பாகுபலியும் மல்டிப்ளெக்ஸும் பின்னே பொரி உருண்டையும்

எது நமக்குத் தேவை, எது நமக்குத் தேவையில்லை என்பதை நாம் நிதானித்துத் தெளிவாகத் தீர்மானிக்கும் காலம் போய்விட்டது. எல்லாவற்றையும் யாரோ, எதன் வடிவிலோ தீர்மானிக்கிறார்கள். அதன் வாயிலாக திணிக்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை, டிவிடி ப்ளேயர் வாங்க சங்கீதா ஷாப்பிங் சென்டர் சென்றிருந்தோம். சங்கீதா ஷாப்பிங் என்பது அன்றைய கண்ணன் டிபார்மெண்டல் இன்றைய ஜெயசூர்யாவின் ஆதி நிறுவனம். வாங்கிவிட்டு பில் போடும் இடத்தில் கிரடிட் கார்டு கொடுத்தேன். பில் போடும் மேசையில் பொரி உருண்டை பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அது அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட யுக்தி. இன்று பல நிறுவனங்கள் அப்படி நொறுக்குத் தீனிகள் புத்தகங்கள் என்று விற்பனைக்கு வைத்திருந்தாலும், நான் இந்த வித்தியாசமான முயற்சிகளைப் பார்த்தது அங்குதான் முதலில். மனைவி, “ஏங்க ஒரு பொரி உருண்டை பாக்கெட்” எனக் கேட்க, அதற்கான கட்டணத்தையும் கிரடிட் கார்டில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். பொரி உருண்டைகள் ஜீரணித்துவிட்டன. ஆனால் ஒரு டிவிடி வாங்கப் போய், அத்தோடு பொரி உருண்டைப் பாக்கெட், அதுவும் கிரடிட் கார்டில் வாங்கி வந்தது  பல காலம் ஜீரணிக்கவே முடியாதது.

பாகுபலி-2 வெளியாவது குறித்த தகவல்கள் வந்தபோதே, மகள் “அப்பா... என்னைய இந்தப் படத்துக்குக் கூட்டிட்டுப் போயே ஆகனும்” என கட்டளையிட்டு விட்டாள். எதையும் வேண்டுமென்று கேட்பவள் அல்ல, எப்போதாவது, ஏதாவது வேண்டுமெனக் கேட்பவள், ஆக அதிலிருந்து நானே அவளை அவ்வப்போது படம் எப்ப வருது எனக் கேட்டு ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தேன். அதுவே எனக்கும் இந்தப் படத்தின் மீது அதீத ஆர்வத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்.



படம் வெளியாகி, ஊரெங்கும் அதே பேச்சாய் நிற்கும்போது, ஏன் மோத வேண்டுமென ஒரு வாரம் வரை பொறுத்தாகிவிட்டது. பொறுத்தேன் என்பதை விட அந்த வாரம் முழுக்க அங்கும் இங்குமாய் அதி தீவிர ஓட்டம். இரண்டாம் வாரத்தில் “அப்ப்ப்ப்பா..... எப்ப்ப்ப!!?” எனும் கேள்விகள் வரும் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய மஹாராஜா மல்டிப்ளெக்ஸ் பக்கம் ஒதுங்கினேன்.

மஹாராஜா மல்டிப்ளெக்ஸ் ஈரோட்டிற்கு வந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட அடையாளம். திருட்டு டிவிடிக்கள் வரவோ, உள்ளூர் தொலைக்காட்சிகள் பின்னிரவு சினிமா தாக்கமோ, திரைப்படங்களின் மொக்கைத்தனமோ, திரையரங்கு எனும் வணிகம் தேய்ந்து, ஈரோட்டில் எட்டு திரையங்குகள் மூடப்பட்ட நிலையில் மல்டிப்ளெக்‌ஸ் ஒன்றின் வருகை புரியாத புதிராக இருந்தது.

