கடந்த ஐந்து வருடங்களாக பெங்களூருக்கு செல்வது வாடிக்கையான ஒன்றாக இருந்தாலும், பிப்ரவரி மாத இறுதியில் சென்ற போது நான் சந்தித்தவர்கள் அத்தனை பேரும் கேட்ட ஒரே கேள்வி. “என்ன சார் உங்க ஊரிலேயேயும் இப்படித்தான் கொளுத்துதா வெயில்!!!” கடந்த ஐந்து வருடத்தில் நான் நூறு முறைகளுக்கு மேல் பெங்களூரு சென்றிருப்பினும் ஒரு முறைகூட யாரும் கேட்காத கேள்வி
சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் சகோதரி தேவகி, நண்பர் அமரபாரதியோடு பேசும் போதும் அவர்கள் கேட்ட பொதுவான கேள்வி
“ஊர்ல என்னங்க விஷேசம்?” இருவரிடமும் நான் சொன்ன முக்கியமான ஒரே பதில் “பிப்ரவரி இறுதியிலேயே எப்போதும் இல்லாத அளவு வெயில் சகிக்க முடியாத அளவு கொளுத்துகிறது“ என்பதுதான்.
வெயில் குறித்து இது வரை என்னிடம் புகார் ஏதும் இருந்ததில்லை, ஆனால் இந்த முறை வரும் கோடை காலத்தில் நாம் சந்திக்கப் போகும் வெயில் மிகக் கடுமையாக இருக்குமென்றே தோன்றுகிறது. வெயில் குறித்து வரும் தகவல்களும் இதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன.
//அதிக அளவிலான கரியமில வாயு வெளியேற்றமே புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணமாக திகழ்கிற நிலையில், மீத்தேன் வாயு வெளியேற்றமும் முக்கிய காரணியாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் எதிர்பார்த்ததைவிட மீத்தேன் வாயு அதிக அளவில் வெளியேறி வருவதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 8 மில்லியன் டன் மீத்தேன் வாயு இங்கிருந்து வெளியேறுவதாகவும், இதனால் புவி வெப்பம் மேலும் அதிகரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கிழக்கு சிபேரியன் அண்டார்டிகா பனிப்பிரதேசத்தில் உறைந்து கிடக்கும் மீத்தேன் வாயு படிமங்களில் இலேசான பிளவு ஏற்பட்டால் கூட, அதிலிருந்து வெளியேறும் வாயுவினால் புவி வெப்பம் உடனடியாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.//
புவி வெப்பத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டிய நாடுகளின் தலைமை அது குறித்து எந்த விதமான அக்கறையும் காட்டத் தயாரில்லை என்பது கண்கூடு. அதை மிக அழுத்தமாக தென்னாப்பிரிக்காவில் நடந்த கூட்டத்தில் நிரூபித்துமிருக்கிறார்கள்.
இன்னும் 30 ஆண்டுகளில் இமயமலை உருகிவிடும், 40 வருடங்களில் உலகின் மொத்த வெப்பம் 3-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கையில் கடல் மட்டம் குறைந்தது 4-6 அடி வரை உயரும்.அப்படி உயரும் போது கடலோர நகரங்களின் நிலை என்னவாக இருக்கும்?
இதுபோல் அடிக்கடி சுவாரஸ்யமின்றி துணுக்குச் செய்திகளாக வாசித்துக் கொண்டிருக்கிறோம். இது போல் எத்தனையோ பயமுறுத்தல்களை மிக அநாயசமாக இதனால் எனக்கென்ன வந்துவிடப்போகிறது என்ற மனோநிலையோடு கடந்து போய்க்கொண்டுதான் இருக்கின்றோம்.
ஆனால், புவி வெப்பம் மிகக் கடுமையான தாக்கத்தை பருவ நிலையில்தான் ஏற்படுத்தப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பருவ நிலையில் குளறுபடியாகும் போது, பருவ மழையை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கும் நம் போன்ற நாடுகளின் விவசாயம் என்னவாகும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. மாறிவரும் பருவ மாற்றத்தால் உணவு உற்பத்தி பாதிக்கும் போது, இத்தனை கோடி மக்களுக்கான உணவுத் தேவையை எது கொண்டு ஈடு செய்யப்போகிறோம்.
இருக்கும் நிலையை கொஞ்சம் அனுசரித்து இந்தத் தலைமுறை எப்படியோ முட்டி மோதி கடந்து போய்விடலாம். ஆனால் பாராட்டி, சீராட்டி, கொண்டாடி வளர்க்கும் நம் வாரிசுகளுக்கு எந்த வித உலகத்தை கையளித்துச் செல்லப்போகிறோம்.
இது குறித்து சலிக்கச்சலிக்க பேசி ஓய்ந்த போது மனதில் வலியோடு படிவது “எல்லாம் காலம் கடந்து விட்டது, இனி நாம் பேசி என்ன செய்து விடப்போகிறோம்” ”தலைக்கு மேலே வெள்ளம் போய்க்கொண்டிருக்கிறது, என்ன செய்யப்போகிறோம், இப்படியே வாழ்ந்துவிட்டுப் போவோம்” என்ற கையலாகத்தனத்தின் கசடுகள் மட்டுமே. எப்போதெல்லாம் இது குறித்து பேசுகிறோமோ, சிந்திக்கிறோமோ அப்போதெல்லாம் ஒரு அயர்ச்சி மனதில் கனமாய் வந்தமர்கிறது.
இது உண்மைதானா... காலம் கடந்து விட்டதா? இனி எதுவுமே செய்ய முடியாதா? அல்லது இதற்காக எதுவுமே செய்ய நமக்கு விருப்பம் இல்லையா? மனதில் குடியேறும் அயர்ச்சியை துரத்தியடிக்க என்ன செய்யவேண்டும்.
விடை தேட எந்த நிலத்தில் விதை போடுவது?, இதற்கான நியாயமான கோபக் கனலை எந்தப் பொந்தில் யார் வைப்பது?.
___________________________________________________