செவி இரண்டு வாய் ஒன்று

நமக்கு வழங்கப்பட்டவை மேல் ஆயிரம் புலம்பல்கள் இருக்கலாம். ஆனால் இயற்கை எதையும் மிகச் சரியாகத்தான் படைத்திருக்கின்றது. ஊனமாகப் படைப்பதில் பிழை செய்துவிட்டாலும்கூட, இல்லாத ஒன்றிற்காக இருக்கும் ஒன்றில் ஆற்றல் கூட்டி அவர்களை சமன் செய்ய காலம் முயலாமல் இல்லை.

மிகச் சரியாகக் கொடுத்திருப்பதில், கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்கு துவாரம்கூட இரண்டு, ஏன் வாய் மட்டும் ஒன்று எனும் கேள்வி இல்லாமல் இல்லை. இது குறித்து ஆராயும் முன், நான் ஒப்புக்கொள்ளும் ஓர் உண்மை, செவி இரண்டு, வாய் ஒன்று . அந்த உண்மையை மதிக்கின்றேன்.

அதன் நிமித்தமாக நான் செய்வது... ‘பேசுவதைவிட நிறையக் கேட்க முயல்கிறேன்


கேட்பதன் தேவை இங்கு அதிகம். கேட்க மட்டும் பழகிக்கொள்ளுங்கள். இதுவரை வாசித்து, பார்த்து மிரண்ட சிறுகதைகள், நாவல்கள், சினிமாக்கள் எல்லாம், நீங்கள் கேட்காததால் உங்களிடம் இதுவரை உரைக்கப்படாமல் இருக்கும் உண்மைக் கதைகளின் முன்பு ஒன்றுமேயில்லை.

பல திசைகளிலிருந்து அழுத்தங்கள் தாக்கும் இந்த இறுக்கம் நிறைந்த நாட்களில், நானறிந்த சிலர், தனக்கே சுயமாகச் செய்யும் நல்ல காரியமாக உடைந்து கொட்டுகிறார்கள். இதுதான் இதுவரைக் கேட்டதிலேயே மிகக் கடினமானது என்று நினைத்திருப்பதை அடுத்த நாளே இன்னொருவர் உடைக்கிறார். நாம் ஒவ்வொருவரும் நினைப்பதுபோல், இன்னும் மிகச் சரியாக சொல்லப்போனால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதுபோல், வாழ்க்கை ஒன்றும் அத்தனை சாதாரணப்பட்டது இல்லை என்பதை ஒவ்வொரு நாளும் உணர்த்துகிறார்கள்.

இதையெல்லாம் கேட்டு என்ன செய்யப் போகிறேன். கேட்கிறேன்... அவ்வளவுதான். அதைச் செய், இதைச் செய், அதை அப்படிச் செய்திருக்கலாமே, இதை ஏன் இப்படிச் செய்யவில்லை என்றெல்லாம் கேட்பதில்லை. அவர்கள் சொல்லும் வேகம், வடிவம் புரிபடவில்லை என்றால் மட்டுமே கேள்விகள் கேட்பதுண்டு. எதுவுமே சொல்லாமல் இருக்க ஏன் கேட்க வேண்டும்.

பொதுவாக நம் உடலில் அவ்வப்போது நோய்க் கூறுகள் ஏற்படுவதுண்டு. உண்மையில் எல்லா நோய்க்கூறுகளுக்கும் நாம் சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. பல நோய்க்கூறுகள் மிக இயல்பாக உடலால் சரி செய்யப்பட்டுவிடுவதுண்டு. அப்படி சரி செய்யப்படாமல் விடுபடுகின்றவற்றுக்கு மட்டுமே சிகிச்சை தேவை.

இங்கும் அப்படித்தான் அழுத்தத்தில், அது கூட்டிய கனத்தில் சிந்திக்க மறந்து முடங்கியிருப்பவர்கள், ஒருகட்டத்தில் அழுத்த்தைப் பகிரும்போதே, அவர்களுடைய மனதே சிலபல தீர்வுகளை, ஆறுதல்களைக் கொடுக்க ஆரம்பிக்கின்றது. அதனால் பகிரும்போதே ஆசுவாசமும், பகிர்ந்ததும் நிம்மதியும், ஒருவித தெளிவும் கிட்டிவிடலாம். அதன்விதமாகவே ஒருமுறை முழுவதும் கொட்டி முடிக்கின்றவர்கள், மீண்டும் மீண்டும் அது குறித்து பெரும்பாலும் பேசுவதில்லை. அப்படிப் பேசாமல் இருக்க சுயமாக தெளிவடைவது ஒரு காரணம் என்றால், மற்றொரு முக்கியக் காரணம், தன் பிரச்சனையைப் பேசி முடிக்கும்போதுதான், ”அட இவ்ளோதானா!?” என்று அதுவரை பிரமாண்டமாக நினைத்திருந்த பிரச்சனையின் உண்மை வடிவம் புலப்படுவது.

சிலர் ‘நம்ம பிரச்சனையே நமக்கு பெருசு.. இதில் இன்னொருத்தர் பிரச்சனையை எங்கே கேட்பது!?’ எனச் சொல்வதுண்டு. சொல்வதும், கேட்பதும் அவரவர் விருப்பம், அவரவர் முடிவு. எதுவும் இங்கே கட்டாயம் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் எனக்கென்று ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதையும், மற்றவர்கள் சொல்வதையும் ஒரு போதும் இணைத்து குழப்பிக்கொள்வதில்லை. இது தனி, அது தனி. சில நேரங்களில் ஒப்பிட்டு அதிலிருந்து ஏதேனும் எடுத்துக் கொள்ள முடியுமா எனத் தேடுவதுண்டு. உண்மையில் கேட்கக் கேட்க வாழ்க்கை மீது ஒருவித தீவிரமும், பிடிமானமும் வருகின்றது. காரணம், கனத்தை இறக்கி ஒவ்வொருவரும், இத்தனையைக் கடந்து வந்திருக்கும்போது உனக்கென்ன எனும் கேள்வி எழுப்பும் தீவிரம் அது.

உதவி செய்வது என்பது காசு பணமாக, உடல் உழைப்பாக மட்டுமே எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. கனத்தோடு வருகின்றவர்களுக்கும், அதை இறக்கி வைக்க செவி கொடுத்தலே மிகப் பெரிய உதவி. இதில் மிக முக்கியமானது நம்பிப் பகிரலாம் எனும் இடத்தில் நாம் இருப்பது.

நினைவூட்ட விரும்பும், உணர்ந்து கொள்ள வேண்டியதொரு உண்மை.... நமக்கு செவி இரண்டு வாய் ஒன்று!

*

குரல் வடிவில் கேட்க...

Anchor :
https://anchor.fm/erodekathir/episodes/ep-eks3rf

No comments: