கண்ணெதிரே
தன் கடைசிச் சொட்டு உயிரை காற்றில் மெல்ல அசைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறது நாட்காட்டி.
நாளை புதிய நாட்காட்டி அங்கே அமர்ந்துவிடும். இதுவரையிலும் எந்தவொரு ஆண்டின் இறுதியிலும்,
ஆண்டு குறித்து அலசவோ, அடுத்த ஆண்டு குறித்து எதிர்பார்ப்புகளைப் பொறுக்கவோ நினைத்ததில்லை.
ஒருபோதும் ஆண்டுகள், மாதங்கள், நாட்கள் குறித்து எனக்கு உணர்ச்சிக்கனிவு இருந்ததில்லை.
அதே மனநிலையோடுதான் கடக்கும் இந்த ஆண்டை அணுகிடப் பார்க்கிறேன், ஆனாலும் அவ்வளவு எளிதாய்
என்னால் கடந்துவிடமுடியவில்லை. காரணம் நான் சந்தித்த சவால்களும், கிடைத்த வாய்ப்புகளும்,
அனுபவித்த பிரியங்களும் இதுவரை எந்த ஆண்டிலும் கிட்டாதது.
ஆண்டின்
துவக்கத்தில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து வலைப்பக்கத்தில் எழுதிய ஒரு கடிதப்பதிவு
ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. வாசித்துவிட்டு,
மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய இரண்டு புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்த ஒரு எழுத்தாளரும்,
திரையில் பிரபலமாகயிருக்கும் ஒருவரும் அழைத்துப் பாராட்டிய வார்த்தைகள், உண்மையிலேயே
அந்தப்பாராட்டுகளுக்கு நிகராக எழுதியிருக்கின்றேனா என்ற சந்தேகத்தையும், ஓரளவு எழுதுகிறோம்
என்ற சமாதானத்தையும் சரிவிகிதத்தில் கொடுத்தன. அதேசமயம் சில வசவுகளையும், ஒரு கொலை
மிரட்டல் அழைப்பையும் மௌனச் சிரிப்போடுதான் கடந்துபோனேன்.
எழுத்திற்கான
எந்தவொரு திட்டமிடலும், இலக்கும், தயாரிப்புமின்றியே இந்த ஆண்டு கடந்தது. வார இதழ்களில்
சில கவிதைகள், கட்டுரைகளென மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறேன். வலைப்பக்கத்தில் இந்த ஆண்டின் கணக்கில்
76 இடுகைகள் காட்டுகிறது. அலசிக் காயப்போட்டால் 50 இடுகைகள் தேறலாம். எழுத மனதில் நிறைய
கருக்கள் தோன்றினாலும் வளர்த்துப் பிரசவிப்பதில் தொடர்ந்து தோற்றுக்கொண்டேயிருக்கின்றேன்.
கட்டுரைகள், பத்திகளுக்கானவற்றை தொடர்ந்து ஓரிரு வரிகளில் குறைப்பிரசவமாக பிரசவித்துக்கொண்டிருக்கிறேன்
என்பதை ஒப்புக்கொள்ள வெட்கமேதுமில்லை.
கவிதை ஒன்று, கல்லூரி
ஒன்றின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மகிழ்வும், பொதிகைத் தொலைக்காட்சியில் ’கொஞ்சம்
கவிதை கொஞ்சம் தேநீர்’ நிகழ்ச்சியில் மூன்று வாரங்கள் பங்கெடுத்ததும், சன் நியூஸ் தொலைக்காட்சி
நேரடி விவாதத்தில் இரண்டு முறை பங்கெடுத்ததும் எனக்கலவையாய் மோதிய வாய்ப்புகள் மிகுந்த
இதம் அளிப்பதாகவும், இன்னும் ஓடு என உத்வேகப்படுத்துவதாகவும் அமைந்தன. நுழைவு வாயில்களைப்
பார்த்து அதிசயித்த கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றும் வாய்ப்பு பெருமகிழ்வை ஏற்படுத்தின.
மார்ச் மாத இறுதியில் எதிர்பாராத ஒரு இடர்பாடாக அம்மாவிற்கு
கண்ணில் ஒரு கட்டி இருந்தது தெரியவந்தது. அதன் விபரீதம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது.
