புத்தகத் திருவிழாவில் அறிவுமதி & உதயச்சந்திரன்

ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கான பேச்சாளர்கள் பட்டியல் வந்ததிலிருந்து மனது பரபரத்துக் கொண்டேயிருந்தது, முடிந்தவரை எல்லாக் கூட்டங்களுக்கும் போக வேண்டும் என்று வழக்கம்போல் முடிவெடுத்து, வழக்கம் போல் முதல் இரண்டு நாட்கள் செல்லவில்லை. ஆனால் நேற்றைய பட்டியலில் த.உதயச்சந்திரன் மற்றும் கவிஞர். அறிவுமதி என்பதால் என்னையே நான் ஏமாற்றிக்கொள்ளாமல் சென்றேன். நேற்றைய விழாவில் ஒரு எழுத்தாளர் கௌரவிக்கப்பட்டார். இரண்டு பேச்சாளர்களும் இரண்டு தளங்களில் வலிமையான தலைப்பில் உரை நிகழ்த்தினர். நானும் இரண்டு புத்தகங்கள் (மட்டும்!!!) வாங்கினேன்.

தொடர்ந்து 5வது வருடமாக இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்தி வரும் ஈரோடு, மக்கள் சிந்தனைப் பேரவையை நிச்சயம் பாராட்ட வேண்டும். அதன் தலைவர். இந்த புண்ணியமான காரியத்திற்காக திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு ஈரோடு பகுதி பொதுமக்கள் என்றென்றும் கடமைப் பட்டுள்ளனர். திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே மக்கள் கடலாய் திரண்டு வந்து கலந்து கொள்ள மிக முக்கியக் காரணம்.

நேற்று புத்தகத் திருவிழாவிற்கு செல்ல வீட்டிலிருந்து 6 மணிக்கு கிளம்பினேன், முக்கிய சாலையான மேட்டூர் சாலை வழியாகத்தான் புத்தகத் திருவிழா நடக்கும் வ.உ.சி பூங்காவை அடைய வேண்டும். நேற்றுப் பார்த்து மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் ஈரோடு வருகை, நகர் முழுதும் செவ்வாடை பக்தர்களின் கூட்டத்தாலும், வந்திருந்த வாகனங்களாலும் திணறிக் கொண்டிருந்தது. ஒரு அரசியல்வாதி போல் அவருக்கு வைத்திருந்த பிளக்ஸ் பேனரும், சாலையில் அமைக்கப்பட்டிருந்த வளைவுகளும் (ஆர்ச்) கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. முக்கியமாக வளைவுகளில் “மழையை வரவழைத்த அம்மாவே” “அணையெல்லாம் நிரம்ப வைத்த அம்மாவே” என்பது போன்ற வாசகங்கள் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது.

ஒருவழியாய் பக்தர்களைத் தாண்டி பூங்காவிற்குள் நுழைந்து புத்தகத்திருவிழா அரங்கில் அமர்ந்தபோது பாதியளவுகூட மக்கள் இல்லை, ஒருகணம் மனம் வருத்தப்பட்டது. ஒரு நல்ல நிகழ்ச்சியை மக்கள் ரசிக்க ஏன் மறந்து போகின்றார்கள் என்று. அதேசமயம் மனது என்னையே கேட்டது “கடந்த இரண்டு நாட்களாய் சோம்பேறி நீயும் தானே வரவில்லை” என்று. என் வருத்தம் அடுத்த 20 நிமிடங்களில் தகர்ந்து போனது அரங்கு முழுதும் கூட்டம் நிரம்பிவழிய ஆரம்பித்தது. இருக்கைகளெல்லாம் நிரம்பி நிறைய மனிதர்கள் நின்று கொண்டிருந்தனர்.

நேற்றைய விழாவின் முக்கிய நிகழ்வுகள் மூன்று நிகழ்வுகள்:

முதல் நிகழ்வு:
சோளகர் தொட்டி எழுத்தாளர் ச.பாலமுருகன் பாராட்டப்பட்டார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் அரிமா. தனபாலன் அவர்கள் “சோளகர் தொட்டி” என்ற புத்தகத்தை கண்டிப்பாக வாசியுங்கள் என திரும்ப திரும்ப சொல்ல தேடிப்பிடித்து வாங்கினேன். வாங்கிப்பார்த்தால் முன் அட்டையில் ஒரு வயதான மலைவாழ் மனிதனின் படம் போட்டு “சோளகர் தோட்டி” என அச்சிடப்பட்டிருந்தது, கீழே ச.பாலமுருகன் என போட்டிருந்தது. பின் அட்டையை திருப்பிப் பார்த்தால் அவருடைய புகைப்படம் வெளியாகியிருந்தது. அவர் பவானியைச் சார்ந்த வழக்குரைஞர் பாலமுருகன். ஒரு கணம் என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை.

பாலமுருகன் அவர்களுடன் நான் 12 வருடங்களுக்குப் முன்பு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அப்போது நான் பவானி நகரத்தில் தொழில் செய்து வந்த நேரம். அவர் ஒரு எழுத்தாளராக வரப்போவார் என நான் அறிந்திருக்கவில்லை. 1999ம் வருடம் நான் என் தொழிலை ஈரோடுக்கு மாற்றியதிலிருந்து பவானி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு குறைந்தது. காலப்போக்கில் அவர்களுடன் பேசுவது குறைந்து, எப்பொழுதாவது நேருக்கு நேர் சந்திக்கும்போது மட்டுமே விழி விரிய பேசுவது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு வெறியோடு புத்தகத்தை அடுத்த நாள் காலையில் படிக்க அமர்ந்தேன் 300 பக்கங்களுக்கு மேல் இருந்தது அந்த புத்தகத்தில், இடைவிடாமல் ஒரு வெறியோடு படித்துக் கொண்டேயிருந்தேன். 20 அல்லது 30 பக்கங்களைத் தாண்டும் போதே அது அந்தியூர் தாண்டி இருக்கும் அந்த மிகப்பெரிய மலைத்தொடரில் வாழும் பழங்குடியின மக்கள் பற்றிய புதினம் என விளங்கியது. சந்தன் வீரப்பன் ஆதரவான புத்தகமாக இருக்குமோ என்ற ஒரு வித சந்தேக மனநிலையோடுதான் நான் அதைப் படித்துக்கொண்டிருந்தேன். அந்த மலைப்பகுதியில் வசித்து வரும் சோளகர் என்ற இனத்தின் வரலாறும், அவர்களின் வாழ்க்கை முறையையும் அழகாக சித்தரித்தது. விதி வீரப்பனைத் தேட வந்த காவல்துறை, அதிரடிப்படை வடிவில் வந்து பஞ்சு பஞ்சாக பிய்த்தெறிந்து கோரதாண்டவாமாடி அந்த இனத்தையே சிதைத்ததை மிகுந்த வலியோடு எழுதியிருந்தார். படிக்கும் போது முதல் பாதியில் அவர்களுடைய வாழ்விடம் கண்களுக்குள் ஒரு சித்திரமாக மிக இயல்பாக விரிந்து, இரண்டாவது பாதியில் அந்த மக்களுக்கு நிகழ்ந்த அக்கிரமமான கொடுமைகளை படிக்கும் போது சில இடங்களில் கண்ணீர் தழும்பியதும், வயிறு பற்றி எரிந்தும் மறக்க முடியாத வாசிப்பு. கடைசி வரை வீரப்பனை எந்த விதத்திலும் நுழைக்காமல், வீரப்பனை உயர்த்தியோ, தாழ்த்தியோ காட்டிடாமல் இருந்தது குறிப்பிடத்தக்க அம்சம்.

அந்த சோளகர் தொட்டி எனும் பழங்குடிகளின் இலக்கியம் படைத்த எழுத்தாளர் ச. பாலமுருகனுக்கு அந்த அவையில் வழங்கப்பட்ட பாராட்டு சிறப்பானதென்றாலும் கொஞ்சம் காலம் தாழ்ந்த அதே சமயம் சுருக்கமாக வழங்கப்பட்ட பாராட்டு என்பது என் தாழ்மையான கருத்து.

பாராட்டிற்குப் பின் பாலமுருகன் பேசுகையில் வரலாறு என்பது வெற்றி பெற்றவன் படைப்பது. இலக்கியம் என்பது தோல்வியடைந்தவன் பக்கத்திலிருந்து பிறப்பது. நான் தோல்வியடைந்தவர்களின் பக்கத்தில் இருக்க விருப்பப்படுகிறவன் எனக் குறிப்பிட்டார். எனக்கென்னவோ அந்த கருத்தில் ஒத்துப் போகமுடியவில்லை.


இரண்டாவது நிகழ்வு:
பச்சைத் தமிழன் என்ற தலைப்பில் பாவலர் அறிவுமதி

தான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் பெண்களை கருவறைக்குள் செல்ல அனுமதித்த ஒரு ஆன்மீகவாதியின் (“பங்காரு அடிகளார்”) பக்தர்களின் கூட்டத்தைப் பார்க்கும்போது கொஞ்சம் மகிழ்ச்சியே என்ற துவக்கம் சுவையாக அமைந்தது.

தேர்ந்தெடுத்த வார்த்தைகள், மென்மையாக அதேசமயம் அழுத்தமாக வெளிவந்தது. தலைப்பிற்கு வரவே சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். தமிழினம் காக்க வேண்டிய பசுமை என்பது தான் அவர் பேச விழைந்த கருத்தாக இருந்தது. சிறுவனாக அவர் மணிமுத்தாறு ஆற்றங்கரையில் விளையாடிய வாழ்க்கையையும், தாத்தா பாட்டியிடம் விளையாட்டு மூலம் கற்ற மூச்சுப் பயிற்சியையும் கூறியபோது என்னனென்னவோ நினைவிற்குள் வந்துவிட்டுப்போனது. தான் படித்த கவிதையில் ஒரு பெண் தன் வீட்டில் வளர்ந்த பூவரசம் மரத்தோடு விளையாடி வருகிறாள். அது உதிர்க்கும் பூவரசம் பூக்களில் மனது மகிழ்கிறார். ஒரு கட்டத்தில் தன் திருமணத்திற்காக வெட்டப்பட்டு நிலைப்பேழையாக (பீரோ) மாறி புகுந்த வீட்டில் இருக்கும் போது ஒவ்வொருமுறையும் அந்தப் பெண் நிலைப்பேழையருகே கூட்டிப் பெருக்கும் பொழுது இரண்டொரு பூவரசம் பூவாவது கிடைக்காத என ஏங்குகிறாள் என்ற கவிதை குறித்த விளக்கம் நெகிழ்ச்சி.

மூன்றாவது நிகழ்வு:
உலகை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் த. உதயசந்திரன் இ.ஆ.ப

எங்கள் கொங்கு மண்ணின் மனம் கவர்ந்த நாயகன் இவர். ஈரோடு மாவட்டம் சந்தித்த மிக அற்புதமான மாவட்ட ஆட்சியர்களில் திரு. உதயசந்திரன் முக்கியமானவர். நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த இவர் படித்தது ஈரோடில் உள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியில் என்பதாலும், பணி புரிந்த சிறிது காலத்திலேயே நேர்மையான முறையில் நிறைய நல்ல காரியங்களை ஆற்றியதால் அவர் மேல் மக்களுக்கு ஒரு இனம் புரியாத பாசமும், அன்பும் உண்டு.

உலகை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் ஒரு ஆழமான உரையை நிகழ்த்தினார். இவர் குறிப்பிட்ட மூன்று புத்தகங்கள் மார்கோபோலாவின் பயணக் குறிப்பு, சேகுவாராவின் மோட்டார் சைக்கிள் பயணம், மூலதனம் என்ற பொருளாதார அடிப்படையான புத்தகம். மிக மோசமான விளைவை ஏற்படுத்திய புத்தகமாக அவர் குறிப்பிட்டது ஹிட்லரின் எனது போராட்டம் எனும் புத்தகமும், தற்போது அவர் வாசித்து வரும் இலங்கையின் வரலாறு பற்றிய புத்தகமான மகாவம்சம் புத்தகமும்.

