அனுதாபங்களால் குணப்படுத்த முடியா பிணி

ஏன் இப்படி போய்ட்டே? தைரியமா இருக்க வேணாமா? நீ எல்லாம் இப்படி செய்யலாமா?, தற்கொலைதான் தீர்வா? தற்கொலை கோழைத்தனம் இல்லையா?’ என்பது போன்ற ஆறுதல் தேறுதல் கம் அட்வைஸ்களுக்குள் ஒருபோதும் அடங்காதவை தற்கொலைகள். நானறிந்த வரையில் இரண்டு வகைகளில் சுயகொலைகளை மனிதர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

உடல் நலமின்மை மற்றும் மன நலமின்மை தொடர்பில் மரணத்தை தேர்ந்தெடுப்பது ஒரு வகை. தீராத நோய், அதன் வாதை என அவதியுறும்போது, அதைத் தாங்குவதற்குப் பதில் இறந்துவிடுவதே மேல் எனத் தீர்மானித்தல். மன நலமின்மை என்பது மிக நுண்ணியது. உள்ளுக்குள்ளே ஆயிரமாயிரம் யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். எத்தனை போராடியும் அவை யாவற்றிலும் அவர்கள் தோற்றுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் நிழலே அவர்களுக்கு போட்டியாளனாய் மாறும். நாம் கற்பனையே செய்திருக்காத ஏதோ ஒன்று அவர்களை அப்படி சிக்க வைத்திருக்கும். மிகச்சரியான நேரத்தில் கண்டறிப்படாமல், கண்டு கொள்ளப்படாமல் இருப்பது அவர்களை மரணம் எனும் விடுதலையை நோக்கி நகர்த்தி விடுகின்றது. கவனிக்கவும், மரணம் என்பது அவர்களைப் பொறுத்த வரையில் விடுதலை.

உடல் நிலை என்றால் மருத்துவத்தின் அதிக பட்ச மருத்துவ உதவியை நாடுதல் தேவை. மனதில் சிக்கல் என்றால் உடனடியாக தேவையான மனநல ஆலோசனைக்கு உட்படுத்தி, தேவைப்படின் சிகிச்சைக்கு உட்படுத்தி மீள்வது மட்டுமே தீர்வாகும். உண்மையான பிரச்சனையைப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாகத் தரப்படும் எந்தவிதமான அறிவுரைகள் மற்றும் ஊக்குவிப்புகளும் உதவவே உதவாது.

மற்றொரு வகையில்தான் அதிகப்படியான தற்கொலைகள் நிகழ்கின்றன. இவை ஏதோ ஒருவிதத்தில் மற்றவர்களால் அறிந்தோ அறியாமலோ தூண்டப்படுவதால் நிகழ்கின்றன. குடும்பப் பிரச்சனை, கடன், துரோகம், காதல், ஏமாற்றம், இழப்பு, தேர்வில் தோல்வி உள்ளிட்ட அனைத்தின் பின்னாலும் யாரோ ஒருவர், ஏதோ ஒன்று இருக்கும். பெரும்பாலும் தற்கொலைகள் உயிரிழப்பு மட்டுமே மிகைப்படுத்தப்பட்டு, அதற்கு காரணமாக இருந்த அந்த யாரோ ஒருவர், ஏதோ ஒன்று என்ன அறியப்படாமல் போகின்றது.


இதில் சிக்கிக் கொள்பவர்கள் பெரும்பாலும் அந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாத பதட்டத்தில் இந்த முடிவுக்கு நகர்கின்றனர். மேற்கண்ட பட்டியலில் இருக்கும் அனைத்தையும் உடைக்க முடியும், மாற்ற முடியும், மாற்று வழி ஒன்றைக் கண்டறிய முடியும் எனும் நம்பிக்கையும், சமாதானமும் மிகத் தெளிவாக வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு மாற்று இங்கு யாருமே இல்லை என்பதை உணர்த்த வேண்டும். உண்மையில் இவர்களுக்கு மரணம் ஒருபோதும் விடுதலை அல்ல. அந்த நெருக்கடியின் இறுக்கத்தில் இருந்து தப்பித்தல் மட்டுமே. தப்பித்தல் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக மாறிவிடுகின்றது.

இவர்களில் பெரும்பாலும், அதன் தொடர்பில் உள்ளவர்களைப் பழிவாங்க அல்லது தண்டிப்பதற்காக தற்கொலை செய்வதுண்டு. சிலர் எதிராளியை மிரட்டுவதற்காக ஏதாவது ஒன்றைச் செய்து மரணத்திற்குள் மாட்டிக் கொள்வார்கள்.  இந்தாப் பாரு கயிறு போட்டுக்குவேன், கையை கிழிச்சுக்குவேன், மருந்தக் குடிச்சிருவேன்!என்பவர்கள் பெரும்பாலும் மிரட்டலுக்காக அவ்வப்போது செய்து, ஒருகட்டத்தில் புலி வருது கதை போல், மற்றவர்களால் பொருட்படுத்தப்படாத தருணத்தில் மரணத்திற்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

இவர்கள் உடனிருப்பவர்களால் அடையாளம் காணப்பட்டு மிகச் சரியாக வழி நடத்தினால் தற்கொலைகளை நோக்கி நகராமல் இருப்பார்கள். அவர்களுக்கே வாழ்க்கை குறித்த புரிதலும், சுய அறிவும் இருந்தால், தன் தவற்றை உணர்ந்து தீர்வை நோக்கி நகர வேண்டும். அவர்களின் கேள்விகள் மதிக்கப்பட்டு, அவற்றிற்கான சரியான பதில்கள் வழங்கப்பட வேண்டும். சரியான பதில்கள் என்பவை பிடித்ததாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் போதும்.

எல்லாத் தற்கொலைகளுக்கும் ஒரே விதமான அளவீட்டுக் கருவி பொருந்தாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமானது. அந்தந்த விதத்தில் அணுகி சரி செய்யப்பட வேண்டும். மேலோட்டமான ஆலோசனை ஆறுதல்களால் மட்டுமே கடந்துவிடக் கூடியல்ல. தற்கொலை எனும் பிணியை வெறும் அனுதாபங்களால் மட்டுமே குணப்படுத்த முடியாது!


ஒரு விதை போட்டால்

கிராமங்களில் பெரு, சிறு, குறு விவசாயி என யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம் எப்போதும் ஓர் அறியாமை நிரம்பிய வீம்பு இருப்பதுண்டு. தம் நிலங்களில் விற்பனை செய்வதற்கான பயிர் வகைகள் மட்டுமே விளைவிக்க வேண்டும் எனும் வீம்புதான் அது.

பயன்பாட்டில் இருக்கும் நிலம் முற்றிலும், தாம் காலம் காலமாகச் செய்து வரும் முறையில், அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப, நீர் வசதிக்கேற்ப விவசாயம் செய்து விடும் பழக்கம் தவறில்லை. பெரும்பாலான விதைப்பு என்பது காலங்காலமான பழக்கம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே நிகழ்கின்றது. மொத்தத்தில் எதையாவது விதைக்க வேண்டும், பாங்கு பார்க்க வேண்டும், விளைந்ததை அறுவடை செய்து என்ன விலைக்குப் போகின்றதோ அப்படியே விற்றுவிட வேண்டும். உதாரணத்திற்கு சில தருணங்களில் வெங்காயம் கிலோ நூறு ரூபாய்களைக் கடந்து பறக்கும். அதே நாட்களில் தக்காளி ஓரிரு ரூபாய்க்கு விற்பனையாகும். எது எப்போது, என்ன விலைக்கு விற்றது, என்னென்ன காலங்கள், என்னென்ன காரணங்கள் எனும் தரவுகள் 99% பேரிடம் கிடையாது.

நீர் செழித்திருக்கும் நிலமென்றால் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, பாக்கு, கொய்யா. ஓரளவு இருந்தால் குச்சி, மக்காச்சோளம், எள், கடலை, தானிய வகைகள். வானம் பார்த்த பூமியாக இருந்தால் அதற்கேற்ற விவசாயம். சில பகுதிகளில் முற்றிலும் பணப் பயிர்கள், பூ வகைகள், ஏற்றுமதி வாய்ப்புள்ள விவசாயம் அல்லது தோப்பு வகை விவசாயம்.

இதில் வீம்பு என்று எதைச் சொல்கிறேன்? தன் குடும்பத்தினரின் சத்தான உணவுத் தேவைக்கு தம் நிலத்தில் இருந்து எதையெல்லாம் விளைவித்து எடுத்துக் கொள்ள முடியும் எனும் தெளிவு பெரும்பாலும் கிடையாது. மொத்தமாக விதைப்பதும், விளைவிப்பதும், அறுவடை செய்வதும் விற்பனை நோக்கத்திற்காக மட்டுமே எனும் வீம்புதான், விவசாயிகளை சத்துள்ள ஒன்றைச் சாப்பிடக்கூட விடாமல் வெறும் இயந்திர பாணியில் இயக்குகின்றது.

பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை எருமை மேய்ப்பு, கட்டுத்தரை வேலை, வண்டி ஓட்டுதல், குப்பை அள்ளுதல், வயல்களில் வேலை என எல்லாம் செய்ததுண்டு. செய்துதான் ஆக வேண்டும். எல்லோரும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, நாம் மட்டும் சும்மா இருக்க முடியாது. அதனால் வயல்களில் விதைத்தது என்ன, எந்த நிலையில் இருக்கின்றது, எப்போது அறுவடை என்றெல்லாம் தெரியும். அதிகாலையில் மார்கெட்டுக்கும், வாரச் சந்தைக்கும் சைக்கிள்களில் மூட்டை சுமக்க வேண்டும் அல்லது உடன் துணைக்குச் செல்ல வேண்டும். பதினொன்றாம் வகுப்பு விடுதி வாழ்க்கை, பிறகு கல்லூரி, வேலை, தொழில், நகரத்திற்கு இடப்பெயர்வு என இந்த முப்பது ஆண்டுகளில் வயலில் என்ன விதைத்திருக்கிறார்கள், எந்த நிலையில் இருக்கின்றது, எது எப்போது அறுவடை எதுவும் தெரியாது என்கிற அளவுக்கு மாறிப்போனேன். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை கிராமத்திற்குப் போனால் போதும், திரும்பி வரும்போது என்னவெல்லாம் இருக்கின்றதோ அவற்றில் தேவையானவற்றை அள்ளிக்கொண்டு வந்துவிடலாம்.

இந்த நிலையில்... அவ்வப்போது நகர்ப்புற மாடித் தோட்ட விவசாயிகள்(!) தம் தோட்டங்களில் அறுவடை செய்த காய்கறிகளை ஃபேஸ்புக், ட்விட்டரில் காட்சிப் படுத்துவதைப் பார்க்கும்போது, அடச்சே... இந்த மாதிரி நாமெல்லாம் எத்தனை செய்யலாம் எனப் புகை வரும். தோணினா மட்டும் போதுமா, அதற்கு மண்ணில் கால் வைக்க வேண்டுமே.

இந்தச் சூழலில்தான் பெருந்தொற்று முடக்கக் காலம் வந்தது. ஏப்ரல் மாதத்தில் இரண்டு வாரம் கிராமத்திலேயே தங்க வேண்டிய கட்டாயம். அப்போதுதான் வீட்டருகே இருபது வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத நீளமான ரிட்டயர்ட்வயல் கண்ணை உறுத்தியது. ஒரு பக்கம் வேலி, மற்ற பக்கம் கட்டுத்தரை, வீடு, வாசல் பயன்பாட்டு ஆக்கிரமிப்பு என்று ட்ராக்டர் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைய முடியாத மூலை அது. ஒரு ஓரத்தில் பெரிய மா மரம் மட்டும் உண்டு. ஆகஸ்ட் முதல் வாய்க்கால் தண்ணீர் வந்து, மழையும் பெய்து இணைந்து மேலே இருக்கும் வயல்களிலிருந்து வரும் உபரி நீர் மூன்று நான்கும் மாதங்கள் அதில் குளம் போல் தேங்கி நிற்கும்.

ஏப்ரலில் வறட்சிதான். எனினும் அக்டோபர் மாதத்தில் வரும் தண்ணீரைக் கணக்கில் கொண்டு, வேலி ஓரமாக வாய்க்கால் ஒன்றை ஏற்படுத்திவிட்டு, இரண்டு தசாப்தங்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாமல் சும்மா கிடந்த நிலத்தை மண்வெட்டியால் வெட்டினேன். பல வருடங்களுக்குப் பிறகு என்பதால் கை காப்புக் காய்த்தது, இரண்டு நாட்கள் ஒடம்பு அடித்துப் போட்டது போல் அசந்துபோனது. நிலத்தைக் கொத்தி, பண்படுத்தி ஆறேழு வகைக் கீரை மற்றும் வீட்டுப் பயன்பாட்டிற்கான காய்கறிச் செடிகள் என விதை தூவியதில், இந்த ஆறு மாதங்களாக கீரை, காய்கறிகள் தேவைக்கு பெரும்பாலும் கடையை நாடவில்லை. சில காய்கறிகளுக்கு கடையைத் தவிர்க்க முடியாது. அத்தோடு மனது ஓயவில்லை. சும்மா கிடக்கும் நிலமெங்கும், அதை வைக்கலாமே, இதை வைக்கலாமே எனும் யோசனைகள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. வைத்துக் கொண்டும் இருக்கின்றேன்.






