தொலைந்து மீளும் உலகம்


ரண்டு படுக்கையும் சேர்ந்து சதுரமாக இருப்பதால் எந்த திசையில் வேண்டுமானாலும் தலைவைத்து தூங்கிக்கொள்ளலாம். ஆனால் அதில் மேற்கு ஓரம் படுத்து, வடக்கில் தலை வைத்த தினங்களிலெல்லாம் கனவுகளால் இரவுகள் நிரம்புவதாக இருக்கின்றது. அதுவும் கனவில் வருபவர்கள் சாதாரண ஆட்களாய் இருப்பதில்லை. குறைந்த பட்சம் எதாவது தலைவர்களாக, அதுவும் விவகாரம் பிடித்த தலைவர்களாகவேயிருக்க, நாளுக்கு நாள் லேசான அச்சம் அப்பிக்கொண்டது, இது எப்படியும் நம்மைக் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பாமல் விடாது போல என்று.

சில நாட்கள் கனவுகள் வந்தது குறித்து எதுவும் சொல்லவில்லை. ஒரு நாள் வேறுவழியின்றி வீட்டில் சொன்னேன். ஒரு மாதிரி கிண்டலாகப் பார்த்து குறும்புன்னகை பூத்தவர்களிடம் “என்னானலும் சரி இன்னிக்கு அதே மாதிரி படுக்கிறேன், எப்படிக் கனவு வருதுன்னு பார்க்கிறேன்” என சவால்(!) விட்டுவிட்டுப்படுத்தேன்.

காலையில் கண்விழிக்கும் போது கனவு கரைந்துகொண்டிருந்தது. விழித்த விநாடியில் சப்தமாகச் சொன்னேன். ”அடச்சே இன்னிக்கு கனவு வந்துடுச்சு. அதும் என்னோட நேரம், ரோசய்யாவா கனவுல வரணும்” என்று சொல்லியதைக் கேட்டு மனைவி சிரிக்கும் முன்னே, எப்போது அந்நேரத்துக்கு சிரமப்பட்டு எழுப்பினாலும் விழிக்காத மகள், தாவி கழுத்தைக் கட்டிக்கொண்டு, “என்னப்பா நடந்துச்சு கனவுல” என கேட்க ஆரம்பித்தாள். கரைந்துபோன கனவின் எச்சமாய், மிச்சம் மீதியிருந்த கனவுச் சாயங்களை அவர்களிடம் தெளித்துவிட்டு. ”தூக்கம் முக்கியம்டா குமாரு” என எனக்கு நானே சொல்லிக்கொண்டு இனி இடம் மாற்றிப்படுப்பது என முடிவோடு அன்றைய நாளைக் கடந்தேன்.

இரவு படுக்கைக்குச் செல்லும்போது கவனித்தேன்,  எனக்கு மட்டும் சபிக்கப்பட்ட அதே இடம் ஒதுக்கப்பட்டு தலையணை வடக்கிலேயே வைக்கப்பட்டிருந்தது. ”ஏன் இப்படி போட்டிருக்கீங்க” என்றேன். கண்களை மூடிக்கொண்டே “அங்கயே படுங்கப்பா, காத்தால என்ன கனவு வந்துச்சுன்னு சொல்லுங்க” எனக் கள்ளச்சிரிப்புச் சிரித்தாள் மகள்.

அப்போது அவ்வாறே படுத்துக்கொண்டேன். அவள் கண்ணுறங்கியதும், ஒரு கனவை யோசித்துக்கொண்டே தலைமாற்றிப்படுத்தேன். விடிந்து விழித்தெழுந்து அவள் கேட்கும் போது தெளிவாகச் சொல்லிக்கொள்ளலாம். நான் தயாரித்த கனவு எப்படியும் கரைந்துபோக வாய்ப்பில்லை. 


