பரபரப்பாக கிளை பரப்பி
பிரபலம் அடைந்து வரும் இனிப்பகம் அது. நொறுக்குத் தீனிகள் வாங்கச் சென்றிருந்தேன்.
பில் 213 ரூபாய். 220 ரூபாயைக்
கொடுத்தேன். தன் கைபேசியில் தீவிரமாக இருந்த முதலாளி மூனு ரூபா, அஞ்சு ரூபா, ரெண்டு ரூபா சில்லறை இருந்தாக் கொடுங்க
என்றார். உண்மையில் என்னிடம் இல்லை. இல்லையென்றேன். ஐந்து ரூபாயும், ஒரு சாக்லெட்டையும் என் முகம் நோக்காமலேயே மேசையில் என் பக்கம் தள்ளினார்.
இம்மாதிரியான பல தருணங்களில் என் எதிர்ப்பைத் தெரிவிக்காமல்
சாக்லெட்டை வாங்கி வந்திருக்கிறேன். அப்படி வாங்கும்போது கேவலமான ஒரு பார்வையை
வீசவோ, அதையொட்டி ஏதேனும் முனகவோ தோன்றுவதுண்டு. ஒரு
ரூபாய், ரெண்டு ரூபாய் சில்லறை தராத நடத்துனர்களிடம் சில
நேரங்களின் வற்புறுத்தியதுண்டு, பல நேரங்களில்
தவிர்த்ததுண்டு. தவிர்த்த நாட்களில் பயணம் முடியும்வரை நடத்துனர் மேல் கொஞ்சம்
கடுப்பு இருக்கும்.
ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும்
பணம்தான். வட்டித்தொழிலில் முதலீடு செய்திருக்கும் நண்பர் ஒருவர் ”நூறு ஒரு ரூபாய் சேர்ந்தால்தான் நூறு ரூபாய்” என்பார்.
மேலோட்டமாகப் பார்த்தால் அதுவொரு மொக்கைக் கண்டுபிடிப்புபோல் தோன்றலாம். ஆனால்
அவர் சொல்லும் அந்தக் கூற்று, என்னளவில் ஆழ்ந்து யோசிக்க
வேண்டிய ஒன்றுதான்.
ஆனால் நம் காசை காசாகவே கேட்டுப்பெறாதது ஒரு கோழைத்தன மற்றும்
தவறான மனநிலை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவுமில்லை. ஆயினும் எல்லா
நேரங்களிலும் போராடும் போராளியல்ல, காரணம்
அவ்வப்போதைய மனநிலையும், சூழலும்.
இன்று நிதானமான மனநிலையில் இருந்தேன்.
காசை மட்டும் எடுத்துக்கொண்டு சாக்லெட்டைத் தொடாமல்... “இதென்ன?” என்றேன்
“சாக்லெட்”
“நான் சாக்லெட் வாங்கலையே”
“அப்பச் சில்ற வேணும்”
”எவ்ள தந்தேன்?”
”220”
“பில் எவ்ள?”
”213”
“213க்கு 220 தந்தா அது
சில்றையில்லையா? ஐநூறு கொடுத்தனா? ஆயிரம்
கொடுத்தனா...? இல்ல 250, 300னு
கொடுத்தனா?”
“வர்றவங்க எல்லார்த்துக்கும் 7 ரூவா சில்ற தரமுடியுமா?”
“அது வியாபாரம் செய்ற உங்க பாடு”
“நீங்க தான் சில்ற தரணும். நாங்க 10 ரூவா கமிஷன் கொடுத்து சில்ற வாங்குறோம்”
“உங்க வியாபாரத்துக்கு நீங்கதான் சில்ற வாங்கனும்.
கடைக்கு வர்றவங்க சரியான சில்ற கொடுக்கனும், இல்லைனா
சாக்லெட் தருவோம்னு எழுதி வைக்கனும்”
“வர்ற ஆயிரம் கஷ்டமருக்கும் நாங்க சில்ற கொடுக்க
முடியுமா!?”
“அப்ப ஆயிரம் கஷ்டமர்கிட்டயும் சில்றைக்கு எட்டணா
சாக்லெட் கொடுத்து ஏமாத்துவீங்ளா!?”
“உங்கள மாதிரி வெறும் ரெண்டு ரூவாக்கு யாரும் சண்டை
போட்டதில்ல”
”ஹலோ... இது ரெண்டு ரூவாக்கான சண்டையில்ல... நான்
கேக்காத, வாங்காத பொருளை காசுக்குப் பதிலா என்கிட்ட
திணிக்கிற உங்க மனோபாவத்துக்கு எதிரான கோபம். 213 ரூவா
பில்லுக்கு அம்பது நூறுனு லாபம் கிடைக்கும், ஆனாலும் சில்றக்
காசு ரெடி பண்ணி வைக்கமாட்டீங்க. கஷ்டமர் தலைல கண்ட சாக்லெட்ட கட்டுவீங்க”
நிதானமாகவே சொற்களைக் கையாண்டேன்.
முனகிக்கொண்டே ரெண்டு ரூபாயை எடுத்து வைத்தார்.
”ம்ம்ம்... இது.... பட் எம்பிரச்சனை இந்த ரெண்டு
ரூபா இல்ல. உங்க மனோபாவம்தான் பிரச்சனை. தள்ளுவண்டில பொருள் விக்கிறவங்க சில்ற
இல்லைனு சாக்லெட் கொடுத்து ஏமாத்திற முடியுமா? ஆனா உங்க
மாதிரி பெரிய கடைல தெனமும் நடக்கும். ஏன்னா... வர்றவங்க மிடில் க்ளாஸ், ஹை கிளாஸ், ஒருத்தரும் கேட்கமாட்டாங்னுதானே? இந்த ரெண்டு ரூபாய நம்ம ஆர்க்கியுமெண்ட் நினைவா உங்களுக்கே கொடுத்துட்டுப்
போறேன். உடனே மாறுவீங்களானு தெரியாது, மனசுல குறுகுறுத்தா
போதும்”
கடை ஊழியர்களும், வாடிக்கையாளர்களும்
எங்களை கவனித்தபடி இருந்தனர்.
அதில் யாரேனும் ஒருவர் ”என்னங்ண்ணா
பிரச்சனை!?” என முதலாளியைக் கேட்கலாம்.
என் நோக்கம் புரிந்தாலும்கூட அங்கு ”கஞ்சப்
பிசினாரி, கேவலம் ரெண்டு ரூவாக்கு அலையறதப் பாரு” என முதலாளியோ, மற்றவர்களோ சொல்லியிருக்கலாம்.
சொல்வார்கள்.
ஸோ.... வாட்.....!
”ரெண்டு” படத்தில்
வடிவேலுவுக்கு ஐடியா கொடுக்கும் மாதவன் போல் அநியாயத்தைக் கண்டு எப்பத்தான் பொங்கிப்
பழகுறதாம்!?
சுபம்!
*
பி.கு: தேவையில்லாத விளம்பரம் அல்லது அவர்கள் மேல் தனிப்பட்ட
வசவுகளைக் கொட்ட காரணமாகலாம் என்பதால் இங்கு கடையின் பெயர் அவசியமில்லை.
-
-
4 comments:
நல்ல பகிர்வு அண்ணா....
அருமை :-)
அருமை :-)
அருமையான பதிவு !
சாமானியர்களின் நியாயமான கோபம் இது
எத்தனையோ முறை நானும் இத்தகு கோபம் கொண்டிருக்கிறேன்.
ஆனாலும், கௌரவம் கருதி விட்டு விட்டு வந்திருக்கிறேன்.
பார்க்கலாம்... ஒரு முறை முயற்சித்துப் பார்க்கிறேன்.
Post a Comment