ஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு


நான்கு புத்தகங்கள் வெளியாகியிருந்தாலும், அவை வெளியான தருணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு சரி. தனியே அறிமுகக் கூட்டம், விமர்சனக் கூட்டம் என எதையும் நான் நினைத்துப் பார்த்ததேயில்லை. ஆனால் கடந்த ஆண்டிலிருந்தே, தஞ்சை எழுத்தாளி கவிஞர் கிருஷ்ணப்ரியா, புத்தகங்களுக்கு அறிமுகம் மற்றும் விமர்சனக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

வேட்கையோடு விளையாடு வெளியானதும், சில பிரதிகள் அனுப்பச் சொன்னார், அத்தோடு எப்படியாச்சும் நூல்களுக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்துவிட வேண்டுமென்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

அதற்கான நாளும் அமைந்தது. எப்படியும் தஞ்சை வந்தால் ஒரு நாள் ஆகும் என்பதையொட்டி, அந்த நாளை பயன்படுத்தும் விதமாக, திருவையாறு அரசர் கல்லூரி நிகழ்ச்சியை, திருவையாறு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தார்.

நூல் அறிமுகம் மற்றும் விமர்சனம் செய்பவர்கள் விபரங்களோடு அழைப்பிதழ் பகிரப்பட்டபோது ஆச்சரியம் மிகுந்தது. எழுத்தாளர், பேராசிரியர், ஓய்வு பெற்ற அதிகாரி, இலக்கிய ஆய்வாளர் என வித்தியாசமான ஆளுமைகள். அவர்கள் யாவரும் நான் அதுவரை அறிந்திராதவர்கள்.

அந்த நாளும் (27.08.2019), நிகழ்வின் தருணமும் வந்தது. காலை அரசர் கல்லூரி நிகழ்வு மற்றும் மதியம் இன்னொரு உரை முடித்து பரபரப்பு சற்றும் குறையாமல் மாலை நூல் அறிமுகக் கூட்ட அரங்கிற்கு வந்தோம். நிகழ்வினை திருவையாறு இலக்கிய தடம் பாரதி இயக்கமும், தஞ்சை எழுத்தாளி இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்தின. கவிதையாய் இருக்கும் ஒரு தொடக்கப் பள்ளியின் சிறிய அரங்கம். பெரிதும் முனைப்பெடுத்து கூட்டத்திற்கு அழைத்திருந்தன் பலன் தெரிந்தது. அரங்கில் ஏறத்தாழ அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தன. அரசர் கல்லூரி மாணவ, மாணவியர்களும் பங்கெடுத்திருந்தனர். விழா நேர்த்தியாகத் தொடங்கியது.

முதலில் பேராசிரியர் கண்ணம்மாள் மனோகரன் என்னுடைய முதல் புத்தகமான ”கிளையிலிருந்து வேர் வரை” குறித்து மிக விரிவாகப் பேசினார். அந்தப் புத்தகம் ஐந்தாறு வருடங்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அவர் ஒவ்வொரு கட்டுரை குறித்துப் பேசும்போது, அந்தந்த காலத்திற்குள் நான் மூழ்கியெழும் வாய்ப்பாக அமைந்தது. எல்லாவற்றையும் ஒரே நேர்கோட்டில் அடுக்கிப் பாராட்டியதோடு அவர் முத்தாய்ப்பாக வைத்த விமர்சனம் சார்ந்த கேள்விகள் முழுக்க ஏற்புடையதாக இருந்தன.

இரண்டாவதாக, இலக்கிய ஆய்வாளர் தமிழ் இலக்கியா, ”பெயரிடப்படாத புத்தகம்” நூலை அறிமுகப்படுத்தி விமர்சித்தார். 2017 ஜனவரியில் வெளியான புத்தகம், இடையில் முதல் பதிப்பு தீர்ந்துபோய், ஏறத்தாழ ஒன்னரை வருடங்கள் கழித்து இரண்டாம் பதிப்பைக் கண்டிக்கும் நூல். அது தனக்கான இடத்தை இனிதான் அடையும் என நான் காத்திருக்கும் புத்தகமும்கூட. முழுமையான தன் வாசிப்பு அனுபவத்தை மிக ஆழமாக தமிழ் இலக்கியா எடுத்துரைத்தார். கூடவே சில கேள்விகளையும் இட்டுச் சென்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது.

மூன்றாவதாக, ”உறவெனும் திரைக்கதை” நூலை அறிமுகப்படுத்தி விமர்சிக்க எழுத்தாளர் புலியூர் முருகேசன் வந்தார். மாற்று மொழித்திரைப்படங்கள் குறித்த தம் அனுபவம், ஒருகாலத்திய எழுத்தாளர்களின் அனுபவம் ஆகியவற்றில் தொடங்கி, டிபார்ச்சர்ஸ், ஸ்பிரிட், கம்மாட்டிப்பாடம் ஆகிய படங்களுக்கான கட்டுரைகளை முன் வைத்து வலிமையானதொரு அறிமுகத்தை வைத்தார். அத்தோடு டிபார்ச்சர்ஸ் படக் கட்டுரையில் மரணத்திற்கு பிறகான நமது மற்றும் ஜப்பானியர்கள் நடைமுறைகளை அவர் சுட்டிக்காட்டியவிதம் ஆழமாகவே யோசிக்க வைத்தது.

நான்காவதாக, திரு.குப்பு வீரமணி அவர்கள் ”வேட்கையோடு விளையாடு” குறித்து பேச வந்தார். திருவையாறு நிகழ்ச்சி தீர்மானிக்கப்பட்டதிலிருந்து என்னோடு தொடர்பில் இருப்பவர். முதல் நாளிலிருந்து என்னை உபசரித்து பார்த்துக் கொண்டவர். மிக அற்புதமாக ஊக்கமூட்டக்கூடியவர். நேரம் கருதி சுருக்கமாக அறிமுகம் செய்தாலும், அதில் அன்பின் கனம் அதிகம்.

நிறைவாக... அடங்காத ஆச்சரியமும், மகிழ்வும், நெகிழ்வும் சூழ்ந்த மனநிலையோடு ஏற்புரை வழங்கச் சென்றேன். வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் கேள்விகளையொட்டி ஏற்புரையை அமைத்துக் கொண்டேன். விமர்சனங்களை மறுத்துப் பேச எதும் இல்லை. பிறிதொரு திசையிலிருந்து வரும் பார்வைகளை, அந்த பிறிதொரு திசையிலிருந்து பார்க்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பவன். எல்லாமே அனுபவங்கள் தான்.