மருத்துவமனையில் அறிக்கையை எதிர்கொண்ட நொடியில் கலங்கி நின்றது இப்போதும் அப்படியே
கசப்பாய் நினைவில் இருக்கின்றது. அடுத்து என்ன என்ற அம்புகளாய்த் தைத்த கேள்விகளுக்கு
அந்த நேரத்தில் என்னிடம் பதிலேதுமில்லை. என்ன செய்வதென்று குழம்பிய நொடியில் இணைய நட்பிலிருந்த
மருத்துவத்துறையில் ஜெர்மனியில் ஆராய்ச்சியாளராக இருக்கும் நண்பர் சுவாமி, மருத்துவர்கள்
திரு.தரண், திரு.செந்தில், திருமதி.நள்ளினி, திருமதி.ரேவதி, திரு.ஹரி ஆகியோருக்கு அந்த
அறிக்கையை அனுப்பி ஆலோசனை கேட்டேன். அந்தச் சூழலில் ஆழ்ந்த குழப்பத்திலிருந்த என்னை
மீட்ட எவரையும் வாழ்நாளின் எந்தத் தருணத்திலும் மறக்கவியலாது.
சென்னை சங்கரநேத்ராலயாவில் சிகிச்சை என முடிவு செய்தபின்,
அறிக்கையிலிருந்த சில குழப்பங்களை சரி செய்வதற்காக தொடர்ந்து போராடிய அமெரிக்க நண்பர்
Dr.செந்தில் அவர்களின் உழைப்பு என் வாழ்நாளின் கிடைத்தற்கரிய பரிசு. ஆய்வுகளுக்குப்
பின் பிரேக்கிதெரபி சிகிச்சை, 6 வாரம் கழித்து ஆய்வு, ஒவ்வொரு ஆறுமாத இடைவெளிக்கும்
ஆய்வு என ஓரளவு சிக்கலிலிருந்து மீண்டுகொண்டிருக்கிறோம். அதுவும் முதல் நூறு நாட்கள்
மிகமிகக் கடினமானவை. அந்தக் கடினத்தை அவ்வளவு எளிதில் என்னால் வார்த்தைகளில் கொட்டிவிட
முடியாது.
ஏப்ரல் 6ம் தேதி முதன்முறையாக அறிக்கையை கையில் பெற்றவுடன்,
அதிலிருக்கும் மருத்துவ வார்த்தைகள் புரியாமல் முதலில் அதை அனுப்பி ஆலோசனை கேட்டது
டாக்டர் தரண் அவர்களிடம் தான். அன்று முதல் இன்று வரை சுமார் 20-30 தடவைகள் அவர் என்னை
அழைத்திருப்பார். நேரில் ஒருமுறை கூட நாங்கள் சந்தித்துக் கொண்டதில்லை என்றாலும் அவரின்
வழிகாட்டுதல்கள் இல்லையென்றால் நான் மிக நிச்சயமாக துவண்டு போயிருக்கும் சாத்தியமுண்டு.
தன் ஆராய்ச்சி தொடர்பான துறை என்பதால், நண்பர் சுவாமி அவர்கள் ஒவ்வொரு முறையும் அறிக்கைகளைக்கண்டு, அளித்த அறிவுரையும், நம்பிக்கையும் வாழ்நாளின் கடைசி நொடிவரைக்கும் மனதில் இருப்பவை. தொடந்து உணவு முறை, கவனம் என அவரின் ஆலோசனைகள் மிகுந்த பயனுள்ளவை.
தன் ஆராய்ச்சி தொடர்பான துறை என்பதால், நண்பர் சுவாமி அவர்கள் ஒவ்வொரு முறையும் அறிக்கைகளைக்கண்டு, அளித்த அறிவுரையும், நம்பிக்கையும் வாழ்நாளின் கடைசி நொடிவரைக்கும் மனதில் இருப்பவை. தொடந்து உணவு முறை, கவனம் என அவரின் ஆலோசனைகள் மிகுந்த பயனுள்ளவை.
கடந்த ஒன்பது மாதத்தில் எப்படியும் 20 முறைகளுக்கு மேலாக
சென்னைக்குப் பயணித்திருப்பேன். ஒரு நாள், இரண்டு நாட்கள். நான்கு நாட்கள் என்று கூட
தங்க வேண்டிய சூழல். ஒவ்வொருமுறை செல்லும்போதும் நாங்கள் இறங்குவதற்குமுன், அது எந்த
நேரமாகயிருந்தாலும், பெரம்பூர் ரயில் நிலையத்தில் பாலா அண்ணன் நிற்பார். அத்தனை முறையும்
அவரின் வீட்டிலேயே தங்கினேன். அவர் காரை எடுத்துக் கொண்டே சென்னையைச் சுற்றினேன். அவர்
வீட்டிலேயே பசியாறினேன். ஒரு நட்புக்காக, பாலா அண்ணன் மட்டுமின்றி, அவர் குடும்பமே
இத்தனை அன்பாய் கவனித்துக்கொண்டதை, உடனிருந்ததை நினைக்கும்போது, அதற்கான பிரதி, மாற்று
அன்பை எங்கே செலுத்தப் போகிறேன் என்பதுதான் கனமாய் இருக்கின்றது.
உலகப்படங்களை தேடித்தேடிப் பார்த்ததிலிருந்து மலையாளப்படங்கள்
சற்றே என்னை தடம்புரட்டிப் போட்டது. ஃபஹத்ஃபாசிலும் பிருத்திவிராஜ்ஜும் என்னை முழுமையாக
ஆட்கொண்டார்கள். இந்த ஆண்டு வெளியான ஃபஹத்ஃபாசிலின் 12 படங்களில் 7 படங்களைப் பார்த்திருப்பதில்
புரிகிறது நான் எவ்ளோ பெரிய மலையாளப் பட தீவிரவாதியாகியிருக்கிறேன் என்று. ஆனாலும்
உஸ்தாத் ஓட்டல், 22FK, செல்லுலாயிட் கொடுத்த அதிர்வுகள் அவ்வளவு எளிதில் அடங்காதது.
இந்த உலகத்திற்குள் என்னை இழுத்துவிட்ட பெருமை நண்பன் கார்த்தியையே சாரும்.
ஆண்டின் துவக்கத்தில் பாலா அண்ணன், சுவாமி, பிரபா ஆகியோருடனும்,
மத்தியில் மாப்பு பழமைபேசி, ஆரூரன், வீரா ஆகியோருடனும் ஆண்டின் இறுதியில் திடீரென சிங்கப்பூர்,
மலேசியா ஆரூரன், ஆனந்தி, சவணமூர்த்தியோடு சென்ற பயணமும் எப்போதும் மனதை சிலிர்க்க வைப்பவை.
சிங்கப்பூர் மலேசியா பயணத்தில், தங்குதல், ஊர் சுற்றுதல் என அனைத்து வகைகளிலும் உதவிய,
அன்பைப் பரிமாறிய அனிதா, மோகன்ராஜ், வெற்றி, கோவி, கருணாகரசு, பாரதி, முஸ்தபா, கணபதி, கோமளா உள்ளிட்ட
அனைத்து நட்புகளும் எனக்குச் சொன்னது இந்த உலகம் அன்பால் நிரம்பியது என்பதையேதான்.
பல சந்தர்ப்பங்களில் அமைதியாகவும், ஒதுங்கியிருப்பதின் மூலமாகவும்
சரியானவர்களை நான் அங்கீகரிக்க மறந்துபோனதும், தவறவிட்டதும் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு
இலக்கிய மாநாட்டில் முதல் வரிசையின் மையத்தில் அமர்ந்திருந்தேன். கலந்துகொண்ட பலரும்
அங்கிருந்த பலருக்கும் நன்கு பழக்கமானவர்கள். நான் மட்டுமே புதிது. இடது பக்க நுழைவாயில்
பகுதியில், சிறப்பு விருந்தினரான பெண் ஆளுமை ஒருவர் உள் நுழைகிறார். ஒவ்வொரு இருக்கையாக
வணக்கம் சொல்லி, மகிழ்வாய்ப் பேசிக்கொண்டு நகர்ந்து வருகிறார். எனக்கு அவரைத் தெரியும்,
ஆனால் அவருக்கு என்னைத்தெரியாது. என் இடதுபக்க இருக்கையோடு பேசிவிட்டு நகர்கிறார்.
சற்றே பார்வைத் தாழ்த்தியவாறு அவர் என்னைக் கடந்து வலப்பக்க இருக்கைக்கு நகர்வதற்குக்
காத்திருக்கிறேன். என் கால்களுக்கு சற்றே நெருக்கமாக எதிரில் அவர் நிற்பதை உணர்கிறேன்.
சில விநாடிகள் காத்திருக்கிறேன். ஏன் இன்னும் நகரவில்லையென சற்றே மேலே பார்வையை நகர்த்துகிறேன்.
