தடயங்கள்




தீராத தூக்கத்தில் தத்தி வந்து
கழுத்தைக்கட்டி கண் சொருகி
மடிமேல் தொடரும் காலைத் தூக்கம்...

வசரமாய் உடை மாற்றும் போது
“அப்பா... பப்பி ஷேம்”என முகம் பொத்தி
வெட்கி சிரிக்கும் குட்டிக் குறும்பு...

றுக்கும் காலணிக்குள் கால் புதைத்து
தளர்ந்திருக்கும் சீருடையில் உடல் திணித்து
என் முதுகு வலிக்க நீ சுமக்கும் புத்தகப்பை...

கூண்டு விட்டுச் சிறகடித்து பறந்து வரும்
மாலை நேரத்தில் தோற்றுப்போவதற்காகவே
உன்னோடு நான் ஆடும் விளையாட்டு...

நீண்ட பயணத்தில் கசங்கிய அலுப்பில்
புரளும் படுக்கையில் செல்லமாய் நீவி விடும்
சின்னச்சின்ன பிஞ்சு விரல்கள்...

ன்னை உறங்கவைக்கக் கதை சொல்லி
உனக்குமுன் உறக்கத்தில் குளறும் என்னைத்
தட்டியெழுப்பி கை கொட்டும் சிரிப்பு...

னவுகள் ஆளும் ஆழ்ந்த உறக்கத்தில்
திசை தெரியாமல் உருண்டு புரண்டு
நெஞ்சில் உதைக்கும் பஞ்சுப் பாதங்கள்...



ரைந்து தீரும் நாட்களின் பசியாறலிலும்
கனத்துக்கிடக்கின்றன இதயத்தின் மையத்தில்
ஏராளமான தடயங்கள்
இவைபோலவே!


~

வியர்க்கும் மனது



தோப்பை அழித்த இடத்தில்
எழும்பி
நிற்கிறது அடுக்குமாடி
கலைந்து
போனது குருவிக் கூடு
_____________________________________

யரழுத்த மின் கம்பிமேல்
ஒய்யாரமாய்
கரைகிறது காக்கை
வறுமையில்
வடை சுடும் பாட்டி
_____________________________________

டல்தாண்டி காசு ஈட்டும் கணவன்
புதிதாய்
பொருத்திய குளிரூட்டியிலுமவியர்க்கிறது மனது மட்டும்!
_____________________________________

ணிய மறந்த தலைக்கவசம்
பயமேதுமில்லை
உயிர்மீது
அபராதத்தை
நினைத்து மட்டுமே!
_____________________________________

பாகப்பிரிவினையில் வெட்டப்பட்டது

பொது இடத்தில் மரமும்
சிதைந்தது
கூட்டுக்குடித்தன தேன்கூடு
_____________________________________


ஒரு மகிழ்ச்சியும், மிக நீண்ட நன்றிகளும்


ஒரு மகிழ்ச்சியும்......


என்னுடைய கவிதை ஒலிக்கும் கடைசிக்குரல் விகடனின் முகப்பில் வெளிவந்திருப்பதாக விகடனிலிருந்து ஒரு மின்னஞ்சல்...

இதுவரை இளமை (யூத்ஃபுல்) விகடனில் குட் பிளாக் பகுதியில் மூன்று இடுகைகள் வெளிவந்துள்ளது. அதுவும் கூட வலைப்பூ நண்பர்கள் சொல்லித்தான் தெரிய வரும்.

ஆனால் முதல் முறையாக விகடன் இணைய இதழின் முகப்பிலும், இளமை விகடனின் நீட் தலைப்பிலும் வெளியிட்டு மின்னஞ்சல் செய்தது மிகுந்த மகிழ்வை கொடுத்தது.

விகடனில் வாசிக்க
இதை அழுத்துங்கள்... விகடனில் ஒலிக்கும் கடைசிக்குரல்

விகடனில் என் கவிதை வெளிவர முக்கிய காரணம் நண்பர் ச.செந்தில்வேலன் அவர்கள் தான். விகடனுக்கு பதிவை அனுப்புங்கள் என என்னை துபாயிலிருந்து தொலைபேசி மூலம் ஊக்குவித்த ச.செந்தில்வேலன் அவர்களுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்.

--------------------------------------------------------------------------


மிக நீண்ட நன்றிகளும்....


மனது குளிர்ந்த இந்த நேரத்தில்...

மகிழ்ச்சியோடு பகிர நினைப்பது வலைப்பூ மூலம் கிடைத்த நேசம் நிறைந்த நட்புகளைத்தான்.

என்னை எழுதுடா என அடிக்கடி தூண்டிய என் 16 வருட தோழி பேராசிரியை கவுசல்யா
தாமதாமாய் படித்தாலும் வியப்புறும் தங்கமணி தமிழரசி, “என்னப்பா அப்பிடி எழுதிவீங்க எனக் கேட்கும்” எங்க பாப்பா நதிவதனா

குறிப்பாக ஏதோ ஒரு காரணத்தின் பால் தங்கள் மனது ஈர்த்து விருதுகளை பகிர்ந்து கொண்ட பிரியமுடன் வசந்த், பழமைபேசி, வானம்பாடிகள்

படைப்பை வெளியிட்ட இளமை விகடன், குங்குமம், வலை விகடன்

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, தங்கள் இடுகைகளில் என் இடுகைகளை சுட்டி எழுதிய மிகப்பெரிய மனது படைத்த பழமைபேசி, நாடோடி இலக்கியன், ஸ்ரீ

தொலைபேசியில் அழைத்து நீண்ட நேரம் பாராட்டி மகிழும் சிங்கை பிரபாகர், “அவினாசியிலிருந்து ஆறுச்சாமிங் மாப்ள” என்று ஒரு நாள் தூக்கத்தில் என்னை அமெரிக்காவிலிருந்து எழுப்பி நீண்ட நேரம் பேசிய பழமைபேசி, விகடனுக்கு அனுப்புங்கள் என துபாயிலிருந்து அறிவுறுத்திய ச.செந்தில்வேலன், கசகஸ்தானிலிருந்து அழைத்த சம்பத்குமார்

சாட் மூலம் பேசும் பிரியமுடன் பிரபு, இரும்புத்திரை அரவிந்த், தேவன்மயம், வளைகுடாவில் இருக்கும் பவானி சண்முகசுந்தரம்


ஏற்கனவே நட்பு கொண்டிருந்தாலும் வலைப்பூ வாசிப்பு மூலம் என்னை அடையாளம் கண்டு சிலாகித்துப் பேசும் ஈரோடு நண்பர்கள் ஜாபர், ஆரூரன், சதீஸ், பிரபு, பரிமளா அக்கா, அமித், சரவணன் பெருமாள், மகேஸ்வரன், பைஜு

சென்னையிலிருந்து மகிழ்வோடு பேசிய தமிழன் வேணு, ரேகா ராகவன்

புத்தகத் திருவிழாவிற்கு வந்து நட்பு வட்டத்தை இறுக்கிய கார்த்திகை பாண்டியன், ஸ்ரீ, இரா.வசந்த்குமார்

அவருடை அழகிய எழுத்து நடையில் சொக்கிப்போய் தொடர்பு கொண்டு பேசிய அடர்கருப்பு காமராஜ்

ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து, கருத்துப் போட்டு, எதிர் கவுஜ போட்டு, மிக இயல்பாய் பழகிய வால்பையன்

தினமும் ஒருமுறையாவது பேசும், என் இனிய இளவல் பாலாஜி

பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும்...
பிரியமுடன் வசந்த, பாலாஜி, பழமை பேசி, ச.செந்தில்வேலன், வால்பையன், சக்தி, தமிழரசி, நாகா, ஜோதி, காமராஜ், ராமலஷ்மி, சந்தனமுல்லை, திகழ்மிளிர், ராஜாகேவிஆர், குடந்தை அன்புமணி, சீனா, நாடோடி இலக்கியன், மதி இண்டியா, நாஞ்சில்நாதம், முத்துலட்சுமி, அனுஜன்யா, நேசமித்ரன், தண்டோரா, சின்ன அம்மிணி, தீபா, தமிழன் வேணு, இயற்கை, கலையரசன், வானம்பாடிகள், இரும்புத்திரை அரவிந்த், கவிக்கிழவன், யாதவன், யாசவி, தேவன்மயம், குசும்பன், கோவி.கண்ணன், அமுதா கிருஷ்ணன், அப்பாவி முரு, அன்புடன் அருணா, சுவாமி ஓம்கார், நாமக்கல் சிபி, லோகு, ராசுக்குட்டி, சூரியன், நிலா, ஆர்.செல்வராஜ், திருமதி ஜெயசீலன், டவுசர் பாண்டி, ராம், நிகழ்காலத்தில், கார்த்திகைபாண்டியன், ஸ்ரீ, செல்வநாயகி, ஆரூரன், கிருஷ்ணா, குப்பன்_யாஹு, ஜீவன், பிரியமுடன் பிரபு, நட்புடன் ஜமால், துபாய் ராஜா, வே.ராதாகிருஷ்ணன், உமர், தி கிங், புரூனோ, உமா, யோகன்பாரிஸ், சுப்பு, வந்தியத்தேவன், ஜான் பீட்டர், உடன்பிறப்பு, சூர்யா, இண்டி, நிலாமதி, ஜெகநாதன், முரளிக்கண்ணன், டக்ளஸ், ரோஸ்விக், எதிர் வீட்டு ஜன்னல், மன்சூர் ராஜா, மணிஜீ, ஹேமா, முனியப்பன் பக்கங்கள், பட்டிக்காட்டான், வெண்தாடிவேந்தர், ஊர்சுற்றி, தியா, ரேடி சதீஷ், ஆர்.எஸ்.பிரபு, குறையொன்றும் இல்லை, அழகன், சம்பத்குமார், நிலாமதி, சுலோச்சனா, நிழல், குமார், குரு, அகல்விளக்கு, மாதவராஜ், ஆதிமூலகிருஷ்ணன், இது நம்ம ஆளு, சி, கீர்த்தி, ஜெர்ரி ஈசானந்தா, மேக்சிமம் இந்தியா, ஆர்.ஞானசேகரன், வெங்கடேசன், பிரபா, பாலகுமார், ஹரிஹரன், ஜோசப்பால்ராஜ், சேன், பித்தன், சங்கர்89... (யாராவது விடுபட்டிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்)

நீங்கள் கொடுத்த ஊக்கம்தான்..
வலைப்பூ தொடங்கி முதல் எட்டு மாதத்தில் 19 இடுகை மற்றும் 2700 வருகையாளர்கள், 19 பின் தொடர்பவர்கள் என இருந்த என்னை, அடுத்த இரண்டே மாதங்களில் 51 இடுகைகள், 12400 வருகையாளர்கள், 55 பின் தொடர்பவர்கள் ஒரு உயரத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

நன்றி என்ற வார்த்தையை என் அனைத்து உணர்வுகளையும் ஒன்று திரட்டி தங்கள் முன் சமர்பிக்கிறேன்.

