நல்லாப் பாதுகாக்குறாங்கைய்யா சாலையை!

இரவு 11.45 சுமாருக்கு (NH-47) கருமத்தம்பட்டியில் கோவை - ஈரோடு செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினேன். பயணச்சீட்டைக் கிழித்த நடத்துனர் 43 என்றார். அவருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். நீல வர்ணச் சீருடை மூத்த பணியாளார் என்பதைக் காட்டியாது. 43 ஆ என கேட்டுக்கொண்டே உற்றுப்பார்த்தேன். EXPRESS என்றார். ஆமாம், முன்புறக்கண்ணாடியில் EXPRESS என்று ஒட்டப்பட்டிருந்தது. பேருந்தில் என்னையும் சேர்த்து 6 பேர் மட்டுமே! கொஞ்சம் குளிராக இருந்ததா
லும், கூட்டம் இல்லாததாலும் பேருந்தின் முன்பக்கம் இயந்திரம் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.

EXPRESS என்ற வார்த்தையை கட்டணம் மட்டும் கூடுதலாக பயன்படுத்தும் யுக்தி என்பதை மிகத் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறது அரசுப் பேருந்து நிர்வாகம். மருந்துக்குக்கூட 40 கி.மீ வேகத்தை தாண்டவில்லையென்று நினைக்கின்றேன். அடுத்தடுத்த நிறுத்தங்களிலும் யாராவது கை காட்டுகிறார்களா என பொறுமையாகத் தேடிப்பார்த்தார். யாரும் பேருந்தை மறிக்கவில்லை.

செங்கப்பள்ளி வரை நாற்கரச் சாலைப் பணிகள் நடைபெறுவதால், சாலைகள் தாறுமாறாகக் கிடந்தன. ஒவ்வொரு இணைப்பிலும் முன் செல்லும் வாகனத்தை ஒதுங்கும் போது, எதிரில் வரும் வாகனம் விலகும் போது, இடது பக்கம் உட்காந்திருந்த நடத்துனர் தன் வயதுக்குப் பொருந்தாத கெட்ட வார்த்தைகளால் அந்த ஓட்டுனர்களைத் திட்டிக்கொண்டேயிருந்தார். அதில் நகைப்பான செய்தி, என்னவெனில் திட்டுவாங்கிய பல ஓட்டுனர்கள் தமிழர்கள் அல்ல என்பதுதான். வாகனங்களை நெருங்கிக் கடக்கும் போது இவர் ஏதாவது கத்தித் திட்டுவதும் என ஒரு வழியாய் செங்கப்பள்ளியைக் கடந்தது.

ஆனாலும் வேகம் 40ஐ தாண்டவில்லை. ஓட்டுனர் ஒரு மாதிரி முதுகை வளைத்து நெளிந்து நெளிந்து, இருக்கையில் இருந்து சில அங்குலம் இப்படி அப்படியென்று நகர்ந்துகொண்டேயிருந்தார். திடீரென தண்ணீர் பாட்டிலையெடுத்து பக்கவாட்டுக் கதவைத்திறந்து, முகம் கழுவினார். அப்போதுதான் புரிந்தது, கடும் தூக்கத்தில் அவர் அவதிப்படுவது.
பேருந்து வேகம் குறைவாகப் போவதால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சில நிமிடங்களில் திரும்பவும் நெளிந்தார். 

எதற்கோ என் பக்கம் திரும்பிய நடத்துனரிடம் “ட்ரைவருக்கு ரொம்பத் தூக்கம் போல” என்றேன். அதெல்லாம் ஒன்றுமில்லையென்பது போல் நடத்துனர் தலையை ஆட்டி மறுத்தார்.

கொஞ்சம் தூரம் சென்றபோது கவனித்தேன், ஓட்டுனர் கொஞ்சம் உயரமாகத் தெரிந்தார். நன்றாக கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தேன், ஒருவாறு தன் இருக்கையிலிருந்து எழுந்து பின் பக்கத்தை இருக்கையின் மேல்பக்கத்தில் அணைத்தவாறு, நின்றவாறு இருந்தார், பேருந்து அதே சீரான வேகத்தில் “டொர்ரு..ட்ட்ட்டொர்ரு” என ஓடிக்கொண்டிருந்தது.


