இனம் காக்க மொழி காப்போம்


பிஞ்சாய் பிரபஞ்சம் தொட்டு வளரத் துவங்கிய நாள் தொட்டு ”எங்க அம்மானு சொல்லு, அப்பானு சொல்லு, அக்கானு சொல்லு” என மொழி தாய்ப்பாலோடு புகட்டப்பட்டது. குடும்பத்தில் அனைவரும் காலம் காலமாய் வழிவழியாய் பேசும் தமிழ் மொழியே தாய்மொழி என உணர்த்தப்பட்டது, வயது கூடக்கூட இதற்கு இதுதான் வார்த்தை என புரிய ஆரம்பித்தது. பள்ளிக்கூடம் பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தது, கூடவே பேச்சு வழக்கில் இருந்த வார்த்தைகளை தட்டிச் சீர்படுத்தி இது தான் முறையான வார்த்தை என அடையாளம் காட்டியது.

அதே காலகட்டத்தில் பள்ளியில் கூடுதல் மொழியாக ஆங்கிலம் போதிக்கப்பட்டது. முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசத்தை ஆண்டிருந்தாலும், அது பெரும்பான்மையான குடும்பங்களில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியாத மொழி. ஆரம்பத்தில் மிகக் கடினமாக இருந்தாலும், கட்டாயத்தின் பேரில் கற்பிக்கப்பட, கற்றுக் கொண்டேயாக வேண்டிய நிர்பந்தத்தில், சிலருக்கு எளிதாக கைவந்தது, பலருக்கு அதுவே பள்ளியைவிட்டு ஓட வைத்தது. முதல் தலைமுறையாக மாற்று மொழி கற்போருக்கு அது மிகக்கடினமான ஒரு தண்டனையாகவே இருந்தது.

என்னதான் மற்ற மொழி கற்றாலும் சிந்திப்பது என் அம்மா அமுதோடு ஊட்டிய தாய்மொழியான தமிழ் மொழியிலேயே என இருந்தது. எந்த மாற்று மொழி வார்த்தையை வாசித்தாலும், அது தமிழாக மொழி மாற்றம் அடைந்து எண்ணத்தில் புகுந்தது. திரும்ப ஆங்கிலத்தில் பேச வேண்டிவந்தாலும், பேச வேண்டிய வார்த்தை எண்ணத்தில் தாய் மொழியிலேயே உருவாகி உள்ளுக்குள்ளே மொழி மாற்றமடைந்து, ஆங்கில வார்த்தையாக பிரசவம் அடைந்தது. 

இது தாய்மொழியில் சிந்திக்கும் அனைவருக்கும் பொது. எதன் பொருட்டோ காலப்போக்கில் தாய்மொழிக்கான அங்கீகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் துணிந்தோம், ஆக்கிரமித்த ஆங்கிலம் இந்த தேசத்தில் எந்த மொழியை விடவும் தமிழை அதிகம் கபளீகரம் செய்தது மறுக்க முடியாத உண்மை.

சந்தித்துக் கொள்ளும் இரு இந்தியர்களில், வலிந்து ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள முயற்சித்தால் அவர்கள் இருவரும் தமிழர்கள் என அடையாளம் கண்டுகொள்ளலாம் என்ற அளவில் தாய்மொழி புறந்தள்ளப்பட்டு வரும் அவலமும் மறுக்கமுடியாத ஒன்று. பொருளாதாரம், வளர்ச்சி, அறிவு, அறிவியல், மருத்துவம் என்பது போல் ஏதோ ஒன்றின் பொருட்டு ஆங்கிலத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு, தாய்மொழியான தமிழை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு கட்டிப்போட்டதாகவே உணர்கின்றேன். பச்சையாகச் சொன்னால், தமிழகம் தவிர்த்து வேறு பகுதிகளில், வேறு தேசங்களில் வாழும் தமிழர்களிடம் வாழும் தமிழ்கூட தமிழகத்தில் வாழும்(!!!) தமிழர்களிடம் இருக்கிறதா என்பதே ஐயமாக இருக்கின்றது.