கிராமத்தில் இருக்கும் விவசாயக் குடும்பங்களில் இப்படி பயன்பாட்டில் இருந்து கை விடப்பட்ட நிலம் என்று குறைந்தபட்சம் பல நூறு அல்லது சில ஆயிரம் சதுர அடிகள் சீண்டப்படாமல். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் சில சென்ட் நிலம். கிணற்று மேடு அருகே, வண்டித் தட திருப்பத்தில், குப்பைக் குழி அருகே, கொட்டகைக்குப் பின்புறம், கட்டுத்தரைப் பக்கம் என்று எங்கேனும் நிச்சயம் இருக்கும்., மீண்டும் சொல்கிறேன், இந்த நிலக் கணக்கு நகர்ப்புறத்தில் இல்லை. கிராமத்து விவசாய நிலங்களில் மட்டுமே.

சரி இப்படியெல்லாம் சொல்லிவிட்டால் விவசாயக் குடும்பங்கள் செய்து விடுமா? செய்யாது. ஏனென்றால் அவர்களின் இரத்தத்தில் ‘எதையும் வெட்டு வெட்டென்று வெட்டி வியர்வை சிந்துவது மட்டுமே விவசாயம். விளைவிப்பது என்பது விற்பதற்குத்தான். அதை அப்படியே தின்னும் பழக்கமில்லை. இதில் ஸ்மார்ட் வொர்க் என்பதற்கே வேலையே கிடையாது!’ எனும் நம்பிக்கை நஞ்சு கலந்திருக்கின்றது. காய்கறி, கீரை வகை, பழம் உள்ளிட்டவற்றின் தேவை மற்றும் பயன்கள் அறிந்த, விவசாய நிலம் வைத்திருந்தும் நகரத்திற்குள் தஞ்சம் புகுந்திருக்கும் இன்றைய தலைமுறையினர் இதைச் செய்ய வைக்க வேண்டும். வீட்டருகே நிலமிருக்கும் யாவருக்கும் இது பொருந்தலாம்.

திடீரென இந்த முடிவெடுத்தால், வீட்டுத் தேவைகளுக்கு எதையெல்லாம் பயிரிடலாம், எப்படிப் பயிரிடுவது எனும் குழப்பம் வரும். Youtube எனும் கடலில் தேடுங்கள். அத்தனையும் குவித்து வைத்திருக்கிறார்கள். ஒன்றைப் பார்த்தால் அடுத்தடுத்து என உங்களை மிகச் சுவாரஸ்யமான களத்திற்கு அது அழைத்துச் செல்கிறது.

மிகச் சரியாகத் திட்டமிட்டால் குடும்பத்திற்குத் தேவையான பெரும்பாலான காய்கறி, கீரை, பழ வகைகளை சுயமாக ஒவ்வொருவரும் பயிர் செய்து கொள்ள முடியும். நகரத்தில் செலவு செய்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியும்தான். ஆனால் தம் பார்வையில், தானே பயிரிட்டு வளர்த்து, சுத்தமாக, சுகாதாரமாக உண்ணும் சாத்தியமிருந்தும் நேரமில்லை, மண்ணுல கால் வைக்கனுமா எனும் கூச்சத்தோடு தவற விடுவதால் மண்ணுக்கு எந்த இழப்புமில்லை. இப்படியான முயற்சிகள் என்பது உடற்பயிற்சிக்கான மிகச் சிறந்த வாய்ப்பும் கூட. சமீப மாதங்களில், வாரத்தில் ஒரு நாள், வயலில் கடினமாக உழைப்பதன் வாயிலாக இரண்டு மூன்று நாட்கள் நடை, ஓட்டத்தில் கிட்டும் பலன்களை எட்டிவிடுகிறேன்.

விதையிட்டோ, பதியனிட்டோ ஒரு செடியை, மரத்தை வளர்த்தெடுப்பதில் வாழ்வின் மிக முக்கியமான பல்வேறு பாடங்களை செலவில்லாமல், ஆசான்கள் இல்லாமல் கற்க முடியும். ஒரு விதை போட்டால், அது ஒரு தானியத்தை, ஒரு காயை, ஒரு கனியை மட்டுமே தந்து விடுவதில்லை, ஒரு குடும்பத்தின் பசியாற்றும்.

