நேர்மைக்கும் நேசிக்கப்படுவதற்கும்


சமீப காலத்தில் நேர்மை எனும் வார்த்தையை எங்காவது வாசிக்கும்போதோ, கேட்கும்போதோ, பேசும்போதோ என்னையறியாமல் மனதிற்குள் வந்து சம்மணமிட்டு அமரும் பெயர் சகாயம் என்பதுதான். நாமக்கல் மாவட்டத்தில் நிகரற்ற பணி, மதுரையில் சிறப்பான தேர்தல்கால செயல்பாடுகள், அதன் பின்னரும் தொடரும் சிறந்த நிர்வாகம் என எப்போதுமே அவர் குறித்து வரும் செய்திகள் மகிழ்ச்சியை உருவாக்கிக்கொண்டேயிருக்கும். 

இந்நிலையில் நாமக்கல்-மோகனூர் சுப்பிரமணியம் கலைக்கல்லூரியின் தாளாளரும் நண்பருமான திரு. பழனியாண்டி அவர்கள், சில நாட்களுக்கு முன் தங்கள் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு அழைப்பிதழ் வடிவமைக்க வேண்டுமெனக் கேட்டபோது. எதேச்சையாக ”இந்த ஆண்டு சிறப்புவிருந்தினர் யாரெ”னக் கேட்டேன். ” கலெக்டர் சகாயம்ங்க” என்றபோது மனதிற்குள் ஒரு மின்னல் அடித்தது. “ஆஹா, கண்டிப்பா நானும் வர்றேங்க, அழைப்பிதழை நானே அமைத்துக்கொடுக்கிறேன்” என மகிழ்ச்சியோடு தெரிவித்தேன்

சனிக்கிழமை (03.12.2011) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு நிச்சயம் செல்லவேண்டும் என ஒரு வாரமாக மனதில் குறித்துவைத்திருந்தது, சனிக்கிழமை திடீரென முளைத்த ஒரு தவிர்க்க முடியாத பணியால் தடைபட்டுப்போனது. மிகுந்த மனவருத்தத்தோடு அன்றைய நாளைக் கடத்திக்கொண்டிருக்கும்போது, முன் மதிய நேரத்தில் நாமக்கல் நகர அரிமா சங்கத்தின் தலைவர் நண்பர் ’சாந்தி’ மணி அவர்கள் திடீரென கைபேசியில் அழைத்தார். “இன்னிக்கு சாயந்திரம், எங்க அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் தினம், சகாயம் கலெக்டர் வர்றார். ஈரோட்ல இருந்து தனபாலன் வர்றார், அவரோடு நீங்களும் கட்டாயம் வரவேண்டும்” என அழைத்தார். அதுவரை இருந்த மனச்சோர்வு மாயமாகிப்போனது.

சகாயம் உரை. மேடையில் பழனியாண்டி, சந்திரசேகரன், ’சாந்தி’மணி
 

இதற்குமுன் சகாயம் அவர்கள் கூட்டத்தில் பேசியதைக் கேட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிறது. முன்பு இருந்ததைவிட இளைத்துக்காணப்பட்டார். ஆனால் இதற்குமுன் கண்டதைவிட அதி உற்சாகமாய்த் தெரிந்தார். நாமக்கல் நகரத்தில் இருப்பதில் கொஞ்சம் கூடுதல் சந்தோஷமாய் இருக்கிறார் என்பதும் புரிந்தது.

ஒலி வாங்கி அவர் வசம் சென்றது. இதற்குமுன் பலமுறை உரை நிகழ்த்தியைப் பார்த்திருக்கிறேன். இம்முறை பேசும்போது உடல்மொழி மிகச்சிறப்பாக தாண்டவமாடியது. நாமக்கல் ஆட்சியராக பணியாற்றிய போது நிகழ்ந்த சிறப்பான நிகழ்வுகள் குறித்து, அதில் மாவட்ட மக்களின் ஒத்துழைப்பு குறித்து நினைவுகூர்ந்து நிறைய செய்திகளைப் பகிர்ந்தார். நாமக்கல்லில் நம்பிக்கை இல்லம்” உருவாக்கப்பட்டதின் பின்னனியில் இருந்த வலிமிகுந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார். அந்த இல்லம் திறம்படச் செயல்பட முன்கூட்டியே உருவாக்கிய திட்டம் குறித்துப் பேசினார்.

பணிக்கு வந்த 19 வருடங்களில் சந்தித்த 18 பணியிட மாற்றங்கள் குறித்துப் பேசும்போது, அதுவே அவர் நேர்மையாக இருப்பதற்கான அடையாளம் என்பது புரிந்தது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஒருமுறை நெடுஞ்சாலையில் தன் வாகனத்திற்கு முன் இருசக்கரவாகனத்தில் தடுமாற்றத்தோடு சென்ற குடிகாரர்களை மடக்கி விசாரித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்கச் சொன்னபோது, அந்தக் குடிகாரர்களில் ஒரு ஆள் தன் சட்டைப்பையில் இருந்து 100 ரூபாய் எடுத்து நீட்டி லஞ்சமாக வைத்துக்கொண்டு தன்னை விடுவிக்ககோரியதை நினைவு கூர்ந்தார். “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” என சொல்லிக்கொண்டிருக்கும் தன்னிடமே லஞ்சம் அளிக்கப்பட்டதைக் குறிப்பிட்டதோடு, “வாகனத்தை இயக்கமுடியாமல் தடுமாறும் குடிகாரனுக்கும் கூடத் தெரிந்திருக்கிறது காசு கொடுத்தால் காரியம் சாதித்துக்கொள்ளலாம்” எனக்கூறியபோது நிஜம் சுட்டது.

பட்டயநாள் விழா கேக்

பயிற்சிக்காக வடஇந்தியாவிற்கு அனுப்பப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து தன்னை பணிமாற்றம் செய்த  போது, பிள்ளைகளின் படிப்பு, பயிற்சியிலிருந்து உடனே திரும்பமுடியாத நிலை. புதிய ஆட்சியர் பொறுப்பேற்றதால் வீட்டைக் காலி செய்யவேண்டிய சூழல் என குடும்பம் சற்றே சிரமப்பட்டிருக்கின்றனர். 45 நாட்கள் கழித்தே பயிற்சியிலிருந்து திரும்பியிருக்கிறார். அதன்பின் புதுதிருப்பூர் திட்டக்குழுமத்தின் அதிகாரியாகப் பணியாற்றும் வேளையில், ஒரு முன்னிரவுப் பொழுதில் அலைபேசி அழைக்கிறது. எடுத்தால் மறுபக்கம் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவின்குமார். 

”சகாயம் நீங்கள் மதுரைக்குச் செல்லவேண்டும்”

“எதற்கு அய்யா என்ன விசயம்”

“அங்கு சென்று ஆட்சியராகப் பொறுப்பெடுத்துக்கொள்ளுங்கள். இது மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆணை”

அடுத்த நான்கைந்து நாட்களில் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். அதன்பின் நடந்தவைகளை பரபரப்பாக அவ்வப்போது செய்திகளில் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். மதுரையில் சிறப்பாகச் செய்துவிட்டீர்கள் என யாராவது புகழ முற்பட்டால், சிறுபுன்னகையோடு மறுத்துவிட்டு, ”சட்டம் பெரிது, அதன்படி செயல்படுகிறேன்” என்கிறார் உறுதியான பார்வையோடு.

உற்சாகமான உரை

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு நகரத்தில் அறிமுகம் செய்த உழவர் உணவகங்களில் 11 மாதங்களில் 1 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்ததைப் பெருமையோடு நினைவுகூறும்போது, அதில் பயன்பெற்ற விவசாயிகளின் பெயர்களைக்கூட பட்டியலிடுகிறார். வெண்ணந்தூரில் பத்தாம் வகுப்பில் 491 மதிப்பெண்கள் எடுத்து, மாவட்டத்தில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த இரண்டு அரசுப்பள்ளி மாணவர்கள், உயர்கல்விக்கு அரசு அளித்த நிதியைப் பெற மறுத்து, அதே அரசுப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிப்போம் என்று கூடுகின்றனர். இந்த ஆண்டு 1174, 1164 மதிப்பெண்கள் பெற்று இருவரும் மருத்துவக் கல்லூரியில் இணைந்திருப்பது வரை தகவல்களைப் பகிரும்போது ஆச்சரியமாக இருக்கின்றது.

நாமக்கல் மாவட்டத்தை விட்டுச் சென்று ஆண்டுக் கணக்காகின்றது. மதுரை மாவட்டத்தில் நிறைய உழைத்து, உழைத்தும் கொண்டிருக்கிறார். ஆனாலும் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த நிகழ்வுகளை, அதில் இருந்த நபர்களின் பெயர்களோடு எந்தக் குறிப்பும் இல்லாமல் படபடவெனச் சொல்லிக்கொண்டே போவதைக் காணும் போது ஆச்சரியத்தில் விழிகள் விரிகின்றன. மனம் மலர்கின்றது.

