ஒழுக்கமாய் இருப்பதற்கு மிரட்டத் தேவையில்லை

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் பள்ளிகளில் கழிவறைகள் கட்டுவதற்கு பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடுகள் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் பத்தாயிரமா....!? என்று யோசனை வராமல் இல்லை. அந்தத் திட்டம் தொழில் நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், முன்னாள் மாணவர்கள், சேவை நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியோடு நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் செய்தி சொல்கின்றது. 

இதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தொழில் நிறுவனங்களைச் சந்திக்க திட்டமிட்டிருக்கிறாராம். அந்தந்தப் பகுதி நிறுவனங்கள், சேவை அமைப்புகள், முன்னாள் மாணவர்களின் உதவியோடு இது மிக எளிதாக எட்டிவிடும் இலக்கென்றே கருதத் தோன்றுகிறது. இந்தத் திட்டத்திற்காக அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும், பல்வேறு மாற்றங்களின் மூலமாக இருக்கும் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

வயது வந்த பிள்ளைகள் கழிவறைகளுக்காக அல்லாட விடுவதைவிட பெரிய கொடுமைகளை அவர்களுக்கு கொடுத்துவிட முடியாது. பள்ளிக்கூடத்தில் நிகழ்த்த வேண்டிய மாற்றாங்கள் குறித்து எப்போது பேச்சு வந்தாலும், முதலில் கழிவறைகளை அமையுங்கள் அல்லது இருப்பதை மேம்படுத்துங்கள் என்றே தோன்றும். அதுதான் மிக மிக முக்கியம், ஆனால் அதில்தான் பொதுவாக நாம் மிக மிக மோசமான கவனத்தை செலுத்தி வந்திருக்கின்றோம் எனச் சொல்லலாம். இப்போது அதற்கான ஒரு தீர்வு வருகின்றது என்பதே பெரும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.இதை மகிழ்வோடு எதிர்கொள்ளும் அதே சமயம், இத்தனையாண்டுகளாக இத்தனை கழிவறைகளின் தேவையிருந்தும், தொடர்புடையவர்கள் கண் மூடியிருந்ததற்கு வெட்கப்பட்டுதான் ஆகவேண்டும். அப்ப அரசுப்பள்ளிகளில் கழிவறைகள்கூட இல்லாமல் இருந்தனவா?’ என்ற கேள்விக்கு, பாரதி கிருஷ்ணக்குமாரின் எனக்கில்லையா கல்விஆவணப்படம் உள்ளிட்ட பல ஆதாரங்கள் ஆமாம்என காலம்காலமாக சவுக்கால் அடித்துச் சொல்லிக்கொண்டேதான் இருந்திருக்கின்றன.

சமீபத்தில் திருச்சி மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்களே பிளாஸ்டிக் கேன் உதவியோடு கழிவறைகளை ஏற்படுத்தியிருப்பது குறித்த செய்தியைப் பகிர்ந்தபோது, வசதிகள் செய்துகொடுத்தாலும் மாணவர்கள் அவற்றை பத்திரமாக வைத்திருக்காமல், சேதப்படுத்தி விடுவதாக ஒரு முணுமுணுப்பு வந்தது. அதை சட்டெனப் புறந்தள்ளி விடாமல் ஏன் அப்படி என ஆராய்வது முக்கியமானது. நன்றாக இருக்கும் ஒன்றை எதன் நிமித்தமோ சேதப்படுத்தும் கோளாறான மனநிலை சிலருக்கு இருப்பதை மறுக்க முடியாது. தனக்கு எந்த விதத்திலும் தொடர்பேயில்லாத ஒருவரின் கார் சாலையோரத்தில் நிற்க, அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு குடிகாரன் சல்லிக்கற்களை வைத்து கார் முழுக்க கோடு போட்டு வைத்திருந்திருந்தான். பிரச்சனை முற்றி அந்த ஆளின் வீட்டு ஓனரால் காலி செய்ய வைக்கப்பட்டது. சில வக்கிரங்களுக்கு, குற்றங்களுக்கு மிக மேலோட்டமான காரணம் போதும் அல்லது கற்பனையே செய்து பார்க்க முடியாதது மாதிரியான ஆழமான காரணம் உள்ளுக்குள் புதைந்து கிடக்கும்.

ஆனால் நன்றாக இல்லாத ஒன்றை, மேலும் சிதைப்பதை மனிதன் ஒரு வடிகாலாக வைத்திருக்கிறான். நன்றாக மூடும் பொதுக் கழிவறைக் கதவை மூடுவான் திறப்பான். அதே சமயம் தாள் ஒழுங்கா பூட்டாத கதவை எரிச்சலில் எட்டி உதைக்கவே செய்வான். ஆக நன்றாக இருப்பதை சிதைப்பவர்கள் 10% என்றால், நன்றாக இல்லாததைச் சிதைப்பவர்கள் 50-60% ஆக இருக்கலாம். இயலாமையை எதிர்ப்பைக் காட்டும் வழிகள் மனிதனுக்கு பல நேரங்களில் கொடூரமானதாகவே வாய்த்துவிடுகின்றன. குறைந்த பட்சம் எப்போதும் தண்ணீர் இருப்பதையும், குழாய்கள் உடைந்திருக்காத நிலை மற்றும் தண்ணீர்க் கசிவு இல்லாததையும் பொதுக் கழிவறைகளில் உறுதி செய்தாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும், சேதங்கள் குறையும்.

2011ல் மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் ராமம்பாளையம் அரசுப் பள்ளியை மேம்படுத்தப்பட்ட பள்ளியாக அதன் ஆசிரியர் ஃப்ராங்ளின் மாற்றி வைத்திருந்தார். வகுப்பறைகளும், அதன் சுவர்களும் துளியும் கறைபடாமல் அப்படியே பளிச்சென இருந்தன. அந்த வகுப்பறைகள் புதுப்பிக்கப்பட்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அதில் புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் துவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு படவில்லை. எப்படி சாத்தியம் இது எனக் கேட்டபோது, “மாணவனுக்கு சுவற்றில் அழுக்கு செய்தால், அதை சுத்தம் செய்வது எவ்ளோ கடினம் என்பதையும், மீண்டும் வர்ணம் பூச ஆகும் செலவுகள் குறித்தும் எடுத்துக் கூறியிருப்பதால், ஒரு துளி அழுக்குப்படாமல் இருக்கின்றதுஎன்றார்.


பிள்ளைகள் ஒழுக்கமாய் இருப்பதற்கு மிரட்டத் தேவையில்லை. தேவைப்படுவதைச் செய்து கொடுத்தல் அவசியம். திட்டங்களில், செயல்பாடுகளில் நாம் நேர்மையாய் நடந்துகொள்வது முக்கியம். நிதானமாய் பொறுப்பாய் சொல்லிக் கொடுப்பது அதனினும் முக்கியம்.

No comments: