GKN School நண்பர்களைத் தேடி....!



கிட்டத்தட்ட இது பத்தாண்டு கனவு. ஆனால் இரண்டு நாட்களாய் நினைவுகளில் தளும்பிக்கொண்டேயிருக்கிறது. வேறொன்றுமில்லை. என் பள்ளி நண்பர்களைச் சந்திக்கவேண்டும் என்பதுதான்


 

ஹாஸ்டலில் போட்டால்தான் பையன் ஒழுங்கா படிச்சு நல்ல மார்க் வாங்குவான் எனும் (மூட)நம்பிக்கையில் அப்பா என்னையும் 1989ல் 11ம் வகுப்பிற்கு உடுமலை அருகே உள்ள கரட்டுமடம் (புங்கமுத்தூர்) என்ற ஊரிலிருக்கும் காந்தி கலா நிலையம் என்ற பள்ளி, விடுதியில் சேர்த்துவிட்டார். அங்கே என்ன நடந்தது என்பதெல்லாம் மறந்துபோன தருணத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வகுப்புத்தோழன் சௌந்தர்ராஜன் ஃபேஸ்புக் மூலம் தொடர்புக்கு வந்தான்.

சமீபத்தில் ஓராண்டுக்கு முன்பு வகுப்பு, விடுதித் தோழன் சிவசுப்பிரமணியம் ஃபேஸ்புக்கில் அடையாளம் கண்டு தொடர்புகொண்டு பேசியபோது என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. பல படங்களை அனுப்பியபின் அடையாளம் கண்டு கொண்டேன்



பேசிப்பார்க்கையில்தான் தெரிந்தது, அவன் மாமனார் வீடு நான் இருக்கும் வீட்டிலிருந்து இரண்டாவது வீதியில் இருக்கிறதென்று. ஒருமுறை பெங்களூரில் இருக்கும் அவன் வீட்டிலும், ஈரோட்டில் மாமனார் வீட்டிலும் என சந்தித்த நட்பு நன்றாகப் போய்கொண்டிருந்த தருணத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது

கதிர். நான் சுப்ரமணியம் பேசுறேன். GKN நாம ஒன்னாப் படிச்சோம்

புதுக்கோட்டை சுப்ரமணியமா!?”

அட ஆமாம்…. சைன்டிஸ்ட்னு கூட எல்லாரும் சொல்வீங்களே

நல்லா ஞாபகம் இருக்குப்பாஎன உரையாடல் தொடர்ந்தது.

அவனும் ஃபேஸ்புக்கில் இருக்க, சிவசுப்ரமணியத்திடமிருந்து எண் பெற்று பேச, அடுத்த நாளே அவரவர்களுத்தெரிந்த நண்பர்களின் பெயர்களையெல்லாம் சொல்ல, யாரெல்லாம் வாட்ஸப்ல இருக்காங்க எனத் தேடியதில், இதுவரை ஏழுபேரை இனம் கண்டிருக்கிறோம். கோவை சௌந்தர்ராஜன், திருச்சி REC கல்லூரியில் பணியாற்றும் கார்வேம்பு, கரூர் தன பால கிருஷ்ணன், அமெரிக்காவில் இருக்கும் பாலாமணி, அருள், விஷ்னு என பட்டியல் வளர ஆரம்பித்திருக்கிறது.

நாங்கள் அனைவரும் GKN பள்ளியில் 11ம் வகுப்பில் இணைந்த ஆண்டு 1989. மிகச்சரியாக இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. பள்ளியைவிட்டு வெளியேறிய ஆண்டு 1991. அதைக் கணக்கில் எடுத்தால் 2016.... 25ஆம் ஆண்டாக அமையும்.

பத்தாண்டு நிறைவடையும் தருணத்தில் ஒரு முறை உட்பட பல தருணங்களில் நான் அனைத்து நண்பர்களையும் எப்படியாவது ஒன்று திரட்டி ஒரு சந்திப்பை நிகழ்த்திடவேண்டுமென்பது அடங்க மறுத்த ஒரு கனவு. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து நண்பர்களின் பெயரையும் நான் மறந்துவிட்டிருக்கிறேன். அவ்வப்போது கண்ணில் பட்டுக்கொண்டிருந்த அந்த ஆட்டோக்ராப் புத்தகம் எங்கேயென்று உடனே தேடியாக வேண்டும்.

நேற்றைக்கு மதியம் முழுக்க நான் சிவசு, சுப்பிரமணியம் என வாட்ஸப்பில் குழு உரையாடல் நடத்திக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு பெயர்களாக அவர்கள் சொல்லச் சொல்ல பின்னோக்கி நினைவுகளில் நீந்திக்கொண்டிருந்தேன்.

