சீனத் திரைப்படம் - Raise the Red Lantern

தன் தாயின் வற்புறுத்தலில் கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டு ராஜகுடும்பத் தலைவனின் நான்காவது மனைவியாக காலடி எடுத்து வைக்கிறாள் 19 வயது நாயகி சோங்க்லியன் (கோங்க் லீ).

நான்காவதாக மனைவியாய் வந்த சோங்க்லியன் உடன் உறவு வைத்துக்கொள்ள வரும் தலைவனை, உடல்நிலை சரியில்லை என்றழைக்கும் மற்ற மனைவிகளின் செயல்களில் துவங்குகிறது சிக்கல். மூன்று மனைவிகளால் தோற்றுவிக்கப்படும் உணர்வு அரசியலும், நான்காவது மனைவியாக வந்த சோங்க்லியன் அதை எதிர்கொள்ள நிகழ்த்தும் அரசியலும் என கதை மிக நுண்ணிய உணர்வுகளை பூத்தபடி நகர்கிறது.ஒவ்வொரு மனைவியும் தங்கள் வீடுகளுக்கு முன்பு பிள்ளைகளோடு, வேலைக்காரப் பெண்மணிகளோடு சிங்காரித்து நிற்க, அந்த இரவு யாரோடு என்பதை தலைவன் முடிவுசெய்ய, அந்த மனைவியின் வீடு சிவப்பு லாந்தர் விளக்கு வைக்கப்படுகிறது. தலைவன் தங்கும் மனைவிக்கு கிடைக்கும், சிவப்பு லாந்தர்கள் ஏற்றப்படும் அங்கீகாரமும், கவனிப்பும், கால் மசாஜ் சுகமும், வேலையாட்களின் மரியாதையும், அடுத்த நாள் உணவை முடிவுசெய்யக் கிடைக்கும் உரிமையும் என, ஒவ்வொருவரும் தனக்கான காய்களை நகர்த்த காரணங்கள் நிறைய.

மனைவிகளில் தலைவியாய் திகழும் முதல் மனைவியும், சூதும்வாதும் நிறைந்த இரண்டாம் மனைவி, மருத்துவரோடு ரகசியத் தொடர்பு கொண்டிருக்கும் ஓபெரா பாடகியான மூன்றாவது மனைவி, மனைவி எனும் இடத்தை அடைய நினைக்கும் வேலைக்காரப் பெண், நான்காம் மனைவி படுக்கையில் இருந்து சென்ற சிறிது நேரத்தில் வேலைக்காரப் பெண்ணை அணைக்கும் தலைவன் எனும் உலகத்திற்குள் சோங்க்லியன் பொருந்தியும் பொருந்தாலும் படும் அவஸ்தை, ஒவ்வொரு பெண்ணும் பல சந்தர்பங்களில் மென்று முழுங்கிக் கடந்து செல்லும் நிதர்சனங்கள்தான்.

முதல் மனைவின் மகன், விடுப்பில் அரண்மனைக்கு வருகிறார். அவன் ஏற்கனவே சோங்க்லியனோடு நட்பு கொண்டிருந்தவன்.

இரண்டாம் மனைவி நான்காம் மனைவியை தனக்கு முடி வெட்டிவிடப் பணிப்பதும், நான்காம் மனைவி இரண்டாம் மனைவியை முதுகு அமுக்கிவிட வைப்பதும் என ஒவ்வொரு மனமும் பழிதீர்க்க தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்கின்றன.

சோங்க்லியனின் இரவுகளை மற்ற மனைவிகளும் களவாட, தனக்கான இடத்தை தக்கவைக்க, பொய்யாய் கர்ப்பம் என சோங்க்லியன் சொல்ல அவளுக்கு திடீரென அதீத மரியாதை கிட்டுகிறது.

கர்ப்பம் பொய் என வேலைக்காரப் பெண் இரண்டாவது மனைவி வாயிலாகக் காட்டிக்கொடுக்கிறாள். சோங்க்லியன் வேலைக்காரப் பெண்ணின் மீறல்களைக் காட்டிக்கொடுக்க, முதல் மனைவி வழங்கிய தண்டனையில் வேலைக்காரப் பெண் செத்துப்போகிறாள். அவள் சாவுக்கு தான்தான் காரணம் என சோங்க்லியன் தனக்குள் வதைபடத்தொடங்குகிறாள்.

தனிமை அவளைச் சிதைக்க, பிறந்த நாளன்று அதிகமாய் மது அருந்தி, முதல் மனைவியின் மகனோடு ரகளை செய்கிறாள். பொய்க் கர்ப்பம் என பொய் சொன்னது முட்டாள் தனம் என்கிறான் முதல்மனைவியின் மகன். இல்லை, அது புத்திசாலித்தனம், கர்ப்பம் எனச் சொன்னது பொய் என்றாலும், அது முதற்கொண்டு தன்னோடு தங்கும் கணவன் மூலம் விரைவில் கர்ப்பம் அடைந்துவிட தான் திட்டமிட்டதையும், மற்ற மனைவிகள் அதைக் கெடுத்ததையும் கொட்டித் தீர்க்கிறாள்.

மிதமிஞ்சிய போதையில் இருக்கையில், அங்கு வரும் இரண்டாம் மனைவியிடம், மூன்றாம் மனைவிக்கும் மருத்துவருக்குமான ரகசிய உறவு குறித்து போதையில் உளறுகிறாள். மூன்றாம் மனைவி நகரத்து விடுதி அறையில் கையும் களவுமாக பிடிபட்டு அரண்மனைக்கு இழுத்து வரப்படுகிறாள். அரண்மனையின் மேல்தள அறையில் கொடூரமாய் தண்டனையாகத் தூக்கிலிடப்படுகிறாள். அவள் சாவுக்கும் தான்தான் காரணமென நினைக்கும் சோங்க்லியன் மனச்சிதைவுக்கு ஆளாகிறாள்.

அடுத்த கோடைகாலத்தில் அரச குடும்பத் தலைவனுக்கு ஐந்தாவதாக மனைவி ஒருத்தி வருகிறாள். ஐந்தாவது மனைவியின் அறைமுன்பு சிவப்பு லாந்தர் ஒளிர்கிறது, கால் மசாஜ் நடக்கிறது, இங்கிருந்து இன்னொரு கதை துவங்கலாம்….

1920களில் நடந்த கதை, 1991ல் வெளிவந்த சீனப் படம்.

பருவநிலை மாற்றங்கள், அரண்மனை, விளக்குகள் ஏற்றப்படும் அழகிய நிகழ்வு, உடை, பனிப்பொழிவு, இசை என ரசிக்க எத்தனையோ இருந்தாலும். அந்தப் பெண்களில் உள, உணர்வுப் போராட்டங்கள் மட்டுமே விஞ்சி நிற்கின்றன. அது தவிர்த்து வேறு எதையும் ரசிக்க அனுமதிக்காததே இந்தப் படத்திற்கான வெற்றியும் கூட!

-0-

2 comments:

cheena (சீனா) said...

அட சீனப் படம் எல்லாம் பார்க்கிறீர்களா ? பலே பலே ! நல்லதொரு விம்ர்சனம் - நன்று நன்று - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா

மணிவானதி said...

ஒரு சீனப்படம் நான் பார்த்துவிட்டேன். மிக அருமை. கதை நன்றாக உள்ளது. இது போன்ற விமர்சனம் தேவை.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.