செவி இரண்டு வாய் ஒன்று

நமக்கு வழங்கப்பட்டவை மேல் ஆயிரம் புலம்பல்கள் இருக்கலாம். ஆனால் இயற்கை எதையும் மிகச் சரியாகத்தான் படைத்திருக்கின்றது. ஊனமாகப் படைப்பதில் பிழை செய்துவிட்டாலும்கூட, இல்லாத ஒன்றிற்காக இருக்கும் ஒன்றில் ஆற்றல் கூட்டி அவர்களை சமன் செய்ய காலம் முயலாமல் இல்லை.

மிகச் சரியாகக் கொடுத்திருப்பதில், கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்கு துவாரம்கூட இரண்டு, ஏன் வாய் மட்டும் ஒன்று எனும் கேள்வி இல்லாமல் இல்லை. இது குறித்து ஆராயும் முன், நான் ஒப்புக்கொள்ளும் ஓர் உண்மை, செவி இரண்டு, வாய் ஒன்று . அந்த உண்மையை மதிக்கின்றேன்.

அதன் நிமித்தமாக நான் செய்வது... ‘பேசுவதைவிட நிறையக் கேட்க முயல்கிறேன்


கேட்பதன் தேவை இங்கு அதிகம். கேட்க மட்டும் பழகிக்கொள்ளுங்கள். இதுவரை வாசித்து, பார்த்து மிரண்ட சிறுகதைகள், நாவல்கள், சினிமாக்கள் எல்லாம், நீங்கள் கேட்காததால் உங்களிடம் இதுவரை உரைக்கப்படாமல் இருக்கும் உண்மைக் கதைகளின் முன்பு ஒன்றுமேயில்லை.

பல திசைகளிலிருந்து அழுத்தங்கள் தாக்கும் இந்த இறுக்கம் நிறைந்த நாட்களில், நானறிந்த சிலர், தனக்கே சுயமாகச் செய்யும் நல்ல காரியமாக உடைந்து கொட்டுகிறார்கள். இதுதான் இதுவரைக் கேட்டதிலேயே மிகக் கடினமானது என்று நினைத்திருப்பதை அடுத்த நாளே இன்னொருவர் உடைக்கிறார். நாம் ஒவ்வொருவரும் நினைப்பதுபோல், இன்னும் மிகச் சரியாக சொல்லப்போனால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதுபோல், வாழ்க்கை ஒன்றும் அத்தனை சாதாரணப்பட்டது இல்லை என்பதை ஒவ்வொரு நாளும் உணர்த்துகிறார்கள்.

இதையெல்லாம் கேட்டு என்ன செய்யப் போகிறேன். கேட்கிறேன்... அவ்வளவுதான். அதைச் செய், இதைச் செய், அதை அப்படிச் செய்திருக்கலாமே, இதை ஏன் இப்படிச் செய்யவில்லை என்றெல்லாம் கேட்பதில்லை. அவர்கள் சொல்லும் வேகம், வடிவம் புரிபடவில்லை என்றால் மட்டுமே கேள்விகள் கேட்பதுண்டு. எதுவுமே சொல்லாமல் இருக்க ஏன் கேட்க வேண்டும்.

பொதுவாக நம் உடலில் அவ்வப்போது நோய்க் கூறுகள் ஏற்படுவதுண்டு. உண்மையில் எல்லா நோய்க்கூறுகளுக்கும் நாம் சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. பல நோய்க்கூறுகள் மிக இயல்பாக உடலால் சரி செய்யப்பட்டுவிடுவதுண்டு. அப்படி சரி செய்யப்படாமல் விடுபடுகின்றவற்றுக்கு மட்டுமே சிகிச்சை தேவை.

இங்கும் அப்படித்தான் அழுத்தத்தில், அது கூட்டிய கனத்தில் சிந்திக்க மறந்து முடங்கியிருப்பவர்கள், ஒருகட்டத்தில் அழுத்த்தைப் பகிரும்போதே, அவர்களுடைய மனதே சிலபல தீர்வுகளை, ஆறுதல்களைக் கொடுக்க ஆரம்பிக்கின்றது. அதனால் பகிரும்போதே ஆசுவாசமும், பகிர்ந்ததும் நிம்மதியும், ஒருவித தெளிவும் கிட்டிவிடலாம். அதன்விதமாகவே ஒருமுறை முழுவதும் கொட்டி முடிக்கின்றவர்கள், மீண்டும் மீண்டும் அது குறித்து பெரும்பாலும் பேசுவதில்லை. அப்படிப் பேசாமல் இருக்க சுயமாக தெளிவடைவது ஒரு காரணம் என்றால், மற்றொரு முக்கியக் காரணம், தன் பிரச்சனையைப் பேசி முடிக்கும்போதுதான், ”அட இவ்ளோதானா!?” என்று அதுவரை பிரமாண்டமாக நினைத்திருந்த பிரச்சனையின் உண்மை வடிவம் புலப்படுவது.

