பிரியத்தின் தலைகோதியபடி



இறுதியாய்க் கோர்த்திருந்த விரல்களினூடே
உயிரின் கதகதப்பிருந்தது
எனினும் நம் உள்ளங்கைகளினூடே
ஒரு மௌனம் கதைத்திருந்தது
அறைந்து உறைந்து போன பார்வைக்கு
ஒளிவர்ணம் தீட்டிய படியும்
அணைத்து உணர்த்திய வாசனைக்கு
மலர்களைத் தூவியபடியும்
பகிர்ந்த ஆதிச்சொல்லையும்
பகிரப்போகும் இறுதிச்சொல்லையும் தேடி
துள்ளி விளையாடும் பிரியத்தின்
தலைகோதியபடியும் காத்திருப்பேன்!

இரு கலவரங்களும் தற்காலிக கொள்ளையர்களும்!


இது பெருநகரங்களுக்கு ஆகாத காலம் போன்று தோன்றுகிறது. கடந்த ஓர் ஆண்டுக்குள் தென் மாநிலங்களின் தலைநகரங்களை வெள்ளம் அடுத்தடுத்து ஆட்டிப் படைத்திருக்கின்றது. முதலில் சென்னை பின்னர் பெங்களூரு இப்போது ஹைதராபாத். இயற்கைப் பேரிடரைச் சமாளிக்க முற்படலாம், ஆனால் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது.

ஆனால் தடுக்கவும், தவிர்க்கவும் கூடிய கலவரங்களைச் சமாளிக்க முடியாமல் நாம் திணறுவதை என்னவென எடுத்துக்கொள்வது. 1991ற்குப் பிறகு காவிரியை மையப்படுத்தி நிகழ்த்தப்பட்ட கோரமான கலவரத்தை பெங்களூருவும், 1998ற்குப் பிறகு மக்களை மிரள வைத்த கலவரத்தை கோவையும் ஒரே மாதத்தில் சந்தித்திருக்கின்றன.  இரு நகரங்களிலும் வசிக்கும் பரவலான மக்கள் பயமாய் இருக்கு எனச் சொல்லும் வகையில் கலவரக்காரர்கள் தங்கள் நோக்கத்தில் வென்றிருக்கின்றனர்.

பெங்களூர் கலவரத்தின் உண்மையான நோக்கம், காவிரி நீர் தங்களுக்குக் கிட்டாமல் போய்விடுமே என்பதையும் தாண்டி தமிழர்களின் சொத்துகளுக்கு இழப்பு ஏற்படுத்த வேண்டும் எனும் வெறி மட்டுமே இருந்தது. அன்றைய தினத்தில் கர்நாடகாவிற்குள் நுழைந்த தமிழக வாகனங்களையும், பிரபலமாயிருந்த தமிழர்களின் நிறுவனங்களையும் குறிவைத்து தாக்கியுள்ளனர். ஓட்டாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துகளை தேடிச்சென்று திட்டமிட்டு ஒட்டுமொத்தமாய் கொளுத்தும் அளவிற்கு, சொத்துகளை அழிக்க வேண்டும் என்ற அநியாய வன்மம் அதனுள் இருந்தது. அந்த எரிப்பும், அதன் மூலமாய் தரும் அழிவும், விடுக்கும் எச்சரிக்கையும் காவிரித் தண்ணீரோடு எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருப்பவை அல்ல என்றாலும், சொத்துக்களை அழிப்பதன் மூலம் ஒரு கொண்டாட்டம் எய்துவதை வன்ம மனம் விரும்பியிருக்கலாம்.

பெங்களூரு கலவரத்தின் இழப்புகள் யாவை என்பதை உணர்ந்தும் உணராமலும் மீள்வதற்குள் கோவையில் கலவரம். மதச்செயற்பாட்டாளார் ஒருவர் கொலையுண்டதற்காக தமிழகத்தின் மிக முக்கிய நகரமான கோவை நகரமே ஸ்தம்பிக்க வைக்கப்படுகிறது. ஊர்வலம் என்ற பெயரில் கலவரம் கட்டவிழ்த்துவிடப் படுகிறது.

பொதுவாகக் கலவரங்களின் காரணங்களாய், பாதிக்கப்பட்ட மனிதர்களின் கொந்தளிப்பான மனநிலை அமைந்திருக்கும்பாதிக்கப்பட்ட வலி அதில் கசியும். ஆனால் இந்த இரு கலரவங்களையும் பார்க்கும்போது பாதிக்கப்பட்ட உணர்வுகளைவிட, அரசியல் மற்றும் மதத்தின் சார்பில் போதிக்கப்பட்ட உணர்வுகளின் கொந்தளிப்பே கனன்று கொண்டிருந்ததை அறிய முடியும். 

இப்படியான பெருநகரங்களைக் குறி வைக்கும் கலவரங்கள் வெறும் உணர்ச்சி வயமானது என்பதையும் தாண்டி எங்கோ, எவ்விதமோ விரும்பி, வடிவமைக்கப்பட்டு வளர்ந்து நின்று அறிவியல் தொடர்புகளின் வழி விதைக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. இந்தக் கலவரங்கள், மனதிற்குள் அந்த நகரங்களின் மீது, அவைகளின் வளர்ச்சி மீது அங்கேயே வசிப்பவர்களுக்கு முரணாய் எழுந்து உள்ளுக்குள் தேங்கியிருக்கும் நீண்ட கால வன்மம் மற்றும் பொறாமையின் வெளிப்பாடா என்பதை ஆராய வேண்டும்.

நகரத்தின் வளர்ச்சியில் நகரத்தில் இருக்கும் எல்லோருக்கும் பங்கு கிடைத்து விடுவதில்லை. சிலர் வளர்கிறார்கள். சிலர் அந்தந்த நிலைகளில் அப்படியே சமாளிக்கிறார்கள். சிலர் தேய்கிறார்கள். தேய்கிற நிலையில் உள்ள சிலருக்கு வளர்கிறவர்கள் மீதும், சமாளிக்கிறவர்கள் மீதும் ஆச்சரியம் இருப்பதைவிடப் பொறாமை மேலோங்கியிருக்கலாம். அப்படிப்பட்ட மனநிலை கொண்டோருக்கு, இம்மாதிரியான தருணங்கள் மிகப்பெரிய வடிகாலாக அமைகின்றன. தனித்து இருக்கும்போது உள்ளபடியே இருக்கும் அமைதியும், அச்சமும் மற்றவர்களோடு ஒன்று கூடும்போது பொங்கியெழுகிறது.

பெரிய தலைவர்களின் மரணங்களின்போது உணர்ந்த அதீதப் பதட்டம் நினைவுக்கு வருகின்றது. அந்த மாதிரியான பதட்ட காலத்தின் பாதிப்புகளில் ஒன்று, கடைகளை உடைத்து பொருட்கள் திருடப்படுவது. திருடப்படுவது என்பதைவிடக் கொள்ளையடிக்கப்படுவது என்பதுதான் சரியான சொல்லாக இருக்கும். எம்.ஜி.ஆர் இறந்தபோது ஏற்பட்ட பதட்டத்தைப் பயன்படுத்தி சென்னையில் பெரிய பெரிய கடைகளில் புகுந்து அதிலிருந்த டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொள்ளையடித்து குறைந்த விலையில் விற்கப்பட்டதை ஒரு கதைபோல் வெகு சுவாரஸ்யமாக சென்னையைச் சார்ந்த நண்பர் ஒருமுறை விவரித்தார். சென்னை அளவிற்குப் பதட்டம் மற்றும் பாதிப்புகளை மற்ற நகரங்கள் அப்போது உணர்ந்ததாய் நினைவில்லை.




கோவைக் கலவரத்தில் கடையில் புகுந்து கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டு ஓடும் கூட்டம் அதை நினைவுபடுத்துகிறது. காணொளியில் காட்டப்படும் அந்த செல்போன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அனைவருமே தயக்கமின்றிக் கொள்ளையடிக்கின்றனர். கூட்டத்தோடு உணர்ச்சிப் பெருக்கில் உள்ளே நுழைகையில் அவர்கள் அனைவருக்கும் திருட்டு எண்ணம் இருந்திருக்குமா எனத்தெரியவில்லை. ஆனால் உள்ளே புகுந்தவுடன் சிறிதும் மனக்கூச்சமும், தயக்கமுமின்றி வெறியோடு கொள்ளையை நிகழ்த்துகிறார்கள். எதுவும் கிடைக்காத ஒருவன் மேசைக் கண்ணாடியை தள்ளிவிட்டு நொறுக்குகிறான். கண்ணில் பட்டதை எடுக்கும் கணப்பொழுதில் தாம் திருடனாய் மாறிவிட்ட ஆபத்தை, அவர்களே அந்தக் காணொளியைக் காணும் போதாவது உணர்வார்களா?

அந்தக் கூட்டத்தினரின் சராசரி வயது இருபதிலிருந்து முப்பதுக்குள் இருக்கலாம். அவர்களின் பெரும்பாலானோர் திருமணம் செய்து வாழ்வின் அடுத்த கட்டத்திற்குள் நுழையாதவர்களாக இருக்கலாம். ஒரு கலவரத்தைப் பயன்படுத்தி அல்லது கலவரத்தை உருவாக்கிக் கொள்ளையடிக்கலாம் என்ற மனோபாவம் அவர்களுக்கு எங்கிருந்து அறிமுகமாகியிருக்கும் என்பதே ஆச்சரியமாக இருக்கின்றது. இம்மாதிரியான தருணங்களில்தாம் திருடியது எவ்விதத்திலேனும் கதாநாயக மனோபாவத்தைக் கொடுத்தால் அதுவே கொடும் சாபம்.

அந்தக் காணொலியின் பிறிதொரு ஆபத்தாக நான் உணர்வது, இனி கலவரத்திற்கான வாய்ப்புக் கிடைத்தால், அதன் மூலம் கொள்ளையை ஏகபோகமா நிகழ்த்தலாம் அல்லது கொள்ளையடிப்பதற்காகவே கலவரத்தில் பங்கெடுக்கலாம் என்பதும் தான்.

வாழ்க்கையைத் தொடங்கும் முன்பே தான் ஒரு கொள்ளைக்காரனாக மாறிப்போகும் அளவிற்குதான் அங்கு திருடிய ஒவ்வொருவரும் தம் மீது சுய மதிப்பு கொண்டிருந்திருக்கிறார்கள் எனக் கருத வேண்டியும் வருகிறது. கலவரத்தில் கொள்கையும் நோக்கமுன்றி அழிவு மட்டுமே நோக்கமென வேட்டையாடும் அவர்களை காலம் தன் பங்கிற்கு குற்றவாளியாக்கி வேட்டையாடுகிறது என்பது அவர்களுக்கு புரிய, அவர்களுக்கு வாழ்க்கை என்பது எதுவெனப் புரிதல் அவசியம்.

-

நன்றி :  தி இந்து

மனசு பத்திரம்



வாழ்வதற்காகவே பிறந்த மனிதர்களுக்கு வாழ்வதில் இருக்கும் முக்கியமான சிக்கலே, சக மனிதர்களைக் கையாள்வதுதான். மனித இனம் தோன்றி ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆன பின்பும்கூட மனிதர்களுக்கு மனிதர்களைக் கையாள்வது மிகப்பெரிய சவாலாக இருப்பதை மறுக்க முடியவதில்லை.

உலகில் பல நூறு கோடி மக்கள் இருந்தாலும் அவர்களில் இயற்கை புரிந்திருக்கும் மாயம் வியப்பிற்குரியது. இரட்டைப் பிறவிகளாகப் பிறந்தவர்களில்கூட பெற்றோர்களே கண்டுபிடித்துவிட முடியாத அளவிற்கு உடலமைப்பில் அரிதாக ஒற்றுமை கொண்டவர்களைக்கூட கண்டுவிடலாம். ஆனால் கருவிழிப் பதிவு மற்றும் கைரேகை ஒத்திருக்கும் மனிதர்களை இயற்கை படைக்காதது போலவே, ஒத்த மனம் வாய்த்தவர்களும் படைக்கப்படவேயில்லை.

அவர்கள் நம்மைப் போல் இருந்தால் நன்றாக இருக்குமே!’ என்பதில்தான் அத்தனை சிக்கல்களும் உருவாகின்றன எனத் தெரிந்தாலும் அப்படியான ஒரு எதிர்பார்ப்பை நாம் வைத்திருப்பதுதான் பல துன்பங்களுக்கும் காரணமாய் இருக்கின்றது.

ரவு பத்தரை மணி நாகர்கோவில் செல்லும் ரயில். என்னுடைய முன்பதிவு படுக்கை எண் 39, அதாவது பக்கவாட்டில் கீழ் படுக்கை. நான் மதுரையில் இரவு 2 மணிக்கு இறங்க வேண்டியவன்.

என்னருகில் வந்த ஒரு பெண் அண்ணா என்னோடது 38, அப்பர் பெர்த், நீங்க எடுத்துக்குங்க. நான் இத எடுத்துக்குறேன்என்றார்

நான் மதுரைல 2 மணிக்கு இறங்கனும். இன்னும் மூன்றரை மணி நேரம் தாங்க இருக்கு. அங்கே படுத்தா தூங்கிடுவேனே

நான் அதுவரைக்கும் முழிச்சிருந்து உங்கள எழுப்பியுடறேன்

நீங்க எங்க போகனும்?”

நாகர்கோயில்

நாகர்கோயில் காலை 6 மணிக்கு மேலதானே போவும். ஏன் எனக்காக முழிச்சிருந்து சிரமப்படுறீங்க. உங்க பர்த்ல படுத்து ட்ரெய்ன் நிக்கிற வரைக்கும் கஷ்டப்படாமல் தூங்கலாமே

ப்ளீஸ்ங்ண்ணா... இந்த பெர்த் கொஞ்சம் கொடுங்களேன்உதவி கேட்கும்போது வெளிப்படும் அதீத அசட்டுச் சிரிப்பும் கெஞ்சலும்.

அந்தக் கெஞ்சல் என்னைக் கொஞ்சம் திடுக்கிட வைத்தது. சரியென்று ஒப்புக்கொண்டு படுக்கை விரிப்போடு மேலே ஏற யத்தனிக்கும்போது கவனித்தேன், படுக்கை முனையில் ஒரு மை துடைத்த துணி கிடந்தது. யோசனையோடு எட்டிப்பார்க்க, அந்தப் படுக்கை முழுதும் கருப்பாக மையால் மெழுகிவிட்டது போல் இருந்தது. கையால் தொட்டுப்பார்க்கவே பிசுபிசுத்தது.


கீழே இறங்கி பர்த் முழுக்க மை பூசின மாதிரி அழுக்கா இருக்குங்க

அப்ப என்ன பண்ண.... தொடைக்க முடியாதா?” என்றார்

ரொம்ப அழுக்கா இருக்கு. யாரோ தொடைச்சிட்டுத்தான் துணிய போட்டிருக்காங்க

அப்ப என்ன பண்ண?”

டிடிஈ வரும்போது அவர்கிட்டச் சொல்லுங்க. வேற மாத்தித் தருவார்

அதைப் படம் எடுத்து இரயில்வே மந்திரிக்கு ட்விட்டரில் இணைக்கலாமா எனத் தோன்றியது... சரி டிடிஈ வரட்டும் என நானும் காத்திருந்தேன். ரயில் புறப்பட்டும் அரை மணி நேரமாகியும் டிடிஈ வரவில்லை. அந்தப் பெண் எனக்கான படுக்கையில் ஒரு பக்கம் முழுதும் நிரம்பி அமர்ந்திருந்தார். என் உரிமை குறித்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. மற்ற படுக்கைகளில் இருந்தவர்கள் உறங்கத் துவங்கியிருந்தனர். நான் மதுரையில் 2 மணிக்கு இறங்கி பேருந்தில் தொடரவேண்டிய பயணம் என்பதால், இந்த மூன்று மணி நேரத் தூக்கம் அவசியம் என மூளைக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

தன் பயணச்சீட்டை ஆராய்ந்து கொண்டிருந்தவர் என்னை நோக்கி

உங்க சீட் நெம்பர் என்ன!?” என்றவரின் குரலில் சற்று அதிகாரமும், பரவசமும் இருந்தது.

“39”

இங்க பாருங்க... என்னோடதுதான் 39. நீங்க உங்க சீட்டுக்கு போங்கஎன பயணச்சீட்டை நீட்டிபடி சட்டென எழுந்து நின்று என்னை வெளியேற்றும் மனநிலையில் இருந்தார்

பக்கவாட்டில் கீழ் படுக்கை, அது 39 என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தேன். ஒருவேளை RACஆக இருக்கலாமோ என்ற சந்தேகம் வந்தது. பதிவு செய்யும்போது படுக்கை வசதி கிட்டியது நினைவிற்கு வந்தது. நிதானமாக அவர் பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு...

எப்படிங்க.... உதவியா கேட்டப்ப ஒரு மொகமும், இப்ப ஒரு மொகமும் காட்ட முடியுதுஎன்றேன்

அதெல்லாம் ஒன்னுமில்ல... உங்க சீட் எதுவோ அதுக்குப் போங்கஎன்றார்

நான் போறது இருக்கட்டும்... டிக்கெட்ல இருக்கிற இந்த  39 உங்க வயசா இல்ல பர்த் நெம்பரானு விவரம் தெரிஞ்சவங்க யாரும் இருந்தா கேட்டுட்டு வந்து அதிகாரம் செய்ங்க, அதன்பிறகு நான் என்ன செய்யனும்னு யோசிக்கிறேன்என்றபடி என் படுக்கையை நான் எடுத்துக் கொண்டேன்.

சில நிமிடங்களுக்குள் அந்தப் பெண் தன் முகத்தை மாற்றியமைத்த விதம் கடும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. உதவியாகக் கேட்ட தருணத்தில் கொண்டிருந்த முகபாவனையும், பயணச்சீட்டில் இருந்த வயதையும், படுக்கை எண்ணையும் குழப்பிக்கொண்டு அதிகாரமாய் உரிமை கோர முயன்ற தருணத்தில் காட்டிய முகபாவனைக்கும் இடையே இருந்த வித்தியாசம்... இது எல்லோருக்கும் கை வந்துவிடும் கலை அல்ல. அதற்கென்ற சிறப்பு வடிவம் பெற்றவர்களுக்கு மட்டுமே உரித்தானது எனச் சொல்லலாம். அப்படியான தருணங்களில் இதுவும் மனிதர்களின் இயல்பு எனப் புரிந்துகொள்ள முடிகின்றது.

அந்தப் பெண் சட்டென அதிகாரத்தையும், உரிமையையும் செலுத்த முயன்றபோது, நான் சற்று நிதானமாக இருந்ததும் கூட ஒருவகையில் ஆச்சரியம்தான். நிதானம் தவறியிருந்தால் என் பதில் எவ்விதமாக இருந்திருக்கும் என யோசிக்கையில், கடினமான சில சொற்கள் மனதிற்குள் நீந்தத் துவங்கின. அந்தச் சொற்களை மனதில் உலவ விட அது தடித்து வலிமை மிகு சொற்களாக மாறத்துவங்கின. அந்தப் பெண் மேல் அதுவரையிலும் இல்லாத ஒரு கோபமான அல்லது வெறுப்பான மனநிலை மெல்ல படரத்தொடங்கியது.



அன்றாடம் இதுபோன்ற சூழல்களில் எவ்வளவுதான் நிதானம் கடைபிடித்தாலும் அல்லது கடைபிடிப்பதுபோல் பாவனைகள் செய்து பழகிப்போயிருந்தாலும், சிற்சில வன்மங்கள் மனதிற்குள் குடியேறுவதைத் தவிர்க்க முடிவதில்லை. அப்படிக் குடியேறும் சமயங்களில் அது வன்மம்தான் என இனம் கண்டுவிட்டால், சற்றுக் கூடுதல் பிரயத்தனமெடுத்து உதறித்தள்ளிவிட முடிகிறது. அப்படியும் உதறமுடியாமல் சேர்ந்திருப்பவைகளை அகற்றுவதற்கு இரவின் நீள் உறக்கம் மிகச்சிறந்த வழி. ஆழ்ந்த உறக்கத்தின் பின்னே பல நேரங்களில் உறக்கத்திற்கு முன்பு மனதை எது ஆட்சி செய்தது?’ என்பதைக்கூட நினைவடுக்கிலிருந்து தேடித்தான் எடுக்க வேண்டும்.