நிறைவாக நன்றியுரை நிகழ்த்த வந்த திருவையாறு தடம் இலக்கிய அமைப்பின் செயலாளர் மா.குணா ரஞ்சன் மிகுந்த அன்பிற்குரியவர். ஓர் இரவு முழுவதும் என்னைக் குறித்து இணையத்தில் தேடி, யூட்யூப் காணொளிகளைப் பார்த்து வைத்திருந்தார். காலை அரசர் கல்லூரி நிகழ்வில் மிக அழகான படங்கள் பலவற்றை எடுத்திருந்தார். மதியம் அரசர் கல்லூரி நிகழ்வில் நிறைவாக பல மாணவிகளை ஒன்று திரட்டி ஒரு குழு நிழற்படம் எடுத்தார். அதில் ஒரு மாயம் செய்யப்போவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை, மாலை விழாவில் அந்தப் படத்தை அழகிய நினைவுப்பரிசாக மாற்றி, வழங்கி பெருமைப்படுத்தினார்.முன்பின் அறிமுகமில்லாத நிலையிலும், எழுத்தாளி அமைப்பின் நிகழ்வு என்பதற்காக தமக்கு வழங்கப்பட்ட புத்தகத்தை ஆழ்ந்து வாசித்து, அதன் நிறைகுறைகளை சமநிலை மனதோடு நோக்கி, அவற்றை மிகச் சிறப்பாக எடுத்துரைத்த பேராசிரியர் கண்ணம்மாள், தமிழ் இலக்கியா, எழுத்தாளர் புலியூர் முருகேசன், Rtn. குப்பு வீரமணி ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றிகள். அதற்காக அவர்கள் ஒதுக்கிய நேரம் மற்றும் உழைப்பிற்கு எளிதாகவெல்லாம் ஈடு செய்ய முடியாது.

அடுத்த நாள் கரூரில் நிகழ்ச்சி இருப்பதால், விழா முடிந்ததும் உடனடியாகப் புறப்பட முனைந்தபோது பேராசிரியர் கண்ணம்மாள் மனோகரன் லேசான தயகத்தோடு அணுகினார். என்னங்க எனக் கேட்க, ஈரோட்டில் இருக்கும் கோதை அவர்களை தன்னுடைய வகுப்புத் தோழி என்று கூறி, அவர் திருவையாறு புகழ் அசோகா இனிப்பினை வாங்கித் தருமாறு கூறியதாகச் சொல்லி, ஒரு பருத்த பையை நீட்டினார். திருவையாறு அசோகா மற்றும் அல்வா இளஞ்சூடாய் அன்பைப்போலவே கையில் கனக்கத் தொடங்கியது.

நிறைவாக...
இலக்கியக் கூட்டத்தை நடத்துவது எத்தனை கடினமானது என்பதை நடத்திப்பார்த்த அனைவரும் அறிந்ததே. எழுத்தாளி அமைப்பின் மூலம் தஞ்சையில் இடைவிடாது பெரும் முனைப்போடு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருபவர் கவிஞர். கிருஷ்ணப்ரியா. இரண்டுமுறை சில நிமிட நேர சந்திப்பு என்றாலும், அதிகம் உரையாடியதில்லை. ஆயினும் என்னுடைய புத்தகங்களை எழுத்தாளி அமைப்பில்  மேடையேற்றிவிட வேண்டுமென தீர்க்கமாய் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்த கவிஞர் கிருஷ்ணப்ரியா அவர்களுக்கே, நான் அன்று அடைந்த அனைத்து மகிழ்ச்சிகளும் சென்று சேரும். நிகழ்வு நடந்த தினம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், தம் கணவரோடு கலந்து கொண்டு பங்கெடுத்த நட்பிற்கு கூடுதல் ப்ரியங்களும் நன்றிகளும்.


அவ்ளோதானா சார், பேசமாட்டீங்ளா சார்?

