R.I.P சிந்தாமணி ஒயின்ஸ்

சிந்தாமணி ஒயின்ஸ், ஒரு ஒயின்ஸ் கடைக்கான எந்த லட்சணத்தோடும் இருக்காது. சிந்தாமணி ஒயின்ஸ் என்பது ரொம்பப் பழைய பெயர். பத்தாண்டுகளுக்கும் மேலாக அது அரசின் அமுதசுரபியான டாஸ்மாக். எனினும் டாஸ்மாக் கடைக்கான எந்த லட்சணமும் அதில் இருக்காது. அதுவொரு நடை வீடு. அடுத்தடுத்து அறைகள் கொண்டு நீளமாக இருக்கும் வீட்டிற்கு நடை வீடு என்று பெயர்.

அந்த வீடு ஒரு மதுக் கடையாக மாறி கால் நூற்றாண்டுகளுக்கு மேல் இருக்கலாம். எனக்குத் தெரிந்தே இருபது வருடங்களுக்கு மேலாக அதில் மது விற்பனை நடக்கிறது. அரசின் ஒரு அமைப்பான சிந்தாமணிதான் அந்த மதுக்கடையை முதலில் நடத்தி வந்தது. அக்கம்பக்கம் போட்டிக் கடைகள் உண்டு. நூறு மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற மாஸ் ஒயின்ஸ். எதிர் சாரியில் நூற்றைம்பது மீட்டர் தொலைவில் மூர்த்தி ஒயின்ஸ். பக்கவாட்டில் ஒரு பார், இன்னொரு டாஸ்மாக் என, ஆயிரம் அடி சுற்றளவிற்குள் ஐந்து கடைகள். அவ்வளவு அடர்த்தியாய் கடைகள் அமைந்ததன் தேவையென்ன என்பது குறித்து பல நேரங்களில் விவாதித்ததுண்டு.

கடைகள் புடைசூழ மையத்தில் சிந்தாமணி ஒயின்ஸ் இருந்தாலும், அப்படியொரு கடை இருப்பது பளிச்செனத் தெரியாதுதான் அதன் பலவீனம். காரணம், அதன் வாஸ்துஅப்படி. பாரம்பரியமான புகழ்பெற்ற நவீன வசதி கொண்டபார் அந்தக் கடையிலும் உண்டு. பார் நடத்தும் முதலாளிகள் மட்டும் அடிக்கடி மாறிக் கொண்டேயிருப்பார்கள். பார் நடத்திக்கொண்டிருந்த ஒருவரை அவ்வப்போது எதிர்ப்பக்கம் இருந்த டீக் கடையில் சந்தித்ததுண்டு. பார் நடத்துவதற்கான டெண்டர் போக, மாதா மாதம் பல இடங்களில் அளிக்கப்படும் மாமூல்களால், பார் நடத்த முடியவில்லை என பலரிடம் புலம்புவார்.

கெத்தாக குடிக்கச் செல்பவர்களுக்கானது மாஸ் ஒயின்ஸ். ஓரளவு பிரபலமான முகங்களை மாஸ் ஒயின்ஸ் வாசலில் அடிக்கடி காண முடியும். மாஸ் ஒயின்ஸ் இந்தப் பகுதிக்கு லேண்ட் மார்க். அருகே ஆஸ்பிடல், நகராட்சியின் ஒரு அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என எது வந்தபோதும் அந்தக் கடைக்கான கெத்து மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை. இதற்கும் அடுத்த படி நிலையாகக் கருதுவோர் செல்லும் இடம் தான் மூர்த்தி ஒயின்ஸ்.

சிந்தாமணி ஒயின்ஸின் சாபக்கேடு, ஏற்கனவே சொன்னதுபோல், அப்படியொரு கடை இருக்கும் லட்சணமே தெரியாததுதான். முகப்பு பரபரப்பான சாலையில் பழக்கடை, மெஸ், டீக்கடை ஆகியற்றுக்கு நடுவே நசுங்கிக் கிடக்கும். சாலையை விட்டு உள் நுழைந்தாலே இருள் அப்பிக் கிடக்கும். ஆனால் இந்தக் கடைக்கு இருக்கும் கூடுதல் வசதி, அதற்கு பின் வாசல் உண்டு என்பதுதான். ஆனால் அந்த பின் வாசல் என்பது ஒரு அச்சு அசல் மூத்திரச் சந்து. ஆக இருளடைந்த முன் வாசல் வழியாக வருவதோ, மூத்திரச் சந்தாகக் கிடக்கும் பின் வாசல் வழியாக கடைக்குள் செல்வதோ புதியவர்களுக்கு எளிதானதல்ல.

ஆனால் விளிம்பு நிலை மனிதர்களுக்கான மையமாக, இளைப்பாறும் இடமாக பின் வாசல் வாய்த்தது. ஒரு கட்டத்தில் பாதையாக இருந்த அந்த சந்து, குடி மக்களின் ஆக்கிரமிப்பால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு முட்டுச் சந்தாக, மூத்திரச் சந்தாக மாறிப்போனது.எப்போதும் பின் வாசல் சந்தில் அருகாமை கட்டிடச் சுவரோரம் அமர்ந்து ஒரு குப்பி சரக்கை பங்கு பிரித்தபடி இருக்கும் சிலரை எப்போதும் பார்க்க முடியும். கூலி வேலைக்குச் செல்வோர், குப்பை பொறுக்குவோர் என்பதான மனிதர்கள் அந்த பின்பக்கத்தில் மொய்த்துக் கிடப்பர். அடிக்கடி தென்பட்டதாலேயே சில முகங்கள் மனதில் தங்கிவிட்டன. அந்த முகங்களில் வயதான சில பெண்களும் அடக்கம். குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்குள் அவர்கள் காணாமல் போவதும், அவர்களுடைய இடத்தை அவர்களுக்கு நிகரானவர்கள் நிரப்புவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டன. அப்படி காணாமல் போகிறவர்கள் என்பவர்கள் பெரும்பாலும் மாண்டு போகிறவர்களே எனக் கேள்விப்படுவதுண்டு.

இத்தனையாண்டுகளும் சோம்பிக் கிடந்த சிந்தாமணி ஒயின்ஸ் என்ற டாஸ்மாக்கிற்கு ஒருநாள் வெளிச்சம் பிறந்தது. கூட்டம் வரிசை கட்டி நின்றது. எப்படி இந்த அதிசயமென, அதிர்ந்து போய் விசாரிக்க, நீதிமன்ற ஆணைக்கிணங்க பல கடைகள் மூடப்பட, திறந்திருக்கும் கடைகள் எங்கிருந்தாலும் தேடி வந்தடையும் குடி மக்களின் கூட்டம் அதுவெனப் புரிந்தது. சிந்தாமணி ஒயின்ஸ்க்கே இந்த வாழ்வென்றால், அப்ப மாஸ் ஒயின்ஸ்!? முதலிரு நாட்கள் எள் விழுந்தால் எண்ணையாகிவிடும் எனும் உவமைக்கு நிகரான கூட்டம் அந்தக் கடை முன்பு. அடேய்அடடேய்எங்கிருந்துய்யா வர்றீங்க!எனும் கேள்வி அடி மனதில் எழாமல் இல்லை. போய் கேட்கவா முடியும்?. நாட்கள் போகப் போக கூட்டம் கொஞ்சம் மட்டுப் பட்டது. சிந்தாமணி ஒயின்ஸில் பழையபடி வாடிக்கையாளர்கள் தேய்ந்தார்கள்.

இப்படியாக, பெரும் பரபரப்பு, சுவாரஸ்யம், திருப்பு முனைகள் இல்லாமல் சவசவத்துக் கொண்டிருக்கும் சிந்தாமணி ஒயின்ஸ் வரலாற்றை எவ்வளவு நேரம் தான் கேட்பது? முற்றுப்புள்ளி வேண்டுமென விரும்புகிறீர்களா!?

நெடுஞ்சாலையை அழுந்த இருந்தும் சிந்தாமணி, மாஸ் ஒயின்ஸ்கள் மட்டும் எதன் பலத்தாலோ மூடு விழா காணாமல் தப்பித்து வந்த மர்மம் புரியாமலே இருந்தது போலவே, நான்கைந்து நாட்களுக்கு முன்பு திடீரென மூடப்பட்ட மர்மமும் புரியவில்லை. இப்படியாக மூத்திரச்சந்தில் ஜீவித்து வந்த சிந்தாமணி ஒயின்சும், கெத்தாக வீற்றிருந்த மாஸ் ஒயின்சும் ஒரு முற்றுப்புள்ளியில் நிற்கின்றன. எப்போதும் லாரியில் வந்து, கடைகளுக்குள் சாரை சாரையாகச் செல்லும் சரக்குப் பெட்டிகள், முதன் முறையாக கடைக்குள் இருந்து வெளியேறி காத்திருந்த லாரிக்குள் தஞ்சம் புகுந்து கொண்டிருந்தன.கடைசி வரிகளை எழுதும்போது, இத்தனை ஆண்டுகளாக பல்வேறு தருணங்களில், நிலைகளில் மென்மையான வீக்கத்தையும், மதமதப்பையும் சுமந்து திரிந்த பல தரப்பட்ட மனிதர்களின் முகங்களெல்லாம் நினைவில் வந்து போகின்றன.

ஆனாலும் ஆனந்தமாய்ச் சொல்லலாம்...
“R.I.P சிந்தாமணி ஒயின்ஸ்


2 comments:

Muhammed Jailani said...

மகிழ்ச்சி :)

Mathu S said...

நிறைவு...
ஆனால் ஒரு சோக கீதம் போலவே இருக்கிறது.

மகிழ்வாக அல்லவா இருக்க வேண்டும்