கலிலியோவையும், சார்ளஸ் டார்வினையும் அறிவியல் ரீதியான உண்மையை கூறியதற்காக ஆரம்பத்தில் திருச்சபை எப்படி அவமானப் படுத்தியது, தண்டித்தது, பின் ஒரு கட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொண்டதென்பதை விளக்கிய விதம் அருமை.

பேச்சின் இடையே “எதையும் புனிதப்படுத்துவதை விடுத்து, கேள்விகளுக்குள்ளாக்க வேண்டும்” என்ற வரி என் மனதில் ஆழப் பதிந்த வரி. ஹிட்லரால் அழித்தொழிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் இன்று வலுப்பெற்ற வரலாறை சுருக்கமாக கூறிய போது மனது ஈழத்தமிழர்களை நினைத்துக் கொண்டிருந்தது.

அவர் மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி காலத்தில்தான், பத்து வருடங்களுக்கு மேலாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த மூன்று ஊராட்சிகளில் வெற்றிகரமாக தேர்தல் நடத்தியதையும், அதற்கு உதவிகரமாக இருந்தது இரண்டு தகவல்கள் எனவும், அதோடு அவர் அந்த தகவல்களை உபயோகித்த விதத்தையும் விளக்கியது சுவையான ஒன்று.

திரு.உதயச்சந்திரன் பேசி முடிக்கும் வரை கூட்டம் முழுமையாக இருந்தது மிகவும் முக்கியாமான செய்தி.

நேற்று ஒரு முன்னோட்டமாக இரண்டு புத்தகங்கள் வாங்கினேன்
பிறகொரு இரவு ... தேவிபாரதி காலச்சுவடு பதிப்பு மற்றும் பதேர் பாஞ்சாலி ... எஸ். ராமகிருஷ்ணன் உயிர்மை பதிப்பு

இன்னும் வாங்க வேண்டிய பட்டியல் நீண்டிருக்கிறது


உபயோகமான தகவல்: ஒவ்வொரு நாளும் நிகழ்த்தப்படும் சொற்பொழிவுகள் அடுத்த நாள் குறுந்தகடுகளாக ரூ.50ற்கு விற்பனைக்குள்ளது. அதேபோல் கடந்த நான்கு வருட பேச்சாளர்களின் உரைகளுமே குறுந்தகட்டில் கிடைக்கிறது.முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

21 comments:

வால்பையன் said...

பார்க் வியூ ஹோட்டல் மூன்றாம் தளத்தில் தேவிபாரதியின் புத்தக வெளியீட்டுவிழா!
கால்சுவடு பதிப்பகம் வாயிலாக,
கெளதமசித்தார்த்தன், பெருமாள் முருகன் வந்திருந்தார்!
நானும் வாமு.கோமுவும் அங்கு தான் இருந்தோம்

நாகா said...

அருமையான பதிவு கதிர். சோளகர் தொட்டி பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த முறை வரும்போது நிச்சயம் வாங்க வேண்டும். நானும் திரு பாலமுருகனின் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்.. வரலாறுகள் என்றுமே தோற்றவர்களின் வலியைப் பதிவு செய்ததில்லை.

ப்ரியமுடன் வசந்த் said...

என்ன கதிர் ரெண்டு புக் தான் வாங்குனீங்களா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல தொகுப்பு கதிர்..

பாலகுமாரனின் நூலைப் பற்றி நீங்கள் கொடுத்த விமர்சனம் அழகு..

ஆங்காங்கே எனக்கு இருக்கும் அதே எண்ணம் உங்களிடமும் வெளிப்பட்டு உள்ளது..

பிரபாகர் said...