படிக்கும் காலத்தில் சைன்டிஸ்ட் என்ற சுப்பிரமணியம்தான் படிப்பில் படு ஷார்ப். ஒரு விஞ்ஞானி அதுவும் விண்வெளி விஞ்ஞானி ஆகிவிடவேண்டும் என்பது அவன் கனவு. அதையெல்லாம் விட முக்கியம் பெண்களின் பக்கமே திரும்பிக்கூடப் பார்க்காதவன். எப்போதும் ராக்கெட் பற்றியே பேசியதால் சைண்டிஸ்ட் என்ற பெயர் வந்தது. பள்ளிகுறித்த நினைவுகளில் கிட்டத்தட்ட எல்லோரும் மறந்திருந்த சூழலிலும் கூட எனக்கு ’சைண்டிஸ்ட்’ சுப்பிரமணியம் பெயர் மட்டும் நினைவிலிருந்தது. ஆந்திராவில் இருக்கும் ஏதோ ஒரு ராக்கெட் ஏவுதளத்தில் விஞ்ஞானியாக சுப்பிரமணியம் இருப்பான் என்பது போன்ற பிம்பம் மட்டும் நினைவிலிருந்தது. மூன்று நாட்களுக்கு முன் அழைத்தபோது கோழிக்கோட்டில் IIM துறையில் பேராசியராக இருப்பதாகச் சொன்னபோது சிறிய ஏமாற்றமும், கூடவே வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமும் ஏற்பட்டது.

வாட்ஸப் குழு அரட்டைக்கு வருகிறேன். நேற்று மதியம் பிரியாணி தின்ற களைப்பிலும் அவர்கள் இருவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது அவரவர் நினைவில் இருக்கும் நண்பர்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டிருந்தபோது, பொறுக்க முடியாமல் ”அடப்பாவிகளா எல்லாம் ஆம்பிளைங்க பேராவே சொல்றீங்ளே! நம்மகூட ஆறேழு பொண்ணுங்க வேற படிச்சாங்கப்பா, ஒருத்தராச்சும் அவங்க பேரைச் சொல்றீங்ளா….? சுப்பு நீ ஒன்னும் இதுக்கெல்லாம் வெட்கப்பட்டுக்காதே… சிவசு… அந்த பொண்ணுங்க எங்காச்சும் தெரிஞ்சா சொல்லு” என்றேன். மனதிற்குள் பச்சை தாவணிகள் படபடத்துக்கொண்டிருந்தன.  50 ஆண்ட்கள் படிச்ச வகுப்பில் ஆறேழு பொண்ணுங்கதான் என்றிருந்த வறட்சி, இதுவரை ஒரு பெண்ணின் பெயர்கூட அடிபடவில்லையே என்பதில் கடும் வறட்சியானது!

உடனே சிவசு ஒரு குறிப்பிட்ட எழுத்தைச் சொல்லி அதிலிருந்து ஆரம்பிக்கவா எனக் கேட்க, அன்றுபோல் இப்போது வெட்கப்பட்டுக்கொண்டு சுப்பு அமைதியாகவே இருப்பான் என்ற நினைப்பில் ஒரு ராக்கெட் விழுந்ததுபோல சுப்புவிடம் இருந்து ஒரு வரி வந்து விழுந்தது

“அந்த பொண்ணுங்கள்ள சிலர் பாட்டி கூட ஆகியிருக்கலாம்”

படபடத்த பச்சைத்தாவணிகள் எல்லாம் பொசுக்கென புயல் காற்றில் பறந்துபோகத் தொடங்கிவிட்டன.

மீண்டும் நிரூபனமானது “சைண்டிஸ்ட் சைண்டிஸ்தான்யா….!”

நண்பர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதத்தில் பள்ளியில் ஒரு சந்திப்பை நிகழ்த்தலாம் என விரும்புகிறார்கள். அதே சமயம் இதை பெரிய அளவில் நிகழ்த்தவேண்டுமென எனக்குள் ஆவல் பிறந்திருக்கிறது.

இன்றைக்கு பள்ளியின் முகப்பு படம் ஒன்றை இணையத்தில் கண்டேன். வளாகச் சுவருக்குள் பசுமை குலுங்கும் அந்த வேப்பமரத்தின் குளுமை மனதெங்கும் பரவியது. அது ஒரு கிராமப்புற பள்ளிதான். மேற்குத்தொடர்ச்சி மலை தழுவிவரும் காற்று எப்போதும் வீசிக்கொண்டெயிருக்கும். அந்தக்குளிரின் மிச்சம் இன்றளவும் மனசுக்குள் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றது.

உடனிருந்த அனைவரையும் உதிர்த்துவிட்டு, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கழித்து தேடும் பயணம் இது. இலக்கு அடைவோமா எனத் தெரியவில்லை. எனினும் இந்தப் பயணம் இனிக்கவே செய்யும்.

இதை வாசிக்கும் நீங்கள் ஏதாவது ஒருவகையில் எங்களுக்கு உதவமுடியும்….
 
1989-1991 உடுமலை, புங்கமுத்தூர் (கரட்டுமடம்) காந்தி கலா நிலையத்தில் (GKN) படித்தவர்கள் பற்றிய விபரங்கள் இருப்பின் தயவுசெய்து பகிருங்கள்.
தொடர்புக்கு :

-

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சந்தோச துள்ளல் ஒவ்வொரு வரியிலும் உணர முடிகிறது... நட்பு உள்ளங்கள் அனைவரும் சேரவும் வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

நண்பர்களின் சங்கமம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள் அண்ணா.

ராமலக்ஷ்மி said...

கனவு நிறைவேறட்டும். நண்பர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவும் சந்திப்பு வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

நான் கலாநிலையத்தில் 1996