பகிர்தல் (30.10.2010)

நுட்பத்தின் கனம்:

மூன்று வருடங்களாக அவதானித்துக் கொண்டு வருகிறேன். வழக்கமாக கடிதம் கொடுக்க வரும் பையன். எப்போதும் முகத்தை இருக்கமாகவே வைத்திருப்பான். இயந்திரத்தனமாய் கடிதத்தை மேசை மேல் கிட்டத்தட்ட போடுவது போல் வைத்துவிட்டு, கையொப்பம் பெற்றுச் செல்பவன். கடந்த இரண்டு வருடம் போலவே, மூன்றாவது ஆண்டாக கவனிக்கிறேன், ஏனோ நேற்றிலிருந்து வணக்கம் சொல்ல ஆரம்பித்துவிட்டான். இன்று கூடுதலாக சிரித்தான். அவன் போன பின் தான் ஆச்சரியப்பட்டாசு மனதிற்குள் வெடித்தது அட தீபாவளி வருதுல்ல. ஊர்ல எல்லோருமே நுட்பமாத்தான் யோசிக்கிறாங்க போல. நானும் பல இடங்களில் அந்தப் பையன் பயன்படுத்தும் நுட்பத்தை கூடுதலான அல்லது குறைவான கனத்தோடு பயன்படுத்தாமலா இருந்திருப்பேன்.

பன்னாட்டு முனையம்:

சமீபத்தில் சென்னை பன்னாட்டு விமான நிலைய முனையத்தில் கண்ட சில காட்சிகள் நான் இண்டியேண்ட்டா என்று பெருமையாய் மார்தட்டிக் கொள்ளும் வகையில்தான் இருந்தது. இது போல்தான் இந்தியாவின் மற்ற ஊர்களிலும், பன்னாட்டு முனையங்கள் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. 


ஒரு கழிவறைக்குச் சென்று விட்டு திரும்பும் போது நண்பர் “மாப்ள நம்ம லட்சணத்த பாரேன் எனச் சுட்டிக் காட்டினார், தானாக கதவு மூட கருவியை பொருத்திவிட்டு பார்த்திருப்பார்கள் போல, திறக்கும் போதெல்லாம் சுவற்றில் இடித்ததோ என்னவோ,  சுவற்றையே குடைந்து விட்டார்கள். குடைந்த இடத்தை கொஞ்சம் பூசி மெழுக ஒப்பந்தப் பணத்தில் காசு இல்லாமல் இருந்திருக்குமோ என்னவோ. முக்கியமான நகைச்சுவை என்ற வென்றால் கழிவறைக்குள் ஒரு EXIT என்ற பலகை வேறு. எங்கே உட்கார்ந்து யோசிச்சாங்களோ தெரியல!

மகிழ்ச்சி:

சில வாரங்களுக்கு முன் எழுதிய ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய் இடுகைக்கு கிடைத்த வரவேற்பு மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. வாசித்த பலர் அந்த உணவுச்சாலை உரிமையாளரைத் தொடர்பு கொண்டு வாழ்த்தியதும், பொருளாதார உதவி புரிந்ததும் நன்றிக்குரியது. அந்த இடுகையை BUZZ மற்றும் மின் மடல்கள், குழுமங்கள் வாயிலாக நிறையப் பேர் தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருந்திருக்கின்றனர். திரு.வெங்கட்ராமன் சார்பாகவும் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பதிவர் லக்கியின்  உதவியால் நான் எழுதிய கட்டுரையை ஒட்டிய ஒருபக்கச் செய்தி புதிய தலைமுறை வார இதழில் படங்களுடனும் திரு.வெங்கட்ராமன் அவர்களைப் பற்றிய விபரங்களுடனும் வெளிவந்துள்ளது. புதிய தலைமுறை மற்றும் பதிவர் யுவகிருஷ்ணா ஆகியோருக்கு நன்றிகள்.

கடுப்பு (அ) ஆச்சர்யம்:

ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு மதிய உணவை வழங்கிவரும் திரு. வெங்கட்ராமன் அவர்கள் சொன்னதில் ஆச்சரியத்தையும் கூடவே கடுப்பையும் ஏற்படுத்திய சுவாரசியமான தகவல். ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்குவதை ஊக்கு(!)விக்கிறோம் பேர்வழி என ஒரு தம்பதி தங்கள் மகனின் பிறந்த நாளுக்கு 15 ரூபாய் கொடுத்து பதினைந்து பேருக்கு உணவு வழங்குங்கள் என்று கூறினார்களாம், அடுத்து வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர், நான் 5000 ரூபாய் தந்தால், 5000 பேருக்கு உணவு கொடுப்பீர்களா  என்றும் கேட்டிருக்கிறார். உண்மையிலேயே அவர்களுக்கு புரிதலில் ஏதும் பிரச்சனையா என்ற ஆச்சரியமும், மனிதர்களில் இப்படியுமா என்ற கடுப்புமே வருகிறது, என்ன செய்ய?

விடாத எந்ந்ந்ந்ந்...திரன்:

இந்த மாதம் பேசுவதற்காக ஏறிய மூன்று மேடைகளிலும், பேசியவர்களில் பெரும்பாலானோர் தவறாமல் குறிப்பிட்ட ஒரு வார்த்தை எந்ந்ந்ந்...திரன். எதைப் பேசினாலும், அதற்கு ஒரு விளம்பரம் என்று நினைக்கும் நிறுவனத்திற்கு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றோம், இங்கு எழுதுவது உட்பட. (பொறுப்பி : இன்ன்ன்ன்னும் படம் பார்க்கல)


சுட்டதில் பிடித்தது:

தன்கையே தனக்குதவி

துணுக்குகள்:

உதகை மலை ரயில் மலையளவு பிரச்சனைகளை சந்திக்கின்றது... (செய்தி )

இந்த எதுகை மோனைக்கு ஒன்றும் குறைச்சலில்லை

-000000-

ஸ்ரீரங்கத்தில் ஜெ. 100 ரூவா நோட்டுகளில் காணிக்கை. (செய்தி)
மக்களோட பாடு பரவாயில்ல போல 500 / 1000 ரூவா நோட்டாத்தான் ஓட்டுக்கு வாங்குறாங்க

-000000-

திருப்பதி கோவிலில் ஊழல் தலைவிரித்தாடுகிறது...(செய்தி)
அட புடிச்சு மொட்டையடிச்சு விடுங்கப்பா!!!!  (எப்பவோ விகடனில் வந்த ட்விட்டு)

-000000-

காலங்காத்தால பொசு பொசுன்னு பெய்யுற மழை..  சுகமோ சுகம்

-000000-

தமிழ்நாட்டில் 10,430 தனியார் பள்ளிகள் உள்ளன...(செய்தி)

கல்வியை மட்டும்தானே(!) வித்துட்டோம்.
சரக்கு சப்ளை கவர்மெண்ட் கைவசம்தானே இருக்கு..

