நிறம் பெயரும் இறக்கைகள்



குறும்புகளாய் நிரம்பிய
பால்யத்தை புசித்துவிட்டு
பக்குவம் சூடி நிற்பதிலாகட்டும்

கனவுகளில் வழிந்த சிரிப்பைப் பதுக்கி
பெருஞ் சிரிப்புகளில்
தருணங்களை மலர்த்துவதிலாகட்டும்

ஏங்கி விடுவாளோயென
வாங்கிக்க எனச் சொல்கையில்
உதட்டுச் சுழிப்பில்
வேண்டாமென மறுப்பதிலாகட்டும்

கை பிடித்து நடந்த காலங்கள் மறந்து
தடுமாறும் கணங்களில்
சட்டென தாங்கிப் பிடிப்பதிலாகட்டும்

ஆணாய் இருந்தவனின்
இறக்கைகளில் நிறம் பெயர்த்தி
அப்பாவாய் மாற்றுவதிலாகட்டும்
எளிதில் வென்று விடுகிறார்கள் மகள்கள்!



1 comment:

இராய செல்லப்பா said...

அழகிய கவிதை. பெண் குழந்தைகளின் செல்வாக்கே தனி தான்!

-இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)