கதிர்,

நிகழ்வுகளை தாங்கள் விவரித்த விதத்தினை பாராட்ட வேண்டுமென்றால் வரிக்கு வரி பாராட்ட வேண்டும். அருமையாக எழுதுகிறீர்கள் பாஸ், நிறைய எழுதுங்கள். எழுத்து நடையினை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. புகழ்ச்சிக்காக சொல்லவில்லை, மன நெகிழ்ச்சியில் சொல்கிறேன்.

இடையிடேயே மெலிதான நகைச்சுவை, ('அணையெல்லாம் நிரம்ப வைத்த அம்மாவே' என்பது போன்ற வாசகங்கள் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது), உள்ளுய்ள் இருந்து வெளிப்படும் ஆதங்கம் ('ஒரு நல்ல நிகழ்ச்சியை மக்கள் ரசிக்க ஏன் மறந்து போகின்றார்கள்'), கேட்டவற்றில் நல்லவைகைகளை எல்லோருக்கும் சொல்லுதல் ('பேச்சின் இடையே எதையும் புனிதப்படுத்துவதை விடுத்து, கேள்விகளுக்குள்ளாக்க வேண்டும் என்ற வரி என் மனதில் ஆழப் பதிந்த வரி') என அசத்தியிருக்கிறீர்கள்.

உங்களை தொடர்வதில் பெருமை அடைகிறேன்.

நன்றி நண்பரே,
பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

//வால்பையன் said...
பார்க் வியூ ஹோட்டல் மூன்றாம் தளத்தில் தேவிபாரதியின் புத்தக வெளியீட்டுவிழா!
கால்சுவடு பதிப்பகம் வாயிலாக,
கெளதமசித்தார்த்தன், பெருமாள் முருகன் வந்திருந்தார்!
நானும் வாமு.கோமுவும் அங்கு தான் இருந்தோம்//

புத்தக வெளியீட்டிற்கு தேவிபாரதி அலைபேசி மூலம் அழைப்பு விடுத்திருந்தார். தவறவிட்டுவிட்டேன். முடிந்தால் விழா பற்றி எழுதுங்கள்

//நாகா said...
அருமையான பதிவு கதிர். சோளகர் தொட்டி பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த முறை வரும்போது நிச்சயம் வாங்க வேண்டும். நானும் திரு பாலமுருகனின் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்.. வரலாறுகள் என்றுமே தோற்றவர்களின் வலியைப் பதிவு செய்ததில்லை.//

நன்றி நாகா.
சோளகர் தொட்டி 5 பதிப்புகள் வெளியாகி அனைத்தும் தீர்ந்துவிட்டன. பாலமுருகனிடமே புத்தகம் இல்லை. அடுத்த பதிப்பிற்கு காத்திருக்கிறோம். நான் வாங்கிய 3 புத்தகங்களும் இப்போது என்னிடம் இல்லை

//பிரியமுடன்.........வசந்த் said...
என்ன கதிர் ரெண்டு புக் தான் வாங்குனீங்களா?//

முன்னோட்டமாக இரண்டு தான். வாங்கவேண்டிய பட்டியல் நிறைய... கசக்கும் உண்மை கடந்த ஆண்டு வாங்கியதிலேயெ இன்னும் 2 புத்தகம் படிக்காமல் இருக்கிறது.

//ச.செந்தில்வேலன் said...
நல்ல தொகுப்பு கதிர்..

பாலகுமாரனின் நூலைப் பற்றி நீங்கள் கொடுத்த விமர்சனம் அழகு..

ஆங்காங்கே எனக்கு இருக்கும் அதே எண்ணம் உங்களிடமும் வெளிப்பட்டு உள்ளது..//

நன்றி செந்தில்... அவர் பாலமுருகன்

//Prabhagar said...
நிகழ்வுகளை தாங்கள் விவரித்த விதத்தினை பாராட்ட வேண்டுமென்றால் வரிக்கு வரி பாராட்ட வேண்டும். அருமையாக எழுதுகிறீர்கள் பாஸ், நிறைய எழுதுங்கள். எழுத்து நடையினை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. புகழ்ச்சிக்காக சொல்லவில்லை, மன நெகிழ்ச்சியில் சொல்கிறேன்.