திருவையாறு...
இத்தனை ஆண்டுகாலமும் கேள்விப்பட்ட ஒரு ஊர் பெயர் மட்டுமே. ஒரே ஒரு முறை மட்டும் பெரம்பலூரில் ஒரு திருமண நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு நாகப்பட்டினம் செல்லும் வழியில் அரியலூருக்கும் தஞ்சாவூருக்கும் இடையே திருவையாற்றினைக் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது. அப்போது அந்த ஊரின் திருப்பத்தில் அசோகா இனிப்பு சாப்பிடுவதற்காக காவிரி ஆற்றின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து சாப்பிட்டது தவிர வேறெதுவும் தெரியாது.
இந்தச் சூழலில்தான் திருவையாறு அரசர் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தார்கள். அதன் நிமித்தமாக கவிஞர்.கிருஷ்ணப்பிரியா முன்னெடுப்பில் அங்கிருந்து ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த திரு. குப்பு வீரமணி அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டிருந்தார். முந்தைய நாள் இரவே சென்றடைந்த என்னை நட்புகளோடு வரவேற்றார். அன்பாக உபசரித்தார்.
நிகழ்ச்சிகளுக்குச் செல்கையில் முடிந்தவரை பங்கேற்பாளர்களின் நிலை, பின்புலம், தேவை ஆகியவற்றை அறிந்துகொள்ள முற்படுவேன். அதன் காரணமாகவே முந்தைய தினமே திருவையாறு சார்ந்த யாரும் இருக்கிறீர்களா என ஃபேஸ்புக்கில் கேட்டு சிலரிடம் தகவல்கள் பெற்றிருந்தேன். எனினும் முழுமையான வடிவம் கிட்டவில்லை. திருச்சியிலிருந்து கல்லணை வழியாக ஆற்றையொட்டியே பயணப்பட்டத்தில் நான் கடந்தது அத்தனையும் கிராமங்கள். அங்கும் சுற்று வட்டமும் கிராமங்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
மூன்று மணி நேர அமர்வு என்பதால் LCD வேண்டுமெனக் கேட்டிருந்தேன். இரவுதான் அந்த வசதி இல்லையெனக் கூறியிருந்தார்கள். ஆகவே உரை மற்றும் உரையாடலாவே சமாளிக்கும் மனநிலைக்கு மாறத் துவங்கினேன்.
கல்லூரியின் வரலாறு சற்றே சுவாரஸ்யமாக இருந்தது. சரபோஜி மன்னரின் அந்தப்புர மாளிகையாக இருந்த கட்டிடத்தில் சமஸ்கிருத பட்டப்படிப்பு துவங்கப்பட்டிருக்கின்றது. சத்திரம் எனும் நிர்வாகத்தின் வாயிலாக தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரி. தனியார் கல்லூரி, அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி என்று மட்டும் இதுவரை பார்த்து வந்த எனக்கு ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்கும் கல்லூரி என்பது ஆச்சரியமாக இருந்தது.
காலையில்தான் அந்தக் கல்லூரியில் இருக்கும் பாடப்பிரிவுகள் தெரியவந்தன. இளங்கலை தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் முதுகலை தமிழ் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. அரங்கு குறித்து விசாரித்தபோது, அடுத்த இடி இறங்கியது. நாற்காலி வசதி இல்லை, அனைவரும் கீழேதான் அமர வேண்டும் என்ற தகவல் கிடைத்தது.
நிலத்தில் அமர்வது அவர்களுக்குப் பழகியிருந்தாலும், பயிற்சியாளராக எனக்கு நாற்காலிகளில் அமர்த்தப்படாத பிள்ளைகளிடம் உரையாடுவது பெரும் சவாலானது. கீழே அமர்ந்திருப்பவர்கள் மத்தியில் நடப்பது, எந்நேரம் கழுத்து வளைந்தபடி நம்மையே அவர்கள் பார்க்க வேண்டும் என நினைப்பது எல்லாமே சிரமத்திற்குரியது.
LCD இல்லை, நாற்காலிகள் இல்லை. தலைக்கு மேலே வெள்ளம்... இனி சாண் என்ன முழமென்ன என்ற மனநிலையில் இருந்தேன்.
நிகழ்ச்சி குறித்த எந்த விளக்கங்களுமின்றி, எல்லோரும் மீட்டிங் ஹால்ல உட்காருங்க என்றுதான் அழைத்து வரப்பட்டிருப்பார்கள் எனப் புரிந்துகொண்டேன். அனைத்து மாணவிகளும் நிலத்தில் அமரவைக்கப்பட்டிருக்க, மிகச் சொற்பமாய் இருந்த மாணவர்கள் மட்டும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் பெருந்தொகையான மாணவிகளுக்கு படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் என்பது ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அதன் காரணமாகவும் படிப்பு என்ன பெரிய படிப்பு என்ற மனநிலை இருந்திருக்கலாம்.
என்ன நிகழ்ச்சி என்று தெரியாது, எப்போது முடியுமென்று தெரியாது, பேசுபவர் குறித்தும் அறிமுகமில்லை, நிலத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதுள்ளிட்ட எந்தக் குறையும், குழப்பமும் இல்லாமல் அந்த மாணவிகள் தம் பார்வைகளில் ஒரு கூர்மையைத் தக்க வைத்திருந்தனர்.
முதல் நாள் பயணம், இரவு உறக்கமின்மை, ஏற்பாடுகளில் சில தடுமாற்றங்கள் என என்னைச் சூழ்ந்திருந்த அத்தனை அலுப்பு, சலிப்புகளையும் சில நிமிடங்களில் துடைத்தெறியும் வீரியம் அவர்களிடமிருந்தது. உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களையும் தனக்குள் பத்திரப்படுத்தும் பசி அவர்களிடமிருந்தது. முந்தைய நிகழ்வுகள் எத்தனையோ மனதிற்குள் நிழலாடினாலும், இவர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.


ஒன்னரை மணி நேரம் கழிந்து தேநீர் இடைவேளை விட்டபோது, சூழ்ந்து கொண்டு “அவ்ளோதானா சார், பேசமாட்டீங்ளா சார்?” எனக் கேட்டார்கள். ஆச்சரியமாக ஏன் எனக் கேட்டேன். “கொஞ்சம் தான் பேசியிருக்கீங்க, ப்ளீஸ் சார் நிறையப் பேசுங்க சார்!” எனக் கெஞ்சலாகக் கேட்டதை இங்குதான் முதன்முறையாகப் பார்த்தேன்.
நிகழ்ச்சி முடிவடைந்ததும், ஆட்டோகிராஃப் வாங்க குவிந்தவர்களிடம், (அது ஒரு ஆர்வ விளைவு மட்டும்தானே) இதை வாங்கி என்ன செய்யப்போறீங்க எனக்கேட்டேன் “என்னைப் பத்தின வரையறையை அதில் எழுதி வச்சுக்குவேன்” என்றார்கள் பலரும்.
இத்தனை நெகிழ்வான அனுபவத்திற்கு முக்கியக் காரணமாக இருந்த கவிஞர்.கிருஷ்ணப்ரியா மற்றும் திரு. குப்பு வீரமணி ஆகியோருக்கு ப்ரியம் நிறைந்த நன்றிகள். நிகழ்விற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு தஞ்சையிலிருந்து தமது கணவரோடு வந்து கலந்துகொண்ட கவிஞர் கிருஷ்ணப்பிரியா பேரன்பிற்கு உரியவர். எழுபது வயதுகளைக் கடந்திருந்தாலும், அச்சு அசலான இளைஞருக்குரிய ஆர்வத்தோடு எல்லாவற்றிலும் செயல்பட்ட அய்யா குப்பு வீரமணி அவர்கள் மிகப் பெரும் ஆச்சரியத்துக்குரிய முன் மாதிரி.
நிறைவாக பல மாணவிகளை ஒன்று திரட்டி ஒரு குழு நிழற்படம் எடுத்தார் இலக்கியத் தடம் அமைப்பைச் சார்ந்த குணா ரஞ்சன் அவர்கள். அதில் ஒரு மாயம் செய்யப்போவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.


ஒரு சொட்டு முதிர் துயரம்

குவித்து வைத்த வெயில்
போகத்தின் உதிரும் முடிச்சு
கழுத்தினடியில் வளரும் மச்சம்
இனி கிட்டாதொரு உறைந்து கிடக்கும் முத்தம்
மலர் கொய்யும் திடநிலை மழைச் சொட்டு
குழந்தையொன்றின் கடும் பசி

இதில் ஏதோவொன்றை
இல்லையில்லை
எல்லாவற்றையும் ஒத்தது
ந்த ஒரு சொட்டு முதிர் துயரம்!

ஒட்டியிருக்கும் மணற்துகள்கள்
ஆகப் பெருகு
துவும்
ஆகச் சிறுகுவதுவுமே
நதியின் இயல்பு

நதி நமக்கானதில்லை
நதியைச் சார்ந்தவர்களே நாம்

கால் நனைத்தபடி
கடந்தோடும் நீரில்
மீண்டும் ஒருமுறை
நனைய முடியாது

நதியைவிட்டு நகரும் முன்
கூழாங்கல் ஒன்றினை
கையகப்படுத்துங்கள்
தாமதித்து எடுப்பதற்குள்
அது வேறு வடிவம்
அடைந்துவிடலாம்

கூடவே காலடியில்
கொஞ்சம் மணற்துகள்கள்
ஒட்டியிருப்பின் அவற்றைக்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்!பேச வேண்டியது பெற்றோர்களிடமே!