-000000-

ஓங்கி அறையும் ஆயிஷா

நம் வீடு தவிர்த்து, நண்பர்கள் வீட்டில் தங்கும் போது வெறுமையாய் கிடைக்கும் நேரம் எப்பொழுதுமே சுவாரசியம் நிறைந்த ஒன்று. அங்கு கிடக்கும் புத்தகங்கள், படங்கள், புகைப்பட தொகுப்புகள் என அவர்களின் சுவை பற்றி அறிந்து கொள்வதில் இருக்கும் சுகம் கொஞ்சம் அலாதியானது. அப்படி ஒரு தங்கலில் எனக்கு கிடைத்த வாய்ப்பு ஒரு அழகிய புத்தக அலமாரி. அலமாரி நிறைந்து கிடந்தால், ஆகா இவ்வளவா என்ற பிரமிப்பு, அதைக் கிண்டிப்பார்க்கும் ஆர்வத்தை கொஞ்சம் குறைத்து விடுவதாகவே உணர்வதுண்டு. நான்கடுக்கு கொண்ட அந்த அலமாரியின் இரண்டு தட்டுகளில் மட்டும் புத்தகம் அழகாய் கிடந்தன. இருக்கும் நேரத்தையும், சோம்பேறித்தனத்தையும் கணக்கிலிட்டு சின்னதாய் இருக்கும் சில புத்தகங்களை மட்டும் கையகப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தேன்.

அப்படிக் கைக்கொண்டதிலும் மிகக் குறைந்த தடிமனான புத்தகமே முதல் தேர்வாய் மாற புரட்ட ஆரம்பித்தேன். கருப்பு நிறத்தில் அட்டைப் படமும், ஆயிஷா என்ற தலைப்போடும் இருந்தது.



ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை என்ற தலைப்போடு அந்தப் புத்தக வரிகள் துவங்க, முன்னுரைதான் புத்தகமோ என்ற நினைப்போடு வரிகளை மேய, மிக அழகாய் உள்ளிழுத்துக்கொண்டு போகிறது வரிகள். சீரான வேகத்தில் போகும் வாசிப்பை, காந்தம் குறித்து ஆசிரியை நடத்தும் வகுப்பில் மிஸ்என்ற குரலோடு எழும் ஆயிஷாவின் குரல் தடம் மாற்றுகிறது.

மிஸ் என்று எழுந்தவளை என்ன வாந்தி வருதாஎன வக்கிர வார்த்தையில் கேள்வி கேட்கும் ஆசிரியை என் உயர்நிலைப் பள்ளி வாத்தியார்கள் சிலரை கண்ணுக்குள் போட்டு நிரப்பியது.

ஆனாலும் அன்று ஆயிஷா துரத்தித் துரத்திக் கேட்கும் கேள்விகளில் செக்குமாடாய் கல்வி கற்பிப்பதில் செத்துப் போயிருந்த ஆசிரியை முதல் முறையாய் ஆசிரியையாக பிறப்பெடுக்கிறார். தொடர்ந்து ஆயிஷா கேள்விகளால் ஆசிரியையோடு மிகப் பெரிய உறவுக் கோட்டையை எழுப்புகிறாள். அது அந்த ஆசிரியை புதிதாய் வாசிக்க, கற்றுக்கொள்ள, தேட உயிர்ப்புத் தருகிறது.

அதேசமயம், பத்தாம் வகுப்பு மாணவியாய் இருந்து கொண்டு பதினொன்றாம் வகுப்பு மாணவிக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அறிவு(!) மெச்சப்படாமல், குற்றமாக தூக்கிலப்படுகிறது. அறிவைக் கொலை செய்யும் போது உருவாகும் வலி கொடியது என்பது எவருக்குப் புரிகிறது. அறிவைத் தூர்வாரும் ஆயிஷாவின் கேள்விகள், பல ஆசிரியைகளை அடித்துத் துன்புறுத்துகிறது. நாம் கண்டு கடந்து வந்த பல ஆசிரியைகளின் உலகத்தை ரெஜினா என்ற ஆசிரியை மூலம் நினைவும் படுத்துகிறது.

ஆயிஷாவின் மனதிற்குள் துளிர்த்த விஞ்ஞானம் குறித்த மிகப் பெரிய தேடுதலே ஆயிஷாவை தன் பசிக்கு புசித்துக்கொள்கிறது. பக்கங்களை முடித்து, மனதிற்குள் சுவர்கள் வெடித்து, புத்தகத்தை கீழே வைக்கும் போது கண்களுக்குள் நெருப்பாய் கொதிக்கிறது, நானும், நாமும் நம்மைச் சீண்டிய பல கேள்விகளுக்காகவும், இன்னபிற அறிவுப்பூர்வமான(!) காரணங்களுக்காகவும் முடக்கிப் போட்ட ஆயிஷாக்களின் உருவங்கள்.

**********
உபரித்தகவல்: தமிழில் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான புத்தகம். 8 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மிக முக்கியம்: குழந்தைகளுக்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் தவறாமல் வாசிக்க வேண்டிய புத்தகம்.


புத்தகம்: ஆயிஷா | ஆசிரியர் :  இரா. நடராஜன் | ஆசிரியர் வலைப்பக்கம் | பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் | விலை:  ரூ.10
இணையத்தில் தரவிறக்கம் செய்து வாசிக்க:
* தமிழ்  சுட்டி * ஆங்கிலம்  சுட்டி
 


.

வவுனியாவுக்குப் போயிருந்தேன்


வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து வவுனியா செல்லும் 87ம் எண் பேருந்து புறப்பட்டு கொழும்பு வீதிகளைக் கடந்தது. எப்படியும் ஏழு மணி நேரப் பயணத்தை, நெரிசலோடு அனுபவிக்க வேண்டும் என மனதை பதப்படுத்திக்கொண்டேன். கொழும்பு வீதிகளில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம், எல்லாப் பலகைகளில் தமிழ் எழுத்துகள் அழகாய் இருந்து கொண்டிருக்கின்றன. நிமிடங்கள் கரையக்கரைய பேருந்தில் மனிதர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது, சிலாபம், புத்தளம் என நேரமும், பேருந்தின் வேகமும் சாலைகளைத் தின்று, ஊர்களை குடித்துக்கடந்து கொண்டிருந்தது. புத்தளத்தில் பேருந்து கொள்ளாத கூட்டம் பிதுங்கி வழியத் தொடங்கியது. புத்தளத்திலிருந்து அனுராதபுரம் வரை பெரும் தொகையிலான இடங்கள் காடுகளாகவே, பசுமை நிறைந்த பகுதியாகவே இருந்தது. அனுராதபுரம் கடக்கும் போது இருள் கவ்வத் தொடங்கியது. அனுராதபுரத்தை விட்டு வவுனியா நோக்கி பேருந்து வேகம் கொள்ளத் துவங்கிய போது, இருள் துகள்களாய் படியத் தொடங்கியது. 


சிங்கள வாசனை முழுதும் அகன்று தமிழ் மணம் வீசும் மண்ணுக்குள் நுழைகிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் குதூகலமாய் இருந்தாலும், அடிபட்டு துவண்டு கிடக்கும் பூமிக்கு நெருங்குவதை நினைக்கும் போது மனது முழுதும் இறுக்கம் பிணைந்து கிடந்தது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்று முறையே வவுனியா என்ற பெயர்ப்பலகை வரவேற்றது.

நல்ல இருட்டு சூழ்ந்து கிடந்தது. வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த நண்பர் தயாராக இருந்தார். ஒல்லியான உருவங்களில் நகர் முழுதும் இலங்கைப் போலீசார் இருவர் இருவராக நின்று கொண்டிருந்தனர். குறிப்பிட்ட இடைவெளியில் சாலையில் செல்லும் வாகனங்களை ஏனோ நிறுத்தி நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தனர். காவலர்களின் கண்களில் துளியும் சிநேகம் இருப்பதாகத் தெரியவில்லை. என்னை அழைத்துச் சென்ற நண்பரையும் நிறுத்தி விசாரித்தனர். ஏதோ சிங்களத்தில் வாக்குவாதம் நடந்தது. ஆச்சரியமாக இருந்தது, நண்பர் அந்த காவலர்களிடம் சிறிதும் பயம் இல்லாமல் விவாதித்தது.

அடுத்த நாள் காலை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை, செல்வதாகத் திட்டம். வடக்குப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், ஆனையிறவு, யாழ்ப்பாணம் பகுதிகளுக்குச் செல்ல இலங்கை பாதுகாப்புத் துறையினரடிமிருந்து அனுமதிக் கடிதம் பெறவேண்டும் என்பதால், என்னுடைய கடவுச்சீட்டின் பிரதியை கொழும்பு நண்பரிடம் கொடுத்துவிட்டு, அடுத்த நாள் அனுமதிக் கடிதம் கிடைத்தவுடன் மின் மடலில் அனுப்ப வேண்டியிருந்தேன்.

இலங்கையில் ’போயா’ தினத்திற்காக பொதுவிடுமுறை நாள் என்பதால், அனுமதிக் கடிதம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது என்று நண்பர் சொல்ல, பெருத்த ஏமாற்றமாக இருந்தது. சரி சென்று பார்ப்போம், சோதனைச் சாவடியில் அனுமதி கிடைத்தால் செல்வோம் என புறப்பட்டோம். வாகனம் வவுனியாவைத் தாண்டி ஏ-9 வீதியில் வாகனம் விரையத் துவங்கியது. தாண்டிகுளம் தாண்டும் வரை அவ்வளவாக இராணுவம் கண்ணில் படவில்லை. சாலைக்குப் பக்கவாட்டில் புகையிரதத் தடமும் உடன் பயணித்து வருகிறது. ஓமந்தை பகுதிக்குள் நுழைந்ததிலிருந்து சுமார் முந்நூரு அடிக்கு ஒரு குடில் என ஏ-9 வீதி மற்றும் புகையிரத தடம் ஓரம் இராணுவம் அமைத்திருக்கிறது. இரண்டு பக்கமும் வயல் வெளிகள் வெறும் புற்கள் மூடி அகலமாகக் கிடக்கின்றது. ஒவ்வொரு இராணுவக் குடில்களின் முன் புறத்திலும் தவறாது ஒரு துப்பாக்கி சாலையை நோக்கியும், புகையிரதம் செல்லாத வெற்றுத்தடத்தை நோக்கியும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு குடிலுக்குள்ளும் இரண்டு இராணுவ வீரர்களாவது தென்பட்டனர். சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் வாகனங்கள் விரைந்து கொண்டிருக்கின்றன. முன் செல்லும் வாகனத்தை வேகத்தோடு ஒதுங்கி தாண்டிச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாம்.

துப்பாக்கிக் குடில்களைத் தாண்டி ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தால் எங்கள் வாகனம் ஓரம் கட்டப்பட்டது. நண்பரின் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டது, என் இந்திய கடவுச்சீட்டை வாங்கிப்பார்க்கும் போது, அலட்சியமான புன்னகை அந்த இராணுவ அதிகாரியின் இதழோரம் வழிந்தது. பாதுகாப்புத் துறையின் அனுமதிக் கடிதம் இல்லாமல் அனுமதிக்க முடியாது என்று திருப்பியனுப்பப் பட்டோம். இந்தியன் என்றதையறிந்த அந்த இராணுவத்தானின் இதழோரம் வழிந்த அலட்சியப் புன்னகை மனதில் ஆழப் பதிந்து குடைந்துகொண்டேயிருந்தது.


தமிழர்கள் யாரைச் சந்தித்தாலும் வரவேற்று உபசரிப்பதில் அன்பை அள்ளித் தெளிப்பதை உணரமுடிந்தது. சந்தித்தவுடன் தவறாமல் கேட்கும் முதல் கேள்வி, இலங்கை எப்படியிருக்கிறது, உங்களுக்கு பிடித்திருக்கிறதா. பெரிதும் போர் குறித்து பேசுவதை ஒரு வகையாய் தவிர்க்கவே விரும்புகின்றனர். நீண்ட நேரம் பேசும் போது, கொஞ்சம் கொஞ்சமாக போர் குறித்த செய்திகளை ஒரு வித விரக்தியோடு பகிர்ந்து கொள்ள முன் வருகின்றனர். தோல்வி மிகப் பெரிய அயர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஊடகங்களின் துரோகத்தனத்தை, தமிழகத்தின் சில அரசியல்வாதிகளின் நாடகத்தனத்தை குறித்து மிகக் கடுமையாக வேதனையோடு பேசுகின்றனர்.

விடுமுறை தினமாதலால் பிறிதொரு இடத்தில் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்குச் சென்று கொண்டிருந்த இந்திய ராணுவத்தினர் சிலரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மிதிவெடி, கண்ணி வெடிகளை அகற்றும் இந்திய ராணுவத்தைச் சார்ந்த அவர்கள் போர் நடந்த உள்ளடங்கிய கிராமங்களையொட்டி பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடி, மிதி வெடிகளைக் கிண்டிக் கிண்டி எடுக்கும் பணிகளைச் செய்து வருகின்றனர்.

முதலில் ஒருவித சந்தேகத்தோடு பேசத் தயங்கியவர்கள் கொஞ்சம் நம்பிக்கையடைந்த பின் நிறைய பகிர்ந்து கொள்ளத் துவங்கினர். இவர்களும் புலிகள் அமைப்பை இயக்கம் என்றும், பிரபாகரன் அவர்களை தலைவர் என்றுமே பெயரிட்டு அழைப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. இயக்கம் புதைத்து வைத்த வெடிகளுக்கு நிகராக, இராணுவமும் வெடிகளை நிலத்தில் புதைத்து வைத்துள்ளதாக சொல்கின்றனர். ஒவ்வொரு நாட்டு இராணுவமும் பாதுகாப்பிற்காக எல்லையோரங்களில் கண்ணிவெடி, மிதிவெடிகளை வைக்க ஐக்கிய நாடுகள் சபை அனுமதிக்கின்றது, அதே நேரம் அதற்கான சில வரைமுறைகள் உண்டு, ஆனால் எந்த வரைமுறைகளையும் மதிக்காமல் இலங்கை இராணுவம் வெடிகளை வைத்திருக்கின்றது.

அவர்கள் பேச்சில் தமிழர்கள் மேலும், இயக்கம் மேலும் மரியாதை வைத்திருப்பதை உணர முடிந்தது. இறுதிக்கட்டப் போரில் இந்திய வீரர்கள் பங்கேற்றதாகச் சொல்வதை மறுக்கும் அவர்கள், இறுதிப்போருக்காக ரேடார் மற்றும் தொழில் நுட்ப உதவிகளை இந்திய ராணுவம்தான் செய்ததாக அடித்துச் சொல்கின்றனர். புலிகள் அமைப்பிற்கு வரவேண்டிய ஆயுதக் கப்பல்களை அழிக்க இந்திய ராணுவமே முக்கியக் காரணம், அதுவே போரின் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது என்றும் சொல்கின்றனர். கூடவே கிழக்கில் புலிகளுக்குள் ஏற்பட்ட பிரிவும் தோல்விக்கு முக்கியக் காரணம் என்பதும் அவர்களின் கருத்து. சீனாவின் பங்கு குறித்து கேட்கும் போது, ஆயுதங்களை பெருமளவில் கொடுத்தது சீனாதான் என்றும் அதற்கு பிரதியுபகாரமாக, மன்னாரில் சீனப் படை தளம் அமைக்க அனுமதி கொடுத்து, பொது மக்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்ட ஒரு பகுதியில் சீனர்கள் குடியமர்த்தப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். மன்னாரில் உட்கார்ந்து மிக வசதியாக சீனா இந்தியாவை கவனித்து வருகிறது, அதுவும் தமிழகத்திற்குத்தான் பெரிதும் இடைஞ்சலான ஒன்று என்பதும் அவர்கள் கருத்து. கிராமப் புறங்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொன்னால் அடிக்க வந்துவிடுவார்கள் என்று ஒரு வீரர் சொன்னதை கசப்பான புன்னைகையோடு கேட்கவேண்டியிருந்தது.


வவுனியா முகாமில் கைது செய்யப்பட்ட பெண் புலிகளை அடைத்து வைத்திருப்பதாகச் சொன்னார்கள். ஓமந்தை மத்தியக் கல்லூரி இப்போது முகாமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு போரில் பிடிபட்ட புலிகளை அடைத்து வைத்திருப்பதாகச் சொல்கின்றனர். கடந்து போகும் வேலையில் கவனிக்கும் போது, பக்கவாட்டில் சுருண்டு கிடக்கும் கம்பியோரம் ஒரு ஆள் மெலிந்த தேகத்தோடு, சுடும் வெயிலில் நின்று கொண்டு சாலையைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. சரி முகாமில் இருக்கும் புலிகளின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் எனக்கேட்கும் போது முகம் இருண்டு போகிறது.

பெரும்பாலும் சந்தித்த மனிதர்களில் சிலர் கடினமான செய்திகளைப் பேசும் போது இடையிடையே, முந்தைய போர் வெற்றிகளை சிலவற்றை சிலாகித்துச் சொல்லி, மனித மனம் நாடும் தற்காலிக சுகத்தால் மனதை சிறிது நேரம் சமநிலைப்படுத்திக் கொள்வதாகவே தோன்றுகிறது. இத்தனை காலம் இதற்காகத்தான் எங்கள் பொடியன்கள் போராடினார்களா எனக் கேட்கும் போது இயலாமை நம்மையும் அடித்து நொறுக்கிறது.

எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு வடிவத்தில், வகையில் பாதிப்பு இருந்து கொண்டேயிருக்கின்றது. போர் நடந்த பகுதியில் இருந்த குடும்பங்கள் குறைந்த பட்சம் தங்கள் குடும்பத்திலிருந்து பாதி மனிதர்களையாவது இழந்திருக்கின்றனர். கிளிநொச்சியைக் கைப்பற்றியது முதல் இராணுவம் கொடூரமான ஒரு யுக்தியை கையாண்டிருப்பதாக அவர்கள் பேச்சில் உணரமுடிகிறது. நகர்புறத்தில் இருக்கும் சில கட்டிடங்களைத் தவிர்த்து, கிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவு வரை, போரில் பாதிக்கப்பட கட்டிடங்கள் உட்பட எல்லாக் கட்டிடங்களையும் புல்டோசர் மூலம் முற்றிலும் இடித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட கிளிநொச்சி முதல் முல்லைத்தீவு வரை மனிதர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் முற்றிலும் சிதைக்கப்பட்டிருக்கிறதாகவே உணரமுடிகிறது. முல்லைத்தீவைச் சார்ந்தவர் மிக இயல்பாகச் சொல்கிறார், தன்னுடைய வீடு முற்றிலும் இராணுவத்தால் சிதைக்கப்பட்டதாகவும் போர் முடிந்தும் இன்னும் அதற்கான நிவாரணம் வழங்கப்படவில்லை அப்படியே வழங்கினாலும் மூன்று லட்சம் மட்டும் வழங்குவார்கள் (இந்திய மதிப்பில், ரூ.1,20,000), அது எந்த வகையிலும் வீடு கட்ட உதாவது என்பதுதான்.

போரை உக்கிரமாக நடத்தி முடித்த ராணுவம், போரினால் சாகும் மனிதர்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் ஆத்திரத்தையும், அவசரத்தையும் காட்டிய அரசாங்கம், போரில் வாழ்விடங்களைத் துறந்து, மிகக் கொடுமையான முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் மனிதர்கள் குறித்து சிறிதும் அக்கறையில்லாமல் இருப்பதுவும், அப்படியே ஏதோ கண் துடைப்பிற்காக ஆங்காங்கே குடியமர்த்தப் போவதாக போக்கு காட்டிக்கொண்டிருப்பதும் சிறிதும் மனிதாபிமானமற்ற செயல் என்பது மிகத் தெளிவாகத் தருகிறது. முகாமில் அடைந்து கிடக்கும் மக்களை, அப்படியே தொடர்ச்சியாக அடைத்து வைத்து மனதளவிலும், உடலளவிலும் முற்றிலும் சிதைப்பதை மிகத் தெளிவாக அரசு செய்து வருகிறது. முகாமில் இருக்கும் மக்களை வெளியில் இருக்கும் மக்கள் எப்படி நோக்குகிறார்கள் என்று கேட்கும் போது, வெளியில் இருக்கும் மக்களும், தங்கள் வீடு, உறவுகளில் பாரிய அளவில் இழப்பைச் சந்தித்திருப்பதால், அது அவர்களுக்கு மிக பெரிய தாக்கத்தைக் கொடுக்கவில்லையென்றே சொல்கின்றனர். இதுவும் கூட இராணுவ யுக்திக்கு ஒரு வித வெற்றி மனோநிலைதான்.

வட மற்றும் கிழக்கு பகுதியில் அரசோடு இணைந்து பதவிகளை அனுபவித்து வரும் சில தலைவர்கள் குறித்து பேசும் போது, மக்கள் அந்த இயலாமையிலும் கொந்தளிக்கின்றனர் வெள்ளை வேன் என்ற பதத்தை பயன்படுத்துகின்றனர். வடபகுதியைச் சார்ந்த ஒரு குறிப்[பிட்ட அரசியல் ஆட்கள் வெள்ளை வேன் மூலம் மக்களைக் கடத்தி மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்பது கசப்பான உண்மை. புலிகள் தமிழர்கள் பகுதியை ஆண்ட பொழுது திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு என்பது நூறு சதவிகிதம் ஒழிக்கப்பட்டிருந்தது. அதே பூமியில் இன்று அரசாங்கத்தின் கைக் கூலியாய் இருக்கும் தமிழர்கள் ஆள் கடத்தலிலும், இராணுவ வீரர்கள் கற்பழிப்பிலும் ஈடுபடுவது மிகச் சாதாரணமாக இருக்கின்றன.

போரின் இறுதி சில நாட்களில் எல்லைகள் மிகச் சுருங்கி தாக்குப்பிடிக்க முடியாது போன புலிகள், பொது மக்களை தங்கள் கேடயமாக பயன்படுத்தியதாகவும், அதில் இருந்து தப்ப முயன்றவர்களை ஒரு கட்டத்தில் புலிகளே சுட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். அதே சமயம் இராணுவத்தின் ஆட்கள் புலிகளோடு புலிகளாக கலந்திருந்ததாகவும், அவர்களே அப்படிப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்தியதாகவும் சிலர் கூறக்கேட்டேன்.