இடையிடேயே மெலிதான நகைச்சுவை, ('அணையெல்லாம் நிரம்ப வைத்த அம்மாவே' என்பது போன்ற வாசகங்கள் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது), உள்ளுய்ள் இருந்து வெளிப்படும் ஆதங்கம் ('ஒரு நல்ல நிகழ்ச்சியை மக்கள் ரசிக்க ஏன் மறந்து போகின்றார்கள்'), கேட்டவற்றில் நல்லவைகைகளை எல்லோருக்கும் சொல்லுதல் ('பேச்சின் இடையே எதையும் புனிதப்படுத்துவதை விடுத்து, கேள்விகளுக்குள்ளாக்க வேண்டும் என்ற வரி என் மனதில் ஆழப் பதிந்த வரி') என அசத்தியிருக்கிறீர்கள்.
//

நீண்ட பாராட்டிற்கு நன்றி பிரபாகர்.

குடந்தை அன்புமணி said...

மிக்க நன்றி தோழரே... ஈரோடு புத்தக திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத எங்களைப் போன்றவர்களுக்கு உங்களின் இடுகை ஓர் வரப்பிரசாதம். எங்களுக்காக தொடர்ந்து சென்று வாருங்கள். இடுகையிடவும் மறக்காதீர்கள்.

ஈரோடு கதிர் said...

//குடந்தை அன்புமணி said...
மிக்க நன்றி தோழரே... ஈரோடு புத்தக திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத எங்களைப் போன்றவர்களுக்கு உங்களின் இடுகை ஓர் வரப்பிரசாதம்.//

மிக்க மகிழ்ச்சி

//எங்களுக்காக தொடர்ந்து சென்று வாருங்கள். இடுகையிடவும் மறக்காதீர்கள்.//

முயற்சி செய்கிறேன்

Anonymous said...

ஆம் குடந்தை மணி சொன்னது போல் எங்களை போல கலந்து கொள்ள இயலாதவருக்கு இந்த பதிவு வரப்பிரசாதம்...

அப்படியே படிச்சதையும் இங்க சொல்லுங்க..ஹிஹிஹி ஓசி கிராக்கி தான் ஓப்புக்கிடறேன்...

நாஞ்சில் நாதம் said...

:))

radi said...

Sir

This is sathish... i willing wrote this in tamil... I dont know how to it... sorry...

Sir your blog is simply great and marked value additions to "Puthaga Thiruvizha"...

I disappointed on this missed programme... but your writings given me lot... hate up...

Please write more and more

Thank you for your informations about the good books and good things (i.e., Speech Cd information)

ஆர்.வேணுகோபாலன் said...

ஈரோடு நகரில் நான் வசித்த நாட்களில் தான் புத்தகங்களின் மீது எனக்கிருந்த ஆர்வம் புதுப்பிக்கப்பட்டது. புத்தகக்கண்காட்சியின் போது நடந்தேறும் சொற்பொழிவுகள் மறக்க முடியாத பல மாலைகளைப் பரிசளித்திருக்கின்றன. வ.உ.சி.பூங்கா என்றாலே புத்தகக்கண்காட்சி தான் நினைவுக்கு வருகிறது. நேரில் காணமுடியாத குறையை உங்களது சரளமான நடையால் நீக்கி விட்டீர்கள் கதிர்! பாராட்டுக்கள்!!

ஈரோடு கதிர் said...

//தமிழரசி said...
அப்படியே படிச்சதையும் இங்க சொல்லுங்க..ஹிஹிஹி ஓசி கிராக்கி தான் ஓப்புக்கிடறேன்...//

படிப்பதில் சோம்பேறி நான். அதையும் தாண்டி படித்து முடித்தால் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்

//நாஞ்சில் நாதம் said...
:))//
???


//sakthi said...
Sir
This is sathish... i willing wrote this in tamil... I dont know how to it... sorry...//


www.tamileditor.org ல் நீங்கள் எழுதமுடியும்

I disappointed on this missed programme... but your writings given me lot... hate up...