மாணவர்களுக்கான பயிலரங்குகளின் நிறைவில் அதை ஏற்பாடு செய்யும் உயர்மட்டத்தில் உரையாடும்போது எப்படியும் “உண்மையில் நாம் உரையாட வேண்டியது, மாணவர்களிடம் மட்டுமே இல்லை... முக்கியமாக ஆசிரியர்களிடம், இன்னும் மிக முக்கியமாக பெற்றோர்களிடமே!” எனச் சொல்வதுண்டு.
அவர் என் நீண்ட நாள் நண்பர். அவ்வப்போது சந்திப்பது, உரையாடுவது உண்டு. கடந்த மாதத்தில் ஒருநாள் அவருடைய மகன் படிக்கும் கல்லூரியில் இருந்து அழைத்தார். மகனை அழைத்துக்கொண்டு வருகிறேன், அவனோடு உரையாட வேண்டுமென்றார். முதல் இரண்டு ஆண்டுகளில் மிகக் கணிசமான அரியர்ஸ். கல்லூரியிலிருந்து நேரில் வரச் சொல்லி அழைத்துவிட்டார்கள். மகனிடம் நான் பேச வேண்டும் எனும் வேண்டுகோளில் ஒரு வற்புறுத்தல் இருந்தது.
என்னை அறிந்திராத பிள்ளைகளிடம் தனிப்பட்ட முறையில் பேசி கவுன்சிலிங் கொடுக்கும் அனுபவம் பெரிதாக இல்லை. இதுவரை சுமார் பத்துப் பேரிடம் மட்டுமே பேசியிருப்பேன். என் களம் பயிலரங்குதான். பயிலரங்கிற்குப் பின் தொடர்பில் இருப்பவர்களுடன் என்னால் உரையாட முடியும். முன்பின் தொடர்பில்லாத தனி ஒருவரின் பிரச்சனைகளுடன் உரையாடுவது எளிதானதல்ல. ஒப்புக்கொள்ளத் தயங்கிக் கொண்டிருக்கையில் அவர் வற்புறுத்தலாக வருகிறேன் எனச் சொல்லிவிட்டார்.
வந்தபோது அவரை வெளியே அனுப்பிவிட்டு மகனோடு சுமார் ஒரு மணி நேரம் உரையாடினேன். அற்புதமான பையன். ஒரு தெளிவான வடிவத்திற்குள் வந்தோம். தனித்த பிள்ளைகளிடமும் இனி தயக்கமின்றி உரையாடலாம் எனும் நம்பிக்கையை முதல் சந்திப்பிலேயே தந்தான்.
அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். பின்னிரவு வரை அவர் தந்தையிடமிருந்து விசாரிப்பு வருமெனக் காத்திருந்தேன். அடுத்தடுத்த நாட்களும். ஒரு வாரம் கடந்தது, நானே பொறுக்க முடியாமல் அவரைத் தொடர்பு கொண்டு, ‘நான் உங்க பையன்கிட்ட என்ன பேசினேனு என்கிட்டதான் கேட்கல, அவன்கிட்டியாச்சும் கேட்டீங்களா!?’ என்றேன். கேட்டதாகவும் அவன் ஒரு இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டதாகவும், மகன் குறித்து என்னிடம் பேசத் தயக்கமாக இருந்ததாகவும் கூறினார். என்கிட்ட பேச என்ன தயக்கம் என்றேன். இத்தனைக்கும் நாங்கள் மணிக்கணக்கில் பேசிக் கொள்கிறவர்கள். சரி நாளை அழைக்கிறேன் என்றார். இன்னும் அந்த ‘நாளை’ வரவில்லை.
நானும் அது அவ்வளவுதான் என மறந்து போயிருந்தேன். வற்புறுத்தலாய் மகனை அழைத்து வந்தவர், அதன்பின் என்ன ஏது என எதுவுமே விசாரிக்காதது அழுத்தம் தரக்கூடியதே.
மூன்று வாரங்கள் கழிந்த நிலையில் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. மாணவத்தனமான குரல். பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான். அடையாளம் தெரியாமல் யார் எனக் கேட்டேன். தம் தந்தையின் பெயரைச் சொன்னவுடன் புரிந்து கொண்டேன்.
”சொல்லு கண்ணு!”
“அங்கிள்... நான் ரொம்பத் தெளிவாயிட்டேன் அங்கிள். ஒரு அஷ்யூரன்ஸ் தர்றேன் அங்கிள், எல்லாத்தையும் ஒதுக்கிவச்சுட்டு, ஒழுங்கா படிச்சு, சஸ்சஸ்ஃபுல்லா டிகிரி வாங்கிடுவேன் அங்கிள்”
மிகுந்த உற்சாகப் பேசினான். நான் அது குறித்து வேறு எதுவும் சொல்லவோ கேட்கவோ இல்லை
“ரைட்டு தம்பி. என் நம்பர் வச்சுக்க, தேவைப்படும்போது பேசு, ஈரோடு வந்தா மீட் பண்ணு” என்றேன்.
“ஷ்யூர் அங்கிள்” என அழைப்பைத் துண்டிக்கவிருந்தவனிடம் கேட்டிருக்ககூடாதுதான் ஆனாலும் கேட்டேன்...
“ஏந் தம்பி, நாம அன்னிக்குப் பேசினதைப் பத்தி உங்கப்பா உன்கிட்ட எதும் பேசினாரா!?”
“ஜஸ்ட் ஒருதடவ கேட்டார் அங்கிள். பெருசா எதும் கேட்கல”
“உங்ககிட்ட!?” எனும் கேள்வியை என்னிடம் அவன் கேட்காததற்கு, அந்த நண்பர் தம் மகனுக்கு நன்றி சொல்லிக்கொள்ள வேண்டுகிறேன்.
மீண்டும் முதல் பத்திக்கு....

அவங்களாப் பெத்தாங்க....!


நேற்று பகல் முழுவதும் சேலத்தில் ஆறு மிக முக்கியமான சந்திப்புகள், நீள் உரையாடல்கள். அதன்பின் ஒரு திருமண வரவேற்பில் அவசரமாக கலந்து கொண்டுவிட்டு, அடித்துப் பிடித்து அங்கிருந்து நாமக்கல்லிற்கு விரைந்து, டாடா மோட்டார்ஸ் வழங்கும் கல்வி ஊக்கத்தொகை நிகழ்வில் உரை.

வண்டியிலிருந்து இறங்கிய வேகத்தில் அரங்கிற்குள் ஓட, நான் வந்ததை அறிந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அந்த நொடியே பேச அழைக்க.... ஒரே ஒரு நிமிடம்கூட சுதாரிக்க அவகாசமில்லாத நிலை.

பெற்றோர், பிள்ளைகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் இருக்கும்அரங்கு என்பது மட்டுமே மனதில் இருந்தது. நாள் முழுக்க அலைந்து மிக அவசரமாக பயணித்து வந்ததால் மனதிற்குள் தயாரித்து வைத்திருந்தவை யாவும் கலைந்து போயிருந்தன.
ஆனாலும் சமீபத்தில் ஹலோ எஃப்.எம் பேட்டியில் குறிப்பிட்டிருந்த இன்றைய மாணவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்என்பதில் துவங்கி நூல் பிடித்தேன். என்னளவில் எனக்கு சற்று திருப்தி தராத சமாளிப்பு உரைதான் என்றாலும். பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்தது.

கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு நிகழ்வுகள் நிறைவடைந்ததும், உணவு வழங்கப்பட்டது. சாப்பிட்டுவிட்டு கை கழுவிக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் ஓடி வந்து, “அங்கிள் ஒரு செஃல்பி எடுத்துக்கட்டுமா?” எனக் கேட்டாள்.

கண்ணு எந்த க்ளாஸ் படிக்கிறே!

லெவன்த் அங்கிள்

எந்த ஸ்கூல்?”

இப்ப ________ ஸ்கூலில் படிக்கிறேன்

இப்ப இந்த ஸ்கூல்னா... புரியலையே!

அதையேன் கேக்குறீங்க. நான் படிக்காத ஸ்கூலே இல்ல!

அந்தப் பெண் அவ்வளவாக படிப்பு வராத மாணவியாக இருக்க முடியாது. முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவர்களுக்கே, இந்தக் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுவதால், அவள் நன்கு படிக்கும் மாணவியாகத்தான் இருக்க வேண்டும்.

ஏம்மா அத்தன ஸ்கூல்!?”

எனக்கென்ன தெரியும் அங்கிள், அவங்களாப் பெத்தாங்க, அவங்களா இங்க படி, அங்க படினு மாத்துனாங்க! அவங்களா அது படி, இது படினு சொல்றாங்க

ஒரு பெண் எங்கள் அருகில் புன்னகைத்தபடி வந்தார். இதா... எங்கம்மாக்கு நானு சி.ஏ தான் படிச்சே ஆவனுமாம்குழந்தைத்தனம் மாறாத அந்தப் பெண் சிரித்தபடியேதான் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய அம்மாவைப் பார்த்து ஏனுங்க... நீங்க சி.ஏ படிக்க ஆசைப்பட்டிருந்தீங்களாக்கும்!என்றேன்

மென்மையான வெட்கத்தோடு ஆமாங் சார்.... அதான் பாப்பாவையாச்சும் படிக்க வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா இன்னிக்கு உங்க பேச்சு கேட்டதும் மாத்திக்கிட்டேன், இனிமே அப்படி சொல்லப் போறதில்ல. நல்லாப் படிக்கிறவதான். அவ இஷ்டத்துக்குப் படிக்கட்டும்னு விட்றப்போறேன்என்றதும், அந்த மகள் அம்மாவை தாவியணைத்தபடி அம்மா.... நெசமாத்தான் சொல்றியா!என ஆச்சரியத்தில் இறுக்கிக் கொண்டிருந்தாள்.

மீண்டதும் அந்தப் பெண்ணோடு உரையாடல் தொடர்ந்தது.

சரிம்மா... செஃல்பி எடுத்துக்க, ஆனா நான் அழகாத் தெரியனும்என்றேன்.

அங்கிள் நீங்க அழகு அங்கிள்!என்றபடி என்னருகில் நெருங்கி, பதின் வயதுப் பெண்கள் செல்ஃபி எடுக்கும்போது செய்வதுபோலவே, ஒரு மாதிரி கண்களைச் சுருக்கி, உதடு இறுக்கி சுழித்தபடியே படம் எடுத்தாள்.

பாருங்க அங்கிள் சூப்பரா இருக்கீங்க!என என்னிடம் காட்டினாள். காலையில் இருந்து கழுவாத முகம் என்னுடையது. உண்மையில் அந்தப் பெண் மிக மிக அழகாக அந்தப் படத்தில் தெரிந்தாள்.

அலைச்சல், பதட்டம், விரைந்த பயணம், அவகாசமின்றி ஏறிய மேடை, மேடையில் எனக்கிருந்த திருப்தியின்மை ஆகியவையெல்லாம் காணாமல் போய், என்னவோ தெளிவாக, அமைதியாக, நிதானமாக குறிப்பாக நிறைவாக இருப்பதுபோல் அந்தப் படத்தில் நான் தெரிந்தேன்.


வேட்கையோடு விளையாடு - வெளியீட்டு விழா


கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி ஜூலை இறுதிக்குள் புதிய தலைமுறைக் கல்வி இதழில் வேட்கையோடு விளையாடு தொடருக்கான கட்டுரைகளை எழுதி முடித்திருந்த நிலையில், 2018ல் ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவிற்குள் புத்தகத்தை தயாரிக்கும் எண்ணமும் இருந்தது. ஆனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தயார் செய்வது மிகச் சிரமம் எனத் தோன்றியது. கூடவே சின்னச் சோம்பலாலும் சற்று தள்ளிப்போட்டேன்.

அந்த ஆசுவாசத்தில் நிதானமாக மீள் வாசிப்பு செய்து, அக்டோபர் முதல் வாரத்தில் புத்தகம் வெளியிட்டுவிட வேண்டுமென முடிவு செய்திருந்தேன். மிக நெருங்கியவர்களிடமும் அவ்விதமே கூறியிருந்தேன். அதன்படி திட்டமிட்டு, அனைத்தையும் தொகுத்து, ஒரு பிரதி எடுத்து படிக்க ஆரம்பித்தபோது, அடுத்தடுத்த பணிகளுக்காக ஓட வேண்டி வந்தது. அந்தப் பிரதி ஒரு பக்கம் அமைதியாக இருக்க, புத்தகத்தை மெல்ல மெல்ல மறந்து, அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் என ஓடிக் கொண்டிருந்தேன். பின்னர் நவம்பர் எனத் தீர்மானித்து. அதுவும் நிறைவேற்றப்படாமல் போக புத்தகம் மேலிருந்த ஆர்வம் நீர்த்துப் போக ஆரம்பித்தது. இந்த தாமதங்களின் பின்னால் இருந்த ஒரு காரணம், இந்தப் புத்தகத்தை சுயமாக பதிப்பிக்க வேண்டும் என்பதுவும்.

