வியந்து நோக்கி ஏங்கித் தவிக்கும் அமெரிக்க
தேசத்தின் 1941 – 1953க்கு இடைப்பட்ட காலச் சரித்திரத்தின் ஒரு வலி மிகுந்த பக்கமே
“12 வருட அடிமை”
நியூயார்க் நகரில் தன் குடும்பமும்,
தொழிலும், வயலின் வாசிப்புமென சுதந்திரமாக இருந்த கறுப்பரான சாலமன் நார்த்தப் (எஜியோஃபார்)
வயலின் வாசிப்பதற்கென என வாஷிங்டன் அழைத்துச் செல்லப்பட்டு, அன்றிரவு மதுமயக்கத்தில்
உறங்கச் செல்கிறார். கண் விழிக்கும்போது கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு எளிதாக
ஒரு அடிமையாக
மாற்றப்பட்டிருப்பது
புரிகிறது. தான் அடிமையில்லை என மறுக்க அடித்து நொறுக்கப்பட்டு தன் அடையாளங்களைத் தொலைத்து
’ப்ளாட்’ எனும் புதுப்பெயரோடு விற்கப்படுகிறார். அதிலிருந்து அவரின் 12 கால அடிமை வாழ்க்கைதான்
கதை. உண்மையான கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்
இரத்தமும் சதையுமான என்ற பதத்திற்கு மிகமிகப் பொருத்தமான
வாழ்க்கை என்றால் இவர்களின் அடிமை வாழ்க்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆதிக்கம் நிறைந்த
ஒரு சக்தி தன்னிடம் அடிமையாக கிடைப்பவர்களை எவ்வளவு மோசமாக நடத்தும் என்பதற்கு இந்தப்
படமும் ஒரு குறிப்பிடத்தகுந்த ஆவணமாக இருக்கும்.
அடிமையாக
மாற்றப்பட்ட ஒருவன், தன்னை அடக்கும் சக்தியை எதிர்க்க வேண்டும் என்ற சிந்தனையையும்
கூட யுக்தியாகவே அடக்கி வைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். சாலமனுக்கும் கூட தான் அடிமை
இல்லை என்பதால் விடுவிக்கப்பட வேண்டுமென்று மட்டுமே தோன்றுகிறதேயன்றி, அடிமைத்தனத்தை
எதிர்க்கத் தோன்றவேயில்லை. அப்படியான மனநிலையைத்தான் அடிமைகளுக்கு ஆதிக்க சக்தி இயல்பாக
புகட்டியிருக்கின்றது. அடிமைகள் ஆடுமாடுகளைப் போல் ஏலம் விடப்படுவதும், அம்மா பிள்ளைகள்
பிரிக்கப்படுவதுமென கற்பனை செய்யமுடியாத அளவிலான குரூரங்களைக் கொண்டவை. அடிமைகளை வாங்கிய
வெள்ளையர்களில் அத்தனை பேருமே மோசமானவர்களா என்றால் இல்லைதான்.
நம்மூர்களில் இன்றளவும் ஆதிக்க சாதியினரில் சிலர், தீண்டத்தகாத சாதியினர் என வகைப்படுத்தியவர்களோடு எந்த வகையிலும் புழங்க மறுத்துவிடுவதுண்டு. ஆனால் அவர்களிலேயே சிலர் அந்த சாதிப் பெண்களை புணர்வதற்கு மட்டும் மறுப்புகளில் விதிவிலக்கு வைத்துக் கொள்வதுண்டு. அதேபோல் அடிமைகளாக வந்த பெண்களை விலங்குகளைவிடக் கேவலமாக நடத்தினாலும், அந்தப் பெண்களை தொடர்ந்து தொடர்ந்து வன்புணர்வு செய்வதற்கு மட்டும் விதிவிலக்குகள் வைத்துக்கொண்டிருப்பதைக் காணும் போது, பெண்ணை வன்புணர்வு செய்வதில் அன்றும் இன்றும் உலகம் பொதுவான அவலத்தையே கடைபிடிக்கிறது என்பது புரிகிறது.
படம் குறித்து எத்தனையெத்தனை அலங்காரச் சொற்களை இங்கு உதிர்த்தாலும், அதில் சாலமனின் வியர்வை வாசத்தை, துளிர்த்த இரத்தத்தின் கவுச்சியை, எலிசாவின் புத்திர சோகத்தை, ’பாட்சி’யின் வன்புணர்வு வலிகளை, அவள் முதுகில் வழிந்த இரத்தத்தின் கவுச்சியை உணர்த்திவிட முடியாது. படத்தைப் பார்த்தால் கொஞ்சமே கொஞ்சமாக உணரலாம். கூடவே ஆதிக்கத்தின் மரபணு எச்சம் எங்கேனும் நமக்குள் மிச்சம் இருந்தால் மானசீகமாக மன்னிப்புக் கோரலாம். அதே சமயம் சாலமனின் மேல் ஏவிவிடப்பட்ட அடிமைத்தனத்தின் மரபணு இன்றைக்கும் மிகுந்த யுக்தியோடு விதவிதமான வடிவங்களில் ஒவ்வொரு ஆதிக்க சக்திகளின் செயல்பாடுகளின் மூலமும் நமக்குள் தொடர்ந்து புகுத்தப்படுகின்றன என்பதையும் உணரத் துவங்கலாம்!
-
3 comments:
12 வருட அடிமை - 12 Years a Slave
எழுதியது ஈரோடு கதிர் = அருமையான விமர்சனம். நன்றி சார் திரு Erode Kathir
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
Very nice movie
அன்பின் கதிர் - அருமையான படத்தினைப் பார்த்தது போலவே இருக்கிறது தங்களீன் பதிவு -விமர்சனம் நன்று - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment