ஒரு பொழைக்கத் தெரியாதவனின் கதை - புத்துமண்ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் ஒரு பொழைக்கத் தெரியாதவனின் கதைதான் புத்துமண். அப்படியான பொழைக்கத் தெரியாதவனின் கதையைப் படிப்பதில் என்ன பெரிய ஆர்வம் கிளர்ந்துவிடப் போகிறது எனத் தோணலாம். இந்தசோ கால்டுபொழைக்கத் தெரியாதவனுக்கு இன்னொரு பெயர் சூட்டினால் என்ன?. சரி போராளி என்று சூட்டிடலாமா?. அந்தப் போராளிகள் அப்படியொன்றும் அந்நியமானவர்கள் அல்ல. நம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள்தான். பொதுவாக போராளிகளிடம் தோல்விகள் இருக்கும். வலி இருக்கும். உறுதி நிரம்பியிருக்கும். நோக்கம் கூர்மையாய் இருக்கும். அவஸ்தை இருக்கும்குடும்பம் தனித்து இருக்கும். அதையெல்லாம் விட அவர்களிடம் போராட்டம் தொடர்ந்து இருக்கும்.

மிக வேகமாய் தன்னை வளர்த்துக்கொண்ட திருப்பூரின் வரைபடத்தில் ஒரு நுண்ணிய சிறு கோடுதான் புத்துமண் நாவலில் வரும்மணியன்’. மணியன் மாதிரியான கோடுகள்தான் மதயானைபோல் எதிர்கொண்ட எல்லாவற்றையும் சிதைத்தோடும் ஒரு தொழில் நகரத்தில் அவ்வப்போது கேள்விக்குறியாய் கொம்பு முறுக்கி நிற்பவை. வளர்ச்சி முறித்துப்போட்ட கிளைகளுக்காகவும், நசுக்கிப்போட்ட தளிர்களுக்காவும் எழும்பும் இவர்களின் குரல், வளர்ச்சி முழக்கத்தில் பெரும்பாலும் தேய்ந்து போவதுதான் முரணான அரண்.

மனித உரிமைக்காகவும், குத்துயிரும் குலையுயிருமாய்க் கிடக்கும் நொய்யலைப் பாதுகாக்கவும், சுமங்கலித் திட்டத்தில் நசுக்கப்படுவதைத் தடுக்கவும் என அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாகக் காட்டப்படும் ஒரு நகரத்தின் பாய்ச்சலில் எதிர்நீச்சல் போடுகிறார்.

அவருடைய வாழ்க்கையில் யதார்த்தமான பாத்திரங்களாய் வரும் மனைவி சிவரஞ்சனி, மகள் தேனம்மை, தனது எம்.பில் ஆய்வுக்காக தேடிவந்த ஜூலியா மற்றும் மணியனின் வீடு உள்ளிட்டோர் நிறைய உணர்த்துகிறார்கள். மாற்றங்களுக்குள் ஆட்படும் தேனம்மை வெகு இயல்பாய் நம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களின் பிம்பமாய் இருக்கிறார்.

ஆச்சரியக்குறிகளை மட்டுமே விரும்பும் சில முதலாளிகளுக்கு கேள்விக்குறியாய் இருக்கும் மணியன் உறுத்தலாய்ப் படுகிறார். அவரை வளைக்க அல்லது வதைக்க அவர்களுக்கு ஆஜானுபாகுவான நைஜீரிய இளைஞன் விலைக்குக் கிடைக்கிறான். நைஜீரிய இளைஞர்கள் இதற்கும் பயன்படுகிறார்கள் அல்லது பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது அவசரத்திலும் அவசரமான ஒரு எச்சரிக்கை. வதையில் சிக்கிய மனிதனை வாதை ஆட்கொள்கிறது.

இடையில் வரும் மருத்துவர் ஜீவானந்தத்தின் கடிதமும், இறுதியில் தொகுக்கப்பட்ட மணியனின் கை பேசியில் சேர்ந்துகிடந்த குறுந்தகவல்களும், அவர் சேகரித்து வைத்திருந்த குற்றங்களின் செய்திகளும் நிறைய உணர்த்துகின்றன.

அத்தியாயங்களின் தொடக்கத்தில் இருக்கும் லட்சுமணனின் ஒடியன்கவிதை வரிகள் வாசிப்பின் தன்மையை அடர்த்தியாக்குகின்றன. எழுத்து வடிமற்ற இருளர்களின் கவிதைகளை தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒடியன்தொகுப்பு வாசிக்க வேண்டிய ஒன்று. அதிலிருக்கும் கவிதைகளை மிகப் பொருத்தமாய் அத்தியாயங்களின் தலையில் சூட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.

//
ஆட்டுக்கு நல்ல தீனி கிடைக்க வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்து ரிசர்வ் காட்டில் மேய்க்கிறாள் கோசி. தான் நன்றாக மேய்ந்தாலும் அவளுக்கு என்ன லாபம் எனக் கேட்கிறது ஆடு. உனக்கும் இல்லாமல், காட்டு நரிக்கும் இல்லாமல் ரேஞ்சர் வீட்டுக்கு விருந்தாகப் போகிறேன். செம்போத்து குறுக்கே பறக்கும் கெட்ட சகுனமும் தெரிகிறது. எனவேகோசி என்னைக் கொன்று தின்னு இப்பவேஎன்கிறது ஆடு
//

மற்றும்

//
அரசாங்க லோன் மூவாயிரம். அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது அரசாங்கம் எனக்குக் கடன்காரன்
//

அத்தியாயங்களை
, அதிலிருக்கும் மனிதர்களை, சூழலை, நிலையை எதிர்கொள்வதற்கு இவை நம்மை வெகுவாகத் தயார்படுத்துகின்றன என்றும் சொல்லலாம்.

நாவலை முடித்து விழிகளை இறுக்க மூடி, ஆழ்ந்து மூச்சிழுத்து ஆசுவாசப் படுத்திக் கொள்கையில் முன் அட்டை கண்ணில் படும். பார்வை கூர்மைப்படும். வெளுத்த ஒரு உள்ளங்கை முழுவதும், விரல்களின் நீளம் வரைக்கும் புத்துமண் அப்பியிருக்கிருக்கும் படம் மனதில் அப்பிக்கொள்ளும். விரல் நுனிகளால் அதை வருடும்போது எங்கோ ஏதோ ஒரு இளகுகிறது, ஏதோ ஒன்று உதிர்கிறது. பொதுவாக கரையான் கட்டியெழுப்பும் புற்று எவரும் கற்பனை செய்திடாத ஒரு ஈரத்தை தனக்குள் கொண்டிருக்கும். புதினம் முழுக்கவுமே ஈரத்தின் நசநசப்பு மனதிற்குள் நீடிக்கிறது.

புத்துமண் அளவில் கனமான நாவல் அல்ல. கனமற்ற அந்த நாவலின் கடைசிப் பக்கங்களை நாம் எட்டும்போது மனது கனக்கும்.


புத்துமண்   |   சுப்ரபாரதிமணியன்   |   120 பக்கங்கள்   |  100 ரூபாய்உயிர்மை வெளியீடு

தகிக்கும் பனியுருண்டை
உள்ளங்கையில் அழுத்தி
விரல்கள் மடக்கிவிடப்பட்ட
தகிக்கும் பனியுருண்டை
நீ!

அந்த முத்தங்களை நாம்
கடற்கரையில்
புதைத்திருக்கலாகாது
ஓயாத அலை
வருடிக்கொண்டேயிருக்கிறது!

ஒளி பிடுங்கிச்செல்லப்பட்ட
இருள் வெளியெங்கும்
கவிதையாய்
உன்னை இட்டு
நிரப்பியிருக்கிறாய்
துழாவும் கைகளில்
பிடிபடும் வரிகளில்
பிரியத்தின் வாசனையுண்டு

பிரியத்தின் சுவட்டை
அழிப்பது
அத்தனை ளிதல்ல
நாவிலூறிய தேனின் சுவையை
நினைவிலிருந்து
அழிப்பதற்கு ஒப்பானது!

அடைபடும் வழித்தடங்கள்

எது வாழ்க்கைஎனும் ஒற்றைக் கேள்விக்கு, இங்கு ஆயிரமாயிரம் பதில்கள் உண்டு. அவையனைத்தும் பொருத்தமான பதில்களாகவும், சரியான பதில்களாகவும் இருக்க வெண்டுமா என்ன? சரியான பதில்கள்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதாய் வைத்துக் கொள்வோம். அப்படியான சரியான பதில்களை மட்டுமே வைத்து திருப்தியடைந்து விடமுடியுமா? ஒருவேளை தவறான பதில்கள் வரும்பட்சத்தில் என்னென்ன தீங்குகள் அல்லது இழப்புகள் நிகழ்ந்துவிடும்?

மரணித்துப்போகத் தேவையான அளவிற்கு தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு, கூடுதல் உறுதிக்கு கை மணிக்கட்டு நரம்பை அறுத்துக் கொண்டு, அதுவும் போதாதென்று இருபதுகளில் இருக்கும் ஒருவர் மாடியிலிருந்து கீழே குதித்த செய்தியொன்று மனதிற்குள் கோரமானதொரு இம்சை செய்து கொண்டிருக்கிறது. இப்படியான செய்திகளை அவ்வப்போது பலவிதங்களில் கேட்டுக் கடப்பதொன்றும் புதிதில்லை. அப்படியானவர்களில் யாரேனும் நமக்கு தொடர்புடையவர்களாய் இருப்பின், அது கூடுதல் கலக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

தன்னைக் கொல்வதற்காக இந்த மூன்று காரியங்களையும் செய்தவரை எனக்குத் தெரியும்; அல்லது அவருக்கு என்னைத் தெரியும். தம் உயிர் மீது அவர் நிகழ்த்திய கொடூரத்திற்கு பெரிய காரணம் ஒன்றுமில்லை. சொன்னால் அட இதுக்காகவா?’ என்று கேள்வி மிக எளிதாய் எழும். வெகு எளிதான அந்தக் காரணத்தின் பெயர் காதல். ‘அட காதல் தானா?’ என ஒற்றைச் சொல்லில் நாம் கடந்து போகப் பார்க்கலாம். காரணம் நம் அகராதியில் காதல் எனும் பதத்திற்கு கிடைக்கும் அர்த்தமும், அவர் அகராதியில் காதல் எனும் பதத்திற்கு கிடைக்கும் அர்த்தமும் வெவ்வேறானவை. கடக்க முடியாததாகக் கருதப்பட்ட தோல்வியோ, சுமக்க முடியாத ஒரு துரோகமோகூட காதலின் அர்த்தமாக இருந்திருக்கலாம். சரி அதற்காக தன்னைக் கொலை செய்துவிடுவது என்பது மட்டுமே நியாயமான பதிலா!?

எது வாழ்க்கைஎனும் கேள்விக்கு, சில வேளைகளில் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியூட்டும் பதில்கள் வந்துவிடும். இன்னும் சில தருணங்களில் ஏதேனும் ஒரு பதில் கிடைத்துவிட்டாலே  போதுமென்றும் தோன்றிவிடுகிறது. அப்படியான விரும்பும் பதில்கள் மற்றும் வந்துவிழும் பதில்களின் மத்தியில், நான் நினைக்கும் பதில் வேறு. ‘வாழ்க்கை என்பது எதிலிருந்தேனும் தொடர்ந்து கற்றுக்கொண்டே ருப்பதுன்பதாகவே அது இருக்கும்.கற்பித்தல், கற்றுக்கொள்ளல் என்பது பள்ளி, கல்லூரி, பணியிடம் மற்றும் தேவை சார்ந்த துறைகளையொட்டியது எனும் ஒரு எண்ணத்தை தெரிந்தோ தெரியாமலோ வலுவாய் வடிமைத்துக்கொண்டுள்ளோம். ‘கற்றல்என்றாலே கரும்பலகை முதற்கொண்டு நவீன வடிவத்தில் இருக்கும் கற்பித்தல் முறை வரை மனதில் படமாய் ஓடுகிறது. ‘கற்றுக்கொள்ளல்என்பது ஒரு கட்டத்தோடு நிறைவடைந்து விடுவதாய் கருதும் மூட நம்பிக்கையும் நம்மிடம் உண்டு. வெகுசிலரே தாம் காணும் எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டு, கற்றுக்கொண்டதை வாழ்வில் செயல்படுத்தும் குணமும், திறனும் உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் சலிப்பும் புகார்களும் குறைவு.

திரைப்படங்களில் சிறிய பெண்ணாய் தோற்றத்தில் இருந்த அந்த நடிகை திருமணம் செய்து கொள்கிறார். சில ஆண்டுகள் கழித்து மடியில் குழந்தையோடு தன் படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடுகிறார். உருவத்தில் பருத்திருக்கிறார். அவருடைய தற்போதைய தோற்றத்தை வைத்து இணைய வெளியெங்கும் ’நகைச்சுவை’ எனும் போர்வையில், கேலிகளும் கிண்டல்களும் வெடித்துச் சிதறுகின்றன. அப்படிச் செய்பவர்களில் யாரும், எவ்வகையிலும் அந்த நடிகையோடு தொடர்புடையவர்களும் கிடையாது. பொதுவெளியில் இருக்கும் யாரையும், எதற்கும், எவ்விதமும் தீண்டலாம் எனும் மனவெளிப்பாடு. ‘அந்த உருவ மாற்றம் என்பது தாய்மையின் விளைவு’ எனும் நிதர்சனம் யாருக்கும் புரியாத புதிரல்ல. அத்தனை கிண்டல், கேலிகளுக்கும் பதிலளிக்கும் வகையில்தாய்மையே மகிழ்ச்சி, குழந்தைக்கு அமுதூட்டுவது மகிழ்ச்சிஎன குழந்தையோடு இருக்கும் மற்றொரு படத்தை புதிதாக வெளியிடுகிறார். அவர் வெளியிட்ட படம் கிண்டல் செய்தவர்களுக்கான பதில் அல்ல; பாடம்.

எதிலிருந்தெல்லாம் கற்றுக் கொள்ளலாம், கற்றுக்கொள்வதின் அவசியம் என்ன?’ போன்ற கேள்விகள் வெகு இயல்பாகவே எழுவதுண்டு. எங்கு எவ்விதம் இந்த வாழ்க்கையை கற்றுக்கொண்டோம் என நினைத்துப் பார்த்ததுண்டா? கல்வி என்பதுதான் கற்றுக்கொடுக்கிறது எனக் கருதினால், அதுதான் ஆபத்தான பதிலாக இருக்கும். மனிதனின் சராசரி ஆயுளில் தோராயமாக நான்கில் ஒரு பங்கு காலம், கல்விக்காகவே மட்டுமே அர்ப்பணிக்கப்படுகின்றது. ஆழ்ந்து யோசித்தால் அந்தப் பருவத்தில் கற்றுக்கொள்வதும்கூட வாழ்வதற்கு என்பதைவிட பொருளீட்டுவதற்கு என்றே சொல்ல வேண்டும். அந்தக் கல்வி ஆயுட்காலம் முழுமைக்கும் வாழ்ந்துவிடும் வழிகளைத் தந்துவிடுகிறதா என்ன?

யாரோ எதன் நோக்கிலோ தயாரித்த பாடத்திட்டங்களை மையப்படுத்திய கல்வி, பல தருணங்களில் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுஎன்பதாகத்தான் உள்ளது. வாழ்க்கைக்கான கல்வியை நாம் சந்திக்கும் சூழல்களே பெரும்பாலும் கற்றுக்கொடுக்கின்றன. கிடத்தப்பட்டிருக்கும் பச்சிளங் குழந்தையொன்று குப்புற விழுவதற்கு எடுக்கும் முயற்சியில் தொடங்கி, 94ம் வயதிலும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஜான் குடெனஃப் அவர்களின் வாழ்க்கை வரை எல்லாவற்றிலிருந்தும் கற்றுக் கொள்ள ஆயிரமாயிரம் இருக்கின்றன. அம்மாதிரியான கற்றுக்கொள்ளல்களில் வழியே வாழ்வதுதான் வாழ்க்கை. ”இயற்பியல் துறையில் சாதிப்பதற்கான வயதையெல்லாம் தாண்டிவிட்டீர்கள்என 25 வயதில் பல்கலைக் கழகத்தில் ஒதுக்கப்பட்ட ஜான் குடெனஃப், தம் 57ம் வயதில் லித்தியம் பேட்டரியை கண்டுப்பிடித்ததும், 94ம் வயதில் மற்றொரு வகை பேட்டரிக்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்திருப்பதும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தானே!?ஒரு அப்பாவும் மகளும் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். வலது பக்க சாலை ஓரமாய் காரொன்று முன்பக்கம் நசுங்கி நிற்கிறது. கூட்டம் பரபரப்பாக கூடிக்கொண்டிருக்கிறது. காரின் பின் பக்கம், சுமார் நூறு மீட்டர் தொலைவில் ஒரு பைக் சிதறிக் கிடக்கிறது. அருகில் மடியில் ஒரு இளைஞனின் தலையைத் தாங்கியபடி இன்னொரு இளைஞர் கதறிக் கொண்டிருக்கிறார். அந்த அப்பாவும் மகளும் தங்கள் அவசரத்தையொட்டி கடந்து செல்கிறார்கள். சிறிது நேரத்தில் எதிரிலிருந்து 108 ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்து கடக்கிறது.

அதே அப்பாவும் மகளும் சில நாட்கள் கழித்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுப் பேருந்து ஒன்று தாறுமாறாய்த் திரும்பி நிற்கிறது. கூட்டத்தின் கவனம் பேருந்தின் மீது பதிந்திருக்கிறது. கடக்கும்போது முன் சக்கரத்திற்கும் பின் சக்கரத்திற்கும் இடையே தலை நசுங்கிய ஒரு முதியவர் கிடக்கிறார். விபத்தின் விபரீதம் புரிந்தது. அந்த இடத்தையும் மௌனமாய்க் கடக்கிறார்கள். அதிர்ச்சி மெல்ல மெல்லத் தேய்கிறது.

அன்றிரவு மகள் சொல்கிறாள்அப்பா இனிமே அந்த மாதிரி ஆக்ஸிடெண்ட் எதும் பார்த்தா, ஹெல்ப் பண்றமோ இல்லையோ ஒரு ரெண்டு நிமிசம் நின்னு, யாரு, என்ன, ஏதுனாச்சும் பார்த்துட்டு போலாம்பா!” ஒரு விபத்து நடந்த இடத்தில் சற்று கூட்டம் கூடியதுமே, ‘அதுதான் கூட்டம் கூடிவிட்டதே... நாம் மட்டும் என்ன செய்துவிடப்போகிறோம்? நமக்கு முக்கிய வேலை இருக்கிறது, நமக்கு நேரமில்லைஎனப் பல்வேறு காரணங்கள் மற்றும் சமாதானங்களை முன்வைத்து நழுவிவிடும் மனநிலைக்கு, சுருக்கெனத் தைக்கும் விதத்தில் அந்த சிறிய பெண்ரெண்டு நிமிசம் நின்னுட்டு போலாமேஎன்ற வேண்டுகோளின் மூலமாக ஆயிரமாயிரம் விசயங்களை உணர்த்திவிடுகிறாள்.

எல்லாம் எனக்குத் தெரியும்’, ‘இன்னும் புதிதாக என்ன இருந்துவிடப்போகிறது’, ‘சிலதெல்லாம் அப்படித்தான் இருக்கும்என்பது மாதிரியான மனநிலைகள் ஆபத்தானவை. ஒரு ஏரியோ, குளமோ தனக்கு வரும் நீர் வழித்தடங்களை தாமே அடைத்துக் கொள்வதற்கு ஒப்பானது இது. ஏரி, குளங்கள் ஓரிரு கால்வாய்களை மட்டுமே நம்பியிருப்பதில்லை. அந்தப் பகுதிகளில் பெய்யும் மழை நீரை தன்னை நோக்கிக் கொண்டுவரும் பல்வேறு நீர் வழித்தடங்களையும் நம்பித்தான் இருக்கின்றன. பெருங்கால்வாய்கள் நீரைக் கடத்திவர தவறும் தருணங்களிலெல்லாம் சிற்சிறு நீர் வழித்தடங்களில் கிட்டும் நீரைக் கொண்டு அவை உயிர்ப்புடன் இருக்கும். வழித்தடங்களை தொலைக்கும் ஏரி குளங்களுக்கு வாழ்வேது?. தம்மில் இருந்த நீரை ஆவியாதலில் தொலைக்கும், மாசுகளை மௌனமாய் ஏற்றுக்கொள்ளும், தன்னையே தகுதியற்றதாய் மாற்றிக்கொள்ள அனுமதிக்கும். ஒன்றுக்கும் உதவாததாய் மாறியும் போகும்.

கற்றுக்கொள்ளலை ஒதுங்க ஆரம்பிக்கின்ற தருணத்திலிருந்து வாழ்க்கை மெல்ல புளிப்பேறத் துவங்குகிறது. புளிப்பேறத் துவங்கிவிட்ட வாழ்க்கையில், உன்னத ருசியை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. வாழ்க்கையைக் கற்றல் என்பது திட்டமிடப்பட்ட பாடத்திட்டம் சார்ந்தன்று. கற்பித்தல் என்பது தூணிலிருந்தும், துரும்பிலிருந்தும் நிகழலாம். கற்றுக்கொள்தல் மிக எளிது, அறிவின் அத்தனை கண்களும் திறந்திருப்பது போதும்

-

நம்தோழி ஜூலை 2017ல் வெளியான கட்டுரை