சிலர் ‘நம்ம பிரச்சனையே நமக்கு பெருசு.. இதில் இன்னொருத்தர் பிரச்சனையை எங்கே கேட்பது!?’ எனச் சொல்வதுண்டு. சொல்வதும், கேட்பதும் அவரவர் விருப்பம், அவரவர் முடிவு. எதுவும் இங்கே கட்டாயம் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் எனக்கென்று ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதையும், மற்றவர்கள் சொல்வதையும் ஒரு போதும் இணைத்து குழப்பிக்கொள்வதில்லை. இது தனி, அது தனி. சில நேரங்களில் ஒப்பிட்டு அதிலிருந்து ஏதேனும் எடுத்துக் கொள்ள முடியுமா எனத் தேடுவதுண்டு. உண்மையில் கேட்கக் கேட்க வாழ்க்கை மீது ஒருவித தீவிரமும், பிடிமானமும் வருகின்றது. காரணம், கனத்தை இறக்கி ஒவ்வொருவரும், இத்தனையைக் கடந்து வந்திருக்கும்போது உனக்கென்ன எனும் கேள்வி எழுப்பும் தீவிரம் அது.

உதவி செய்வது என்பது காசு பணமாக, உடல் உழைப்பாக மட்டுமே எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. கனத்தோடு வருகின்றவர்களுக்கும், அதை இறக்கி வைக்க செவி கொடுத்தலே மிகப் பெரிய உதவி. இதில் மிக முக்கியமானது நம்பிப் பகிரலாம் எனும் இடத்தில் நாம் இருப்பது.

நினைவூட்ட விரும்பும், உணர்ந்து கொள்ள வேண்டியதொரு உண்மை.... நமக்கு செவி இரண்டு வாய் ஒன்று!

*

குரல் வடிவில் கேட்க...

Anchor :
https://anchor.fm/erodekathir/episodes/ep-eks3rf

சில அகக் கேள்விகளுக்கான பதில்

‘எதுக்கு இதெல்லாம் செய்திட்டிருக்கோம்?’ எனும் கேள்விகள் அவ்வப்போது எழுவதுண்டு. எப்போதாவதுதான் அதுவரையிலான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்கள் கிட்டும்.


அப்படியானதொரு பதில்...
அமெரிக்காவிலிருந்து...

இந்த நாளை இனிதாக்கியிருக்கும் கடிதம்.

~*~

தம்மா துண்டு புக்கு ஈரோடுல இருந்து கெளம்பி... மதுரைக்குப் போயி... லோக்கல் ஃப்ளைட் ஏறி சென்னைக்கு வந்து... அங்கேருந்து இன்டர்நேஷனல் ஃப்ளைட் புடிச்சி பத்தரமா அமெரிக்கா வந்து சேந்தாச்சு😁👏🙌 (பொட்டி வந்தாச்சு 🥳பொட்டி வந்தாச்சு 🥳பொட்டி வந்தாச்சு 🥳)... ஊருக்கே கூவி கூவி சொன்னாதான் கொண்டாட்டம்..

ஒரு புக்கு பின்னாடி ப்ளூ ஜிப்பாவ பந்தாவா மடிச்சு விட்டுகிட்டு கதிரய்யா நிக்கிறாரு. இன்னொரு புக்கு பின்னாடி சேர்ல ஸ்டைலா போஸ் குடுத்துகினு உக்காந்துருக்கார். ஃப்ளைட்ல ஏறி வர்றோமே... சீட்டு புடிச்சு உக்காருவோமே, சீட் பெல்ட் போட்டுப்போமேனு இல்லாம இப்டி நின்னுகிட்டு, சீட் பெல்ட் போடாம வந்துருக்காரு. இந்த சேட்டை எல்லாம் செய்யலாமா?😛🤭

ஏதோ என்னோட நல்ல நேரம் தப்பிச்சார். இல்லைனா அப்டியே பொட்டியோட திருப்பி ஈரோடுக்கே கடத்தி விட்ருப்பாக... ஆமா...🤭

பத்து நாட்களில் பொட்டி வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு வாரத்தில் பொட்டியும் அதில் ”வேட்கையோடு விளையாடு”, ”உறவெனும் திரைக்கதை” ஆகிய புத்தகங்களும் வந்து சேர்ந்தன.

