தாயம்




சாணி மெழுகிய
சிமெண்ட் தளத்தில்
சுண்ணாம்புக் கட்டியில்
கட்டங்கள் வரைந்து
மலைகளுக்கு பெருக்கல்
குறியிடுவாய்!

உனக்கு நாலு புளியங்கொட்டை
அதை நீ காய் என்பாய்
எனக்கு நாலு கொட்டமுத்து..
அதை நான் நாய் என்பேன்

கட்டை உருட்டிய கணமே
உன் கண்கள் தாவித்தாவி
கட்டங்கள் கணக்கிட்டு
காய் எடுத்து வைப்பாய்

என் உருட்டல்களுக்கு
என் நாய்களையும்
நீயே நகர்த்துவாய்

நகர்த்தும் விரல்களின்
சிருங்கார நடனத்தில் மட்டும்
நான் லயித்திருப்பேன்

ஆட்டத்தை எப்போதும்
உக்கிரமாய் எடுத்துக்கொள்வாய்
உனக்காக மட்டுமே
ஆடுவேன் நான்

உன் காய்களைக் கொண்டு
என் நாய்களை வெட்டுவாய்
வெட்டாட்டம் ஆடி
அதிலேயும் வெறியோடு
வீழ்த்துவாய் என் நாய்களை!

காய்களெல்லாம் கனிய வைத்து
பழம் பறிப்பாய்
என் நாய்களைத் தொடர்ந்து தொடர்ந்து
பட்டியில் அடைப்பாய்

தொடர் வெற்றியில் சலித்துப்போய்
போதும் ஆட்டமென
காய்களைக் களைத்து
கட்டைகளை வீசுவாய்!

சலித்த தாயத்திற்குப் பதில்
எப்போதாவது அஞ்சாங்கல்
ஆட அழைப்பாய்
அங்கும் தோற்பேனென அறிந்துமே!

விரும்பி விரும்பி
உன்னிடம் தோற்றது குறித்து
நானும் என் நாய்களும்
ஒருபோதும் கலங்கியதில்லை

என்றுமே நீ தோற்றுப்போகமாட்டாய்
எனும் நம்பிக்கையில்
நான் தோற்றது தவிர!

-

நன்றி : அதீதம்

11 comments:

அன்புடன் அருணா said...

/என்றுமே நீ தோற்றுப்போகமாட்டாய்
எனும் நம்பிக்கையில்
நான் தோற்றது தவிர!/
Classic!!

Unknown said...

அழகிய கவிதை சார்

நாடி கவிதை

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

அருமையான கவிதை

ezhil said...

அருமையோ அருமை...

Thenammai Lakshmanan said...

அட!!

'பரிவை' சே.குமார் said...

என்றுமே நீ தோற்றுப்போகமாட்டாய்
எனும் நம்பிக்கையில்
நான் தோற்றது தவிர!

கடைசியில் கதிர் அண்ணா டச்...
அருமை...

நிறைய பேரின் மனசுக்குள் தாயக்கட்டை உருண்டிருக்கும் அண்ணா...

Narmatha R VarunKumar said...

விரும்பி விரும்பி
உன்னிடம் தோற்றது குறித்து
நானும் என் நாய்களும்
ஒருபோதும் கலங்கியதில்லை...

Nice!!!!

Narmatha R VarunKumar said...

விரும்பி விரும்பி
உன்னிடம் தோற்றது குறித்து
நானும் என் நாய்களும்
ஒருபோதும் கலங்கியதில்லை...

Nice!!!!

Rathnavel Natarajan said...

என்றுமே நீ தோற்றுப்போகமாட்டாய்
எனும் நம்பிக்கையில்
நான் தோற்றது தவிர!

அற்புதம். நன்றி கதிர் சார். என் பக்கத்தில் பகிர்கிறேன்.

Unknown said...

இந்த "கவிதை "
என் மலரும் நினைய்வுகளை ,
உள்ளுக்குள் அறுக்கும் ,
உருவமில்லாத கத்தி !

ஸ்ரீராம். said...

//என்றுமே நீ தோற்றுப்போகமாட்டாய்
எனும் நம்பிக்கையில்
நான் தோற்றது தவிர//

நல்ல வரிகள். ஆனால் நம்பிக்கைப் பொய்யாகுமளவு தோற்றது எதில் என்று சொல்லவில்லையே...! :)))