ஒரு மாலைப் பொழுதில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என நேரில் சென்றபோது முன்பதிவுக்கென குறிப்பிட்ட சில நேரங்கள்தான் என்று கூறி கதவை மூடி வைத்திருந்தனர். நேரில் சென்று முன்பதிவு செய்தால் 120 ரூபாயாக இருக்கும் டிக்கெட், இணையத்தில் முன்பதிவு செய்தால் 150 எனும் சாணக்கியத்தனத்தை ’டிஜிட்டல் இந்தியா’வின் எந்த வகைமைக்குள் சேர்ப்பதெனத் தெரியவில்லை. சரி போனால் போகிறதென இணையத்தில் முயற்சித்தால் பணம் பெற்றுக்கொள்ளும் நிலையில் சாரி எனக் காறித் துப்பியது. ஏனென்று கேட்கலாம் என போன் செய்தால், மறுமுனையில் எடுக்கவேயில்லை.

“அப்ப்ப்ப்பா.... எப்ப்ப்ப்ப!?” எனும் கேள்வி வருவதற்குள் மீண்டும் முயற்சிக்கலாமென இன்னொரு மாலைப் பொழுதில் ஓடினேன், முன்பதிவில் கோளாறு என பதிவு முகப்பில் அறிவிப்பு வைத்திருந்தார்கள். வரவேற்பு பகுதி, விசாரணை என்ற எந்த வசதி வாய்ப்புகளும் அங்கிருப்பதில்லை. எது கேட்க வேண்டுமென்றாலும் பதிவு மையத்தில் கண்ணாடித் தடுப்புக்கிடையே கஞ்சத்தனமாய் வைத்திருக்கும் இடைவெளியில்தான் கேட்ட வேண்டும். உள்ளே குளிரூட்டப்பட்ட பகுதியிலிருப்பவருக்கும், வெளியிலிருந்து வெயிலில் அலைந்து வருவோருக்கும் இடையே எப்படியான உரையாடல் நிகழ்ந்தாலும் அது வெளியில் இருப்போருக்கு வெறுப்பிலேயே முடிவதாக நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருவர் மண்ணை வாரித் தூற்றாத குறையாக சபித்துவிட்டுப் போனார். ’அட ஒரு சினிமாவுக்காக இத்தனை மெனக்கெடலா?’ என நினைக்கும்போதே “சாரு... எதுக்கு ரெண்டாவது வாட்டியா வந்து பல்ப் வாங்குனீங்களாம்” எனும் மனசாட்சியின் குரல் கும்மாங்குத்து குத்தியது. போராட்டங்கள் சற்று தணிந்தபின், கண்ணாடியில் ஒட்டியிருந்த ‘ஆன்லைன் புக்கிங்’ ஜெராக்ஸ் ஒட்டலை விரல் நுனியில் தட்டி, “இது வேலை செய்யாதா!?” என்றேன். உள்ளிருந்தவர் தெளிவாக “கிரடிட் கார்ட்ல போட்டீங்ளா!?” என்றார். ஆமோதித்து தலையசைத்தேன். ”பேமண்ட் நெட்பேங்கிங் போடுங்க புக் ஆகும்” என்றார். ஏற்கனவே முப்பது ரூபா சேர்த்து வாங்குறதும் இல்லாம, இதிலுமா என நினைத்துக் கொண்டு, அன்றிரவு வெற்றிகரமாக டிக்கெட்டுகள் பதிவு செய்தாகி விட்டன. இந்த இடத்தில் மஹாராஜா எனும் பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா என்றால், இப்போது வரை சிறு விளக்குகளும், மெழுவர்த்திகளுமே இங்கு இருப்பதாலும், பெட்ரமாக்ஸ் லைட்டைவிட மேம்பட்ட அணுக எளிதான விளக்குகள் வராததாலும், கூடை வைத்திருக்கும் காரணத்தினாலும் பெட்ராமாக்ஸ் லைட்டேதான் விருப்பமாய், தீர்வாய் இருக்கிறது என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

ஒரு வழியாய் படம் தொடங்கியது. உங்கள் அனைவருக்கும் பிடித்த தேவசேனா, அமரேந்திரா, பல்லா, சிவகாமி, கட்டப்பா ஆகியோரைப் பிடிக்கவில்லையென்றெல்லாம் பொய் சொல்ல முடியாது. மேலும் வேறு எங்கேனும் ஏதேனும் சொல்லி கை வைத்தால் காதல் கிளிகளை மிளகு உப்புப் போட்டு வறுத்து ருசிக்க நினைத்த கட்டப்பாவோடு சேர்த்து விடுவீர்கள் என்ற அச்சத்தினாலும், படம் மிக அருமையாக இருந்தது என்று சொல்லிவிடவே விரும்புகிறேன். சிவகாமி, கட்டப்பா பாத்திரங்களை உற்று நோக்கும்போது இயக்குனர் ‘நாஞ்சில் சம்பத்’தின் மிக நெருங்கிய ரசிகராக இருப்பாரோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.



பன்றி வேட்டை ஜவ்வு என்றால், நாவிரல் பிடித்து மூவம்பு பாய்ச்சுதல் உண்மையிலே ஜிவ் தான். பெண்களைத் தொட்டால் வெட்ட வேண்டியது என வாள் பாயும் காட்சி, சிவகாமியின் கையில் கட்டப்பா ரத்தம் பூசும் காட்சி போன்றவை தூள் தான்.

கதவுகளை உடைத்து ஒற்றை ஆளாய் தேரை இழுத்த்த்த்து சுழற்ற்ற்ற்ற்றி யானையை மண்டியிட வைத்து..... ம்ம்ம்ம் அப்புறம், ”உன்னோட ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஃபினிசிங் சரியில்லையேப்பா” எனும் வடிவேலுவின் தீர்க்கதரிசி வசனம் அங்கேயே தொடங்கி விட்டாலும், பனை மரத்தை வளைத்து பந்தாக உருண்டு பாய்ந்து லேண்ட் ஆகும் காட்சி முதற்கொண்டு அதன் பின் முழுக்க முழுக்க வென்று விடுகிறது. ஷிவு பாய்ந்து பல்லாவின் வெட்டுச் சக்கரங்கள் சுழலும் வண்டியின் எருமைகள் (அது எருமையா, காளையா) மீது மோதும் போது அந்த கிராபிக்ஸ் எருமைகள் படும் பாடு.... அய்யகோ!

பதினைந்து வருடங்களுக்கு முன் டிவிடி ப்ளேயர் வாங்கப்போன இடத்தில் கிரடிட் கார்ட் வழியாக பொரி உருண்டை வாங்க வைக்கப்பட்ட யுக்தி, இன்றளவும் பல நேரங்களில் பல விதங்களில் என் மேல் ஏவி விடப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இதோ இப்போது பாகுபலி மூலமாகவும்.

படம் சரியில்லையா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள். சரியாக(!) இல்லாமலிருந்தால் எப்படி 1000 கோடிக்கு மேல், பதினைந்து தினங்களில் ஒரு சினிமா சம்பாதித்திருக்கும். பார்க்க வேண்டியதில்லையா என்று கேட்டுவிடாதீர்கள். பார்க்கலாம். அதுவும் அமரேந்திர பாகுபலிக்காக தாராளமாகப் பார்க்கலாம். முடிந்தால் என்னை மாதிரி போராடிப் பாருங்கள், அப்போது வேறு மாதிரியாகப் புரியும். கொஞ்சம் தெளியும்.

ஆக மக்களுக்குப் பிடிக்க வைத்து விட்டால் எதுவுமே வெற்றிதான். அப்படித்தானே!? அப்படித்தான் சொல்கிறார்கள். ஆக அப்படித்தான் இருக்கும்.

“ஜெய்...மகிழ்மதி”




5 comments:

Durga Karthik. said...

அப்பப்பா!!

Avargal Unmaigal said...

மக்களுக்கு எது தேவை என்பதைவிட மக்களுக்கு இதுதான் தேவை என்று சொல்லும் கலாச்சாரம்தான் இன்று இருக்கிறது

Avargal Unmaigal said...

பாகுபலி தயாரிப்பாளர்களை பொருத்த வரையில் அது மிகப் பெரிய வெற்றி படம்தான்

SRI RAMANA TEXTILES said...

கதிர் எனக்கு மிகச்சுலபமாக ஆன்லைன்ல் டிக்கட் கிடைத்தது, சிரமம் ஒன்றும் இல்லை...
நீங்கள் புக் செய்யும்போது அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம்...

Konguthangam said...

பனை மரத்தில் தண்ணீர் எடுப்பது..அனுஷ்கா தோள் மேல் நடப்பது எல்லாம் விட்டுடீங்களே..