***

திர்த்த வீட்டுக் குட்டிப்பாப்பா ஆர்த்தி. உயரத்தை வைத்துக் கணக்கிட்டால் 7 வயதுதான் சொல்லமுடியும். ஆனால் 10 வயதாகிறது. குறைவான உயரமும் கூடுதல் பருமனுமாய் ஒரு புசுபுசுக் குழந்தை அவள். ஒவ்வொரு விடியலிலும் சன்னல் வழியே கசிந்து வந்து எழுப்பும் அவர்கள் சிறகுப்பந்து விளையாடும் ஓசைதான். தினமும் காலை நான் எழும்பொழுது படுக்கையறை சன்னலில் அவர்கள் சிறகுப்பந்து விளையாடும் ஓசை கேட்டுக்கொண்டேயிருக்கும். இரவு பத்து மணிக்கு மேலும் கூட அவர்களின் வீட்டு வாசலில் அவள் நடமாடுவதைப் பார்ப்பேன். எப்படியாகினும் காலை 6 மணிக்கெல்லாம், தன் அப்பாவோடு சிறகுப்பந்து விளையாடிக் கொண்டிருப்பாள். எப்போது பார்த்தாலும் தன் அப்பாவோடு ஒரு விளையாட்டு மனோபாவத்துடனேயே இருப்பதைக் கவனித்திருக்கின்றேன்.

அன்றைக்கு வீட்டு வாசலில் உட்கார்ந்து கால் உறையை மாட்டிக்கொண்டிருந்தாள். நான் வண்டியை வீதிக்கு நகர்த்தி , நிறுத்தித் துடைத்துக்கொண்டிருந்தேன். உள்ளேயிருந்து ”ஏய் எரும மாடு சீக்கிரம் கெளம்புடி” அவள் அம்மாவின் குரல் கேட்டது. குரலின் பிளிறல் கேட்டு திரும்பிப்பார்த்தேன்.

”சாக்ஸ் போடுறேன்மா” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

என்னவென்று புருவத்தை உயர்த்தினேன்.

“எங்க அம்மச்சி, எங்கம்மாவ எரும மாடுன்னுதான் திட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு. கிசுகிசுப்பாய்ச் சிரித்தாள்.

***

ரையே 11.11.11 கலக்கி ஓய்ந்தாலும், அது குறித்த பேச்சுகள் அடுத்த சில நாட்களுக்கு மிஞ்சியிருந்தன. எதிரில் விதவிதமாய் குத்தும் வெளிச்சங்களைக் கடந்து வாகனத்தை முடுக்கிக் கொண்டிருந்தேன். என் திருமணம் நடந்த மண்டபத்தைக் கடக்கும்போது, மகள் “அப்பா உங்க கல்யாணம் நடந்த மண்டபம் இதுதானே!” என நூற்றிச் சில்லறை முறையாகக் கேட்டுவைத்தாள்.

”நம்ம கல்யாணம் 03.03.02னு நடந்ததுக்குப் பதிலா 03.03.03னு நடந்திருக்கலாம்ங்க” என்றாள் மனைவி. ஏதோ சிந்தனையில் இறுகியிருந்த முகத்தோடு பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன்.
“சொல்றதுக்கு ஈஸியா இருந்திருக்கும்ல” என்றாள்!

”அய்யய்யோ, அப்படி நடந்திருந்தா எனக்குப் பிரச்சனையாயிருக்குமே” என்றாள் மகள்

“உனக்கென்னப்பா பிரச்சனை”

”2003ல கல்யாணமாகியிருந்தா நான் 2004ல தானே பொறந்திருப்பேன். அப்படிப் பொறந்திருந்தா, இப்ப செகண்ட் ஸ்டேண்ர்டுதானே படிச்சிட்டிருப்பேன்”

“செரி அதனால என்ன?”

”அய்யோ ஷங்கித்தி கூட ஒரே கிளாஸ்ல மாட்டியிருப்பேனே”

”யாரது ஷங்கித்தி”

”செகண்ட் ஸ்டேண்ர்டு பொண்ணுப்பா, எங்கூட வேன்ல வருவா, செமக் குறும்பு. நல்லவேளை 2003ல உங்களுக்கு கல்யாணமானதால நான் தப்பிச்சேன்”

கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. அவரவர் கவலை அவரவர்க்கு. எதிரில் மிரட்டலாக வந்த பேருந்து, என்னை எச்சரித்து ஒழுங்காக ஓட்டுமாறு சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனது.

***

நினைத்த நேரத்தில் ம்மால் குழந்தைகளை, நமக்கு இணையாக மாற்றிக்கொள்ள முடிவதில்லை. குழந்தைகளால் அவர்கள் நினைத்த நேரத்தில் நம்மைக் குழந்தையாக மாற்றவும், அதேபோல் தங்களை பெரியவர்களாக மாற்றிக்கொள்ள முடிகிறது.