அதுபற்றி ஏதும் கண்டுகொள்ளாத நடத்துனர், எங்கோ ஒரு உணவகத்தில் 15 ரூபாய்க்கு 4 தோசை என்றும், நன்றாக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். 
நான் இரண்டு இருக்கைகள் பின்னால் சென்று  முன்பக்க நுழைவுவாயில் அருகே என் இருக்கை வாஸ்துவை மாற்றிக்கொண்டேன். நாற்கரச் சாலை என்பததால் எதிரில் வரும் வாகன ஆபத்து இல்லை என கணக்கிட்டுக் கொண்டிருக்கும் போதே பெருந்துறையை எட்டியது. அதன்பின்னும் சாலையில் எதிரில் பெரிதாக வாகனம் ஏதுமில்லை. அவரும் தன் இருக்கையில் நான்கைந்துமுறை நகர்ந்து நகர்ந்து உட்கார்ந்தார். இரு கைகளை வேகமாக உரசி, முகத்தை தேய்த்துக்கொண்டார். இன்னும் பல சேட்டைகள் செய்தார் பாவம்.

கிட்டத்தட்ட ஒன்னேமுக்கால் மணி நேரம் கடந்திருந்தது. என் நிறுத்தம் வர  நிறுத்தச் சொல்லியும், அவர் சுதாரித்து நிற்பதற்குள், கொஞ்ச தூரம் தாண்டியிருந்தது. அவர் நிலமையை நினைத்துக்கொண்டே, எதும் பேசாமல் இறங்கினேன். நகரும் பேருந்தைப் பார்த்தேன். பின்பக்க கண்ணாடியில் ”சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 1 முதல் 7 வரை” என வண்ணமயமாக ஒட்டியிருந்தார்கள்.

ஒருவேளை சாலைகளை மட்டும் ”குண்டு குழியிலிருந்து” பாதுகாப்பார்களோ என்னவோ!

-

8 comments:

க.பாலாசி said...

இதுக்கே இப்டின்னா நானெல்லாம் ஒரு ராத்திரி முச்சூடும் ட்ரைவர கண்காணிச்சிட்டே போயிருக்கேன்.. கண்டெக்டர் அவர்பாட்டுக்கு ஜாலியா தூங்குவாரு..

ராமலக்ஷ்மி said...

பள்ளி இறுதியில் நாங்கள் சுற்றுலா சென்றிருந்த பேருந்து ட்ரைவர் தூங்கி கொண்டே ஓட்டியதால் புனே மலைப்பாதையில் 3 பல்டி அடித்தது நினைவுக்கு வருகிறது.

/”சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 1 முதல் 7 வரை” /

சென்ற வருடங்களில் இவ்வாரத்தில் பலரும் சாலை பாதுகாப்புக் குறித்துப் பதிவுகள் இட்டிருந்தார்கள். இவ்வருடமும் தொடரலாம்.

சத்ரியன் said...

பாவம்யா ட்ரைவரு!

ட்ரைவரோட உசுருந்தானே அந்த பஸ்ஸ நம்பி வந்துச்சி!

கும்மாச்சி said...

ஓட்டுனருக்கு தூக்கமா? இல்லை மப்பா? பயணிகள் பாடு திண்டாட்டம்தான்.

வரதராஜலு .பூ said...

கொடுமைதான்.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - வேறு வழி இல்லை - பல்வேறூ காரணங்களால் - இவை தவிர்க்க இயலாததாகி விட்டது. ம்ம்ம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

சென்னையிலிருந்து தென்காசிக்கு செல்லும்வரை நானும் இதேபோல் ஓட்டுனரின் சேட்டையை கவனித்ததுண்டு.

Durga Karthik. said...

ஐயோ! அப்படின்னு இருந்து படிக்கும் போது. இனி பஸ் நம்பரை மட்டும் பார்த்து ஏறக் கூடாது ஓட்டுனரையும் பார்த்து ஏறணும்.