Please write more and more

Thank you for your informations about the good books and good things (i.e., Speech Cd information)//

//தமிழன் வேணு said...
ஈரோடு நகரில் நான் வசித்த நாட்களில் தான் புத்தகங்களின் மீது எனக்கிருந்த ஆர்வம் புதுப்பிக்கப்பட்டது. புத்தகக்கண்காட்சியின் போது நடந்தேறும் சொற்பொழிவுகள் மறக்க முடியாத பல மாலைகளைப் பரிசளித்திருக்கின்றன. வ.உ.சி.பூங்கா என்றாலே புத்தகக்கண்காட்சி தான் நினைவுக்கு வருகிறது. நேரில் காணமுடியாத குறையை உங்களது சரளமான நடையால் நீக்கி விட்டீர்கள் கதிர்! பாராட்டுக்கள்!!//

எண்ணங்களை பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றி தமிழன் வேணு

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்பின் கதிர்.. கடந்த இரண்டு வருடங்களாக ஈரோடு புத்தகத் திருவிழாவை தவற விட்டதில்லை.. இப்போது மதுரை வந்து விட்டேன்.. நிகழ்வுகளை நீங்கள் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் அருமை.. வாழ்த்துகள். இந்த ஞாயிறு நானும் பதிவுலக நண்பர் ஸ்ரீதரும் ஈரோடு வரலாம் என்று இருக்கிறோம்.. உங்களைச் சந்திக்க இயலுமா?

ஈரோடு கதிர் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நிகழ்வுகளை நீங்கள் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் அருமை.. வாழ்த்துகள். //

மிக்க நன்றி

//இந்த ஞாயிறு நானும் பதிவுலக நண்பர் ஸ்ரீதரும் ஈரோடு வரலாம் என்று இருக்கிறோம்.. உங்களைச் சந்திக்க இயலுமா?//

ஆவலுடன் இருக்கிறேன்...
நீங்கள் வருகை தரும் நேரத்தை முன்னதாகவே தெரிவியுங்கள்(98427 86026).

இரா. வசந்த குமார். said...

yes kathir... i got the info by going thro the website u mentioned...

thanks...

this is my blog.

again tnx..!

vasanth.

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் கதிர். தினசரி நிகழ்வுகளை நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். நண்பர் குறிப்பிட்டது போல் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வாய்ப்பாக அமையும். உங்கள் எழுத்துக்க்கள் உங்கள் பேச்சைப் போலவே சிறப்பாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி

செல்வநாயகி said...

நல்ல பதிவு, இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு அங்கிருந்தேன், நினைவுகளை மீட்டுக் கொடுத்தது இப்பதிவு. நன்றி கதிர்.

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
தினசரி நிகழ்வுகளை நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். நண்பர் குறிப்பிட்டது போல் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வாய்ப்பாக அமையும். உங்கள் எழுத்துக்க்கள் உங்கள் பேச்சைப் போலவே சிறப்பாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி//

நன்றி ஆரூரன்

//செல்வநாயகி said...
நல்ல பதிவு, இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு அங்கிருந்தேன், நினைவுகளை மீட்டுக் கொடுத்தது இப்பதிவு. //

வருகைக்கு நன்றி செல்வநாயகி

காமராஜ் said...

ரொம்பப் பொறாமையாக இருக்கிறது.
ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்குவதற்கு
ஆயிரக் கணக்கானவற்றைத்
தொட்டுப் பிரிக்கிற பாக்கியம்.
உதயச்சந்திரன் மாறுபட்ட ஆட்சியாளர்.

ஈரோடு கதிர் said...

//காமராஜ் said...
ரொம்பப் பொறாமையாக இருக்கிறது.
ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்குவதற்கு
ஆயிரக் கணக்கானவற்றைத்
தொட்டுப் பிரிக்கிற பாக்கியம். //

மகிழ்ச்சி நிறைந்த ஒன்று
வருகைக்கி நன்றி காமராஜ்

உதயச்சந்திரன் மாறுபட்ட ஆட்சியாளர்.//

ஆமாம்.