முகத்தைச் சந்திக்கும் நொடியில் உணர்கிறேன், வழக்கமான சிரிப்போடு “கதிர் நல்லாருக்கீங்ளா”
என எதிர்கொள்கிறார். அதுவரை எனக்குள் இருந்த மனத்தடைக்காக அப்போது அடைந்த வெட்கத்தை
நினைத்தால் இப்போதும்கூட என் முன்முடிவுகள் மீது ஒரு கசப்பு தோன்றி மறைகிறது. அதுவொரு
ஆகச்சிறந்த பாடம் எனக்கு. அதன்பின் என் இறுகியிருந்த விரல்களைச் சற்றே இலகுவாக்கிக்கொண்டு
சக மனிதர்களை நோக்கி எளிதில் நீட்டப் பழகிக்கொண்டேன்.
இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைப்பது திரைப்படமொன்றில்
சிறிய பாத்திரத்தில் நடிக்க நண்பர் ஜீவா கேட்ட நிமிடங்கள்தான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக
சில முறை கேமரா முன் அமர்ந்திருந்தாலும், இதுநாள் வரையிலும் நான் திடமாக நம்பியது ’எனக்கு
நடிப்பு வராது’ என்பதுதான். ஜீவாவிடம் வீட்டில் கேட்டுட்டு சொல்றேங்க என சமாளித்துப்
பார்த்தேன். சரி என்றவர் அடுத்த நாள் அன்பாய் மேலும் அழுத்தம் கொடுத்தார். முயற்சித்துப்
பார்ப்போம், சரிவரலைனா விட்டுடுவோம் என்று சொன்னதாலும், சரி அந்த உலகம் எப்படித்தான்
இருக்கும் என்றுதான் பார்த்துவிடலாமே என்ற ஆர்வத்தாலும் ஒப்புக்கொண்டேன்.
ஒருநாள் உள்ளரங்கு படப்பிடிப்பு, நான்கு நாட்கள் வெளிப்புற
படப்பிடிப்பு என்று அதையும் மகிழ்வாய்க் கடந்திருக்கிறேன். ஐந்து நாட்களில் அந்த உலகத்தில்
இயங்குபவர்கள் மேற்கொள்ளும் கடினமான பணி கண்டு வியந்து, வியர்த்துப்போனேன். ஒன்று புரிந்தது
வெற்றியோ தோல்வியோ எந்தப் படமாக இருந்தாலும் அவைகளுக்கான உழைப்பு ஏறத்தாழ ஒன்றுதான்
என்பது. இரவு நேரப் படப்பிடிப்புக்காக அவர்கள் மேற்கொள்ளும் உழைப்பை எழுத வார்த்தைகள்
போதாது. மூன்று நாட்கள் இரவு 8 மணியிலிருந்து 2 மணிவரை நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்தேன்.
அதே நாட்களில் பகலிலும் படப்பிடிப்பு இருந்தது. சில நடிகர்கள் தவிர்த்து, இயக்குனர்,
ஒளிப்பதிவாளர், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட படை பகல், இரவு என எப்படி 18 – 20 மணி நேரம்
தொடர்ந்து உழைக்கிறார்கள் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். அந்த உழைப்பின்
பின்னால் எத்தனை கனவு இருக்கும் என்பதுதான் பாடம். ஓய்வில்லாமல் இரவு இரண்டு மணி சுமாருக்கு
எடுக்கும் காட்சிகளில்கூட சற்றும் நிதானம் தவறாமல், புன்னகையோடு தனக்கு வேண்டியதை வரவழைக்க
வைத்த இயக்குனர் திரு. மோகன், வாழ்நாளில் கண்ட ஒரு ஆச்சரியம் என்றே சொல்வேன்.
இதுவரையிலான வாழ்க்கையை உதறிப்போட்டு என்னவெல்லாம் சேகரித்து
வைத்திருக்கிறேன் எனப்பார்த்தால், ஒன்றுதான் புலப்படுகிறது சேகரித்து வைத்திருப்பவை
நட்புகள் மட்டுமே. 20 வயது மூத்தவர்கள் முதல் 20 வயது குறைந்தவர்கள் வரை என்னால் சரி
சமமாக அன்பைப் பரிமாற முடிகிறது, அவர்களிடமிருந்து அன்பை அள்ளிக்கொள்ள முடிகிறது.
