கீச்சுகள் தொகுப்பு - 68

பொதுவாகவே இரவுகள் நேசங்களால் வேயப்பட்டு விடுகின்றன...!

-

முத்தத்தின் பிழையில் சுவை கூடும் முரணுண்டு!

-

வியர்வையில் சரசமாடும் மாலைக் காற்றுக்கும் பிரியம் என்றே பெயர்!

-

பேரன்பு எனப்படுவது வேரிலும் விளையும், கிளையிலும் காய்க்கும்!

 -
  
சிறு மழையெனும் மருதாணி வாசம்

-
 
வெயில் திண்மமாய் உறைந்து கிடக்கிறது. துணிகின்றவர்களை ஊடறுத்துச் செல்லப் பணிக்கிறது.

-

பகை கொள்ள கணப்பொழுதென்றால் அதை முடிக்க அதில் காற்பொழுது போதும். எப்போதென்பதை தீர்மானிக்கும் காலம்தான் இங்கு தெய்வம்.

-

அவசியத் தேவையென்று வரும்போது, வலிக்கும் என்பதற்காக அறுவை சிகிச்சைகளுக்கு மறுப்பா சொல்ல முடியும்!?

-

உரிமைதான் உறவுகளின் இரத்த நாளம்

-

புரிந்துகொள்ளச் சிரமம் தான்! ஆனால் ஏற்றுக்கொள்ள அவ்வளவு சிரமமில்லை! :)

-
 
விவசாயம் மக்களைக் காப்பாற்றிய காலம் போய், “விவசாயம் காப்போம்என மக்கள் சொல்லும் காலத்தில் இருக்கின்றோம் :(

-

மனதிற்குள் நீந்தும் சொற்கள் சில நேரங்களில் கண்களுக்குள் பரவி விடுகின்றன!

-

மௌனம் என்பது ஒரு மாயப் பெட்டி.... அதற்குள் எதையும் போட்டு வைக்கலாம்... தேவைப்படுகையில் கைவிட்டு எதையேனும் அள்ளிக்கொள்ளலாம்.

-
 
மனம் ஒரு மாய வசீகரம் பிணைந்த ஒரு பேராற்றல். எப்போதும் பசித்திருக்கும் ஒரு பெரும் ஜீவன்

-
 
உறவுகளை வளர்ப்பதும் சிதைப்பதும்... சொற்களைப் பயன்படுத்தும் சில தருணங்களே...!

-
 
மழையை யோசிச்சாலும், நேசிச்சாலும் அதன் ஈரம் மற்றும் குளிரோடு, கொஞ்சம் புழுக்கமும் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

-

சொற்களை வெறும் சொற்களாய்ப் பார்த்தால், அவை எழுத்துகளால் நிரப்பப்பட்ட சொற்கள் மட்டுமே!

-

மௌனமும் ஒரு விருந்தாளி போலத்தான்.

-

உதவி என்ற பெயரில் ஒருமுறை ஏமாந்து கொள்ளுங்கள். அதுவொன்றும் பெரிய குற்றமில்லை. ஆனால்... மீண்டும் மீண்டும் என்பது....!!!!!
 
-
 
நன்றாக யோசித்துப் பாருங்கள்... அன்பு என்பது பல நேரங்களில் வெறும் சொற்கள் தான்!

-

உடைதல் எளிது... முறிதல் வலிது!

-

கர்வத்தின் கரைசல் காமம்!

-
 
புன்னகைக்கும் முன் இதழ்களைக் கொஞ்சம் ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். வறண்ட புன்னகை உயிரற்றது.

-
 
டைனோசர் அழிஞ்சு போனதுக்கு ஒரு சின்னப்பூச்சி கூட காரணமாக இருக்கலாம்!

-

பகிரப்படாத துக்கம் மட்டுமில்லை, பகிர முடியாத மகிழ்ச்சியும் சுமைதான்!

-
 
பேரன்பு எப்போதும் 'பிடித்ததை விட்டுக்கொடுஎன்றே கோருகிறது!

-
 
நாம் கோர்க்கும் சொற்களை வாசிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதையும் தாண்டி சேமிக்கிறார்கள் என அறியும் தருணம் குதூகலமானவை.

-

கடலுக்கடியிலும் நிலம்தான்!

-
 
எத்தனை எழுதி ஓய்ந்தாலும் தீர்ந்து போகாத கதைகளும், மனிதர்களும் இங்கு எப்போதுமுண்டு. அதனாலென்ன, இன்னும் காலம் இருக்கின்றது.

-

ஒரு விவாதத்தை மொக்கையா முறித்துப்போடும் சொற்களில் மிக முக்கியமானவை "ok leave it"

-

சில நேரங்களில்... ஓட்டம் உற்சாகம் தருவதாகவும், ஓய்வு களைப்பூட்டுவதாகவும்!

-

உங்களின் பல கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. சமாதானங்கள் மட்டுமே இருக்கின்றன!

-
எல்லாவற்றிலும் முடிவு எட்ட முடியாது... பலவற்றில் முடிவு மாதிரி ஒன்றைத்தான் எட்ட முடியும்!

-


1 comment:

kumaran said...

Many of these crisp expressions are unique and brief...The brevity factor gives more opportunity for the reader to imagine many interpretations....The thought level it triggers in many lines are sublime... Admirable..