இரு புத்தகங்கள் என் வீட்டிற்குள் நுழைந்தது என்று கூறாமல் தமிழ் என் வீட்டிற்குள் முத‌ல் முறையாக காலடி எடுத்து வைத்திருக்கிறது என்று கூறுவதே சரியானதாய் இருக்கும்😊

என் வாழ்க்கையில் நான் படித்த புத்தகங்கள் என்றால் பள்ளி, கல்லூரியில் படித்த பாடப் புத்தகங்கள் மட்டுமே. அந்த புத்தகங்களை படித்ததும்கூட விரும்பி விரும்பாமல், புரிந்தும் புரியாமல், பல நேரங்களில் கடம் தட்டி, மண்டையை குடைந்து, முட்டி மோதி... இறுதியில் படித்ததெல்லாம் அறிவை வளர்த்துக் கொள்ளவா? கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கா? பேருக்கு பட்டம் வாங்குவதற்கா? ஏதோ ஒரு வேலை தேடிக் கொள்வதற்கா? பணம் ஈட்டுவதற்கா? எந்த ஒரு தெளிதலும் இல்லாமலே படித்தாகி முடிந்தது.

இந்த பாடப் புத்தகங்கள் தவிர்த்து வேறு எந்த புத்தகமும் பெரிதாய் வாசித்ததாக நினைவில்லை. சிறு வயதில் எப்போதாவது வாரமலரின் குறுக்கெழுத்து போட்டி பக்கத்தில் சிறிது நேரம் மூழ்கிக் கிடப்பேன்.

தாய்மொழி தமிழ் இல்லை என்பதால் வீட்டுக்குள் தமிழ் பேச வாய்ப்பில்லை. திருமணம் முடிந்து அமெரிக்கா வந்த பின்னால் எனக்கும் தமிழுக்கும் முற்றிலும் தொடர்பு இல்லாமல் போனது.

ஆனால் தமிழ் பிடிக்குமானு கேட்டா ரொம்ப பிடிக்கும். அமெரிக்கா வந்து ஆண்டுகள் பல கழிந்தும் ஆங்கிலம் ஒரு அந்நிய மொழியாகத்தான் இருக்கின்றது. உண்மையாய் சொல்ல வேண்டும் என்றால் என் தாய்மொழியைவிட தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். வேணும்னா எனக்கு ரெண்டு தாய்மொழினு வெச்சிக்கலாம்).

நண்பர்களின் வற்புறுத்தலில் 2012-13 ஆண்டு ஃபேஸ்புக்கில் நுழைந்தேன். அடர்வனம் ஒன்றில் பயணிக்கும் வேளையில் செவிகளுக்கு எட்டும் ஒரு நதியின் ஓடையின் அருவியின் சப்தம் அத்திசை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும்.

அப்படிதான் ஒரு நாள் ஃபேஸ்புக்கில் அலைந்து திரிந்த வேளையில் ஒரே ஒரு வாக்கியம் தற்செயலாய் கண்ணில் தென்பட்டது "நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்"😊. அதை வாசிக்க வித்தியாசமாக இருந்தது.

சரி, உள்ள என்ன தான் இருக்குனு போயி தான் பாப்போம். பார்க்கத் தான் போனேன்..ஆனால் அங்கேயே தங்கிக் கொண்டேன். ஈரோடு கதிர் பக்கத்தை பின் தொடர ஆரம்பித்தேன்.

என்னை பொறுத்த அளவில் எந்த ஒரு விசயத்தையும் ஆ..ஊனு பிரம்மாண்டமாய் காட்ட வேண்டும்னு அவசியம் இல்லை. ரொம்ப சாதாரணமா, எளிமையா, தனக்கே உரித்தான நடையில், அறுசுவையும் சமச்சீராய் அளவாய் கலந்து, ரொம்பவும் திகட்டாம படிக்கிறதுக்கு பாந்தமா இருந்தா போதும். அப்படியானது தான் ஈரோடு கதிரின் எழுத்துக்கள்.

அந்த பக்கத்தில் தினமும் வரும் பதிவுகளை வாசித்து, வாசித்து ஒரு கட்டத்தில் தமிழ் எனக்கு அவ்வளவு பிடித்திருக்கானு என்னையே நான் கேட்டுகிட்டேன்.

