரனும் புரிந்து கொள்ளும் வரம் இந்நூல். இதில் எங்கும் மிகைப்படுத்துதல் தென்படவில்லை. கதிர் அவர்கள் கண்ணோரம் கண்டவற்றை , காதோரம் கேட்டவற்றை, தன் நெஞ்ச குமுறல்களை சொல்லாக்கி இந்நூலை தந்திருக்கிறார். ஒவ்வொரு தலைப்பையும் இயல்பாய் கடக்க இயலாமல் நம் வாழ்வின் ஏதாவது தருணத்தைத் தொடர்புபடுத்தி நினைவுகளில் மூழ்கி பின் சற்று ஆசுவாசப்படுத்திய பிறகுதான் அடுத்த தலைப்பில் பயணிக்க இயலுகிறது.

* தந்தையிடம் கொஞ்சம் கூடுதலாய் தாய்மையை பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள் என்ற நிதர்சனத்தை நமக்கு உணர்த்திதான் நூலையே ஆரம்பிக்கிறார்.

* இயந்திரங்கள் வாழ்வை எளிமைப்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்திய பின்னரும் ஏன் இவ்வளவு பிசியாக இருக்கின்றோம் ? என்ற கேள்விக்கு நம்மை பதில் தேட வைக்கிறார்.

* அளவிடமுடியாத அன்புநூல் பிணைக்கப்பட்ட ஆயாவின் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தமுடியாத வெறுமையை நம்மிடம் கடத்துகிறார்.

* சாவதற்கு தேவைப்படும் காரணங்களை விட வாழ கூடுதலாய் ஒரோரு காரணமாவது இருக்ககூடும் என்று கூறி வாழ்தலின் தேவையை வலியுறுத்திச் சொல்கிறார்.

* வாழ்தல் வேறு பிழைத்தல் வேறு என நயம்பட உரைத்து சிறகை விரித்து வானம் ஏகி வானத்தை வசப்படுத்த நம்மை விளிக்கிறார்.

* கனத்த இதயத்துடன் பக்கங்கள் கடக்கையில் தீடீரென்று கைப்பிடித்து தேர்நோம்பிக்குக்கு கூட்டிச்சென்று கண்கண்ணாடியும் , ஊதலும் வாங்கி குடுத்து ராட்டினத்தில் ஏற்றி விட்டுவிடுகிறார்.

* புத்தகம் நெடுகிலும் வாழ்வின் அழகியல் தென்படுகிறது. இன்பமும் துன்பமும் எப்படி இயற்கையி்ன் நியதியோ அதுபோல கனத்தமனதுடன் புத்தகத்தில் பயணிக்கும் போது ஒரு இலகுவான கட்டுரையால் மனதை லேசாக்குகிறார். உதாரணத்திற்கு ஆயாவின் இழைப்பை உள்வாங்கி மனம் கனமுற்று இருக்கையில் அட பழுத்த இலைதானே உதிர்ந்து இருக்கிறது, கவலைப்படாதே பயணம் செய்வோம் என லீ குவான் யூவின் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

* தட்டில் விழும் சோற்று பருக்கையின் வரலாறு இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லையே என வருத்தப்பட்டு, தவறாய் இந்த தலைமுறையை வளர்கிறோமோ என சுய கழிவிரக்கத்தில் இருக்கும் போது ஓரம்போ ஓரம்போ என்று நுங்கு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து நம் கையில் திணித்து மனதை இலகுவாக்குகிறார்.

இப்படி புத்தகம் முழுவதும் இருளும் ஔியும் இயைந்ததுதான் வாழ்க்கை என்று இயல்பாய் சுட்டிக்காட்டிக்கொண்டே வருகிறார்.
மனம் கனத்த வேளையில் கண்ணீரை மறைக்க தனியறை சென்று விடுவேன். பிள்ளைகள் முன் உற்சாகமான அன்னையாய் மட்டுமே வலம் வருவேன். ஆனால் கதிர் அவர்கள் அப்பத்தா சிறுகதை தொகுப்பில் கோடி என்ற சிறுகதை படிக்கும்போது அவரின் உணர்வுகளை சொல்லில் வடித்திருப்பதை படிக்க படிக்க என்னையறியாமல் கேவி கண்ணீர் கொட்டியது. அதைக்கண்ட மூன்று வயதே ஆன என் மகள் தாவி என்னை அவள் நெஞ்சில் சாய்த்து அழாதீங்க அம்மா என்ற தாயாய் தேற்றிய கணம் நெஞ்சில் ஓவியமாய் தங்கிவிட்டது.

புத்தகத்தில் அவரின் தார்மீக கோபங்களையும் தெளிவுறுத்திக்கொண்டே தான் வருகிறார். முத்தாய்ப்பாய் தண்ணீரையும் , உணவையும் வீணடிக்காத சமூகத்தை உருவாக்க வேண்டுகோள் வைக்கிறார்.

மொத்தத்தில் இந்த புத்தகத்தை வாசித்தேன் என்பதைவிட நேசித்தேன் என்றே சொல்லலாம். வாழ்த்துகளும் , நன்றிகளும் பேரன்பும் ப்ரியங்களும் கதிர் ஸார்.

-