மூளைச் சூடு



கோடை ஒரு அசாதாரண சூழலைத்தான் பரப்பிக் கொண்டேயிருக்கின்றது. வெயிலைத் தாங்கமுடியவில்லை என்று சொல்வது ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்திருக்கலாம். இப்போது எவராலும் தாங்க முடியவில்லைதான். உண்மையில் வெயில் அத்தனை சுடுகிறதா அல்லது வெயிலை, வெக்கையைத் தாங்கும் குறைந்தபட்ச தாங்குதிறனையும் நாம் இழந்துவிட்டோமா எனத்தெரியவில்லை.

கை பேசியில் பேசிக்கொள்வோரிடம் நாளுக்கு நாள் வழக்கத்திற்கு மாறாக குரல்கள் உரத்து ஒலிப்பதாக உணர்கிறேன். சட்டெனக் குரல் உயர்ந்து “நான் சொல்றத முதல்ல கேளு” என்பது போன்ற சண்டைக்கான அனுமதி நுழைவை எளிதாக வழங்கிவிடுகின்றன. நேர நெருக்கடியும், புறச்சூழலும் இதை இயக்குகின்றதெனப் புரிகின்றது. இது கோடைகாலத்தில் அதிகமாக நிகழ்கின்றதோ என்றும் தோன்றுகின்றன.

வெளியில் நிலவும் வெப்பமும் புழுக்கமும் கண்களைச் சுடுகிறது. விழிகளை ஒருமுறை இறுக்க மூடித் திறக்கிறேன். மூளைக்குள் ஏதோ ஒன்று அப்படியே இமைகளை மூடிக் கொள்ளச்சொல்கிறது. வெயிலுக்கும் வெக்கைக்குக்கும் பின்வாங்க வேண்டாமென மூளைக்குள் வேறு ஏதோ ஒன்று கட்டளையிடுகிறது. இதை எங்கே தொடங்கி எங்கே நிறைவு செய்வதென்ற நோக்கம் ஏதுமில்லை.



எனக்குத் தெரிந்தநாள் முதல் குடிதண்ணீருக்கென்று இன்னொரு கிணற்றைத் தேடிப்போயிடாத விவசாயக் குடும்பங்களையும் கூட இந்தக் கோடை ஆட்டிப்படைக்கின்றது. விவசாய பூமிக்கு, இருக்கும் கால்நடைகளுக்கு என்பதற்கெல்லாம் முன்பாக குடிக்க சமைக்க துவைக்க தண்ணீர் இல்லையென்ற சூழலை, காலம்காலமாய் விவசாயம் செய்த விவசாயிகள் காணத்தொடங்கியுள்ளனர். இந்தமுறை பெரும்பாலானோரின் ஆழ்துளைக் கிணறுகளும் கைவிட்டுவிட்டன. புலிவாலைப் பிடித்த கதையாய் எப்படியாவது சமாளித்துவிடுவோம் என வைத்திருக்கும் ஓரிரு எருமைகளைக் காப்பாற்றவும், தண்ணீர் தொட்டி வெடித்துப்போகாமல் இருப்பதற்காகவும் டிராக்டர் மூலம் காசு போட்டு தண்ணீர் வாங்கி ஊற்றிடும் அவலத்தையும் எங்கள் கிராமம் முதன்முறையாக சந்தித்துவிட்டது.
நகர்ப்புறத்தின் விளிம்பில் இருக்கும் சில விவசாய நிலங்களில் தண்ணீர் விற்பனை வெகு விமரிசையாய் நடப்பதைக் கண்டதுண்டு. உள்ளடங்கிய கிராமத்தில் சரியாக தட வசதிகூட இல்லாத விவசாய பூமிக்குச் சென்று லாரி மூலம் தண்ணீர் வாங்கிவரும் பணியை அந்தப் பகுதியில் புதிதாய் முளைக்கும் கம்பெனிகளும், கல்வி நிறுவனங்களும் செய்யத் தொடங்கிவிட்டன.

தண்ணீரை காசுக்கு விற்கலாமா எனும் கேள்வியை அந்த உள்ளடங்கிய விவசாயியின் மனசாட்சியை தட்டியெழுப்பியெல்லாம் கேட்டுவிட முடியாது. ”அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன்” எனும் பதில் அவர்களிடம் தயாராக இருந்து கொண்டிருக்கலாம்.

என்னை நிறுத்தச்சொல்லும் முன்பு ”அவனை நிறுத்தச் சொல்லு” என எந்த திசையிலும் தைரியமாக இப்பொழுதெல்லாம் விரல் சுட்டலாம். தாங்கள் செய்வதை நிறுத்தாமல், செழிப்பாய் இருக்கும் பல ”அவன்கள்” இவர்களின் விரல் சுட்டலில் பட்டுவிடத் தயாராகத்தான் இருக்கின்றார்கள்.
மஞ்சள் வேகவைக்கும் அடுப்புக்கு பக்கத்தில் அமரவைத்தது போல் இருக்கின்றது மதிய வெயில். பாதாளச் சாக்கடைக்கு பல வீதிகளைக் குதறிவிட்டதால் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்பு நடுத்தர வயதைத் தாண்டியவர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொளுத்தும் வெயிலில் சாலை வெறிச்சோடித்தான் கிடந்தது. நானும் ஏதோ சிந்தனையில் மெதுவாக பைக்கில் வந்து கொண்டிருந்தேன். நீண்ட நேரமாக ஒரு ஹார்ன் சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. கொஞ்சம் சிந்தனையை நிறுத்திவிட்டு எங்கே இந்த சப்தம் என பார்த்தேன். எனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தவர்தான் விடாமல் அடித்துக்கொண்டேயிருந்தார். ஆனால் அவருக்கு முன்னாலும் யாருமில்லை.

பாதாளச் சாக்கடைக்குத் தோண்டிப்போட்ட எச்சங்கள் பாதி சாலையை பாழ்படுத்திக்கிடந்தன. அவரை ஒதுங்கலாம் என்றாலும் வழிவிடாமல் ஆக்கிரமிப்பு பாவனையில் சென்று கொண்டிருந்தார். கவனிக்கத் தொடங்கியபிறகு ஆளே இல்லாமல் அடித்துக்கொண்டேயிருக்கும் அவரின் ஹார்ன் முழக்கம் வெயிலைவிட அதிகம் எரிச்சலை உண்டாக்கியது. வழக்கமாக பின்னால் வந்து இங்கிதமின்றி அடிக்கும் ஹார்ன்கள்தான் எரிச்சலை உண்டாக்கும். வெயில், வழிவிடாதது, ஆளில்லா சாலையில் ஹார்ன் அடித்தது என ஒரு கொலைவெறி எனக்குள் குடிகொண்டது. எந்த சாத்தானோ எனக்குள் விழித்தெழுந்து எனது இடது கை கட்டை விரலில் வைத்து அழுத்தியிருக்க வேண்டும். ப்ப்ப்பீய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங் என என் வண்டியின் ஹார்ன் அலறியது. தனக்கு போட்டியாக வந்த ஹார்ன் சப்தம் அவரை அதிர்ச்சியுறச் செய்திருக்கவேண்டும். இத்தனைக்கும் சில நொடிகள்தான். வண்டியை இடமும் வலமும் ஒடித்துத் தடுமாறி சட்டென ப்ரேக் போட்டவர் என்னைத் திரும்பிப் பாத்து “ஆரன் அடிச்சா, எப்படிப் போறதாம்” என்றார். அப்போது அவரை கடந்துவிட்டிருந்தேன். அதன்பின் அவர் ஹார்ன் அடிக்கவில்லை!

இது ஏன், எப்படி, எதனால் என ஆராயும் மனநிலையை வெயில் எனக்குத் துளியும் தரவேயில்லை.

சவிதா சிக்னல் அருகே செங்குந்தர் பள்ளியின் பின்புறம் வந்து கொண்டிருந்தேன். தூரத்தில் வரும்போதே சிவப்பு தெரிந்தது. 22 எனும் சிவப்பு எண் நொடிகள் கரைந்து கொண்டிருப்பதை உணர்த்தியது. கொஞ்சம் நிதானித்தேன். மெதுவாகச் சென்றால் நொடிகள் கரையவும் வண்டிகள் நகரவும் சரியாக இருக்குமென்று. ஒரு அரசுப் பேருந்து இடது பக்கம் நின்றுகொண்டிருந்தது. பேருந்துக்கும் அம்சாசுப்ரமணியம் மருத்துவனை சுவருக்கும் இடையே இருந்த இடைவெளியில் நேராகச்சென்று மேற்கு நோக்கித்திரும்பும் இருசக்கர வாகனங்கள் இரண்டு மூன்று நின்றுகொண்டிருந்தன. என்னை கொஞ்சம் உரசியவாறு வேகமாய் ஒதுங்கிய ஒருமாற்றுத் திறனாளியின் நான்கு(2சக்கர) சக்கர ஸ்கூட்டி, ஏற்கனவே நின்று கொண்டிருந்த வண்டிகளின் பின் நின்று நிதானிக்காமல் அநியாயத்திற்கு வலதுபக்கம் ஒடித்து நெருக்கிக்கடக்க முற்பட்டது. அப்போது சுமார் 12 நொடிகள்தான் மிச்சமிருந்தன..

”அட லூசுப்பயலே, இப்படிப் போனான்னா அந்த டிச்சுல விழுந்துடுவானே” என நினைத்துக்கொண்டிருக்கும் போதே, இன்னும் நெளிந்து நெருக்கி வலது ஓரத்திற்கு நகர்ந்து மற்ற வாகனங்களைக் கடக்க முற்பட்டது அந்த வண்டி.
அநியாயத்திற்குத் தங்களை ஒதுங்கும் வண்டியை இடதுபக்கம் நின்றிருந்த இரண்டு வண்டி ஓட்டிகள் ஒரு மாதிரியாகப் பார்ப்பதையும் கவனித்தேன். நொடிகள் 4,3 என குறையும்போதே முன்னால் நின்றிருந்த வண்டிகள் சீற, நானும் கியரை மாற்றி வேகத்தைக் கூட்டினேன். வலதுபக்கம் நுனியில் இருந்த அந்த மாற்றுத்திறனாளி இல்லாத சாலையை கற்பனை செய்தோ என்னவோ இன்னும் கொஞ்சம் வலதுபக்கம் ஒடித்து வேகத்தைக் கூட்டமுற்பட தார் சாலையின் மழுங்கிய விளிம்பு வலதுபக்க பின் சக்கரத்தைச் சரிக்க சாக்கடைக்குள் இறங்கப் போவதையும், பக்கவாட்டுச் சுவரில் உரசப்போவதையும் நிஜமும் கற்பனையுமாய், நான் உணரும் தருணத்தில் அந்த வண்டியைக் கடந்து பிரப்ரோட்டில் நுழைந்து விட்டிருந்தேன்.

யாரோ அய்யய்யோ எனக் குரல் எழுப்புவது புரிந்தது. அந்த இடத்தில் நிற்க நினைக்கக்கூட முடியாதபடி பின்னால் சீறிக்கொண்டிருந்தன வண்டிகள். சாலையைக் கடந்தாகிவிட்டது. அது மிகப் பெரிய சாக்கடையில்லைதான். அடுத்த சில நிமிடங்களில் மீட்பு நிகழ்ந்தேறியிருக்கும். ”பார்த்து பொறுமையா வரக்கூடாதா?” என்ற அறிவுரையோ பொதுபுத்தியின் முழக்கமாய் “உனக்கெதுக்கு இந்த சர்க்கஸ் வேலை” என்ற திட்டோ விழுந்திருக்கலாம்.

ஒருவேளை அது ஆழமும் அகலமுமான சாக்கடையாக இருந்திருந்தால். சிலவற்றில் அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்றெல்லாம் சமாளிப்பு வசனங்கள் சொல்ல வாய்ப்புக் கிட்டுவதில்லை. நாம் நிறுத்தவில்லையென்றால் வேறு ஏதோ ஒன்று நில்லாமல் போகலாம், அல்லது ஒட்டுமொத்தமாய் நின்றே கூடப்போகலாம்.

எல்லா கோக்குமாக்கு, கிறுக்குத்தனங்களுக்கும், பிறரின் இயலாமையை, தன் வறட்டு நம்பிக்கையை, அவசரத்தை, அறியாமையை, வெயிலை, குளிரை, மழையை, மதுவை, உணர்வை, சூழலை மட்டுமே குறை சொல்லமுடியாது.

மொத்தத்தில் மூளை சூடு கிளம்பித்தான் இருக்கின்றோம்.

-


1 comment:

விக்னேஸ்வரி சுரேஷ் said...

எவ்வளவு யதார்த்தம்? வெயில் நம் குணத்தையே மாற்றவல்லது தான். வெயில் கால காத்திருப்புகள், நரகத்தை இனம் காட்டுகின்றன..

அதேபோல்,மழை மனிதர்களை சாந்தமாக்குவதையும் கண்டிருக்கிறேன்.

அருமை கதிர் :-)