அறிவை விருத்தி செய்ய வேண்டிய பள்ளிகளில் முதலில் தாய்மொழியை இழந்தோம். தமிழகத்தில் பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள், இன்று தனியார் பள்ளிகள் என்பதாக மாறிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியையே முழுக்கக் கொண்டு, தமிழ் தவிர்த்த பிற மொழியை இரண்டாம் மொழியை எடுக்கலாம் என்ற நிலையை அரசாங்கம் அனுமதித்த போது தமிழ் மொழி தாறுமாறாக கிழித்து வீசியெறியப்பட்டது. அப்படி வீசியெறியப்பட்டு சீரழிக்கப்பட்ட மொழி, அதன் பின் அரசாங்கம் என்ன வெற்றுச் சட்டம் போட்டாலும் அரியனை ஏற முடியாமல் தவிக்கின்றது.

இன்றைய குழந்தைகளை பள்ளிகளும், வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிகளுமே முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது. வீடுகளில் மற்றவர்களுடன் கலந்து பேசுவதை தொலைக்காட்சிப் பெட்டிகள் மௌனிக்கச் செய்துவிட, பள்ளிகள் கட்டாயம் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்த, வேறு வழியில்லாமல், தாய்மொழியை விட்டு விரும்பியோ, விரும்பாமலோ ஆங்கில மொழியிலேயே சிந்திக்க நிர்பந்திக்கப்படும் அவல நிலைக்கு நாமே ஆளாக்கிய குற்றவாளிகளாக மாறிவிட்டோம். ”சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ரைஸ்” என்றால் மணக்கிறது என்பது தான் இன்றைய தமிழனின் நாகரிகமாக அடையாளப் படுத்தும் போது வேதனையோடுதான் மனதிற்குள் புழுங்க வேண்டி வருகிறது. இந்த பைத்தியகாரத்தனமான நாகரிக முகமூடிகளை பிய்த்தெறிந்து வெளிவர வேண்டிய நெருக்கடியான காலகட்டத்திற்கு தமிழ் மொழியும், இனமும் இன்று தள்ளப்பட்டிருக்கிறது.

வழிவழியாய் வந்த தாய்மொழியைப் படிப்படியாய் இழக்கும் சமூகம், கொஞ்சம் கொஞ்சமாய் தன் அடையாளத்தையும் இழக்கவே செய்யும். மொழியை வளர்க்க மறக்கும் மனிதன் தன் இனத்தை விட்டு படிப்படியாக விலகவே செய்வான். ஒன்றுபட்டிருந்த இனம் காலப்போக்கில் சிதறுண்டு போகும். காலப்போக்கில் தன் இனம் அழிவது குறித்து கவலைகளற்று போகும் சூழ்நிலை வந்துவிடும்.

சமீபத்தில் இந்த தமிழ் இனத்தை அழித்தொழித்த ஒரு கொடும் செயலில், ஒட்டுமொத்த தமிழகத்தில் ஒற்றை இலக்க சதவிகிதத்திற்கும் குறைவாக மட்டுமே வலி கொண்டது, கிளர்ந்தெழுந்தது, கதறி அழுதது. அந்த வலிக்கும், கிளர்ச்சிக்கும், அழுகைக்கும் அடிப்படையாக இருந்தது அவனும், நானும் தமிழன் என்ற ஒரே பற்றுக்கோடுதான். மொழியை இழந்தவன் இந்த பற்றுக்கோடு பற்றிய அக்கறை அற்றவனாக மாறி, இனத்திலிருந்து தனிமைப் பட்டுப்போவான்.

ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், விருந்தோம்பலையும் ஆதிகாலம் முதலே கற்றுக்கொடுத்து வந்த மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழ் இனம். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி வழி வந்த நாம், மிக அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டியது, நம் பிள்ளைகளுக்கு தாய் மொழி தமிழ் மேல் சிதறாத ஆர்வத்தை தூண்டுவது. அதுவே மொழியை, மொழி சார்ந்தவனை, இனத்தை காப்பாற்றும். இனம் வாழ, நாம் வாழ செந்தமிழை வாழவைப்போம், அதற்காகச் செயல்படுவோம்.


_____________________________________________________________


பொறுப்பி.....
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை 23வது தமிழ் விழா மலரில் வெளியான கட்டுரை


நன்றிகள்....
விழா மலருக்கு, கட்டுரை அனுப்ப பெரிதும் ஊக்குவித்த சகோதரி திருமதி. தேவகி செல்வம் அவர்களுக்கு

மகிழ்ச்சி....
விழாமலரில் பதிவர்கள் பழமைபேசி, வானம்பாடி, பாலாசி ஆகியோர் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. நண்பர்களுக்கு வாழ்த்துகள்
_____________________________________________________________25 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல கட்டுரை. நியாயமான கேள்விகள்.