மேலும் இறுதிக் கட்டத்தில் தோல்வியை உணர்ந்த புலிகள் தாங்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தை இராணுவத்திடம் கிடைக்காமல் இருக்க எரித்தது, இப்போது இராணுவம் ஆங்காங்கே சத்தமில்லாமல் தோண்டியெடுத்துப் போகும் தங்கப் புதையல்கள் குறித்து கூறும் போது, அதை தங்களையே நம்பி கடைசிவரை வந்த மக்களிடமாவது புலிகள் கொடுத்திருக்கலாம் என்றும், இப்போது அது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு பயன்படாமல் போய்விட்டதையும் மிகுந்த கொஞ்சம் வேதனையோடு ஒருவர் குறிப்பிட்டார்.

என்னோடு பேருந்தில் பயணித்த, கிழக்கு பகுதியைச் சார்ந்த மருந்து விநியோகஸ்தரான ஒருவர், தங்களைப் போன்றவர்களுக்கு எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இருந்தும், மாங்குளத்திலிருந்து முல்லைத் தீவு வரை செல்லும் சாலையில் தங்களையும்கூட முற்றிலும் அனுமதிப்பதில்லை எனவும், அந்தப் பகுதிகள் இன்னும் மர்மமாகவே அரசாங்கத்தின் பிடியில் இருப்பதாகவும் கூறினார்.

எல்லோரும் வருத்தமாகக் கூறுவது, இறுதிக்கட்டத்தில் தங்கள் கண்முன்னே முகாமிற்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட பெருந்தொகையான மக்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லையென்பதே. குடும்பத்தில் தன்னோடு சக உறவாக இருந்த மகனையோ, மகளையோ, கணவனையோ எங்கிருக்கார், உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்றே தெரியாமல் தேடிக் கொண்டிருக்கும் கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது என்றே நினைக்கின்றனர். இறுதிக்கட்ட போர் நடந்த பகுதியில் இருந்த மக்கள் பல இலட்சம், அதில் இறந்ததாகவும், முகாமில் இருப்பதாகவும் அடையாளம் காட்டப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மட்டுமே, மீதி அவ்வளவு பேர் என்ன ஆனார்கள் என்ற கேள்வி மட்டும் எல்லோருக்குள்ளும் குடைந்துகொண்டேயிருப்பதை அறிய முடிகிறது. தகவல் தொடர்பு சுருங்கிப்போன உலகத்தில் இப்படி லட்சக்கணக்கில் காணாமல் போன, கொலையுண்ட மக்கள் குறித்து பல நாடுகள் குறைந்த பட்சம் அழுத்தம் கூட தராமல் மேம்போக்கான மௌனம் காத்து வருவது அறுவெறுப்பான ஒன்று.

கடைசி வரை இந்தியாவோ அல்லது வேறு நாடோ எப்படியாவது போர் நிறுத்தத்திற்கு உதவும் என உயிரைக் கையில் பிடித்துக்காத்திருந்த மக்களின் உயிர்கள் கொத்துக்கொத்தாக பறிபோனதை நினைக்கும் போது பதறுகிறது. ஒட்டுமொத்த உயிர்களோடு விளையாட இந்திய அரசியலுக்கு அப்படியென்ன இத்தனை ரத்த வெறி என்று கேட்கும் ஓங்கிய குரல்களுக்கு தலை தாழ்ந்துதான் இருக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த ஊடகங்கள் தமிழர்களின் தோல்வியை விலை பேசி வீதி வீதியாக விற்றதை கோபத்தோடு பகிர்கிறார்கள். போரின் இறுதிவரை புலிகள் அமைப்பு எப்படியாவது இராணுவத்தை திருப்பி அடிப்பார்கள் என்பது போல் ஒரு மாயையை உருவாக்கி தங்களுக்கு உண்மையை புரியாமலே ஏமாற்றி வைத்திருந்த ஊடகங்களை பேச்சினாலேயே காறி உமிழ்கிறார்கள்.

யாழ்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டாலும் காலம் காலமாக கொழும்பிலேயே வசித்து வரும் ஒரு விடுதித் தொழிலாளி, புலிகளின் வீழ்ச்சி தங்களுக்கிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் வீழ்த்தி விட்டதாக வலியோடு கூறினார். புலிகள் அமைப்பு இருக்கும் வரை தங்களை ஒரு வித பயம் மற்றும் மரியாதையோடு மதித்த சிங்களவர்கள், இப்போது அவர்களை கேவலமாக நடத்த முனைவதாக, நான் கொழும்பில் சந்தித்த ஒரு தமிழர் கூறினார், இத்தனைக்கு அவருடைய குடும்பம் காலம் காலமாக கொழும்பில் வசித்து வருகிறது.


ஏ-9 வீதி வழியாக திரும்பி வரும்போது ஆங்காங்கே படர்ந்திருக்கும், மர நிழலில் சிறப்பு சேவை என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேருந்துகள் நின்று கொண்டிருக்க, மக்கள் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் தென் இலங்கையிலிருந்து யாழ் வரை சுற்றுலா என்ற பெயரில் இராணுவ வெற்றிகளைப் பார்த்துவர அனுப்பி வைக்கப்படுவதாகவும், அதற்கு ஒவ்வொரு பேருந்திற்கும் ரூ.25,000 அரசாங்கம் தந்துதவுதாகவும் கூறுகிறார்கள். புலிகள் இறந்தவர்களுக்கு அமைத்திருந்த மாவீரர் துயிலகம் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டு இறந்த ராணுவ வீரர்களுக்கு நினைவிடம் கட்டப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். வென்றெடுத்து விட்டோம் என்று கொக்கரிக்கும் ராணுவமும், அரசும் இன்னும் ஏன் முன்னூரு அடிகளுக்கு ஒரு துப்பாக்கி என காவல் காக்கிறதென்று தெரியவில்லை. இந்தக் காவல்களுக்கு மத்தியில்தான் தங்கள் வெற்றிகளை சுதந்திரமாக தம் இன மக்களை அழைத்து ரசிக்கச் சொல்லி அழகு பார்க்கின்றது.

விரக்தி மேலிட ஒரு அடர்மௌனம் எல்லோர் மனதிலும் இன்னும் கிடந்து தவித்துக் கொண்டிருக்கிறது. அந்த மனிதர்களுக்கு இப்போதைய உடனடித்தேவை போர் அல்ல, தொலைந்த தங்கள் உறவுகளைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டியதும், முகாமில் மிகக் கேவலமான சூழலில் இருப்பவர்கள் வெளியில் வந்து சுதந்திரத்தை அனுபவிக்க வைப்பதுமே. மீண்டும் ஒரு போர், இரத்தம், இழப்பு குறித்து சற்றும் சிந்திக்கும் மனோநிலையில் நான் சந்தித்த மனிதர்கள் இல்லவே இல்லை. கொழும்பில் சந்தித்த நண்பர் சொன்னதும் நாங்கள் இப்போது கட்டமைக்க நினைப்பது எங்கள் மனிதர்களின் உளவியல் மேம்பாடு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் விசயங்களைத் தான். எதையும் அரசியலாக்கும், தமிழ்நாட்டின் சில அரசியல்வாதிகள் போலி பற்றையும், தர்மம் சிறிதுமின்றி மீண்டும் ஒரு போர் நிகழும் என்ற தொணியில் எழுதிவரும் ஊடகங்களை அந்த மனிதர்கள் முற்றிலும் புறந்தள்ளி காறி உமிழ்வதாகவே தோன்றுகிறது.

நேரம் கடக்கக்கடக்க அங்கிருந்து புறப்படவேண்டும் என்ற மனநிலையில், அந்த மண்ணின் மேலும், அந்தக் காற்றின் மேலும் ஏதோ பாசம் கூடிக்கொண்டே போனது, ஏதோ சொந்த ஊரில் ஒரு உறவினர் வீட்டில் இருப்பது போன்று அந்நியத்தன்மை ஏதுமற்ற மண்ணாகவே வவுனியா மனதிற்குப் பட்டது.

இரவு பனிரெண்டு மணிக்கு வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிய பேருந்தில் அமர்ந்தேன். சொல்ல முடியாத அளவிலான மிகுந்த களைப்பு, கொஞ்சம் சொகுசு கூடிய இருக்கை, குளிர்ப் பதனப்படுத்தப்பட்ட பேருந்து, இருந்தும் பொட்டுத் தூக்கம் இல்லை. மனதுக்குள் ஏதோ சுழற்றி சுழற்றி அடித்துக்கொண்டே இருந்தது. இந்த மனிதர்களும் மனிதர்களாய் மகிழ்ச்சியாய் வாழ்ந்திட ஒரு நாள் வரவேண்டும் என்ற பிரார்த்தனை ஓயாமல் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஏதாவது ஒரு விடியலில் முகாம்கள் எல்லாம் மறைந்து போய், அங்கு அடைந்து கிடக்கும் மனிதர்கள் தங்கள் உறவுகளோடு வீடு, வாசல் என கை கோர்த்து திரிவதை, நிம்மதியாய் உறங்குவதை எப்போது காண முடியும் என்ற ஏக்கம் மனது முழுதும் நிரம்பிக்கிடந்தது. அங்கு வாழும் மனிதர்களுக்கு மனதளவில் ஏதாவது ஒரு வகையில் நாம் ஆறுதலாய் இருப்பது மிக அவசியம் என்பது ஆழப்புரிந்தது.

_______________________________________

பாராட்டு விழா – எழுத்தாளர் பெருமாள் முருகன்


தமிழ் இலக்கியச் சூழலில் குறிப்பிடத்தக்க சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். காலச்சுவடு இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் இவர் நாமக்கல் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இது வரை 15 நூல்களையும், 125 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய நிழல் முற்றம், கூளமாதாரி ஆகிய புதினங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

தென்கொரியாவில் உள்ள அரசு சார்பு அமைப்பான கொரியன் இலக்கிய மொழிபெயர்ப்பு நிறுவனம் எழுத்தாளர்களுக்கான உறைவிட முகாம் ஒன்றை நடத்திவருகிறது. சென்னையில் உள்ள இந்திய கொரிய கலாசார மையத்துடன் இணைந்து பரிமாற்றம், படைப்பாற்றல் குறித்த எழுத்தாளர் உறைவிட முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது. தென்கொரியாவில் செப்டம்பர் மாதம் முழுவதும் தங்கியிருந்து பண்பாட்டு பரிமாற்றம் மேற்கொள்ள உலகம் முழுவதும் இருந்து 6 நபர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த முகாமில் கலந்து கொள்ள ஆசியக் கண்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர், எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆவார்.

2006-
இல் நடைபெற்ற முகாமில் இந்தியா சார்பில் இந்தி எழுத்தாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு தமிழ்ப் படைப்பாளரான பெருமாள் முருகன் 2010-இல் தேர்வாகி கலந்து கொண்டு வெற்றிகரமாக திரும்பியுள்ளார். இதையொட்டி, நாமக்கல் அருகே மோகனூரில் இருக்கும் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரித் தாளாளர் பேராசிரியர்.சு.பழனியாண்டி அவர்கள் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்தார்.

அச்சமயம் பெருமாள் முருகன் அவர்களின் ’கங்கணம்’ நூல் குறித்த விமர்சனத்தை, எங்கள் அரிமா சங்க இதழான ’சுவடுகள்’ இதழில் வாசித்த பேரா. பழனியாண்டி அவர்கள் என்னையும் அந்தப் பாராட்டு விழாவில் கங்கணம் குறித்த பார்வைகளைப் பதிவு செய்யுமாறு அழைத்தார்.

விழாவில் அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் அரிமா.கே.தனபாலன், வேலூர் நாங்கள் இலக்கிய அமைப்பைச் சார்ந்த கவிஞர். செல்மா காமராசன், பெங்களூரிவில் வருமான வரித்துறை இணை ஆணையராக பணியாற்றும் திரு. முரளி ஐ.ஆர்.எஸ் ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன்.

திரு.முரளி ஐ.ஆர்.எஸ் அவர்கள் ப.வேலூர் அருகே ஒரு கிராமத்தைச் பூர்வீகமாகக் கொண்டு தற்சமயம் பெங்களூருவில் பணியாற்றுகிறார். ஒரு முறை எதேச்சையாய் காலை 5 மணிக்கு கங்கணம் புதினத்தை வாசிக்க எடுத்தவர், இடையில் நிறுத்த மனமில்லாமல், அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து வாசித்து முடித்தார் என்பது சுவாரசியம் மிகுந்த தகவல்.

பாராட்டு விழா இன்று காலை மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் பேரா.பழனியாண்டி அவர்கள் மிக நேர்த்தியான தலைமையைரையோடு துவங்கியது. கவிஞர் செல்மா காமராசன், திரு. முரளி, அரிமா. தனபாலன் ஆகியோர் மிகச் சிறந்ததொரு பாராட்டுரைகளை வழங்கினார்கள். குறிப்பாக திரு.முரளி கங்கணம் குறித்த அவரது பார்வையை அழகாக பகிர்ந்து கொண்டார். நானும் கங்கணம் புதினத்தை வாசிக்க நேர்ந்த பின்னணி, வாசித்த அனுபவம், அதில் வரும் கதாபாத்திரங்களின் இயல்பான, அப்பட்டமான தன்மை குறித்த எனது பார்வைகளை பகிர்ந்து கொண்டேன்.

இறுதியாக ஏற்புரை நிகழ்த்த வந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், தன்னுடைய கங்கணம் புதினம் 2007ல் வெளியாகி, இது வரை அதிகம் பேசப்படாத ஒன்று என்றும், சமீபத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வருவதாகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். மேலும் தென் கொரியா நாடு கொரிய மொழி தோன்றி 150 வருடத்தில், மொழியளவில் முன்னேறியிருப்பதையும், இலக்கியத்திற்கு கொரிய மக்கள் அளித்து வரும் மரியாதை குறித்தும், தென் கொரிய மக்களின் விருந்தோம்பல், சாக்கடைகள் கலக்காத தூய்மையான ஹான் நதி, ஊழலற்ற நிர்வாகம், தன்னலம் பாராத அரசு அமைப்பு என தென் கொரியா குறித்து ஒரு மாதத்தில் தான் அனுபவித்து வந்த பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.








மாணவர்கள்


பேரா.பழனியாண்டி - தலைமையுரை
திரு. முரளி - உரை
கவிஞர். செல்மா காமராசன்




கங்கணம் குறித்த என் பார்வை


எழுத்தாளர். பெருமாள் முருகன் ஏற்புரை




_________________________________

நீர்த்துப்போகும் சுயம்


அவசியமில்லாத போதும் கூட வன்முறையை பிரயோகிக்கும் இனம் மனித இனமாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் ஆறாவது அறிவு என்று மனிதன் சொல்லிக்கொள்வதின் நீட்சியோ? எந்தவொரு மிருகமும் தன் பசிக்கும், பாதுகாப்பிற்கும் தவிர்த்து சக விலங்குகளையோ, மனித இனத்தையோ தாக்குவதோ, கொல்வதோ இல்லையென்றே சொல்லலாம்.

மனிதன் மட்டுமே, தனக்கு ஆறு அறிவு இருப்பதாக (“மனிதன் மட்டும்தான் தனக்கு ஆறு அறிவு என்று சொல்லிக்கொள்கிறான், இது வரை அதை ஒரு நாய் கூட அங்கீகரித்ததில்லை” என பாரதிகிருஷ்ணகுமார் மேடைகளில் சொல்வதுதான் நினைவுக்கு வருகின்றது) தானே சொல்லிக்கொண்டு, அதுவும் அதை பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு தொடர்ந்து தொடர்ந்து சக மனிதனுக்கும், மற்ற விலங்குகளுக்கும் கொடுத்து வரும் தொல்லைகள் பட்டியிலிட்டாலும் அடங்காது.

ஏதேதோ காரணங்களைச் அடுக்கடுக்காய்ச் சொல்லி, விதவிதமாய் விலங்குகளை வைத்து விளையாடும் வக்கிரங்களின் தொடர்ச்சியில், பரிதாபமாக இருப்பது பிரமாண்டமான தோற்றமும், எதையும் விட வலிமையும் கொண்ட யானைகள் தலை தடவி தன் முதலாளிக்காக காசு கேட்கும் யானைகளை பார்க்கும்போதுதான்.


பரந்த காடுகளில் சுதந்திரமாய்ச் சுற்றி திரியவேண்டியவை, குறுகிய பரப்புக்குள் அடங்கிய கொட்டிலிலேயே தீனி தின்று, அங்கேயே சாணி, மூத்திரம் கழித்து, எல்லாச் சுதந்திரத்தையும் முழுக்க முழுக்க இழந்து, குட்டியானையாக இருக்கும் போது தன்னைக் கட்டிப்போட்டதன் மூலம் அடிமைப்படுத்திய சங்கிலிக்கு, இன்றும் மனதிற்குள் பயந்து, ஒவ்வொரு அசைவுக்காவும் அங்குசத்தால் குத்துவாங்கி, யாரோ விழி விரியப் பார்த்து கைகொட்டிச் சிரிக்க, எவனோ தன் வயிற்றையும், குடும்பத்தையும் வளர்க்க பிச்சையெடுப்பதைக் காணும் போது, எல்லாம் இருக்கும் இடத்தில் இருப்பதுதான் நல்லது என்ற எண்ணத்தை தவிர்க்க முடிவதில்லை.



தனக்கு சற்றும் பழக்கமில்லாத நகர்ப்புறத்துக் கோவில்களில், இடைவிடாது காதுகளை ஆட்டிக்கொண்டும், விதவிதமாய் அலங்கரிக்கப்பட்டும், ஒற்றைக் காலின் பருமன் கூட இல்லாத பாகனின் அங்குசத்திற்கு அடிமை போல் நின்றிருக்கும் அவலம், அதுவும் கடவுளின் உருவமாக நினைக்கும் நம்பிக்கையுள்ளவர்களே, அதை அதனதன் இடத்தில் இயற்கையாய், சுதந்திரமாக விட்டுவைக்க மனமில்லாத முரண்பட்ட முட்டாள்தனத்தின் பிம்பமாக தெரிவதை கசப்போடு மனம் உள்வாங்குவதை தவிர்க்க முடிவதில்லை.

சாலைகளில் மெதுவாக அசைந்த அசைந்து மணியோடு போகும் யானைகளை ஒரு காலத்தில் ரசித்து வேடிக்கை பார்த்ததுண்டு. அழகாய் ஆடும் சின்ன வாலை தொட்டுப்பார்க்கவும், இறுகிக்கிடக்கும் யானைத்தோலை தீண்டி உணர்ந்து  பார்க்கவும் விரும்பியதுண்டு. வயது கரைந்து போன நிலையில், எங்காவது கோவில்களில், சாலைகளில், ஆடம்பர விழாக்களில் யானைகளைக் காணும் போதெல்லாம், ரசிப்பதைக் காட்டிலும், ” ம்ம்ம்ம்.... எங்கே, எப்படியிருக்க வேண்டியவை” என்ற பரிதாபத்தோடு, வாழ்ந்து கெட்ட குடும்பங்களில் சூழ்ந்து கிடக்கும் அமைதி சுமக்கும் இருள் போல் மனதிற்குள் இருள் கவ்வத் தொடங்குவதை உணராமலில்லை.

காலம் காலமாய் தன் சுயத்தை இழந்து கொண்டேயிருக்கும் மனித சமூகம், இதுதான் மிருக குணம் எனப் பட்டியலிட்ட குணங்களை தனக்குள்ளே துளித்துளியாய் சேமித்து, அதை மழுங்கடிக்கப்பட்ட மிருங்களின் மீது பிரயோகிப்பதில் வெற்றியும் ஈட்டுவதின் பின்னணியில் நீர்த்துப்போகும் சுயம் குறித்து மனிதனுக்கு துளியும் அக்கரையில்லை. 

சாலைகளில் மதம் பிடித்த யானை நடத்தும் ருத்ரதாண்டவம் திணிக்கும் பயத்தையும், காடுகளில் தன் உறவை பிரிந்த, தொலைத்த ஒற்றை யானையின் கடுங்குரல் ஊட்டும் வலியையும் ஒருமுறை உணர்ந்து விட்டால், யானைகளை யானைகளாவே விட்டுவைக்கும் பக்குவம் மனிதனுக்குள் துளிர்க்கத் தொடங்கிவிடும்.
________________


மழை நேரம்


தடதடக்கும் ரயில் பயணங்களில்
சலசலக்கும் மழைச்சாரல்களால்
சன்னலோரக் கம்பிகளில்
தோரணமாய் தொங்கும் துளிகளில்

அதங்கிக் குலுங்கி சீறும் பெட்டியின்
காற்றைக் கிழிக்கும் வேகத்தில்
கோபத்தோடு உட்புகும் காற்றில்
கரைந்து தெறிக்கும் சிதறலில்

பேரிரைச்சலைத் தவிர்க்க
மூடும் கண்ணாடிச் சன்னல்களில்
அலையலையாய் வழிந்தோடும்
வெள்ளத்தோரணத்தில்

பெரும் மழைத்துளி தாளம் போடும்
சேற்று வயலில் சிந்திக்கிடந்த
வியர்வைத் துளியில் பிறந்த
வெள்ளப் பிரவாகத்தில் என

உலகின் ஒட்டுமொத்த அழகையும்
ஒன்றுகூட்டித் தனக்குள்ளே
தக்கவைத்திடத் தவறுவதில்லை
மழை நேரங்கள்!
_______________

வண்ணச் சேர்க்கைக்கு இழந்த வாழ்வும், வாங்கிய வலியும்

தண்ணீரைப் போல் தெளிவானது, சுவையானது, சுகமானது ஏதேனும் உண்டா?. குழந்தைப் பருவத்தில் திணிக்கப்பட்டவை இரண்டு, ஒன்று ”தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்திடும்” மற்றொன்று ”தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே!”

