காலையில அலுவலகம் முன்பக்க சாலையில் உலகமே இடிந்துபோகிற
மாதிரி கத்தல். நூறு அடி தூரத்திற்குள், இரு டாஸ்மாக் இருக்க, இது அடிக்கடி நடப்பதுதான்.
ஆனால் 8 மணிக்கே எப்படி இப்படி சப்தம்? டாஸ்மாக்
திறந்திருக்க மாட்டாங்களே? நேற்றே வாங்கி வெச்ச சரக்கா இருக்குமோ என்று ஆர்வமா(!) ஓடிப்போய்
பார்த்தால் 20 வயது ஆண்கள் இருவர். ஒருவர் அதிகுள்ளம், ஒருவர் அதி உயரம். உயரமான ஆள்
கொஞ்சம் அமைதி காத்தது போல் இருந்தது. பைக்கில் இருந்து இறங்கக்கூட இல்லை. குள்ளமாய்
பர்முடாஸ், பனியன் போட்டிருந்த பையன் மாதிரி இருந்த ஆள் குதிகுதியென்று குதித்துக் கொண்டிருந்தார். அடைபட்டிருந்த கோபம், அணை உடைத்து வெளியேறுவதுபோல் ஓர் ஆக்ரோசம்.
ஒரு மூன்று நான்கு நிமிடம் கத்தலோ
கத்தல். சவாலோ சவால். வெற்றிக்கொடிகட்டு படத்தில் வடிவேலு வாங்கிய திட்டை விட அதிகமோ என்றும் தோன்றியது. என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியாமல் பேந்த பேந்த முழித்துக்கொண்டே
நிற்கும்போது, அருகில் குப்பை அள்ளிப்போடும் மாநகராட்சி தொழிலாளர்களும், மூட்டை தூக்குவோர்
சங்க ஆட்களும் இருவரையும் விலக்கிவிட்டு சமாதனப்படுத்தி அனுப்பினர்.
கூட்டம் கலைந்தபிறகு என்னவென்று
விசாரிக்க, பாதளச்சாக்கடைக்கு தோண்டி மூடியும் மூடாமலும், மேடுபள்ளமாய் உள்ள சாலையில்
எதிரெதிராகக் கடக்கும்போது ஒருவருக்கொருவர் உரசுகிற மாதிரி வந்துட்டாங்களாம். அதில்
உயரமாய் இருந்த ஆள் ஏய் என்று பதட்டத்தில் கத்தியிருக்கிறார். குள்ளமாய் இருந்தவர்
சில அடிகளில் சட்டென தனது வண்டியை நிறுத்திட்டு, “டேய்… என்னடா ஏய்னு சொல்றேனு” சண்டையை
ஆரம்பித்ததாக ஒருவர் திரைக்கதை வாசித்தார். ஒருவர் “ஏய்” சொன்னதுக்கு… ”டேய் என்னடா
ஏய்னு சொல்றே” அடடா இது சூப்பரா இருக்கே எனத் தோன்றியது.
இந்தக் கோபத்தை, மூன்று மாதங்களுக்கு
முன்பு பாதாளச்சாக்கடைக்கு தோண்டி மூடியும் மூடாமலும் விட்டதால் வளைந்து நெளிந்து சென்று
உரசும் சூழலை இன்னும் அனுமதித்திருக்கும் மாநாகராட்சி மன்றத்திடமோ, அலுவலகர்களிடோம்
காட்ட திராணியில்லாமல்தான், ஓங்கிய குரலில் அதுவும் இத்தனை காலையில் ஆக்ரோசமான சண்டைகளைப்
போட்டு வீரத்தை தீர்க்கிறோம் என்பது ஆச்சரியமாக இருந்தது.
”பார்த்தா படிச்சவங்களாட்ட இருக்கு,
அவிய அடிச்சுக்க, படிக்காத நாமதான் வெலக்கியுட வேண்டீதா இருக்கு” மூட்டை தூக்கும் ஒருவர்
சிரித்தவாறே சொல்லிக்கொண்டு நகர்ந்தது என்னையும் அறைந்தது.
ஆர்வமாய் ஓடிவந்து வேடிக்கை பார்த்த
எனக்கு ஏன் அவர்களை விலக்கிவிடத் தோன்றவில்லை. ஒவ்வொரு வீதிச் சண்டைகளிலும் பேண்ட்
சட்டை போட்ட ஆட்களைவிட, இதுபோன்ற வீதி சார்ந்த ஆட்களே விலக்க முற்படுகின்றனர். அதிலும்
சிறிது நேரத்திற்கு முன்பு அந்தச் சண்டை குறித்து என் மனது விபரீதமாய் கற்பனை செய்ததை
நினைக்க அறுவெறுப்பாகவும், வெட்கமாகவும்
இருந்தது, எகிறிக்கொண்டிருந்த அந்த குள்ள ஆள் உயரமான ஆளை எகிறி அடிப்பது போன்றும்,
அப்போது அந்த உயரமான ஆள் குள்ளமான ஆளை கழுத்தோடு அமுக்கிப் பிடித்து கும்முகும்மென்று
கும்முவது போலவும், விநாடி நேரம் மனதுக்குள் படமாய் விரிந்து நீடித்த காட்சியை நினைக்க
என் கற்பனைக்குதிரை மீது சொல்லொணா வெறுப்பு வந்தது.
வீதிச் சண்டையைவிட
பெரிய சண்டை எனக்குள்ளே நிகழத்தொடங்கியது!
-
9 comments:
நமக்கு சண்டை ஒன்னு வெளில நடக்கணும் இல்ல உள்ள நடக்கணும்...
இல்லாட்டி, நம்மனால சும்மா இருக்க முடியாதே :P
என்ன செய்வது... நமக்குள்ளேயே 'பொங்க' வேண்டியது தான்...
நல்லா இருக்கு?
நமது மனம் எப்பொழுதும் வேடிக்கை பார்க்கத்தான் விரும்பும் - நமக்கேன் வம்பு என ஒதுங்கி நினறு வேடிக்கை பார்ப்போம் - விலக்கி விடப் போய் நமக்கும் அடி விழுந்தால் என்ன ஆவது ........ நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா -
சண்டையை விலக்க போய் எனக்கு அடி விழுந்தது ஒரு நிகழ்வினில்....
அதனால் இப்ப எல்லாம் நான் எங்க யார் சண்டை போட்டாலும் வேடிக்கை பார்ப்பதோடு சரி அண்ணா...
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/3.html) சென்று பார்க்கலாம்...
நன்றி...
வலைச்சரத்தின் மூலம் தான் உங்கள் தளத்திற்குள் .... வாழ்த்துகள்.
பலகாலம் பழகியவரே எப்படி நடந்து கொள்வர் எனக் கணிக்க முடியாதபோது முன் பின் தெரியாதவர் குறித்த பயமே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வைக்கிறது
எதற்கு வம்பு என்று நினைப்பது எல்லோருக்கும் பொதுவானதே.
வலைச்சரம் மூலம் முதல் வருகை! சண்டை காட்சியை விவரித்த விதம் சிறப்பு! நன்றி!
Post a Comment