ஒரு சூழலில் நெருங்கிய தோழியை விட்டு பிரிய வேண்டிய நேரம் வந்தது. ஃபோன்ல அந்த தோழிகூட பேசும் போது, நட்பின் பிரிவின் வலியை சொல்லி தோழி அழும் பொழுது... என்னையும் அறியாமல் அந்த கணத்தில் சில கவிதை வரிகள் (அது கவிதையானுகூட எனக்கு தெரியாது) மனசுல ஓடுது. ஃபோன் பேசிட்டு அந்த வரிகளை ஒரு பேப்பர்ல எழுதி மேலும் சில வரிகளை அதில் எழுதி முடித்தேன்.

அந்த தோழிக்கு எழுதிய கவிதையை பரிசாக குடுத்தேன். அதுக்கு அப்புறம் நண்பர்கள் கிட்ட கவிதையை பகிர்ந்து கொண்டப்ப எல்லாருக்கும் பிடிச்சது. அப்போதுதான் உணர்ந்தேன்... எனக்கும் ஏதோ கொஞ்சம் எழுத வருது போல..

இதை இந்த இடத்தில் சொல்லுவதற்கான காரணம்... ஈரோடு கதிரின் பக்கத்தை பின் தொடர்ந்து, அங்கே நான் வாசித்த அவரின் பதிவுகள் எனக்குள் ஒரு தாக்கத்தை, ஒரு தூண்டுதலை, எனக்குள் மெளனித்திருந்த தமிழை கொஞ்சம் கசிய செய்திருக்கிறது 😊..

அதுக்கு அப்புறம் எனக்கு மனசுல தோணுறது எல்லாம் எழுதிட்டு இருப்பேன். அதுக்காக தமிழ் எனக்கு சூப்பரா வருமானு கேட்டா எனக்கு தெரியாது. தமிழ் இலக்கணம் எல்லாம்... அது சுத்தமாவே மறந்து போச்சு... 'பின்ன நீ என்ன, எப்டிதான் எழுதுவ?’னு கேட்டா... எனக்கு தானா உள்ள இருந்து என்ன வருதோ எழுதுவேன் அவ்வளவு தான்.

ஓடுற ஆறு, வீசுற காத்து, பெய்யிற மழை, பாடும் பறவை, இயற்கையில் நடக்கும் எந்த விசயமும் எந்த விதிமுறை தெரிந்து, எதையும் கத்துகிட்டு செய்றது இல்ல. அது அது அதன் போக்குல இயங்கிட்டே இருக்குறது தான். அதுக்காக அதை எல்லாம் நாம ரசிக்காம இல்லையே. வர்றது எழுத வேண்டியது தான்😊..

எனக்கு எந்த புத்தகம் பெயரும், எழுத்தாளர் பெயரும்கூட பெரிசா தெரியாது. எப்படியா இருந்தாலும் புத்தகம் வாசிப்புனு ஒரு சிந்தனை வந்ததுக்கும்கூட கதிரின் எழுத்துக்கள் தான் காரணம். வாசிப்பதாக இருந்தால் முதலில் எழுத்தாளர் கதிரின் புத்தகம் தான் வாசிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில்😊இந்தியாவில் இருந்து குழம்புபொடி, ரசப்பொடி, சாம்பார்பொடிகளுடன், இனிப்பு காரத்துடன் புத்தகங்களும் வரவழைக்கப்பட்டு, புத்தகங்களை கண் குளிர பார்த்தாகிவிட்டது. பக்கங்களை புரட்டி கண்களால் அலசி ஆகிவிட்டது.

சிறு வயதில் பிடித்த கிடைத்த ஒரே ஒரு சாக்லேட் தீர்ந்துவிடக் கூடாது என்று கொஞ்ச கொஞ்சமாய் கடித்து, பேப்பரில் சுருட்டி ஒரு வாரத்திற்கு தக்க வைத்து..இறுதியில் பேப்பரில் ஒட்டி போன மீதத்தையும் வீணடிக்காமல் பேப்பரை மென்று சுவைத்ததைப் போல்... நாளுக்கு ஒரு கட்டுரை படிக்க முடிவு எடுத்து‌ள்ளேன் 😉

தம்மா துண்டு புக்குக்கு இம்மாம் பெரிசா எழுத வேண்டி இருக்கு. இன்னும் எழுதலாம் படிக்கிற எழுத்தாளருக்கு கொஞ்சம் break குடுப்போம் 😁

'நிறைய எழுது; நிறைய வாசி'... கண்டிப்பாக நிறைய எழுதுவேன் வாசிப்பேன்🙏