அப்படியும் உறக்கத்தில் கரைக்க முடியாத வன்மம் இருந்தால், அதைக் கரைக்க எளிதாக பிறிதொரு வழியிருக்கிறதென நண்பர் ஒருவர் அடிக்கடி பின்வரும் யோசனையைச் சொல்வார்.

விடியற்பொழுதிலும் ஏதேனும் வன்மம் மனதிற்குள் தங்கியிருந்தால் பெரிதாக ஒன்றும் கவலைப்படாதீர்கள். அப்படி மனதிற்குள் இருப்பதை உணர்ந்திருப்பதே நல்லதொரு சமிஞ்சைதான். உள்ளுக்குள் ஒட்டியிருக்கும் வன்மம் கவலை கொள்ளுமளவிற்கு ஆபத்தானதில்லை. எழுந்தவுடன் நிதானமாக பல் துலக்கி, முகம் கழுவி, போதுமான அளவு தண்ணீர் பருகிவிட்டு, உடலை சில உடற்பயிற்சிகள் செய்து மெல்ல இலகுவாக்குங்கள். நடப்பதற்குத் தோதான காலணியை அணிந்துகொள்ளுங்கள். வீட்டைவிட்டு வெளியே வீதிக்கு வாருங்கள். ஏதுவான ஏதேனும் ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து நடக்கத் துவங்குகள். அருகிலிருக்கும் மரத்திலிருந்து ஏதேனும் பறவைகள் சப்தமிடுவதை விரும்பி உள்வாங்குங்கள். நடையின் வேகத்தில் திடமும், ஆற்றலும் கூட்டுங்கள். அப்படி நடக்கையில் எப்போது சுவாசம் உள் மற்றும் வெளியே நிகழ்கிறதெனக் கவனியுங்கள்.

மெல்ல நடையிலிருந்து ஓட்டத்திற்கு மாறிப் பாருங்கள். மிதமான வேகத்தில் தொடர்ந்து ஓடுங்கள், முடிகின்ற வரையில் ஓடுங்கள், முடியாவிட்டாலும் முடியுமென ஓடுங்கள். உடல், மனம் இதில் இரண்டும் ஒருசேர ஒத்துழைப்பை நிறுத்தம் வரையில் ஓடுங்கள். ஓய்ந்து நிற்கையில், நீங்கள் எதிர்பாராத மற்றும் நம்ப முடியாத அளவிற்கு வியர்த்துப் பொங்கத் துவங்கும். இப்போது சொல்லுங்கள் அந்த வியர்வையில் கரையாத முந்தைய தினத்து வன்மம் ஏது!?

உண்மையில் இன்னொருவர் மேல் நாம் செலுத்த அல்லது கொள்ள விரும்பும் கோபம் மற்றும் வன்மத்தை, விரும்பிய வண்ணம் அவர்கள் மேல் செலுத்திவிடுவதைவிட நமக்குள் அதிகமாகச் சுமப்பதுதான் நிகழ்கிறது. அந்த வன்மமும், கோபமும் எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கும் அக்னி. சில சூழல்களில் அது கதகதப்பாகவும், தீர்மானத்தை நோக்கி நகர்த்துவதாகவும், வேண்டியதாகவும்கூட இருக்கலாம். ஆனால் தொடர்ந்து அது சுடர்விட்டபடியிருப்பது நம்மை எரித்து அடங்குவதற்குத்தான்.

எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்என்ற சமாதானம் எத்தனை அழகியது அல்லது எளியது.

மனம் பத்திரம்.

-

செப்டம்பர் நம்தோழி இதழில் வெளியான கட்டுரை