குழந்தைகளிடம் தமிழில் பேச ஆரம்பித்தால், ஆங்கிலம் படிக்கும் பொழுது தமிழில் சிந்திக்க நேரும் என்பதால், பல குடும்பங்களில் குழந்தைகளிடம் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள்.

இதை விடக் கொடுமை இருக்க முடியுமா?

ராமநாதன் said...

”சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ரைஸ்” என்றால் மணக்கிறது என்பது தான் இன்றைய தமிழனின் நாகரிகமாக அடையாளப் படுத்தும் போது வேதனையோடுதான் மனதிற்குள் புழுங்க வேண்டி வருகிறது. இந்த பைத்தியகாரத்தனமான நாகரிக முகமூடிகளை பிய்த்தெறிந்து வெளிவர வேண்டிய நெருக்கடியான காலகட்டத்திற்கு தமிழ் மொழியும், இனமும் இன்று தள்ளப்பட்டிருக்கிறது.


மிக சரியான கருத்து. ஆனாலும் ஆங்கில மோகத்தில் இருந்து வெளிவரத்தான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்கு காரணம் சமுதாயம், சூழல் மற்றும் நாமும் தான்

vasu balaji said...

பாராட்டுகள்:). பகிர்வுக்கு நன்றி.

க.பாலாசி said...

//சந்தித்துக் கொள்ளும் இரு இந்தியர்களில், வலிந்து ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள முயற்சித்தால் அவர்கள் இருவரும் தமிழர்கள் என அடையாளம் கண்டுகொள்ளலாம் //

அப்பட்டமான உண்மை...

கட்டுரையின் முழுக்கருத்துகளோடும் ஒத்துப்போகிறேன்.

முதலில் வீட்டுக் கொல்லைப்புறத்திலிருந்து வாசல் வரை தமிழை கலந்துவிட்டால் வளரும் நம்பிள்ளைகளின் சுவாசமெங்கும் தமிழ்மணக்கும் என்பது உண்மை. தமிழ், தமிழன் என்ற உணர்வு பிறப்பெடுப்பது முதலில் நம் வீடாகவும் இருக்கவேண்டும்..

நல்ல கருத்துக்களோடியைந்த கட்டுரை... மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்....

பிரேமா மகள் said...

சரியான சந்தர்பத்தில் எழுதப்பட்ட கட்டுரை...

நாலு பேர் முன்னிலையில், தன் குழந்தை `மம்மி~ என அழைத்தால்தான் அந்த தாய்-க்கு மரியாதை என்ற அவலம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. வீட்டில் பச்சைத் தமிழ் பேசிவிட்டு, தெருவில் நடக்கும் போது, `சோ ஹாட் நோ` என்று பேசி செல்லும் முகமுடி மனிதர்கள் தமிழர்கள்...

தமிழ் பெயர் வைத்து சினிமா படம் எடுத்தால் வரிவிலக்கு அளிப்பதைவிட, இந்த அரசு தமிழ் மொழியை ஊக்குவிக்கும் பள்ளிகளுக்கு மானியங்கள் தரலாம்.

இன்றைய மனிதர்கள் பேசும் தங்கிலீஷ்-க்கு திருவள்ளுவரும் அவ்வையும் இருந்தால், எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்.. தன்னை வளர்க்க தமிழை கொலை செய்யும் கூட்டத்திற்குள்தான் நாமும்......இருக்க வேண்டிய கட்டாயம்....

http://rkguru.blogspot.com/ said...

மிழ்மொழி தடம்புரள்வது பற்றி என் கருத்து:

"தமிழ், மற்ற மொழிகளுடன் கலப்பின மொழியாக வேறுநாட்டில் இருக்கும் போது. அத்தமிழ்நாட்டவர் தமிழ் கலப்பில்லாத தரமான தமிழை விரும்புவார்கள்...ஆனால் கலப்பில்லா தமிழ் அதிகமாக பேசும் தமிழ்நாட்ட... மேலும் பார்க்கில் இருக்கும் மக்கள் மேலும் அதை கலக்கவே ஆசைபடுகிறார்கள். அவ்வாசை எப்படியானால் மற்ற மொழிக்காரன் ஏதோ சந்தேகம் கேட்டால் அவனுக்கு புரியலனாலும் அவன் மொழியிலே கூறுகிறார்கள். ஆனால் மற்ற மொழிக்காரன் இடத்துக்கு நாம் போனால் நாம ஏதோ சந்தேகம் கேட்டால் அவன் அவன் மொழிலதான் சொல்றான்...நாமும் பேந்த பேந்த முழிக்கிறோம்...மொழியறியாமல். சேற்றில் இருந்தே செந்தாமரை(தமிழ்) மலர்ந்தது. பின் அது தன் பொலிவை இழந்து வாடிக்கொண்டுயிறுக்கிறது. ஒருநாள் உதிர்ந்துவிடுமோ....? "
a

Anonymous said...

சொல்லப்பட்ட கருத்துகள் வேதனையான உண்மை..தமிழ்ப் பற்று நம்முள் எல்லோருக்கும் உண்டு,,ஆனால் அதை பின் பற்றத் தான் பற்றில்லை நமக்கு...
வாழ்த்துகள் கதிர்

செல்வா said...

///எண்ணத்தில் தாய் மொழியிலேயே உருவாகி உள்ளுக்குள்ளே மொழி மாற்றமடைந்து, ஆங்கில வார்த்தையாக பிரசவம் அடைந்தது////

மறுக்க முடியாத உண்மை ..!!

பழமைபேசி said...

அனைவருக்கும் வாழ்த்துகள்... தமிழகத்திலும் முறையான விழாவைப் பதிவர்கள் ஆண்டுதோறும் நடத்திட முன் வர வேண்டும்... மொழியால் இணைவோம்... நட்புசால் மனிதர்களாய் இருந்திடுவோம்!!

ஹேமா said...

கதிர்....இன்னொரு கொடுமை இலண்டன்,கனடா போன்ற நாடுகளில் நம்மவர் குழந்தைகள் தேவாரத்தை ஆங்கிலத்தில் அர்த்தம் தெரியாமல் அந்த் ஷ்...புஷ் சத்தத்துடன் தமிழ் வளர்க்கும் வானொலிகளில் தமிழில் ஒப்புவிக்கிறார்கள்.அறிவிப்பாளரும்
"இந்தப் பாட்டு யார் சொல்லித் தந்தது"என்று கேட்டுப் பாராட்டுகிறார்.கொடுமை.

இதில் ஒரு சந்தோஷம் என்னவென்றால் ஆங்கிலத்தைப் பேசும் நாடுகளில்தான் இந்தக் கொடுமை.வேற்று மொழியில் பேசும் நாட்டுத் தமிழ்க் குழந்தைகள் தமிழை அழகாக உச்சரிக்கிறர்கள்.

ஜோதிஜி said...

இன்னொரு கொடுமை இலண்டன்,கனடா போன்ற நாடுகளில் நம்மவர் குழந்தைகள் தேவாரத்தை ஆங்கிலத்தில் அர்த்தம் தெரியாமல் அந்த் ஷ்...புஷ் சத்தத்துடன் தமிழ் வளர்க்கும் வானொலிகளில் தமிழில் ஒப்புவிக்கிறார்கள்.அறிவிப்பாளரும்
"இந்தப் பாட்டு யார் சொல்லித் தந்தது"என்று கேட்டுப் பாராட்டுகிறார்.கொடுமை.

ஜோதிஜி said...

புதிய செய்தி ஹேமா

priyamudanprabu said...

நல்ல கருத்துள்ள பதிவு

கண்டிப்பாக இரண்டு மொழிகளை குழந்தைகள் கற்க்க முடியும் அதில் தாய்மொழிக்கு முக்கியதுவம் தரவேண்டும்

கலகலப்ரியா said...

நல்லா எழுதி இருக்கீங்க கதிர்..

||சிதறாத ஆர்வத்தை தூண்டுவது.||

ஆர்வத்தை எப்டி தூண்டுறது?.. தாய் மொழிக்கான முக்கியத்துவம் இருக்கணும்.. பள்ளில அதுக்கு அவசியமே இல்ல... அது ஒரு பாடம் மட்டும்தான்.. மத்தது எல்லாம் ஆங்கிலத்தில கத்துக்கணும்னா.. தாய் மொழி மேல இருக்கிற ஆர்வம் தன்னால குறைஞ்சிடும்... வெளிநாட்டில தமிழ் கத்துக்கிற பசங்க மாதிரி... கடனேடான்னு... புரியுதோ புரியலயோ... எழுதி வைப்போம்ன்னுதான் இருக்க முடியும்...