நான் விரித்திருக்கும் என் இறக்கையின் சிறகுகளுக்கு சொடுக்கெடுத்தவர்கள் குறித்து உள்ளபடியே பெருமைப்படுகிறேன். எதிர்கொள்ளவியலா இடர்பாட்டினைச் சந்தித்தபோதும், அதைக்கடக்க உதவியதிலிருந்து, நல்லவற்றை தொடர்ந்து தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் நட்புகளையும் உறவுகளையும் நினைக்கையில் நெக்குருகிறது. எட்டாத் தொலைவிலிருந்தாலும் அன்பால் எவர் கண்ணீரையும் ஒருவரால் துடைக்கமுடியும் என்பதை மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். பிரியத்தை மொழியாக்கும் உறவுகளின் சொற்கள் ஒவ்வொன்றும் மெல்லத் தலைகோதும், விரல் பிடித்து சொடுக்கெடுக்கும், குழந்தைபோல் கால்களை மடிமீது போட்டு “கொஞ்சம் அமுத்தியுடுங்க” எனக் கேட்கும். அதுவே நம் மனநிலையை உன்னதமாகவும் உற்சாகமாகவுமே நகர்த்த எல்லாவற்றையும் முன்னெடுக்கும். என்னைக் குறித்து நான் அக்கறை கொள்வதைவிட ’இதை அப்படிச் செய், அதை இப்படிச் செய்’ எனும் நட்புகள் தந்தையாய், தாயாய், சகோதரமாய், காதலாய் என எல்லாவகையிலும் இயக்கிக்கொண்டே இருக்கிறார்கள். எழுது எழுது என துரத்திக் கொண்டேயிருக்கும் நட்புகளோடும் என் நாட்கள் நல்லபடியாகவே நகர்ந்திருக்கின்றன, நகர்கின்றன.
நான் விரித்திருக்கும் என் இறக்கையின் சிறகுகளுக்கு சொடுக்கெடுத்தவர்கள் குறித்து உள்ளபடியே பெருமைப்படுகிறேன். எதிர்கொள்ளவியலா இடர்பாட்டினைச் சந்தித்தபோதும், அதைக்கடக்க உதவியதிலிருந்து, நல்லவற்றை தொடர்ந்து தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் நட்புகளையும் உறவுகளையும் நினைக்கையில் நெக்குருகிறது. எட்டாத் தொலைவிலிருந்தாலும் அன்பால் எவர் கண்ணீரையும் ஒருவரால் துடைக்கமுடியும் என்பதை மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். பிரியத்தை மொழியாக்கும் உறவுகளின் சொற்கள் ஒவ்வொன்றும் மெல்லத் தலைகோதும், விரல் பிடித்து சொடுக்கெடுக்கும், குழந்தைபோல் கால்களை மடிமீது போட்டு “கொஞ்சம் அமுத்தியுடுங்க” எனக் கேட்கும். அதுவே நம் மனநிலையை உன்னதமாகவும் உற்சாகமாகவுமே நகர்த்த எல்லாவற்றையும் முன்னெடுக்கும். என்னைக் குறித்து நான் அக்கறை கொள்வதைவிட ’இதை அப்படிச் செய், அதை இப்படிச் செய்’ எனும் நட்புகள் தந்தையாய், தாயாய், சகோதரமாய், காதலாய் என எல்லாவகையிலும் இயக்கிக்கொண்டே இருக்கிறார்கள். எழுது எழுது என துரத்திக் கொண்டேயிருக்கும் நட்புகளோடும் என் நாட்கள் நல்லபடியாகவே நகர்ந்திருக்கின்றன, நகர்கின்றன.
வேறென்ன……!?
வாழ்ந்த காலம்
நினைவுகளாக…
எதிர்காலம் வாய்ப்புகளாக…!
அனைவருக்கும் புத்தாண்டு
நல்வாழ்த்துகள்
-
9 comments:
வணக்கமும் வாழ்த்தும்! வரும் ஆண்டும் வரம்மிகு ஆண்டாய் அமைய வாழ்த்துகள் மாப்பு!!
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே !!!
வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமையட்டும்...
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் சிறப்பாக அமையவும், குடும்பத்துடன் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வரும் ஆண்டை கழிக்கவும், இன்னும் பல வாய்ப்புகளும், வெற்றிகளும் பெறவும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகளும், வணக்கங்களும்..
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
வாழ்ந்த காலம் நினைவுகளாக…
எதிர்காலம் வாய்ப்புகளாக…!
அவ்வளவுதான்... அருமையாச் சொல்லியிருக்கிறீர்கள்...
வருங்காலம் வசந்த காலம் ஆகட்டும்...
வாழ்த்துக்கள் அண்ணா...
"ஈரோடு ஸ்டார் "கதிருக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
years do roll.. memories still remains fresh and welcomes the new year always with a glad full heart..by just keeping the difficulties pushing and still standing firm..
Post a Comment