என்ன செய்வது, இனிமே நாம குழந்தையாக மாறவாமுடியும்!?

~

17 comments:

vasu balaji said...

நிஜமாய் வாழ கனவைத்தின்னுன்னு போட்டுகிட்டு என்னா லொல்லு இது. ஒன்னு தலவாணிய மாத்துங்க. இல்லைன்னா தலைப்ப மாத்துங்க. மிஸ். கதிரோட சிரிப்பும் குறும்பும் ரொம்பவும் உற்சாகம் தரக்கூடியவை. அதிலும் ஒரு மலைய நகர்த்தி வச்ச சலிப்போட அவங்க பேசுறப்ப ‘ஹா’ன்னு இருக்கும்:)))

Romeoboy said...

அண்ணே சூப்பர் பதிவு :)

நாடோடி இலக்கியன் said...

க‌ல‌க்க‌ல் ப‌திவு க‌திர்.

வெள்ளிநிலா said...

எனக்கென்னவோ இந்த மாதிரியான பத்தி எழுத்துக்கள் மிகவும் பிடித்த விசயங்களாகவே இருக்கிறது!

நிகழ்காலத்தில்... said...

இரண்டாவதா சொன்னது அப்படியே குழந்தையின் ம்னோபாவத்தை வெளிப்படுத்துது..:))

ராமலக்ஷ்மி said...

ஆர்த்தி.. கூல் பேபி:))!

க.பாலாசி said...

செம.செம... குழந்தைகளுக்கேயுரிய குறும்புகள் பலநேரங்களில் வியக்கவைக்கும், ரசிக்கவும்..

ஏனுங்ணா.. காந்தபுலத்துல வடக்கு தெக்கா தலைவச்சி படுத்தா தலையிலருக்கற ஒண்ணு ரெண்டும் கொட்டிடாதுங்களா? பாத்துக்கோங்க..

இராஜராஜேஸ்வரி said...

குழந்தைகளால் அவர்கள் நினைத்த நேரத்தில் நம்மைக் குழந்தையாக மாற்றவும், அதேபோல் தங்களை பெரியவர்களாக மாற்றிக்கொள்ள முடிகிறது.

என்ன செய்வது, இனிமே நாம குழந்தையாக மாறவாமுடியும்!?

Guru said...

கலக்கல்.... படிக்க ரசிக்க ஆர்வமா இருக்கு...

ஓலை said...

Kalakkalo kalakkal. So sweet.

*இயற்கை ராஜி* said...

எனக்கு மட்டும் சபிக்கப்பட்ட அதே இடம் ஒதுக்கப்பட்டு தலையணை வடக்கிலேயே வைக்கப்பட்டிருந்த//

போனாப் போகுது காலைல கதை கேக்கணுமேன்னு தான் படுக்கைல இடமே குடுக்கறது.இதுல உங்க சாய்ஸ்க்கு வேற வேணுமோ? :-)

*இயற்கை ராஜி* said...

”ஏய் எரும மாடு சீக்கிரம் கெளம்புடி”//

//உங்க என்னடி வெட்டி அரட்டை.அவரோட பேசினா நீயும் ..ஆகிடுவே..சீக்கிரம் கெளம்புடி..//
இப்படித்தானே அந்த வீட்ல இருந்து சத்தம் வந்தது? எடிட் பண்ணிடீங்களா அண்ணா?

*இயற்கை ராஜி* said...

நம்ம கல்யாணம் 03.03.02னு நடந்ததுக்குப் பதிலா 03.03.03னு நடந்திருக்கலாம்ங்க” //

ஹ்ம்ம்.. இன்னும் ஒரு வருஷம் நிம்மதியா இருந்திருக்கலாமேன்னு கவலைப் படறாங்க போல அண்ணி:-)

*இயற்கை ராஜி* said...

நான் தயாரித்த கனவு//

டுபாக்கூர் :-))

அன்புடன் அருணா said...

அவரவர் கவலை அவரவர்க்கு.!
ரொம்ப சரி!

Unknown said...

வண்டிய எடுத்தோமா,கிளப்ம்பினோமான்னு இல்லாம பக்கத்துவீட்ட நோட்டம்பாக்குறது தப்பு ப்ரோ..

Unknown said...

பாவம் அவரவர் கவல அவரவர்க்கு...ம்ம்.நல்லாதானிருக்கு