ஆ.ஞானசேகரன் said...

சரியான கேள்விகளோடு கூடிய சரியான இடுகை கதிர்...

பாராட்டுகள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

அம்பிகா said...

\\சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ரைஸ்” என்றால் மணக்கிறது \\
இன்று எத்தனை குழந்தைகள் அப்பா, அம்மாவை தமிழில் அழைக்கின்றன.
எல்லாம் மம்மி, டாட் தான்.
நல்ல பகிர்வு. அவசியமானதும் கூட.

Kumky said...

சில நாள் முன்பு அறிவார்ந்த தளத்தில் செய்ல்பட்டு வரும் ஒரு நண்பரை சந்தித்து உரையாடுகையில்.,எனது வருத்தங்களும், மொழி மற்றும் இனம் குறித்தான கவலைகள் குறித்தும் இன்னொரு கோணத்தில் பதில் சொன்னார்.
ஏற்றுக்கொள்வது என்பதைவிட சிந்திக்கவும் தூண்டியது அவரின் பதில்.

தமிழனுக்கென ஒட்டு மொத்த அடையாளங்கள் இல்லை..

தமிழுக்குள்ளேயே ஆதி தொட்டு குழு மனப்பான்மை இருந்து வந்துள்ளது..

போராட மட்டுமே உருவாக்கப்பட்ட இனங்கள் காலப்போக்கில் தமது வாழ்வியல் நிலைகளில் வளர்ந்த போதும், உணர்வு ரீதியான பக்குவம் அடையவில்லை...

ஆரிய ஊடாடல்களும், திரித்தல்களும் அனேகம்...

இப்போது இதர மாநிலங்களைக்காட்டிலும் வெகு வேகமாக முன்னேறி வருவதனாலும், ஒரு சவுகர்யம் சார்ந்த வாழ்வு அமையப்பெற்றதனாலும், வீதிகளில் இறங்கிய போராட்டமென்பது ஒரு நாளில் மட்டுமே நடக்கும்..தொடர்ந்த போராட்டங்களுக்கான மனப்பான்மை நம்மிடம் இப்போது இல்லை...சீக்கியர்களைபோல.

மொழி பயன்பாடு மட்டுமே நம்மை தானாக இறுக பிணைத்திருப்பதற்கான முன்னெடுப்புக்கள் வெகு காலம் முன்னரே கைவிடப்பட்டுவிட்டமையால் வெறுமனே பேச எழுத மட்டுமே இயலும்...

நினைவில் இருந்தவரை..சொல்லிவிட்டேன்.
யோசிப்போம்.

Kumky said...

பாலோ அப்பறத்துக்காக...

ராமலக்ஷ்மி said...

//பிற மொழியை இரண்டாம் மொழியை எடுக்கலாம் என்ற நிலையை அரசாங்கம் அனுமதித்த போது//

உண்மை. மிக நல்ல கட்டுரை.

வாழ்த்துக்கள்.

sakthi said...

”சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ரைஸ்” என்றால் மணக்கிறது

நிஜம் தான்நல்ல பகிர்வு கதிர்

*இயற்கை ராஜி* said...

ம்ம்...அருமையான உண்மைகள்.. வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

தாராபுரத்தான் said...

கதிர் தம்பீ..நான் நினைப்பதையே மலரில் தெரிவிக்க பட்டுள்ளது.. இன்று முதல் வீட்டில் மட்டும் தமிழ் பேசுங்கள்..முதலில் கேலியாக கூட தெரியும்..ஆனால் போக போக சரியாகிவிடும்..அழியகூடியதல்ல தமிழ்..கண்டிப்பாக வளரும்..ஊருக்கு ஓரு கதிர் இருந்தா போதும்..

Mahi_Granny said...

தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் மொழி கற்காமலே முதுகலை பட்டம் வரை படிக்க முடிகிறது. இதைப் பெருமையாகச் சொல்பவகளும் இருக்கிறார்கள். இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். தங்கள் ஆதங்கமே எனக்கும். பகிர்வுக்கு நன்றி.

Admin said...

இந்த கட்டுரையை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடுங்கள்.நன்றி.
http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_10.html