ஏதேனும் மரணச் செய்திகளை கேட்கும் போது, உடனே கேட்பது ”இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெறமுடியுமா?” அதற்கு ஈடாகா பெறப்படும் பதில், “இல்லீங்க, கேன்சர்ங்க”. அடுத்தடுத்து கேட்கப்படும் மரணச் செய்திகளில், மரணத்திற்கான காரணமாக காட்டப்படுவது புற்றுநோய்.

தற்சமயம் எனக்குத் தெரிந்து என் நண்பர்கள் வட்டத்தில் பெரியப்பா, அத்தை, சின்ன பாட்டி என்பது போன்ற உறவுகளில் புற்று நோயால் மரணத்தை எதிர்நோக்கி வலியோடு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆறு.

ஒரு காலத்தில் புற்று நோய் என்பது ஒட்டு மொத்த உறவுகளில் யாரோ ஒருவருக்கு இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சமீப காலங்களில் நமக்குத் தெரிந்தவர் யாரேனும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறியும் போது “அட… ப்ச்…” என்று கடந்து போகுமளவிற்கு மிகச் சாதாரணமாக விரவிக் கிடக்கிறது.

அதுவும் ஈரோடு பகுதிகளில் புற்று நோய் ஆழ வேரூன்றுவதற்கு முக்கியக் காரணம் விஷமாய் மாறிவரும் தண்ணீர். எங்கோ இருக்கும் யாரோ உடையணிய, இங்கு இருக்கும் ஒரு சிலர் கோடிகளில் புரள, அதன் பொருட்டு தங்கள் வாழ்வாதாரங்களை, வாழ்வையே காவு கொடுத்தவர்கள், கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஒன்றா இரண்டா?
 

தண்ணீர் மாசுக்கெதிராக கண்ணா மூச்சியாடும் அரசாங்கம், எந்த விதத்திலும் சாமானியர்களின் வாழ்வு குறித்து கிஞ்சித்தும் சிந்திப்பதாக இல்லை. பவானி, ஈரோடு, பெருந்துறை, சிப்காட், ஊத்துக்குளி, திருப்பூர் இன்ன பிற சுற்று வட்டாரங்களெங்கும் சாயப்பட்டறைகள் துணிகளை வெளுத்து வெளுத்து, வேதிப்பொருட்களை அள்ளிக் கொட்டி, சாயமேற்றிக் கொண்டேயிருக்கின்றன. தங்கள் லாபத்தை அரிக்கும், சுத்திகரிப்பு பணிகளைச் செயல்படுத்த வாய்ப்பின்றி(!), மனமின்றி, போகிற போக்கில் சாயப்பட்டறை முதலாளிகளால் திறந்து விடப்படும் நீர், பவானி ஆறு, காளிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆறு, நொய்யல் ஆறு என எல்லா நீர்த்தடங்களையும் வண்ணம் மாற்றி, விஷமேற்றிக் கொண்டேயிருக்கிறது.

சாயப்பட்டறைகள் தங்கள் தேவைக்கென தோண்டும் ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் அடிகளைத் தாண்டுகிறது. அதில் தண்ணீர் வந்தால் சந்தோசம், ஒரு வேளை தண்ணீர் வரவில்லை என்றாலும் கவலையில்லை, வெளியேற்ற வேண்டிய சாயக் கழிவு நீரை, தண்ணீர் இல்லாத வெற்று ஆழ்துளைக் கிணறுகளில் பாய்ச்சி விடுகிறார்கள். ஆழ்துளைக் கிணறுகளில் தஞ்சம் புகுந்த விஷநீர் மண்ணுக்குள் சிலந்திவலையாய் கிடக்கும் நீர்த்தடங்களில் முப்பது, நாற்பது மைல் தூரம் கூட பயணித்து, கிணறுகளிலோ அல்லது மற்ற ஆழ்துளைக் கிணறுகளில் இருக்கும் தண்ணீரோடு கலந்துவிடும் வாய்ப்பிருக்கிறது.




உதாரணத்திற்கு, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாயப்பட்டறைகளை அனுமதித்த பிறகு, அங்கிருந்து பல மைல்கள் தள்ளியிருக்கும் விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகளின் தண்ணீர், தன் சுயத்தை இழந்து உவர்ப்புத்தன்மை மிகுந்துவிட்டது. நீரின் உண்மையான சுவை, தன்மை, குணம் என எல்லாம் தொலைந்து போய், முழுக்க முழுக்க நச்சுத் தன்மை கூடிக்கொண்டே வருகிறது. இது பற்றிய விழிப்புணர்வேதுமின்றி நமது நாட்கள் வழக்கம் போல், நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. உள்ளடங்கிய கிராமங்களை விடுத்து, பெரும்பாலான பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமானது, காசு போட்டு வாங்கும் தண்ணீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருளாதாரத்திலேயே பெரும்பாலானோர் இருக்கும் நிலையில், சமையல் செய்ய கிணற்றுத் தண்ணீர் அல்லது குழாய்கள் வழியே வரும் ஆற்று நீரை மட்டுமே பயன்படுத்துகின்றோம். என்னதான் கொதிக்க வைத்தாலும் நீரில் கலந்த விஷம் பிரிந்துவிடவா போகின்றது. உணவகங்களில், விருந்துகளில், திருமணங்களில் தயாரிக்கப்படும் உணவுகளிலும் இதேதான் நடக்கும்.

அடுத்து, இந்த தண்ணீரை விவசாயத்திற்குப் பயன் படுத்தும் பொது, தானியங்கள், காய்கறிகளில் விஷம் சென்று தங்குவதை தடுக்க முடியாது. சாயப்பட்டறை கழிவு நீர் பாயும் விவசாயப் பகுதிகளில் வளரும் தென்னை மரங்கள் தரும் இளநீர் சுவையற்று, சில சமயம் நிறம் மாறி, துர்வாசனையோடு விளைவதை தவிர்க்க முடிவதில்லை.



புற்று நோய், மலட்டுத் தன்மை, குறைந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தி, தொடர்ந்து வரும் புதிய புதிய நோய்களின் பின்னணியில், புரிந்தும் புரியாத பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் மிக முக்கியக் காரணமாக இருப்பவை, இயற்கை அள்ளிக்கொடுத்த நீரை, பேராசையின் பொருட்டு,  மாசடைந்த, வேதிப்பொருட்கள் கலந்த தண்ணீராக மாற்றிய பாவமும் என்பதை மறுப்பதற்கில்லை.


தண்ணீரைப் பழிக்காதே என்று சொல்லிக் கொடுத்த வளர்ப்பு, தண்ணீரைச் சீரழிக்காதே என்று சொல்ல மறந்து போனதோ!? எதையோ நோக்கிய பேராசையில், எல்லாவற்றையும் உதறித் தள்ளுகின்றோம், உதறித் தள்ளியதை இழப்பு எனப் புரியும் பொறுமையின்றி ஓடிக்கொண்டே இருக்கின்றோம். உடம்பில் வெளியில் தெரியும் நோய்களை வண்ணம் நிறைந்த உடைகள் போட்டு மற்றவர்கள் கண்களிலிருந்து வேண்டுமானால் மறைக்கலாம், உள்ளுக்குள் நாமே உருவாக்கிய, நோய் கொடுக்கும் வலியை, அதன் தொடர்ச்சியாய் வரும் இழப்பை எதைக் கொண்டு மறைக்க முடியும்.

_________________________