இப்படியாக மூன்று - நான்கு முறை தள்ளிப்போட்டதில், “புத்தகமா கொண்டு வந்தே ஆகனுமா!?” என நானே மாற்றிச் சிந்திக்க ஆரம்பித்த நேரத்தில்தான், அடுத்த 15 தினத்திற்குள் முடிக்க வேண்டுமென டிசம்பர் மத்தியில் உறுதியாகத் துவங்கினேன். அதிலிருந்து இடைவிடாது 15 - 20 நாட்கள் கட்டுரைகளுக்குள் மூழ்கிப் போனேன். ஏற்கனவே மூன்று கட்டங்களாக பிழைத் திருத்தம் செய்திருந்த கட்டுரைகளின் வரிகளில் புதிதாக கை வைக்க, பணி கடினமானது. ஒவ்வொரு முறையும் அச்சிட்ட  திருத்தப் பிரதிகளிலும் சிவப்புக் கோலமிட ஆரம்பித்தேன். இரவுகளில் நீண்ட நேரம் போராடினேன். 31ம் தேதிக்குள் புத்தகங்களை தயாரித்துவிட முடியும் எனும் நம்பிக்கை பெரும் உத்வேகம் தந்தது.

31ம் தேதி ஒருவேளை தயாராகவிட்டாலும், ஜனவரி முதல் வாரத்தில் தயாராகிவிடும் எனும் நம்பிக்கை ஆழமாக வந்துவிட்ட நிலையில், வெளியீடு குறித்து பல்வேறு சிந்தனைகள் ஓட ஆரம்பித்தன. ஃபேஸ்புக்கில் வெளியிடலாமா, சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடலாமா எனும் ஊசலாட்டங்களைக் கடந்து மீண்டும் ஈரோட்டிலேயே வெளியிடலாம் என முடிவெடுத்தேன். மீண்டும் என்றால்...!

ஆமாம் 2017 ஜனவரி 15ம் தேதி பெயரிடப்படாத புத்தகம், உறவெனும் திரைக்கதை நூல்கள் வெளியீடு கண்டு இரண்டு ஆண்டுகள் கடக்கும் சூழலில் இந்த தொகுப்பு தயாராகிக் கொண்டிருந்தது. அதே மாட்டுப்பொங்கல் தினத்தில் வெளியிடலாம் என நினைத்தபோது, ஈரோடு வாசல் தொடங்கியதும் அந்த 2017 ஜனவரி 15ம் தேதி என்பதால் ஆண்டு விழாவையும் இணைத்து நடத்தலாம் எனும் ஆவல் வந்தது. ஆண்டு விழா பிரதானமாகவும், அதில் ஒரு நிகழ்வாக புத்தக வெளியீட்டை வைத்துக் கொள்ள முதலில் நினைத்தேன்.

ஆண்டு விழாவிற்கான குழு அமைத்து, அதற்கான திட்டங்கள் தீட்டும்போது, ஆண்டு விழா கொண்டாட்டத்தில் புத்தக வெளியீடு கூடுதல் பளுவாகத் தோன்றியது. ஆண்டு விழாவை மாட்டுப் பொங்கல் தினத்தில் வைப்பதிலும் கொஞ்சம் தயக்கம் உருவானது. யாரையும் விழாக்காலத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம் எனத் தோன்றியதால், புத்தக வெளியீட்டை முன் நகர்த்த விரும்பினேன். அதன்படி ஜனவரி 6ம் தேதி புத்தக வெளியீடு என டிசம்பர் 31ம் தேதி இரவுதான் முடிவானது.

ஐந்து நாட்கள் இடைவெளியில், விழா என்பது அதீத தன்னம்பிக்கையோ எனத் தோன்றினாலும், ஈரோடு வாசல் குழுமத்தால் அது சாத்தியப்படும் எனத் தோன்றியது.

வெளியீட்டு இடமாக ஈரோடு நவீன நூலகம்தான் மிகப் பொருத்தமான இடம் என அனுமதி கேட்டதும், நூலகர் திருமதி. ஷீலா ஒப்புதல் வழங்கினார். ஈரோடு மாவட்ட நூலக அலுவலர் திரு.மாதேஸ்வரன் அவர்கள் புத்தகம் பெற்றுக் கொள்ள மிகப் பொருத்தமானவர் என்று முடிவு செய்து அணுக, அவரும் ஒப்புதல் கொடுத்தார். சமீபத்தில் அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களோடு இரண்டு நாட்கள் இருந்த அனுபவத்தில் அவர் மிகப் பொருத்தமானவர் எனக் கண்டிருந்தேன்.

புத்தக அறிமுகம் என்று வைக்காமல், மதிப்புரை மற்றும் வாழ்த்துரையையே புத்தகம் குறித்தான கருத்தாக்கத்திற்கு பொருத்தலாம் எனத் தோன்றியது. வேட்கையோடு விளையாடு தொடருடன் பயணித்த கல்வியாளர்களே அதற்குப் பொருத்தமானவர்கள் என முடிவு செய்து, அணுகிய ஐந்து பேரும் ஒப்புக்கொள்ள நிகழ்ச்சி நிரல் ஏறத்தாழ முடிவானது. அவர்களில் மூவர் வாசல் நட்புகளாகவே இருந்தது மிக அணுக்கமானதும்கூட. தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் அன்பிற்கினிய சுரேஷ் ஆகியோர் பெரும்பாலும் என் எழுத்துடனும், வேட்கையோடு விளையாடு கட்டுரைகளுடனும் பயணித்து வந்தவர்கள். தாளாளர் திரு.இளங்கோ அவர்கள் நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்திருந்தவர். வாசல் தவிர்த்து நான் அழைத்த திரு.சிவக்குமார் மற்றும் திருமதி. உமா சிவக்குமார் இருவரும் இந்தக் கட்டுரைத் தொடரில் மிக முக்கியமானவர்கள். அவர்களின் மாணவிகள் முக்கியமான கட்டுரைகளின் நாயகிகள். எழுதும் வரை அவர்களுக்குத் தெரியாது. தொடரை வாசித்துவிட்டு கட்டுரைகளில் இருந்த தம் மாணவிகளை இனங்கண்டு அவ்வப்போது உரையாடியவர் உமா சிவக்குமார். ஆகவே அவர்கள் தம்பதிகளாக பங்கெடுக்க வேண்டுமென விரும்பியிருந்தேன்.

இந்தச் சூழலில் ஏறத்தாழ விருந்தினர்கள் முடிவாக, வெளியிட பொருத்தமான ஆளுமை வேண்டுமென நினைத்த தருணத்தில் தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் டாக்டர். ஆனந்தகுமார் IAS அவர்களின் வருகை மற்றும் பங்கேற்பினை தம்பி அர்விந்த் ஏற்பாடு செய்ய, நிகழ்ச்சி நிரல் முழுமையடைந்தது. அவர் தற்போதைய அரசு கூடுதல் செயலர் என்பதைவிட ஈரோட்டின் பெருமை வாய்ந்த முன்னாள் ஆட்சியர் என்பதே முக்கியமான காரணம்.

ஏழு விருந்தினர்கள் தவிர்த்து, வரவேற்புரை, நன்றியுரை, நிகழ்ச்சி தொகுப்பு, நிழற்படம், காணொளி பதிவு, சிற்றுண்டி ஆகியவற்றை வாசல் உறவுகள் பொறுப்பெடுத்துக் கொள்ளவேட்கையோடு விளையாடுதம் வெளியீட்டிற்கு மிக எளிதில் தயாரானது.

அழைப்பிதழ் அச்சிடப்படாமல், வாட்சப் மற்றும் ஃபேஸ்புக் வாயிலாக அழைப்பது என முடிவெடுத்தேன். தொடர்ச்சியாக உடன் வசித்து வரும் சளி நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்பாக அதன் உச்சகட்ட உக்கிரத்தைக் காட்ட, அது சுவாசப் பிரச்சனையாக மாறியது. வியாழன் முழு இரவும் சொட்டுத் தூக்கமின்றி, வெள்ளிக்கிழமை காலை இருந்த நிலை, ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள வெளியீட்டில் நான் கலந்து கொள்ள முடியுமா எனும் சந்தேகத்தைக் கொடுத்தது. அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கும் விருந்தினர்களில் ஈரோட்டில் இருப்போரையாவது நேரில் சந்தித்து அழைக்க வேண்டும் எனும் நினைப்பும் அந்தக் கடும் நாட்களில் பொய்த்துப் போனது.

நிகழ்ச்சி நெறியாளர்களாக பொறுப்பெடுத்துக்கொண்ட மகேஸ்வரி மதன் மற்றும் மஞ்சு கண்ணன் ஆகியோரிடம்கூட நிகழ்ச்சி நிரலை ஒழுங்க செய்ய என்னால் ஒத்துழைப்பு கொடுக்க முடியாமல் போனது. சிற்றுண்டி, நினைவுப் பரிசுகளுக்கு தங்கதுரை மற்றும் ஆரூரன் ஆகியோரிடம் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டினேன். இந்த நிலையில் 5ம் தேதி சனிக்கிழமை கரூரில் நடைபெறவிருந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டிருந்ததால் எப்படியாவது சென்று சமாளித்துவிடத் தயாராகினேன். மருந்துகளின் உதவியோடு, அந்த நிகழ்ச்சியை முடித்து புறப்பட்ட அரை மணி நேரத்தில் கல்லூரி நிர்வாகம், மீண்டும் ஒரு நிகழ்ச்சியை திங்கட்கிழமை செய்து தர வேண்டியதை அங்கீகாரமாக்க் கருதியபடியே, ஈரோட்டை நோக்கி வரும்போதுதான் வாசலில் மூர்த்தியை அழைத்து வீடியோ பதிவு குறித்து சில வார்த்தைகள் பேசினேன்.

ஈரோட்டை அடைந்து, தயாராக இருந்த புத்தகங்களை ஏற்றிக் கொண்டு, நூலகத்திற்குச் சென்றேன். வாசலில் இருந்து மகேஷ்வரி, மஞ்சு கூட்ட அரங்கில் வருகை தர, நூலகரின் ஒத்துழைப்போடு அரங்கில் இருக்கைகளை வேறு வடிவில் மாற்றி அமைத்துவிட்டு, வெளியீட்டிற்கான புத்தகங்களை வைத்துவிட்டு. எப்படியும் நிகழ்ச்சி அதன்போக்கில் நடந்துவிடும் என வீடு வந்தபோது முழுக்க சக்தியை இழந்திருந்தேன்.

தாளவாடியில் இருந்து புறப்பட்டிருந்த சுரேஷ் மற்றும் நண்பர்கள் கொடிவேரியிலிருந்து அனுப்பிய படங்களில்தான் ஞாயிறு காலை கண் விழித்தேன். உடலை ஒருவாராகத் தயார்படுத்தி, மருந்துகளை எடுத்துக் கொண்டு நூலகத்திற்குள் நுழையும்போது காலை 10.15 மணி. நிகழ்ச்சி நெறியாள்கைக் குழு தயாராக இருந்தது. நெறியாள்கையில் ஒரே ஒரு சொல்கூட நான் வாசிக்காத, என்னவென்று கேட்காத முதல் நிகழ்ச்சி. என்னால் இயலவில்லையென்பதைவிட, அவர்கள் சிறப்பாகச் செய்வார்கள் எனும் நம்பிக்கையே.

பாதி நிரம்பியிருந்த அரங்கு பெரும் நம்பிக்கை கொடுத்தது. 10.30 மணி நிகழ்ச்சியை 10.45க்கு தொடங்கிவிடலாம் எனத் தயாரான நிலையில், தேநீர் மற்றும் சிற்றுண்டியை எப்போது வழங்குவது எனும் குழப்பம் வந்தது. முதலிலேயே நான் அதைத் திட்டமிட்டிருக்க வேண்டும். நிகழ்ச்சியின் இடையில் வழங்குவது, நிகழ்ச்சியின் போக்கை சிதைக்கும். நுழையும் இடத்தில் வழங்கலாம் என்றால், அனைவரும் அரங்கிற்குள் நுழைவதிலேயே கவனமாக இருந்ததால், கடந்த புத்தக வெளியீட்டில் வழங்க முடியாமல்போனது நினைவிற்கு வந்தது. நிகழ்ச்சி நிறைவடைந்து வழங்கலாம் என்றால், புறப்படும் அவசரத்தில் அதுவும் சரி வராது எனத் தோன்ற, தேநீர் வழங்கிவிட்டு நிகழ்ச்சி தொடங்குவது எனத் தீர்மானித்து வழங்கியதில் திட்டமிட்டதைவிட சற்று தாமதாகமாகவே விழா தொடங்கியது.

சிறு அறிமுகத்துடன் நெறியாள்கை குழு விழாவை துவக்கியது. காஞ்சிக்கோவில் அரிமா சங்கத்தின் தலைவரும், வாசல் நண்பருமான அரிமா. முத்தரசு அவர்கள் கலகலப்பானதொரு வரவேற்புரை நிகழ்த்தினார்.

அடுத்ததாக தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி, முதல்வர் சுரேஷ்குமார், தாளாளர் உமா சிவக்குமார், தாளாளர் இளங்கோ ஆகியோர் தாம் வாசித்த கட்டுரைகளை மையப்படுத்தி மிக ஆழமாகவும், அழுத்தமாகவும், நெகிழ்வாகவும் மதிப்புரை மற்றும் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள். நால்வரிடமிருந்தும் பல்வேறு விதமான உணர்ச்சிகளை ஈட்டிக்கொள்ள முடிந்தது. இதுபோன்ற தொகுப்பு வெளியீட்டிற்கு இதுவே சிறந்த அறிமுகம், மதிப்புரை, வாழ்த்துரை என்பதை அவர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். அத்தனைக்குப் பின்னாலும் அன்பும், எளிய மனதும் அவர்களிடமிருந்தது.அதன்பின் ஆனந்தகுமார் ஐ..எஸ் அவர்கள் நூலை வெளியிட மாதேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மாதேஸ்வரன் அவர்கள் நெகிழ்வானதொரு வாழ்த்துரை வழங்கினார். அடுத்து பேச வந்த சிறப்பு விருந்தினர் ஆனந்தகுமார் மிக கலகலப்பாக ஆரம்பித்து, விழாவை மிகச் சிறப்புள்ளதாக ஆக்கினார். ஈரோட்டில் நாற்பது நாட்கள் மட்டுமே ஆட்சியராக இருந்து தனி முத்திரை பதித்தவரை, இப்படியொரு சந்தர்ப்பத்தில் சந்தித்ததும், அவரை உரையாற்ற வைத்ததும் என்னளவில் பெரும் மகிழ்ச்சிக்குரியது. நான் ஏற்புரை வழங்கி முடித்ததும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்புரையில் விருந்தினர்களை அழைத்த காரணங்களை மையப்படுத்திதான் பேசினேன். நிறைவாக நண்பர் ஆரூரன் அற்புதமானதொரு நன்றியுரை நவில விழா மகிழ்வாய் நிகழ்ந்தேறியது.

*

2017ல் நிகழ்ந்த புத்தக வெளியீட்டிற்கும் இந்த புத்தக வெளியீட்டிற்கும் இடையேயான இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய அற்புதம் என்பது ஈரோடு வாசல்”. அந்த வெளியீட்டின்போது ஈரோட்டில் படைப்பாளிகளின் எண்ணிக்கை கூடவேண்டும் எனும் ஆசையை வெளிப்படுத்தியிருந்தேன். அந்த நிகழ்விற்காக வாட்சப் வழியே திரட்டப்பட்டிருந்த நட்புகளில் ஒத்த சிந்தனையுடையவர்களைக் கொண்டு ஈரோடு வாசல் எனும் குழுமமாக உரையாடத் தொடங்கினோம். ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இயக்கம், அமைப்புகள் சார்ந்தே இயங்கும் எனக்கும் இது தீனிதான். ஏற்கனவே பழகி வந்த அமைப்புகளில் இருந்த சில விதிமுறைகள் இதில் இல்லை. வேண்டுகிற மாதிரி அமைத்துக் கொள்ளும் சுதந்திரம் இங்குண்டு. அங்கு கற்றுக்கொண்ட அத்தனை வித்தைகளையும் களமிறக்கும் வாய்ப்பு இங்குண்டு. இதிலும் சவால்களைச் சந்தித்ததுண்டு, அவற்றையும் தாண்டி சரியானவர்கள் தொடர்ந்து நிற்கிறார்கள். உயிர்ப்புடன், உரிமையுடன் செயல்படுகிறார்கள். ஒவ்வொருவரும் தம் உயரத்தை தாமே தீர்மானிக்கிறார்கள். உடனிருப்பவர்கள் உதவ, உயர்த்த, தான் விரும்பிய உயரத்தைத் தொட்டுப் பார்க்க தொடர்ந்து உழைக்கிறார்கள்.

தன்னலம் பாராது, ’எங்கள் வாசல்எனும் உரிமையை ஒவ்வொருவரும் கொண்டாடியதின் ஒரு உதாரணம் இந்த புத்தக வெளியீட்டிற்கு வாசல் நட்புகள் காட்டிய அர்ப்பணிப்பு. பங்கெடுத்த யாரும் அதை என் புத்தகமாகக் கருதவில்லை. தம் புத்தகமாகக் கருதினார்கள். தம் புத்தகமாகக் கருதும் மனதைவிட, அடிப்படையில் அவர்களுக்கு உரிமையிருந்தது. இன்னும் சில மாதங்களிலிருந்து அவர்களில் பலரிடமிருந்து புத்தகங்கள் வரும். அதற்கான ஒத்திகை இது. அப்போது அவற்றை நான் என் புத்தகமாகக் கொண்டாடுவேன்.

அழைப்பிதழ் அச்சிடாமல், எவரையும் போனிலும்கூட அழைக்காமல் அரங்கு நிரம்பித்தளும்ப திரண்ட கூட்டத்தின் பின்னே நான் மட்டுமே கிடையாது. வாசலின் அர்ப்பணிப்பும், பேரன்புமே காரணம். விருந்தினர்கள், பங்கேற்பாளர்கள், இடம் வழங்கிய நூலகர் ஷீலா, சிற்றுண்டி, உணவு வழங்கிய தங்கதுரை, நிழற்படம்  எடுத்த தம்பி ரகு, காணொளிக் காட்சி பதிவு, வெளியீடு என தொடர்ந்து அசத்தும் வாசலின் செல்லப் போராளி தம்பி மூர்த்தி, புத்தக விற்பனையை கவனித்த நந்தினி, நெறியாளுகை செய்த மகேஷ், மஞ்சு, சிறப்பு விருந்தினரை அழைத்து வந்த அரவிந்த், வரவேற்புரை வழங்கிய முத்தரசு, நன்றியுரை வழங்கிய எல்லாவற்றிலும் என்னுடன் இருக்கும் ஆரூரன் உள்ளிட்ட ஒவ்வொரு வாசல் நட்புகளுக்கும் இந்த விழாவில் நான் பெற்ற மகிழ்வையும்  மனநிறைவையும் சமர்ப்பிக்கிறேன்.

காணொளிகளுக்கு 

வேட்கையோடு விளையாடு


-