சரி... யார் நிறுத்துவது...



ஒருமுறை ஊழல் தடுப்பு உயர் அதிகாரியிடம் பேசும் போது அவர் சொன்ன செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. 18 மாதங்களில் வெறும் 3 புகார்கள் மட்டுமே வந்ததாகவும், அதற்காக ஊழலோ, கையூட்டோ இல்லாமல் இல்லை, யாரும் புகார் கொடுக்க முன் வருவதில்லை என்று வருத்தப்பட்டார்.
மேல் மட்டத்தில் கொடுப்பவனும், பெறுபவனும் அந்த வியாபாரத்தின் அடிப்படையில் சதவிகிதம் பிரித்து பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். அது அவர்கள் ஏழைகளுக்கு வகுக்கும் திட்டத்தில் நஞ்சாக கலக்கிறது அல்லது கட்டும் பாலம், போடும் தார்சாலையின் ஆயுளை குறைக்கிறது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் மேற்கு மண்டல ஊழல் தடுப்பு காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசும் போது அவர் பகிர்ந்து கொண்ட சம்பவம், ஒரு கிராம நிர்வாக அதிகாரி ஒரு கூலித் தொழிலாளியிடம் சான்றிதழ் வழங்குவதற்கு 300 ரூபாய் கையூட்டு கேட்கிறார். தொழிலாளிடம் அந்த 300 ரூபாய் கொடுக்க முடியாத அளவு வறுமை. யார் மூலமோ புகார் வருகிறது. குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஒரு ஊழல் தடுப்பு அணி அந்த தொழிலாளியிடம் பணம் கொடுத்து அந்த கிராம நிர்வாக அதிகாரியை பிடிக்க முயன்று முதல் நாள் முடியாமல் இரண்டாவது நாள் கைது செய்கின்றனர். ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு இரண்டு நாள் சென்று வந்த எரிபொருள் செலவு மட்டும் ரூ.1200 ஆகிறது.

300 ரூபாய் கையூட்டை பிடிக்க 1200 ரூபாய் செலவா என்று என்னிடம் ஒரு குறுநகை வந்தது. “புகார் கொடுக்கும் ஒரு குடிமகனுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற பெரிய நம்பிக்கையை கொடுப்பதுதான் எங்கள் கடமை. கையூட்டு என்பது பணத்தின் அளவில் இல்லை, 300 ரூபாய் என்பது கையூட்டாக வாங்குபவனுக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கான பணமாக இருக்கலாம், ஆனால் அந்த கூலித் தொழிலாளிக்கு பத்து நாள் சாப்பாடு, அதாவது அவனுடைய பத்து நாள் உணவையே இன்னொருவன் திருடுகிறான்” என்று அவர் சொன்னது தான் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

நியாயமாக செய்ய வேண்டிய ஒரு அடிப்படை வேலைக்கு ஒரு கூலித் தொழிலாளியிடம், சின்ன விவசாயிடம், அனாதை ஊதியம் வாங்கும் வயசானவர்களிடம் அரித்து பிடுங்கும் பணம் என்பது மலம் தின்பதற்கு ஒப்பானது.

இதை பகிர்ந்து கொள்வதற்கான முக்கிய காரணம்...
சமீப காலமாக தமிழக காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறையின் ஊழல் தடுப்பு பிரிவு அதிரடியாக செயல்பட்டு, தினமும் குறைந்தது முக்கியப் பொறுப்பில் இருக்கும் இரண்டு மூன்று அதிகாரிகளை கைது செய்வது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சுகிறது.

இந்த கைதுகள் பற்றிய நிறைய இடுகைகள் வச்சுட்டான்யா ஆப்பு என்ற வலைப்பூவில் இருக்கிறது. ஊழல் தடுப்பு காவல்துறை அலுவலகங்கள் பற்றிய விபரமும் இதில் இருக்கிறது. ஒருமுறை வாசித்துப் பாருங்கள். யாருக்காவது கையூட்டு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் வந்தால் வச்சுட்டான்யா ஆப்பு வலைப்பூவில் உள்ள தகவல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

சரி கையூட்டை யார் நிறுத்துவது?
கொடுப்பவனா? வாங்குபவனா?

கொடுப்பவன் குறுக்க ஆரம்பித்தால்,
வாங்குபவன் கைகள் சுருங்கிப்போகும்.
முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

குழந்தையின் கையில் கிடைத்த கூர்வாள்


ஏழு வருடங்களுக்கு முன்பு இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது உங்களுக்கு மனதின் ஓரத்தில் நினைவில் இருக்கலாம். தாக்குதல் நடந்த நேரம், கார்கில் போரில் உயிர் ஈந்த வீரர்களுக்கான சவப்பெட்டிகள் செய்ததில் ஊழல் நடந்ததாக கூறி ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தால் அவை ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரம்.

தொலைக்காட்சியில் பார்த்த சில காட்சிகளில் இரண்டு காட்சிகள் இன்னும் என் மனதில் நினைவிலிருக்கிறது.

தாக்குதல் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின், அதிரடிப்படை வீரர்கள் ஒன்றாய் கூடும்போது, ஒரு வீரர் கொஞ்சம் அவஸ்தையோடு மடங்கி உட்காருவார், ஒரு கேமரா அந்த வீரரின் முதுகைக் காட்டும், அந்த முதுகில் ஒரு ஓட்டை தெரியும், ஓட்டையிலிருந்து உதிரம் கொட்டும்...

தமிழகத்தைச் சார்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் தமிழக தொலைக் காட்சியொன்று தாக்குதல் குறித்து பேட்டியெடுக்கும், சிரித்துக் கொண்டே பேட்டி கொடுப்பார் “நாங்கள் உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம், வெளியில் ஏதோ பட்டாசு வெடித்தது போன்று சத்தம் கேட்டது, அப்புறமாகத்தான் தெரிந்தது அது பயங்கரவாதிகள் தாக்குதல் என்று”

அந்த அரசியல்வாதி இன்னும் நலமாக இருக்கிறார், அந்த வீரர் பற்றி எதுவும் வரலாறு இருப்பதாக தெரியவில்லை.

தேச நலன் குறித்து உணர்வு பூர்வமாகவோ, கிண்டலாகவோ ஒரு வியாபாரியின் மனநிலையோடு ஒரு கட்டுரையோ, கவிதையோ எழுதிடுவது எழுத்து வன்மை படைத்த பலருக்கு இயல்பான ஒன்றுதான். ஆனால் மிகத்தேவை அதனையொட்டி ஒரு மாற்றம். மாற்றத்திற்கான விதை.

கால நீரோட்டத்தின் வேகத்தில், ஒரு தலைமுறை முந்தைய தலைமுறையின் தியாகங்களை மறந்து போவது மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஒரு தலைமுறை அடிமையாக தோற்று விட்ட தேசத்தை, பல தலைமுறைகளுக்குப் பின் கடுமையான, மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பின் மீட்டெடுத்திருக்கிறோம். அந்த மீட்டெடுத்தல் மிகுந்த வலியோடு, வலிமையோடு நடந்தேறியிருக்கிறது. மீட்டெடுத்ததின் பலன்களை பலவாறு அனுபவித்திருக்கிறோம். அதேசமயம் பல நேரங்களில் அந்த விடுதலை உணர்வை பலவாறு தவறுதலாக மாற்றியிருக்கிறோம். அதற்கான தியாகங்கள் புரிந்தவர்கள், கால ஓட்டத்தில் மிக இயல்பாக மறக்கப்படுகிறார்கள் அல்லது மறக்கடிக்கப்படுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் மறக்கடித்தலைச் செய்ததில் திரைப்படங்களை ஒட்டிய விடயங்களே பொழுதுபோக்கு என நஞ்சு புகட்டிய தொலைக்காட்சிகளுக்கும், விம்மிய மார்புகளை பிரதானமாய் அட்டைப் படத்தில் போட்டு விற்கும் பத்திரிக்கைகளுக்கும், போலியாய் ஒன்றைக் காட்டும் நடிகர், நடிகைகளுக்கும். மிகப்பெரும் நாயகர்களாய், நம் கனவுகளை திருடும் கிரிக்கெட் வீரர்களுக்கும் பங்கு உண்டு.

இரவில் வாங்கினோம் இன்னும் விடியவேயில்லை என கவிதை படித்த கவிஞன் மேல் எப்போதும் கோபம் உண்டு எனக்கு. விடிவதற்காக அந்த கவிஞன் செய்து கிழித்ததை நிரூபித்துவிட்டு, பின்னர் கவிதை படித்து கை தட்டல் வாங்கட்டும்.

இந்த தேசம் பற்றி அலுப்பு மனநிலையும், சலிப்பு குணமும் கொள்ள யாருக்கும் தகுதியில்லை. ஏனென்றால் நம் தேசத்தை தவறுதலாக மாற்றியதில் ஒவ்வொருவரின் தாத்தா, பாட்டியிலிருந்து அவரவர் பரம்பரைக்கு ஏதோ ஒரு பங்கு இருக்கிறது, கூடுதல் பங்கு அவசரகதியில் இயங்கும் இந்த தலைமுறைக்கு, குறிப்பாக எனக்கும், உங்களுக்கும்...

ஒரு நடிக, நடிகையின் வெற்றி தோல்வியில், அந்தரங்கத்தில், ஒரு அரசியல்வாதியின் வெற்றி தோல்வியில், அந்தரங்கத்தில், ஒரு கிரிக்கெட் வீரனின் வெற்றி தோல்வியில், அந்தரங்கத்தில், ஒரு வியாபாரியின் வெற்றி தோல்வியில், அந்தரங்கத்தில் நமக்கு இருக்கும் ஆர்வமும், சிலாகித்து பேசும் தன்மையும், அலசி ஆராயும் ஆராய்ச்சி மனப்பாங்கும்... இந்த தேசம் காக்க தொடர்ந்து உயிர் துறந்து கொண்டிருக்கும் உண்மையான வீரர்களை, தியாகிகளை அடையாளப் படுத்துவதில் ஏன் இல்லாமல் போய்விட்டது.

அரசாங்க அதிகாரியென்றாலே ஊழல் என நம் மனதிற்குள் சித்தரிக்கப்பட்ட காலத்தில் பொழைக்கத் தெரியாத ஆள் என்று சொல்லப்படும் நேர்மையான அதிகாரிகள் எண்ணற்றோர் இருக்கத்தானே செய்கிறார்கள் ஏன் அவர்களை யாரும் பெரிதாக அடையாளப் படுத்த மறந்து போகிறோம், அல்லது மறுத்து வருகிறோம்.

பொழுதுபோக்கு மற்றும் பொருளீட்டுவதை மட்டுமே மையப்படுத்தும் சிந்தனையை சற்றே மாற்றினால் மட்டுமே வரும் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையின் தியாகம் சென்றடையும். தியாகம் புரியாமல் கிடைக்கும் வசதியான வாழ்க்கை சினம் கொண்ட குழந்தையின் கையில் கிடைத்த கூர்வாள் போன்றது.





முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

ஒலிக்கும் கடைசிக்குரல்


விருந்தாளிபோல் வந்துபோகும்
பட்டணத்தில் பணம் சேர்க்கும்
ஒற்றை மகனின் சின்ன குடும்பம் ...

பிஞ்சுப் பிள்ளையை பஞ்சுப்பொதியாய்
கட்டியணைத்து கன்னம் இழைக்க
காத்துக்கிடக்கும் கருத்த கைகள்...

நாசித்துவாரங்கள் ஏங்கிக் கிடக்கும்
நகரத்து வர்ணம் பூசிய
பேரக்குழந்தையின் வாசம்...

கேட்க ஆளில்லாமல்
மறந்து கொண்டிருக்கும் கதைகளோடு
முதுமை தவழும் கொடுந்தனிமையில்...

செல்லமாய் தடவி வளர்த்து
சித்திரைத் திருவிழாவில்
வெட்டி சாப்பிட்ட ஆடு...

பால் வற்றும் வரை மட்டும்
பச்சைப்புல் போட்டு பராமரித்து
விற்றுத் தீர்த்த கிடாய் கன்று...

டிப் பட்டத்திற்கு பிறகு
அடிமாடாக விலைபேசி விற்ற
ஓய்ந்து போன உழவு மாடு...

லித்துக் கொண்டேயிருக்கிறது
ஒவ்வொன்றின் கடைசிக்குரலும்
குறுகுறுக்கும் குற்ற உணர்வோடு...




முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

மக்கா... இந்தக் கொடுமைய கொஞ்சம் பாருங்க

யோவ்... பூசாரி
வர்ற எல்லாத்துக்கும்
இப்படி சால்வ போட்டு போஸ் குடுப்பியா!!!???


கேமாராவுக்கு ஏன்யா போஸ் குடுக்கற!!!
சீக்கிரம் அந்த பொண்ண அனுப்பு
பின்னால கூட்டம் நிக்குது..


அடப்பாவி...
யோவ்... என்னய்யா பண்ற
உடுய்யா... உடுய்யா... அந்த பொண்ண...



அய்யய்யோ... கடவுளே
யோவ் பூசாரி
இது தப்புய்யா! ரொம்ப ரொம்ப தப்பு!!



டிஸ்கி: இன்று என் மின்னஞ்சலுக்கு வந்த நிழற்படங்கள் இவை. பார்த்தவுடன் கடுமையான கோபத்தை உருவாக்கிய ஒன்று. என்ன பண்றது, எத்தனைக்குத்தான் கோபப்படுவது!!!???
முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

தொலைந்தவன் வரைந்த கோலம்






வழக்கம் போல் அந்த மாலை நேரத்தில் நானும், நண்பர் தனபாலனும் நடந்து கொண்டிருந்தோம். தார் சாலையில் நடப்பதை தவிர்த்து, அந்த மண் பாதையில் பெரும்பாலும் நடப்போம். மாலை நேரத்தில் அதுவும் வெளிச்சத்தின் மேல் இருள் கசியும் அந்த இனிய மென்மையான பொழுதில் நடப்பது சுகம். நாங்கள் சற்று வேகமாக நடக்கும் இயல்பு கொண்டிருப்பதால், தொடர்ச்சியான பேச்சு இல்லாமல். சீரான இடைவெளி விட்டு பேச்சு, இருவருக்கும் பொதுவான ஒரு தளத்தில் வந்து கொண்டிருந்தது.

கொஞ்சம் தொலைவிலிருந்தே கவனித்தேன், ஒரு ஆள் அந்த மண் சாலையின் மையத்தில் அமர்ந்திருந்ததை. என் பார்வைக்கு முதுகு மட்டும் தெரிந்தது. கொஞ்சம் நெருங்கி வரும் போது கவனித்தேன் அது ஒரு வயதான மனிதன், சுமார் 60 வயது இருக்கலாம். மேல்சட்டை எதுவும் இல்லை, உற்றுக் கவனிக்கும் முன்பே, உடையையும், தலையையும் வைத்து உள் மனது அடையாளப்படுத்தியது அது ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதனெற்று.

வழக்கமாக இதுபோன்ற மனிதர்களை கடந்து போக மனது மிக எளிதாக பழகிப் போய் விட்டது. முன்தினம் தான் புத்தகத் திருவிழாவில் பெரியார்தாசன் “மனம் அது செம்மையானால்” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். அந்த உரையில் மனப்பிறழ்வு, மனநோய் பற்றியும், அதற்கான எளிய சிகிச்சை பற்றியும் அற்புதமாக உரை நிகழ்த்தியிருந்தார். இந்த மனிதனை பார்த்த விநாடி சட்டென நண்பர் பெரியார்தாசன் சொன்ன ஒரு வாசகத்தை நினைவு கூர்ந்தார்.

நடக்கும் வேகத்தைக் குறைக்காமல், சற்று ஒதுங்கி அந்த மனிதனை கடந்தோம். கடக்கும் போது அந்த மனிதன் ஏதோ தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பது கேட்டது அதில் “அப்படியே பண்ணு” என்ற வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தது. அதற்கு முன், பின் பேசிய வாசகங்கள் புரியவில்லை, என்னவாக இருக்கும் என்று ஒரு விநாடி கூர்ந்து யோசித்தேன். அந்த மனிதன் பரபரப்பாக அந்த மண் தடத்தில் தன் விரலால் எதோ செய்து கொண்டிருந்தார். ஏதாவது எழுதுகிறாரா என ஒரு ஆர்வத்தோடு பார்த்தேன். எழுத்துகள் இல்லை, வெறும் கோடுகள் வளைவுகளும், நெளிவுகளுமாக இருந்தது. தலையை சற்றே சிலுப்பிக்கொண்டு மீண்டும் நடையில் கவனமானேன்.

எப்படி அந்த துர்நாற்றத்தின் அருகே, புழுதியில் அந்த மனிதன் உட்கார முடிகிறது. துர்நாற்றம் சிரமமாக இருக்காதா என மனம் நினைத்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மனிதனை மறந்தும் போனேன். 25 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அதே நீள் சுற்று வட்டத்தில் நடந்து, அந்த இடத்தை நெருங்கும்போது தெரிந்தது, அந்த மனிதன் இன்னும் அதே இடத்தில் பரபரப்பாக அந்த மண் தடத்தில், தன் விரல்கள் மூலம் இயங்கிக் கொண்டிருப்பது. நண்பரிடம் கேட்டேன் “இந்த மனிதனுக்கும் ஒரு வரலாறு இருக்கும் தானே” அவர் ஒற்றை வார்த்தையில் அழுத்தமாக சொன்னார் “கண்டிப்பாக”. மீண்டும் இருவரிடமும் மவுனம் அடர்த்தியாக ஒட்டிக் கொண்டது.

நெருங்கிய போது கவனித்தேன் அந்த மனிதன் முதல் தடவை பார்த்தபோது இருந்த இடத்தைவிட சில அடி தூரம் தள்ளி அமர்ந்து கிறுக்கிக் கொண்டிருந்தார். என்ன கிறுக்கியிருக்கிறார் என்று உற்றுப்பார்த்தேன். மனம் அதிர்ந்தது, அந்த புழுதி மண்ணில் வெறும் கோடுகளும், வளைவுகளும் கொண்டு பூ மாதிரியான ஒரு படத்தை பல முறை அச்சு எடுத்தது போல் ஒரு கோலத்தை மிக அழகாக வரைந்திருந்தார். மிக நுட்பமான கோலம் போன்று அது தெரிந்தது. நண்பரிடம் “கோலத்தைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன்.

சில அடிகள் தூரம் நடந்திருப்போம். மனம் பட படவன துடித்தது, திரும்ப ஓடிப்போய் அந்த மனிதனைப் பாராட்டலாமா என மனது தவித்தது. கொஞ்சம் செயற்கையாக இருக்குமோவென்று முட்டாள் தனமாக எண்ணம் தடைபோட்டது. எது என்னை அந்த இடத்தில் நிற்காமல் என்னை விரட்டியது என மனது குறுக்கும் நெடுக்குமாக பரபரத்தது. அடுத்த சில நிமிடங்களில் மனது முழுக்க அந்த மனிதன் பற்றிய சிந்தனை என்னை கவ்வியது.

யாராக இருக்கும் இந்த மனிதன், இந்த மனிதனின் பெற்றவர்கள் நாம் நம் குழந்தையை வளர்ப்பது போல்தானே வளர்த்திருப்பார்கள். படித்திருப்பாரா? திருமணம் ஆகியிருக்குமா? எதன் காரணமாய் மனநிலை பிறழ்ந்திருக்கும். எந்தக் விநாடியில் இந்த மனிதன் மனிதனிலிருந்து பைத்தியகாரனாக தடம் புரண்டிருப்பான். அது சினிமாவில் காட்டுவது போல் சட்டென ஒரு விநாடியில், மின்னல் போல் நிகழ்ந்திருக்குமா? அல்லது தொடர்ச்சியான பற்பல தோல்விகள், இழப்புகளில் சிறிது சிறிதாக மனது விரிசல் விட்டு சிதறிப் போயிருக்குமோ? அந்த மனப்பிறழ்வு அணைக்கட்டில் கசியும் நீர்போல் மெலிதாக, சீரான இடைவெளியில் நிகழ்ந்திருக்குமா?. எல்லோரிடமும் இருக்கும் இயல்பான காதல், காமம், கோபம், பாசம், ஆசை போன்ற ஏதாவது உணர்வுகள் இவருக்கு இப்போதும் இருக்குமா?

மனநிலை பிறழும் நிலை வரை அவர்களை அவர் என்றொ, அவன் என்றொ அல்லது அவள் என்றொ அழைத்த நாம், மனநிலை பிறழ்ந்த தருணத்திலிருந்து “அது” என்றே அழைக்கிறோமே, ஏன் அவர்களை மனிதனாக பார்க்க முடிவதில்லை. எதன்பொருட்டு சகமனிதனிடமிருந்து இவர்கள் தொலைந்து போகிறார்கள்?.

பேருந்து நிலையங்களிலும், கடைவீதிகளின் ஓரத்திலும், உணவு விடுதிகளின் அருகிலும் தவறாமல் அவர்களை தினம் தினம் சந்தித்துக் கொண்டு தானே இருக்கிறோம். ஆனாலும் நம்மால் அவர்களை ஒரு சக மனிதனாக பார்க்க முடிவதில்லையே, அது எதனால்?

எத்தனையோ முறை அவர்களைப் பார்த்திருந்தாலும், அன்று அந்த மனிதனை பார்த்த பின் கேள்விகள் சுனாமியாய் மனதினுள் அடித்தது. எந்தச் சுயநலம் நம்மை அவர்களிடமிருந்து பிரிக்கிறது. விடைதேட மனது வெட்கப்பட்டது.

அந்த மண் சாலையில் இவ்வளவு நுணுக்கமாக கிறுக்கப்பட்ட இந்த கோலத்திற்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆயுள் இருக்கப் போகிறது. அநேகமாக அந்த மண் தடத்தில் அடுத்து வரப்போகும் நாலு சக்கர வாகனம் வரை தானே!!!???

வாழ்க்கையும் ஒரு கோலம் போலத்தானோ?

குறிப்பு: மனநிலை பிறழ்ந்த மனிதர்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த மதுரை இளைஞர் கிருஷ்ணனின் அக்சயா அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு என்னால் முடிந்த ஒரு தொகையை அனுப்பி வைத்தேன். அவ்வப்போது தொடர்ந்து அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அக்சயா அறக்கட்டளை இணைய தளத்தில் உள்ள விபரங்களை ஒரு முறை முழுதும் படியுங்கள், குறிப்பாக கிருஷ்ணன் அவர்களின் பேட்டியின் காணொளியைப் பாருங்கள். நீங்களும் அதற்கு உதவலாமே!.





பகுதியில் இடம் பிடித்த கட்டுரை


முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்


------------------------------------------------------------------------------
மத்தியான காட்சி படம் பார்த்துட்டு, மாலை வெயில் கண் கூச டிரிள்ஸ் போற வழியில எதிர் பக்கம் வெள்ளைக் கலர் புல்லட்ல வரும் டிராபிக் போலீஸ்.
------------------------------------------------------------------------------
சுத்தி வரவேண்டுமே? சில நூற அடி தூரம்தானேனு ஒரு வழிப் பாதையில் வாகனத்தை நுழைக்க, மறைவான நிழலில் இருந்து பாய்ந்து வந்து பிடிக்கும் போலீஸ்.
------------------------------------------------------------------------------
செல் போன் அடிக்க “அப்புறம் கூப்பிடரேனு” சொல்லலாம்னு செல் போன எடுத்து காதில் வைக்க, பக்கத்தில் ஜீப்பில் வந்து நம் வண்டியை ஓரம் கட்டச் சொல்லும் போலீஸ்.
------------------------------------------------------------------------------
தங்கமணி வீட்டில் இல்லைனு ஒரு பியர் சாப்பிட்டு(!!!) மெயின் ரோடுல போலீஸ் சோதிப்பாங்கனு, பாதுகாப்பா சந்து பொந்தெல்லாம் போயி வீடு இருக்கிற தெருவிற்கு போனா, முக்குல இரவு சோதனைங்கற பேருல வாய ஊதுன்னு சொல்ற போலீஸ்.
------------------------------------------------------------------------------
சிக்னல்ல யாரும் இல்லைனு சட்டுனு தாண்டும் போது, எங்கிருந்தென்றே தெரியாம கப் என பிடித்து, சாவியை எடுத்துக் கொள்ளும் போலீஸ்.
------------------------------------------------------------------------------
இடம் காலியா இருக்கேனு நிறுத்திட்டு ஹோட்டல்ல சாப்பிட்டு வந்து பார்க்கும் போது, நோ பார்கிங்னு ஏரியானு சொல்லி வண்டிய கொக்கி மாட்டி தூக்கிக் கொண்டிருக்கும் போலீஸ்.
------------------------------------------------------------------------------
ஏசி கார்ல செல் போன் பேசிட்டு ஓட்டறவன விட்டுட்டு, சைக்கிளில் டிரிப்ள்ஸ் வர்றவனோட டயர்ல இருந்து காற்றை பிடுங்கி விடும் காமெடி போலீஸ்.
------------------------------------------------------------------------------


முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

சுதந்திரத்தை சொத்தைனு சொல்ல...

சுதந்திரமாக...

ன்னொருவன்
வாழ்வை பிடுங்க
குறுக்கு வழிகளை
கண்டுபிடித்தோம்...

தூங்கிக் கொண்டிருந்த
சாதிகளை தூசி தட்டி
கட்சிகள் ஆரம்பித்து
ஆட்சிகளை பிடித்தோம்...

ற்றாமல்
ஓடிக்கொண்டிருந்த
ஆறுகளில் மெல்ல
நஞ்சை கலந்தோம்...

வீசிக்கொண்டிருந்த
காற்றை கற்பழித்து
விஷ விந்துவை
திணித்தோம்...

ரெண்டாவது
சனிக்கிழமைல வந்து
லீவு போச்சேனு
மனசு நொந்தோம்...

டைசியாக
இப்போ காசுக்கு
ஓட்டை விற்க
கற்றுக் கொண்டோம்...

சுதந்திரத்தை
சொத்தைனு சொல்ல
நமக்கென்ன
யோக்கிதை இருக்கு...!!!???



முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

விலைபோகாத பகல்






விலைமகளாய் வீழ்த்தப்பட்ட போது
நசுங்கிச் செத்துப்போனது கற்பு,
இதுவே வாழ்க்கையென பழகிட
காமம் செத்து வெறும் அலுப்பாய்...

கெட்ட வாசனையோடு இயங்குபவனின்
சட்டைப்பையில் உறங்கும் கசங்கிப்போன,
அழுக்கு நாற்றம் பிடித்த பணத்தாள்களின்
எண்ணிக்கையில் கிளர்ச்சி கொள்கிறது மனம்...

வாடிக்கையாளனின் தோற்ற காதலும்
தூர்ந்து போன வாழ்க்கையும்
தீராத காமத்தை வெல்வதாக
மீண்டும் மீண்டும் தோற்றுப்போகிறது...

சோம்பிக்கிடக்கிறது தாகம் தீராத கனவுகள்
சாயக்கழிவுகளில் செத்துப்போன நிலம் போல்
விடி காலையாய் வடிகின்ற இளமையையும்,
வற்றப்போகும் வருமானத்தையும் எண்ணி...

ல்லாத காமம் காத்துக் கிடக்கிறது
சாலையோர தேநீர் கடையின்
ஒடுங்கிய அலுமினியக் குவளையாய்
கொஞ்சம் கவுச்சியோடு...
இன்னுமொரு இரவுக்காக...




பகுதியில் இடம் பிடித்த கவிதை

முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.


நாய்கள் கற்க மறுக்கும் தமிழ் மொழி

காட்சி 1:
பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஒரு இளம் பெண் இந்தியா வருகிறார். தமிழ் மொழி மேல் பற்று கொண்டு, தமிழ் கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டு பரத நாட்டியம் கற்றுக்கொள்கிறார். சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடந்த வல்வில் ஓரி விழாவில் ஒரு தமிழ் பாடலுக்கு அற்புதமாக பரத நாட்டியம் ஆடுகிறார்.

காட்சி 2:
அதே வல்வில் ஓரி விழாவில் பல நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதில் ஒன்று நாய் கண்காட்சி. சுற்றுப்புற நகரங்களிலிருந்து நிறைய நாய்கள் கலந்து கொள்கின்றன. அதன் பயிற்சியாளர்கள் நாய்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே கட்டளையிடுகின்றனர். அதன் பயிற்சியாளர் “சிட்” என்றால் உட்காருகிறது, “ஸ்டேண்ட்” என்றால் நிற்கிறது, “ரன்” என்றால் ஓடுகிறது, “ஜம்ப்” என்றால் குதிக்கிறது, “லே டவுன்” என்றால் படுக்கிறது...

(இந்தச் சம்பவத்தை மிகுந்த வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் அவர்கள்)

சரி...
அந்த நாய்ப்பயிற்சியாளர்களிடம் சில கேள்விகள்...


இந்த நாய்களை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பி ஆங்கிலம் கற்றுக் கொடுத்தீர்களா!!!???

ஆங்கிலப் பள்ளிக்குழந்தைகள் போல், இந்த நாய்களுக்கும் தமிழ் மொழி பிடிக்காதா!!!???

நாய்கள் கற்க மறுத்த, நம் தமிழ் மொழியை, எப்படி ஒரு பிரான்ஸ் பெண்மணியால் கற்றுக்கொள்ள முடிந்தது!!!???

டமிள் சரியா வராது, ஒன்லி இங்கிலீஷ் தான் என்று சொல்லும் தமிழர்களை நாங்கள் நாய்கள் என்றே கருதலாமா!!!???

ஒரு தமிழனாக நாங்கள் யாரை புறக்கணிப்பது தமிழ் கற்காத ஐந்தறிவு படைத்த நாயையா? கற்றுக் கொடுக்காத ஆறறிவு(!!!) படைத்த உங்களையா!!!???

நாய்கூட தமிழ் கற்கவில்லையென வருத்தப்படுவதா!!!??? அல்லது நாய் கற்கும் மொழியல்ல தமிழ் என மகிழ்ச்சியடைவதா!!!???



முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

புத்தகத் திருவிழாவில் பாரதி கிருஷ்ணகுமார்


பாரதிகிருஷ்ணகுமார்
பாரதி கிருஷ்ணகுமார் என்னுடைய விருப்ப பட்டியலில் உள்ள ஒரு அழுத்தமான ஆளுமை படைத்த பேச்சாளர். இன்று தமிழகத்தின் ஆகச்சிறந்த பேச்சாளர்களில் பாரதி கிருஷ்ணகுமாருக்கு ஒரு சிறப்பான இடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

கீழ்வெண்மனியில் ஆதிக்க சாதியினரால் தலித்துகள் உயிரோடு எரித்த சம்பவத்தை “இராமையாவின் குடிசை” என்ற ஆவணப்படம் மூலமும், கும்பகோணத்தில் பள்ளிக் குழந்தைகள் எரிந்ததை “என்று தணியும்” என்ற ஆவணப்படம் மூலமும் அழுத்தமாகப் பதிவு செய்தவர். “என்று தணியும்” ஆவணப்படத்தை பார்த்த பின்பு பாரதி கிருஷ்ணகுமார் மேல் ஒரு தணியாத அன்பும், மரியாதையும் எனக்குண்டு.

கும்பகோணத்தில் அந்த கொடிய மதிய நேரத்தில் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வெறும் கரிக்கட்டைகளாக மாறிப் போன துயரத்தை தற்காலிக விளம்பரமாக பல தரப்பினரும், பணம் கொடுத்தும், அபத்தமாக ஆறுதல் கூறியும், ஊர்வலம் நடத்தியும் தாங்கள் போட்ட வேசத்திற்கு ஆடி முடித்தனர். துயரம் கவ்விய அந்த பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதலாக இருந்த முதல் மனிதர் அன்றைய மாவட்ட ஆட்சியர் திரு. ராதாகிருஷ்ணன், பல வகைகளில் ஆறுதல் அளித்த இவர் ஒரு கட்டத்தில் அந்த தாய்மார்கள் தாங்கள் செய்திருந்த குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு மாற்று சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வழிவகை செய்தவர்.

அடுத்து அவர்களுடைய ரணங்களை மிக அழுத்தமாக பதிவு செய்து, அந்த கொலை பாதகக் குற்றத்தின் பின்னணியில் உள்ள பாதகர்களைப் பற்றியும், மிகக் கேவலமாக, வெறும் வியாபாரமாக சீரழிக்கப்பட்டு விட்ட கல்வியைப் பற்றிய மிகப்பெரிய ஆய்வறிக்கையாக அந்த ஆவணப்படம் மூலம் பதிவு செய்தவர்.

அந்தப் படம் என்னை உலுக்கிய ஒரு படம், அதன் பின் பாரதி கிருஷ்ணகுமார் என்ற பெயர் எனக்குள்ளே அதிர்வுகளை தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் ஒன்று. அவருடைய உரையென்றவுடன் மனது முழுக்க ஒரு தாகம் நிரம்பியிருந்தது.

அவர் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று கூட சொல்லலாம். பாரதி கிருஷ்ணகுமார் எங்கள் பகுதிக்கு அடிக்கடி வரும் பேச்சாளரும் கூட. அவர் அப்படி வருவதற்கு முக்கிய அடித்தளமிட்டவர் அரிமா. தனபாலன் என்பது மிகையில்லை. மதியம் 12 மணியிருக்கும், நண்பர் அரிமா. தனபாலன் அலைபேசியில் அழைத்து “பாரதி கிருஷ்ணகுமாரை சந்திக்கச் செல்கிறேன் வருகிறீர்களா” என கேட்க மிகுந்த மகிழ்வோடு அவரை சந்திக்கச் சென்றேன். மேடையில் பலமுறை அவரைச் சந்தித்திருந்தாலும் அறையில் பக்கத்தில் சந்திப்பது கொஞ்சம் சிலிர்ப்பூட்டத்தான் செய்கிறது. நண்பர் தனபாலன் என்னை “இவர் கதிர், வலைப்பூவில் எழுதி வருகிறார்” என்றவுடன், அவர் கேட்டது “அப்படியா... கவிதை எழுதுகிறீர்களா... அது உங்களைத் தூங்க விடாதே” என்றார். சுமார் 30 நிமிடங்கள் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது, இந்த மாதிரியான இடங்களின் நான் பேசாமல், இறுக்கமாக, உன்னிப்பாக கவனிப்பது வழக்கம். நன்றாக கவனித்தேன், பல நயம் மிகு விசயங்களையும் உள்வாங்கிக் கொண்டதொரு பயனுள்ள மதிய நேரம்தான்.

புத்தகத் திருவிழாவில்...

மூன்றாவது நாளாக செல்கிறேன். குழந்தையும், மனைவியும் வருகிறேன் எனக்கூற உடனே பக்கத்து வீடு, எதிர்வீடு என மூன்று குழந்தைகள், நான்கு பெரியவர்கள் என காரில் ஒரு ஷேர் ஆட்டோ பாணியில் அழைத்துச் செல்ல வேண்டியதாகி விட்டது. ஆனாலும் ஒரு மகிழ்ச்சி இவர்களும் புத்தகத் திருவிழா வருகிறார்களேயென்று.

எய்த விரும்பியதை எய்தலாம் என்ற தலைப்பில் பாரதிகிருஷ்ணகுமார்

படைப்பாளிகள் சார்பில் கௌரவிக்கப்பட்ட கு.சின்னப்ப பாரதியின் பெருமைகளை நினைவு படுத்தியது உரையின் துவக்கம். 1975 ஆம் ஆண்டு அவசர நிலை நாடு முழுவதும் அமலில் இருந்தபோது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப் பட்டது, அதை உருவாக்கியதில் கு.சி.ப வின் பங்கு மிகப்பெரியது, மேலும் அது உருவாக்கப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற முதல் படைப்பாளியும் கு.சி.ப என்று குறிப்பிட்டதோடு “சக்ரவர்த்தியின் நிர்வாணத்தை குழந்தை பயமில்லாமல் சொல்லும், படைப்பாளி என்பவன் அந்த குழந்தையைப் போன்றவன்” என்ற உதாரணம் அருமையாக இருந்தது. புத்தகம் இல்லாத வீடு மயானம் என்ற கருத்து வலுவான ஒன்று. உரை நவரசங்களை தன்னுள்ளே கொண்ட ஒன்றாக இருந்தது. பேச்சு நெடுகிலும் நையாண்டியும், கோபமும், உணர்ச்சிக் களிப்பும், அழுகையின் வலியும் தொடர்ந்து மாறி மாறி நடனமாடியது சுகமான ஒன்று.

வியட்நாம் போரில் விழுந்த நைட்ரஜன் குண்டுகளிலிருந்து தப்பிக்க ஒரு குடும்பம் பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொள்கிறது. பதுங்கு குழிக்குள்ளேயே அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, நான்கு வருடங்கள் கழித்து குடும்பம் வெளியே வருகிறது, அந்தக் குழந்தை சூரியனைப் பார்த்து ஆச்சரியமாக கேட்கிறது “இது என்ன!?” என்று...

1992ல் மும்பையில் குண்டு வெடிக்கிறது. வேலைக்குப் போன மனைவி திரும்பவில்லை. கணவன் மனைவியின் அலுவலம் சென்று பார்க்கிறான் ஒரு பெண் கருகிக்கிடக்கிறாள். எல்லோரும் அது மனைவி என்று உறுதிப்படுத்த, சடலத்தை எடுத்து வந்து இறுதிக் காரியம் செய்துவிட்டு துக்கம் உயிரை உருக்க வீட்டில் கிடக்கிறான். அடுத்ட நாள் அதிகாலை 5.30 மணிக்கு கதவு தட்டப்படுகிறது, இந்த நேரத்தில் யார் என்று கதவைத் திறக்கிறான், அவன் மனைவி உயிரோடு நிற்கிறாள், கணவன் கதறியழுகிறான், மனைவியால் எவ்வளவு போராடியும் அவன் அழுகையை நிறுத்த முடியவில்லை. கத்திக் கேட்கிறாள் “நான்தான் வந்து விட்டேனே, இன்னும் ஏன் இப்படியழுகிறாய்” என்று. கதறலோடு சொல்கிறான் “இன்னொருவன் மனைவிக்கு கணவன் ஸ்தானத்திலிருந்து காரியம் செய்து விட்டேனே, அந்தப் பெண்ணின் ஆத்மா எப்படி துடித்திருக்கும்!?” என்று...


யூத முகாம்களில் அடைபட்டிருக்கும் கைதிகளை ஏதாவது ஒரு காரணம் சொல்லி தினமும் இருவரைத் தூக்கிலிட்டு மிஞ்சியிருப்போரை வரிசையாக நேரில் வந்து பார்க்கச் சொல்வது வழக்கம். அப்படித்தான் அன்றும் இருவரை தூக்கிலிருகிறார்கள். ஒருவர் வயது 45 அவர் செய்த குற்றம் பசிக்கிறதென்று கூடுதலாக ஒரு ரொட்டியை திருடியது, மற்றொரு சிறுவனுக்கு வயது 14, அவன் செய்த குற்றம் காய்ச்சலின் காரணமாக வழங்கப்பட்ட ரொட்டியை சாப்பிடாமல் இருந்தது. இருவரும் தூக்கிலிடப்படுகிறார்கள், 45 வயது ஆள் தன் உடல் எடையின் காரணமாக சில நிமிடங்களில் இறந்து விடுகிறார், 14 வயது சிறுவன் உடல் எடை குறைவு, கூடவே வதை முகாமில் இருந்ததால் மெலிந்திருந்ததால் உயிர் பிரியாமல் துடித்து கொண்டிருக்கிறான். மரணத்தின் பக்கத்தில், அதை எட்ட முடியாமல் துடித்துக் கொண்டிருக்கிறான். வரிசையாக பார்க்கும் மற்ற கைதிகள் துடிக்கிறார்கள். ஒருவன் கண்ணீரோடு கதறுகிறான், அவன் அந்த சிறுவனின் தந்தை, உயிருக்கும், மரணத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் தன் மகன் துடிப்பதைக்கண்ட வெம்மி வெடித்து பக்கத்திலிருப்பவனிடம் கதறுகிறான் “எமி... எமி... கடவுள் எங்கேயிருக்கிறார்” என்கிறான், பக்கதிலிருப்பவன் சொல்கிறான் “கடவுள்தான் கயிற்றில் தொங்குகிறார்” என்று...

மனிதன் மனிதன் மேல் எதை எய்த விரும்புகிறான்? இதுதான் அவர் கேட்ட முக்கிய கேள்வி.

சமூகத்தில் எய்த வேண்டிய ஆயுதம் அன்பு.

உரை முழுதும் கருத்துகள் தெறித்து விழுந்தது.

* இந்திய சினிமா கதாநாயகன் மட்டும் தான் தன் முன்னே வரும் சிங்கத்துடன் சண்டை போட்டு, அதைக் கொன்று விட்டு பின்னர் ஒரு பெண்ணுடன் டூயட் பாடி முடிக்க முடியும்.

* முன்பெல்லாம் ரயிலில் பயணம் செய்தால் நாம் உணவு எடுத்துச்செல்ல வேண்டியதில்லை, யாராவது உணவு கொடுத்து விடுவார்கள், இன்று ரயிலில் எதையும் யாரிடமும் வாங்கி சாப்பிட்டு விட முடியாது, உச்சபட்ச சாட்சி சமீபத்தில் ஒரு மத்திய புலனாய்வுத் துறையின் பெண் அதிகாரி இழந்த 10 பவுன் நகை.

* குற்றவாளியிடம் ஓசி பீடி வாங்கிக் குடிக்கும் போலீஸ்காரனின் புத்தி ஒரு சமூகத்திற்கு வந்து விடக்கூடாது.

* ஒரு புன்னகையில் யாரிடம் வேண்டுமானலும் நட்பை உருவாக்கிடலாம், ஆனால் அழுகையின் கண்ணீரை எளிதில் ஒருவரிடம் காட்டிவிட முடியாது.

* இந்தியா ஈழம் விசயத்தில் தலையிடாமல் இருந்தாலே போதும், காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு என இங்கே தீர்க்க வேண்டியதே நிறைய இருக்கிறது என்ற வரியில் இருந்த அழுத்தமும், நக்கலும் பேச்சின் உச்சம் என்றே சொல்லலாம்...

மனதெல்லாம் நிறைவோடு, புத்தகம் வாங்க சுற்றினேன்...
மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் எட்டு புத்தகங்களும், மூன்று குறுந்தகடுகளும் வாங்கினேன்...

துக்கத்தின் நரம்புகளைத் தின்று...

என்றோ நீயறியாமல் திருடிய
உன் கைக்குட்டை மடிப்புக்கலையாமல்
உறங்குகிறது பெட்டிக்குள்
அதே வியர்வை வாசனையோடு...

ன்னைத் தழுவும் ஈரக்காற்று
எனக்கு மிச்சமேதும் வைக்காமல்
திருடிப் போகிறது உன் (சு)வாசத்தை
தன் காதலிக்கு பரிசளிக்க...

தாய்மடி பிரிந்து உன்னைத் தழுவ
ஓடி வரும் மழைத்துளி...
நீ ஒதுங்குவதால் தடம் புரண்டு
தற்கொலை செய்கிறது சாக்கடையில்...

அந்த பேருந்தில் மிக அழகான
காதல் கீதம் கசிந்துருகிறது...
நமக்கிடையே மட்டும் சில இருக்கைகள்
கடக்கமுடியாத தூரமாக...

விழிகள் படபடத்துச் சிறகடிக்க
உன் மௌனங்கள் அடைகாக்கும்
சொற்களில் நீந்துகிறது
வாழ்க்கையின் சூத்திரம்...

உன்மேல் கருக்கொண்ட காதல்
இதயச்சிறையில் துக்கத்தின்
நரம்புகளைத் தின்றுகொண்டிருக்கிறது
வாழ்க்கை இனிக்கிறது

~

நான் நிறுத்த வேண்டும்.

மலைப்பகுதிக்கு சுற்றுலா செல்வதை மூன்று வருடங்களாக தவிர்த்து வருகிறேன். கடந்த வாரம் நான் சார்ந்திருக்கும் சங்கத்தின் கூட்டம் ஒன்றினை சாக்காக வைத்து, நீண்ட யோசனைக்குப்பிறகு, நண்பர்களோடு தவிர்க்க முடியாமல் உதகைக்கு சென்றேன். மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர், உதகைக்கான சாலை மிக நன்றாக விரிவு படுத்தப்பட்டு சிறப்பான சாலையாக இருந்தது, ஆச்சரியமாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது. அதிர்ச்சிக்கு வலுவான காரணம் இருக்கிறது.

பத்து வருடங்களில் அடிக்கடி சென்று வந்த உதகைதான் என்றாலும், இதுவரை பார்த்தது என்னவோ, ஏரி, பூங்கா, தொட்டபெட்டா, பைகாரா அணை, முதுமலை செல்லும் சாலை, கோத்தகிரி செல்லும் சாலை என பழக்கப்பட்ட இடங்களை மட்டுமே, இந்த முறை இரண்டு நாட்கள் தங்கவேண்டியிருந்தாலும் ஏற்கனவே பார்த்த அதே இடங்களை பார்க்க விருப்பமில்லாமலும், அறையிலே அடங்கி, ஓய்ந்து கிடக்கலாமென மனம் விரும்பியது. ஆனால் உடன் வந்த நண்பர்கள் “புது லொக்கேஷன் ஒன்னு சொல்றாங்க, போய் பார்க்கலாம்” என அழைக்க, அரை மனதோடு அவர்களோடு புறப்பட்டேன், அது குந்தா தாண்டியிருக்கும் ஒரு பவர் ஹவுஸின் தங்கும் விடுதி. அங்கு சென்று அங்கேயே சமைக்க ஏற்பாடு செய்து சாப்பிட்டுவிட்டு, திரும்பி வரும் போது குந்தாவிலிருந்து அவலாஞ்சி செல்லும் சாலை வழியே, எமரால்டு நீர்த்தேக்கம் வழியாக உதகைக்கு திரும்பினோம்.

வரும் போது பார்த்த காட்சிகள் மனதை வலிக்கச் செய்தது. காடுகளும், வனங்களும் முற்று முழுதாக மொட்டையடிக்கப்பட்டு, சதுரமாக, செவ்வகமாக விவசாய பூமியாக முற்றிலும் மாறிவிட்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரமும், காடுகளும் இல்லை. வெறும் சமவெளிப்பிரதேசமாக காட்சியளித்தது.

உதகை போன்ற மலைகளுக்கான பயணத்தை திட்டமிடாததிற்கு ஒரு வலுவான காரணம் மனதில் அலையாய் அடித்துக் கொண்டேயிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் கோவையைச் சார்ந்த ‘ஓசை’ சுற்றுச்சூழல் காக்கும் அமைப்பின் நிர்வாகி திரு. காளிதாசன் அவர்களின் உரையைக்கேட்ட பிறகு காடுகளுக்கும், மலைகளுக்கும் சுற்றுலா என்ற பெயரில் செல்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டுமென முடிவு செய்தேன். திரு.காளிதாசன் அவர்கள் கேட்டது “மழை அதற்கான பருவங்களில் மட்டுமே பெய்கிறது, ஆனாலும் அருவிகளிலும், ஆறுகளிலும் மழை பெய்யாத காலங்களிலும் கூட தண்ணீர் வருவது எப்படி?” இதற்கான விடைதான் சோலைக்காடுகள். மிக அடர்த்தியாக பலநூறு வருடங்களாக காடுகளில் விழுந்த இலை, தழை, மரம், குச்சிகளின் பல அடுக்குகள் நிறைந்த வனமே சோலைக்காடுகள் என அழைக்கப்படுகிறது. காடுகளின் உண்மையான ஆத்மா இந்த சோலைக் காடுகள்.

சோலைக்காடுகள் தன்னுள் பெய்யும் மழையை எங்கும் ஓட விடாமல் தன்னுள்ளே முழுவதுமாக உள்வாங்கி தேக்கி வைத்துக்கொண்டு, மெதுவாக சிறிது, சிறிதாக மழை இல்லாத காலங்களில் தண்ணீரை கசிந்தொழுக விடும். சிறிது சிறிதாக கசியும் துளிகள்தான் சிறு சிறு நீர்க்கோடுகளாக கிளம்பி, ஓடையாக மாறி, அருவியாக கொட்டி, காட்டாறாக உருவெடுத்து ஒரு கட்டத்தில் அணையில் தேங்கி பின்னர் ஆறுகளில் பயணப் படுகிறது. சோலைக்காடுகள் என்று ஒன்றில்லாமலிருந்தால் பெய்யும் மழை நீரனைத்தும் உடனே மலைகளிலிருந்து வழிந்தோடிவிடும், அப்படி வழிந்தோடிவிட்டால் மழை பெய்யாத காலங்களில் வெறும் வறட்சி மட்டுமே எஞ்சியிருக்கும்.

இன்றைய மிகப்பெரிய வேதனை இந்த சோலைக்காடுகள் சிறிது சிறிதாக சிதைந்து கொண்டு வருவதுதான். பூமியின் உயிர் நாடியான சோலைக்காடுகள் பல காரணங்களை முன்னிறுத்தி பெருமளவில் அழித்தொழிக்கப் பட்டுவிட்டன. இது சிதையும் பின்னணி மிகவும் குரூரமானது, கூடவே அருவெருப்பானதும் கூட. மனிதன் தன்னுடைய தற்காலிக சுகத்திற்காக குளிர்பிரதேசங்களை தேடிச்செல்ல ஆரம்பித்தான். சென்று வர சாலைகளை விரிவுபடுத்தினான், தங்குவதற்கு இருப்பிடங்களை உருவாக்கினான். இதற்காக பெருமளவில் மரங்களை வெட்டினான், அங்கு வாழ்ந்த விலங்குகள் துரத்தப்பட்டன. வீரமோ, வெங்காயமோ விலங்குகளை மறைந்திருந்து மனிதன் வேட்டையாடினான். அது மட்டுமில்லாமல் காட்டாறுகளை கட்டுப்படுத்தி அணைதேக்கி மின்சாரம் தயாரிக்கிறேன் என விஞ்ஞானமும் கூடவே கும்மியடித்தது. காடுகளைத் திருத்தி(!!!) காபியும், தேயிலையையும் நடவு செய்து அடிமையாகிப் போனான். மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகள் கட்டிய மர்மமான ஓய்வு மாளிகைகளும், பணத்தை அள்ளி வீசும் பணக்காரர்களின் பிள்ளைகள் படிக்கும் கல்விச்சாலைகளும் என எல்லாமே இயற்கையை மனசாட்சி இல்லாமல் சீரழித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

மனிதன் தன் சுயநலத்திற்காக எதைச் செய்தாலும் அது உடனடியாக காடுகளின் கர்ப்பப்பையை காயப்படுத்தியது, காலம் கடந்து மனித சமுதாயம் சந்திக்கப்போகும் அவலங்கள் எதுவும், புதுமை, சுகம் என்ற போதையிலிருந்த மனிதனின் மண்டையில் ஏறவேயில்லை.

நான் மேலே குறிப்பிட்ட இடங்கள் ஒரு காலத்தில் சோலைக்காடுகளாக இருந்திருக்கின்றன. காலப்போக்கில் அவை சிறிது சிறிதாக சூரையாடப்பட்டு, மரங்கள் வெட்டி எறியப்பட்டு சரிவான விவசாய பூமியாக மாற்றப்பட்டுவிட்டன. கட்டாயமாக பால் மாற்றம் செய்வதைப்போல். விளைவு மழை பெய்யும் பொழுது ஒரு துளி நீர் கூட நிலத்தில் தங்காமல், பள்ளம் நோக்கி பாய்கிறது. மழை நீரின் வேகத்தை தடுத்தாட்கொள்ளும் மரங்கள் இன்றி மண்சரிவு சர்வசாதரணமாக நிகழ்கிறது.

இன்று மிக வேகமாக மலைகள் பணம் கொழிக்கும் பயிர்களை விளைவிக்கும் பூமியாக, சுற்றுலா பகுதியாக மாற்றம் அடைந்து வருகின்றன, எவர் ஒருவருக்கும் மலையை, அதில் இருக்கும் இயற்கை வளத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உள்ளார்ந்த எண்ணம் இல்லை, வெறும் விளம்பர யுக்தியாகவும் சில சமயம் மாறிவிடுகிறது, உதாரணத்திற்கு 5 வருடங்களுக்கு முன் உதகையில் கின்னஸ் சாதனைக்காக மரக்கன்றுகள் நடவு செய்தது எல்லோருக்கும் நினைவிருக்கும், அதில் எத்தனை கன்றுகள் இன்று மரங்களாக வளர்ந்திருக்கின்றது? மிக மிக சொற்பமே!

மனித சமுதாயம் இயற்கையோடு வன்மையாக மோதிக்கொண்டிருக்கிறது, இயற்கை வஞ்சிக்க ஆரம்பித்தால் என்ன செய்யமுடியும் மனித சமூகத்தால். ஏற்கனவே ஆங்காங்கே இயற்கை சின்ன சின்ன சீற்றங்களின் மூலம் எச்சரிக்கை விடுத்துக்கொண்டுதான் இருக்கிறது “மனித சமூகமே நிறுத்து உன் அக்கிரமங்களை” என்று.


கொஞ்சம் குற்ற உணர்வு கொண்ட மனதோடு, உதகையிலிருந்து திரும்பும் போது கவனித்தேன். சாலையோரம் இருந்த பலகையில் நகராட்சியால் எழுதப்பட்டிருந்த “தங்கள் வருகைக்கு நன்றி, மீண்டும் வருக” என்ற வாசகம் ஒரு கணம், என் மனதில் கற்பழிக்கப்பட்ட பெண், காமுகனைப் பார்த்துச் சொல்வது போன்று தெரிந்தது.

சரி... இதற்காக நாம் என்ன பெரிதாக செய்யமுடியும்?
நாம்... என்பதற்குமுன் நான் மிக எளிதாக நான் செய்ய வேண்டிய காரியம்

குறைந்த பட்சம் இனிமேல் சுற்றுலா என்ற பெயரில் மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் சுயநலத்தை முதலில்
நான் நிறுத்த வேண்டும்.

நிறுத்துவேன்..


முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

புத்தகத் திருவிழாவில் அறிவுமதி & உதயச்சந்திரன்

ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கான பேச்சாளர்கள் பட்டியல் வந்ததிலிருந்து மனது பரபரத்துக் கொண்டேயிருந்தது, முடிந்தவரை எல்லாக் கூட்டங்களுக்கும் போக வேண்டும் என்று வழக்கம்போல் முடிவெடுத்து, வழக்கம் போல் முதல் இரண்டு நாட்கள் செல்லவில்லை. ஆனால் நேற்றைய பட்டியலில் த.உதயச்சந்திரன் மற்றும் கவிஞர். அறிவுமதி என்பதால் என்னையே நான் ஏமாற்றிக்கொள்ளாமல் சென்றேன். நேற்றைய விழாவில் ஒரு எழுத்தாளர் கௌரவிக்கப்பட்டார். இரண்டு பேச்சாளர்களும் இரண்டு தளங்களில் வலிமையான தலைப்பில் உரை நிகழ்த்தினர். நானும் இரண்டு புத்தகங்கள் (மட்டும்!!!) வாங்கினேன்.

தொடர்ந்து 5வது வருடமாக இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்தி வரும் ஈரோடு, மக்கள் சிந்தனைப் பேரவையை நிச்சயம் பாராட்ட வேண்டும். அதன் தலைவர். இந்த புண்ணியமான காரியத்திற்காக திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு ஈரோடு பகுதி பொதுமக்கள் என்றென்றும் கடமைப் பட்டுள்ளனர். திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே மக்கள் கடலாய் திரண்டு வந்து கலந்து கொள்ள மிக முக்கியக் காரணம்.

நேற்று புத்தகத் திருவிழாவிற்கு செல்ல வீட்டிலிருந்து 6 மணிக்கு கிளம்பினேன், முக்கிய சாலையான மேட்டூர் சாலை வழியாகத்தான் புத்தகத் திருவிழா நடக்கும் வ.உ.சி பூங்காவை அடைய வேண்டும். நேற்றுப் பார்த்து மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் ஈரோடு வருகை, நகர் முழுதும் செவ்வாடை பக்தர்களின் கூட்டத்தாலும், வந்திருந்த வாகனங்களாலும் திணறிக் கொண்டிருந்தது. ஒரு அரசியல்வாதி போல் அவருக்கு வைத்திருந்த பிளக்ஸ் பேனரும், சாலையில் அமைக்கப்பட்டிருந்த வளைவுகளும் (ஆர்ச்) கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. முக்கியமாக வளைவுகளில் “மழையை வரவழைத்த அம்மாவே” “அணையெல்லாம் நிரம்ப வைத்த அம்மாவே” என்பது போன்ற வாசகங்கள் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது.

ஒருவழியாய் பக்தர்களைத் தாண்டி பூங்காவிற்குள் நுழைந்து புத்தகத்திருவிழா அரங்கில் அமர்ந்தபோது பாதியளவுகூட மக்கள் இல்லை, ஒருகணம் மனம் வருத்தப்பட்டது. ஒரு நல்ல நிகழ்ச்சியை மக்கள் ரசிக்க ஏன் மறந்து போகின்றார்கள் என்று. அதேசமயம் மனது என்னையே கேட்டது “கடந்த இரண்டு நாட்களாய் சோம்பேறி நீயும் தானே வரவில்லை” என்று. என் வருத்தம் அடுத்த 20 நிமிடங்களில் தகர்ந்து போனது அரங்கு முழுதும் கூட்டம் நிரம்பிவழிய ஆரம்பித்தது. இருக்கைகளெல்லாம் நிரம்பி நிறைய மனிதர்கள் நின்று கொண்டிருந்தனர்.

நேற்றைய விழாவின் முக்கிய நிகழ்வுகள் மூன்று நிகழ்வுகள்:

முதல் நிகழ்வு:
சோளகர் தொட்டி எழுத்தாளர் ச.பாலமுருகன் பாராட்டப்பட்டார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் அரிமா. தனபாலன் அவர்கள் “சோளகர் தொட்டி” என்ற புத்தகத்தை கண்டிப்பாக வாசியுங்கள் என திரும்ப திரும்ப சொல்ல தேடிப்பிடித்து வாங்கினேன். வாங்கிப்பார்த்தால் முன் அட்டையில் ஒரு வயதான மலைவாழ் மனிதனின் படம் போட்டு “சோளகர் தோட்டி” என அச்சிடப்பட்டிருந்தது, கீழே ச.பாலமுருகன் என போட்டிருந்தது. பின் அட்டையை திருப்பிப் பார்த்தால் அவருடைய புகைப்படம் வெளியாகியிருந்தது. அவர் பவானியைச் சார்ந்த வழக்குரைஞர் பாலமுருகன். ஒரு கணம் என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை.

பாலமுருகன் அவர்களுடன் நான் 12 வருடங்களுக்குப் முன்பு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அப்போது நான் பவானி நகரத்தில் தொழில் செய்து வந்த நேரம். அவர் ஒரு எழுத்தாளராக வரப்போவார் என நான் அறிந்திருக்கவில்லை. 1999ம் வருடம் நான் என் தொழிலை ஈரோடுக்கு மாற்றியதிலிருந்து பவானி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு குறைந்தது. காலப்போக்கில் அவர்களுடன் பேசுவது குறைந்து, எப்பொழுதாவது நேருக்கு நேர் சந்திக்கும்போது மட்டுமே விழி விரிய பேசுவது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு வெறியோடு புத்தகத்தை அடுத்த நாள் காலையில் படிக்க அமர்ந்தேன் 300 பக்கங்களுக்கு மேல் இருந்தது அந்த புத்தகத்தில், இடைவிடாமல் ஒரு வெறியோடு படித்துக் கொண்டேயிருந்தேன். 20 அல்லது 30 பக்கங்களைத் தாண்டும் போதே அது அந்தியூர் தாண்டி இருக்கும் அந்த மிகப்பெரிய மலைத்தொடரில் வாழும் பழங்குடியின மக்கள் பற்றிய புதினம் என விளங்கியது. சந்தன் வீரப்பன் ஆதரவான புத்தகமாக இருக்குமோ என்ற ஒரு வித சந்தேக மனநிலையோடுதான் நான் அதைப் படித்துக்கொண்டிருந்தேன். அந்த மலைப்பகுதியில் வசித்து வரும் சோளகர் என்ற இனத்தின் வரலாறும், அவர்களின் வாழ்க்கை முறையையும் அழகாக சித்தரித்தது. விதி வீரப்பனைத் தேட வந்த காவல்துறை, அதிரடிப்படை வடிவில் வந்து பஞ்சு பஞ்சாக பிய்த்தெறிந்து கோரதாண்டவாமாடி அந்த இனத்தையே சிதைத்ததை மிகுந்த வலியோடு எழுதியிருந்தார். படிக்கும் போது முதல் பாதியில் அவர்களுடைய வாழ்விடம் கண்களுக்குள் ஒரு சித்திரமாக மிக இயல்பாக விரிந்து, இரண்டாவது பாதியில் அந்த மக்களுக்கு நிகழ்ந்த அக்கிரமமான கொடுமைகளை படிக்கும் போது சில இடங்களில் கண்ணீர் தழும்பியதும், வயிறு பற்றி எரிந்தும் மறக்க முடியாத வாசிப்பு. கடைசி வரை வீரப்பனை எந்த விதத்திலும் நுழைக்காமல், வீரப்பனை உயர்த்தியோ, தாழ்த்தியோ காட்டிடாமல் இருந்தது குறிப்பிடத்தக்க அம்சம்.

அந்த சோளகர் தொட்டி எனும் பழங்குடிகளின் இலக்கியம் படைத்த எழுத்தாளர் ச. பாலமுருகனுக்கு அந்த அவையில் வழங்கப்பட்ட பாராட்டு சிறப்பானதென்றாலும் கொஞ்சம் காலம் தாழ்ந்த அதே சமயம் சுருக்கமாக வழங்கப்பட்ட பாராட்டு என்பது என் தாழ்மையான கருத்து.

பாராட்டிற்குப் பின் பாலமுருகன் பேசுகையில் வரலாறு என்பது வெற்றி பெற்றவன் படைப்பது. இலக்கியம் என்பது தோல்வியடைந்தவன் பக்கத்திலிருந்து பிறப்பது. நான் தோல்வியடைந்தவர்களின் பக்கத்தில் இருக்க விருப்பப்படுகிறவன் எனக் குறிப்பிட்டார். எனக்கென்னவோ அந்த கருத்தில் ஒத்துப் போகமுடியவில்லை.


இரண்டாவது நிகழ்வு:
பச்சைத் தமிழன் என்ற தலைப்பில் பாவலர் அறிவுமதி

தான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் பெண்களை கருவறைக்குள் செல்ல அனுமதித்த ஒரு ஆன்மீகவாதியின் (“பங்காரு அடிகளார்”) பக்தர்களின் கூட்டத்தைப் பார்க்கும்போது கொஞ்சம் மகிழ்ச்சியே என்ற துவக்கம் சுவையாக அமைந்தது.

தேர்ந்தெடுத்த வார்த்தைகள், மென்மையாக அதேசமயம் அழுத்தமாக வெளிவந்தது. தலைப்பிற்கு வரவே சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். தமிழினம் காக்க வேண்டிய பசுமை என்பது தான் அவர் பேச விழைந்த கருத்தாக இருந்தது. சிறுவனாக அவர் மணிமுத்தாறு ஆற்றங்கரையில் விளையாடிய வாழ்க்கையையும், தாத்தா பாட்டியிடம் விளையாட்டு மூலம் கற்ற மூச்சுப் பயிற்சியையும் கூறியபோது என்னனென்னவோ நினைவிற்குள் வந்துவிட்டுப்போனது. தான் படித்த கவிதையில் ஒரு பெண் தன் வீட்டில் வளர்ந்த பூவரசம் மரத்தோடு விளையாடி வருகிறாள். அது உதிர்க்கும் பூவரசம் பூக்களில் மனது மகிழ்கிறார். ஒரு கட்டத்தில் தன் திருமணத்திற்காக வெட்டப்பட்டு நிலைப்பேழையாக (பீரோ) மாறி புகுந்த வீட்டில் இருக்கும் போது ஒவ்வொருமுறையும் அந்தப் பெண் நிலைப்பேழையருகே கூட்டிப் பெருக்கும் பொழுது இரண்டொரு பூவரசம் பூவாவது கிடைக்காத என ஏங்குகிறாள் என்ற கவிதை குறித்த விளக்கம் நெகிழ்ச்சி.

மூன்றாவது நிகழ்வு:
உலகை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் த. உதயசந்திரன் இ.ஆ.ப

எங்கள் கொங்கு மண்ணின் மனம் கவர்ந்த நாயகன் இவர். ஈரோடு மாவட்டம் சந்தித்த மிக அற்புதமான மாவட்ட ஆட்சியர்களில் திரு. உதயசந்திரன் முக்கியமானவர். நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த இவர் படித்தது ஈரோடில் உள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியில் என்பதாலும், பணி புரிந்த சிறிது காலத்திலேயே நேர்மையான முறையில் நிறைய நல்ல காரியங்களை ஆற்றியதால் அவர் மேல் மக்களுக்கு ஒரு இனம் புரியாத பாசமும், அன்பும் உண்டு.

உலகை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் ஒரு ஆழமான உரையை நிகழ்த்தினார். இவர் குறிப்பிட்ட மூன்று புத்தகங்கள் மார்கோபோலாவின் பயணக் குறிப்பு, சேகுவாராவின் மோட்டார் சைக்கிள் பயணம், மூலதனம் என்ற பொருளாதார அடிப்படையான புத்தகம். மிக மோசமான விளைவை ஏற்படுத்திய புத்தகமாக அவர் குறிப்பிட்டது ஹிட்லரின் எனது போராட்டம் எனும் புத்தகமும், தற்போது அவர் வாசித்து வரும் இலங்கையின் வரலாறு பற்றிய புத்தகமான மகாவம்சம் புத்தகமும்.

கலிலியோவையும், சார்ளஸ் டார்வினையும் அறிவியல் ரீதியான உண்மையை கூறியதற்காக ஆரம்பத்தில் திருச்சபை எப்படி அவமானப் படுத்தியது, தண்டித்தது, பின் ஒரு கட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொண்டதென்பதை விளக்கிய விதம் அருமை.

பேச்சின் இடையே “எதையும் புனிதப்படுத்துவதை விடுத்து, கேள்விகளுக்குள்ளாக்க வேண்டும்” என்ற வரி என் மனதில் ஆழப் பதிந்த வரி. ஹிட்லரால் அழித்தொழிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் இன்று வலுப்பெற்ற வரலாறை சுருக்கமாக கூறிய போது மனது ஈழத்தமிழர்களை நினைத்துக் கொண்டிருந்தது.

அவர் மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி காலத்தில்தான், பத்து வருடங்களுக்கு மேலாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த மூன்று ஊராட்சிகளில் வெற்றிகரமாக தேர்தல் நடத்தியதையும், அதற்கு உதவிகரமாக இருந்தது இரண்டு தகவல்கள் எனவும், அதோடு அவர் அந்த தகவல்களை உபயோகித்த விதத்தையும் விளக்கியது சுவையான ஒன்று.

திரு.உதயச்சந்திரன் பேசி முடிக்கும் வரை கூட்டம் முழுமையாக இருந்தது மிகவும் முக்கியாமான செய்தி.

நேற்று ஒரு முன்னோட்டமாக இரண்டு புத்தகங்கள் வாங்கினேன்
பிறகொரு இரவு ... தேவிபாரதி காலச்சுவடு பதிப்பு மற்றும் பதேர் பாஞ்சாலி ... எஸ். ராமகிருஷ்ணன் உயிர்மை பதிப்பு

இன்னும் வாங்க வேண்டிய பட்டியல் நீண்டிருக்கிறது


உபயோகமான தகவல்: ஒவ்வொரு நாளும் நிகழ்த்தப்படும் சொற்பொழிவுகள் அடுத்த நாள் குறுந்தகடுகளாக ரூ.50ற்கு விற்பனைக்குள்ளது. அதேபோல் கடந்த நான்கு வருட பேச்சாளர்களின் உரைகளுமே குறுந்தகட்டில் கிடைக்கிறது.



முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.