அரிமா தனபாலன் உரை


அவருக்குப் பின் சில அரிமா சங்கத் தலைவர்கள் பேசுவதைப் பொறுமையோடு கேட்கிறார். கூட்டம் நிறைவடைகின்றது. அரங்கை விட்டு வெளியேவந்து மிக இயல்பாக உரையாடிக்கொண்டே தட்டைக் கையில் ஏந்திக்கொண்டு சகஜமாக எல்லோரோடும் உணவருந்துகிறார். இருநூறுக்கும் மேற்பட்டிருந்த அரிமா சங்க உறுப்பினர்களும், ஏனையோரும் அவரையே சூழ்ந்து சூழ்ந்து நகர்ந்து தங்கள் உணவை உண்கின்றனர். அவரை நெருங்கும் ஒவ்வொரு மனிதனிடமும் மிகப்பெரிய நேசம் வழிந்தோடுகிறது.

எல்லோரின் வாய்களும் உணவை மட்டும் மெல்லவில்லை, உடன் சகாயம் குறித்த வார்த்தைகளையும் மென்றுகொண்டிருப்பதை உணரமுடிகின்றது. அவரைக்குறித்துப் பேசும் முகங்களில் ஒருவித துள்ளல் தாண்டவமாடுகிறது.

நாமக்கல் நகர அரிமா சங்க அமைப்பினர் திரு.சகாயம் அவர்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்துவந்துவிட ஆறுமாதங்களுக்கு மேலாக முயற்சித்திருக்கின்றனர். மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் கிராமத்தோப்பு அமைக்க அரிமா சங்கத்தினர் பெரிதும் துணைநின்றதால், அவராலும் தட்டமுடியவில்லை. எனினும் பணிச்சூழலில் காலம் தாழ்த்தி தற்போது வந்திருக்கிறார். அப்படி வந்தவர் மேல் அவர்கள் காட்டிய அன்பும், நேசமும் அவ்வளவு எளிதில் ஒரு மனிதனுக்கு கிட்டிவிடாது.

உணவு முடித்து கிளம்பும் தருணம் வந்த போதிலும் மக்கள் மொய்த்துக் கொண்டேயிருந்தனர். மிகப்பொறுமையாக அவர்களோடு உரையாடினார். அவ்வப்போது அழைக்கும் அலைபேசிக்குப் பதிலளித்தார். பின்னிரவு நேரத்திலும் அந்த மனிதர்களின் பிணைப்பிலிருந்து விடுபட அவர் ஆழ்மனமும் இடமளிக்கவில்லையென்றே தோன்றியது. அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடுவதை உணர்வுப்பூர்வமாக அவர் விரும்பி அனுபவிப்பதை அவரின் உடல்மொழியில் புரிந்துகொள்ள முடிந்தது. 

ஒருவழியாய்ப் புறப்பட்டு, வாகனத்தை நோக்கி நகர, பெருங்கூட்டம் அப்படியே அந்த திசையில் நகர்ந்தது. வாகனத்தில் ஏறி அமர்ந்து, வாகனம் வேகம் பிடிக்க கூட்டம் நெகிழ்ச்சியோடு தளும்பிக்கொண்டிருந்தது.

இதுபோல் பற்பல கூட்டங்களில், முக்கியப் பதவி வகிப்போரை, எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, அரசியல் தலைவர்களை என விதவிதமாய் நேசிக்கும் கூட்டத்தினரை பலவிதங்களில் கண்டதுண்டு. ஆனாலும் இங்கு வழிந்தோடிய அடர்த்தியான நேசிப்பு எனக்கு, இது ஒரு புதுவிதமான, இதுவரைக் காணாத ஒரு அனுபவமாகவே பட்டது.

திரும்பும் வழிநெடுகிலும், அவர் மீது மக்கள் கொண்டிருந்த நேசம் குறித்தே பேச்சும் சிந்தனையும் ஓடிக்கொண்டிருந்தது. யார் இவர்? ஒரு அரசு அதிகாரிதானே? அதுவும் மாவட்டத்திலிருந்து வருடத்திற்கு முன்பே மாற்றலாகிப்போய்விட்ட ஒருவர். அதிலும் அங்கு கூடியிருந்தவர்களில் யாருமே அவரிடம் நேரிடையாகப் பயன்பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்காது எனவும் தோன்றியது. ஆனாலும் இப்படி ஒட்டுமொத்த நேசிப்புக்கு உகந்த மனிதனாக எப்படி மாறிப்போனார்.

சிறப்பான செயல்பாடுகள் மூலம் நேசிப்புக்கு உகந்தவராக மாறுவதற்கு இவர் ஒரு நிஜமான உதாரணம் எனத் தோன்றியது. நேர்மையாக இருப்பதற்கும், நேசிக்கப்படுவதற்கும் இவரே சரியான ஒரு முன் மாதிரி எனவும் தோன்றியது. இன்னும்கூட அவ்வாறே தோன்றிக்கொண்டிருக்கிறது.

~17 comments:

manjoorraja said...

வாழ்க்கையில் ஒரு முறையாவது சிலரை சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் தோன்றுவதுண்டு. அவ்வாறு பல காலம் காத்திருந்து எதிர்பாராமல் ஒரு நாளில் சந்தித்து அளவளாவியர் எழுத்தாளர் கோணங்கி.

அது போல கலெக்டர் சகாயத்தையும் என்றேனும் ஒரு நாள் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.

தனி காட்டு ராஜா said...

////சமீப காலத்தில் நேர்மை எனும் வார்த்தையை எங்காவது வாசிக்கும்போதோ, கேட்கும்போதோ, பேசும்போதோ என்னையறியாமல் மனதிற்குள் வந்து சம்மணமிட்டு அமரும் பெயர் சகாயம் என்பதுதான்.////

எனக்கும் கூட நேர்மை எனும் வார்த்தையை எங்காவது கேட்கும்போதோ, பேசும்போதோ என்னையறியாமல் மனதிற்குள் வந்து சம்மணமிட்டு அமரும் பெயர் "HAMAM" சோப்பு என்பதுதான் :))


என்ன பண்ணுவது நம்ம( சமுகம் ) கிட்ட இல்லாத அல்லது குறைவாக உள்ள ஒரு விஷயம் மத்தவங்ககிட்ட இருந்தா கொஞ்சம் வியப்பாக இருப்பது இயல்பு தான் :)

vasu balaji said...

அருமையான பகிர்வு.நன்றி

Ravichandran Somu said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு... ந‌ன்றி !!!

க.பாலாசி said...

மவராசன் நல்லாருக்கோணும்.. நல்ல பகிர்வும்...

Anonymous said...

ஏம்ப்பா நீ யென்னவா ஆக ஆசப்படுற -- சகாயம் மாதிரி கலெக்டரா -- தன் பதவிக்கு முன்னுதாரனமான -- ” மனிதன் “

அன்புடன் அருணா said...

/அவரை நெருங்கும் ஒவ்வொரு மனிதனிடமும் மிகப்பெரிய நேசம் வழிந்தோடுகிறது./
கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டும்னு தோணுதே!!

பழமைபேசி said...

just we need 100 IAS like him...

Jc.Saravana Kumar.B said...

செய்திதாள் தொட்டு தொலைகாட்சி வரை
இந்த ஊழல், என்ற வார்த்தை கேட்டு கேட்டு
நம் செவிகள் மறுத்துப் போய் விட்டது .....

ஊழல் குற்றவாளியாக ...
சிறை சென்று வந்தால் ,
அதற்கும் விழா எடுக்கும் துணிவு
இவர்களுக்கு யார் கொடுத்தது ......

இவர்கள் எதை செய்தலும் ,
ஒரு செய்தியாய் மட்டும்
பார்த்து பழகி போன நமக்கு
கேள்வி கேட்கும் துணிவு
என்று வருமோ .......

பணம் வாங்கி விட்டல்லவா
ஓட்டுப் போட்டோம் , பரிகாரமாக
இதை பழகிக்கதான் வேண்டும்
என எண்ணி விட்டோமோ ??....

இதற்கு மத்தியிலும் ஓரு அமைப்பு
ஓரு உன்னத மனிதனை கௌரவிக்கும்
விதமாக, தங்களின் அமைப்பு சார்ந்த நிகழ்சிக்கு
திரு. சகாயம் அவர்களை அழைத்து , பெருமைபடுதியதற்காக....
அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.....

இன்னும் என் மனித சாதி ,
நேர்மைக்கும் நாணயத்திற்கும் மதிபளிப்பதைக்
காணும் பொழுது, என்னுள் ஒரு நிம்மதிப் பெரும்மூச்சு ....

இத்தகைய செய்தியை எங்களுக்குப் பகிர்ந்தளித்த
உங்களுக்கும் என் நன்றிகள் பல......

தெய்வசுகந்தி said...

நாங்களும் உங்களுடன் வந்த உணர்வு!!!

ஓலை said...

Nalla pagirvu.

Mahi_Granny said...

அருமையான அதிகாரியைப் பற்றிய அருமையான பகிர்வு.

Rathnavel Natarajan said...

மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் அவர்களைப் பற்றிய அருமையான பதிவு. நெகிழ்ந்து விட்டேன். எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நல்ல பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

இவரைப் போன்றவர்களைத்தான் அரியணையில் அமர்த்திப் பார்க்க வேண்டுமென்று ஆசை..

சத்ரியன் said...

நேர்மை நெடுங்காலம் வாழும்.

பகிர்விற்கு பாராட்டுக்கள், கதிர்.

பட்டுக்கோட்டையான் said...

அண்ணே நல்ல பதிவு.

பட்டுக்கோட்டையான் said...

அண்ணே நல்ல பதிவு.தங்களை போல் நல்ல
இதயம்கொண்டவர்கள் ஆயிரம் சகாயம்களை உருவாக்கலாம் ..... .