கணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி


(இந்தக் கடிகாரத்தை வடிவமைத்த கணக்குப் புலிக்கு எழுதிய கடுதாசி)




அனுப்புதல்,

பெயர்  : கணக்குல 35 எடுக்க மூச்சுத் திணறியவன்
வகுப்பு : கணக்குப் பாடம் வெச்சு கடுப்பேத்தும் வகுப்பு
பள்ளி  : சமச்சீர் இல்லாத பள்ளி + டூசன் + டுட்டோரியல் காலேஜ்
இடம்  : உலகத்துல இருக்கிற எல்லா ஊரும்தான்


பெறுதல்,

பெயர்  : கணக்குல பெரிய வெண்ணை!
வகுப்பு : கணக்குல கண்டதெல்லாம் படிப்போர் கல்விக்கூடம்
பள்ளி  : தலைக்குள் கால்குலேட்டர் இருப்போர் பள்ளி
இடம்  : அதே உலகத்துல எதோ ஒரு ஊர்



திப்பில்லாத ங்கொய்யா, (உன்ன ஐயானு வேற நொட்டனுமோ)

பொருள்: ஒன்பதாம் நெம்பர் - கெடியாரம் - கணக்கு ரவுடித்தனம் - தொடர்பாக – 

நான் இங்கு நலம், நீ அங்கு நல்லாயிருக்கக்கூடாது!

நான் நேரடியாவே கேக்குறேன், நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? கணக்கு பாடத்துல முப்பத்தியஞ்சு மார்க் எடுக்க நான் பட்டபாடு தெரியுமாய்யா உனக்கு? பெருசா கணக்குப் போடத் தெரிஞ்சுட்டா, நீ என்ன வேணா ரவுடித்தனம் பண்ணுவியா!?

நீயென்ன என்ன மாதிரி டூசுனுக்குப் போனியா?, பள்ளிக்கூடத்துல பாஸாவாம டுட்டோரியல் காலேஜ் போனியா?, இல்ல, கணக்குல பாஸாயிட்டா கருப்புச்சாமிக்கு கோழிச்சாவல் அறுக்குறதா தோப்புக்கரணம் போட்டு வேண்டிக்கிட்டியா?

ஒரு நாளாச்சும் பிதாகரஸ் தியரி தெரியாம, கிளாஸ்ல புள்ளைங்க முன்னாடி முட்டிபோட்டு நின்னுருக்கியா? என்னமோ தெரியாத்தனமா கடவுள் உன்னோட தலைக்குள்ளே ஒரு கால்குலேட்டர மறந்து வெச்சுட்டா, நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கர் ஆய்டுவியா?   

அட..... ஒரு கடியாரம்.... அதும் செவுத்துல மாட்ற கடியாரம்…… அது என்னய்யா பாவம் பண்ணுச்சு. உன்ன வந்து கடிச்சா வெச்சுச்சு?. அது பாட்டுக்கு பேட்ரிசெல் போட்டாக்க, ”டொக் டொக்”-னு அமைதியா புள்ளப்பூச்சி மாதிரி 1,2,3ன்னு 12 வரைக்கும் சுத்திக்கிட்டு இருந்துச்சு. எப்பாயச்சும் உன்னை காச்மூச்சுன்னு அலாரம் அடிச்சு எழுப்புச்சா? இல்ல என்னிக்காச்சும் உன்னை சீக்கிரம் தூக்கத்துல இருந்து எழுப்பியுடனும்னு ராத்திரியெல்லாம் பி.டி.உஷா கணக்கா வேகவேகமா ஓடுச்சா? என்னதான் பாவம் பண்ணுச்சு அந்த கெடியாரம்…. பாவி பாவி….. வர்ற கோவத்துக்கு என்ன சொல்றதுன்னே தெரியல… சரி விடு கோவத்த அடக்கிக்கிறேன், மேட்டருக்கு வருவோம்!

நீ பாட்டுக்கு இப்போ பெரிய வெண்ணை மாதிரி ஒம்பதாம் நெம்பரவெச்சு என்னமோ பில்லி சூனியம் பண்ணியிருக்கியே… அந்த மூனு முள்ளும் எந்தப்பக்கம் போவும், என்ன  பண்ணும் பாவம். மூனும் மூளை குழம்பி, இரத்தம் கக்குனதுல, நடுவே கருப்பா பட்டைபட்டையா இரத்தம் ஒறைஞ்சு கெடக்குது பாரு. அடியேய்…. கடியாரமுள்ள கருப்பு இரத்தம் கக்கவெச்ச பாவம் உன்ன ஏழேழு ஜென்மத்துக்கும் சும்மா விடாதுடியோய்! நீ எல்லாம் எங்கே போய்டுவே! நானும் பாக்குறேன்.

   அட கடியார முள்ள விடு, கடியாரத்துல மணி பாக்குற எங்கள நெனைச்சுப் பார்த்தியாய்யா? கடியாரத்துல ஒம்பதாம் நெம்பர் படுறபாட்டக் கண்டு எங்க எளகின மனசு துடிக்கிறது தெரியுதா உனக்கு? கடியாரத்த இந்தப்பாடு படுத்தி எங்கள மணி பாக்கவுடமா பண்ணிட்டியே, கணக்குல பாடர்ல பாஸ்(!) பண்ணுன என்ன மாதிரி உறவுகள்(!) பாவம் சும்மா விடுமாய்யா உன்னை.

   எலேய்... உனக்குத்தான் எல்லாம் தெரியும்னு ஒம்பதாம் நெம்பர வெச்ச இந்தத் தில்லாலங்கடி வேலை பண்றியே, உனக்கு நேருக்கு நேரா (காந்திக்கு நேராவும் கூட) சவால் விடுறேன், நோட் பண்ணிக்கோ…   

  •  ஒம்பதாம் நெம்பர வெச்சு தில்லாலங்கடி வேலை பண்ணின நீ, 0 – சைபர் நெம்பர வெச்சு இதே மாதிரி பண்ணு பார்ப்போம் # நாங்கெல்லாம் எத்தன தடவை சைபர் மார்க் வாங்குனோம்ம்ம்ம்ம்…. மவனே இப்போ நீ சிக்கினியா!

  • நீ பெரிய கணக்குப் புலிதானே, உன்னால நூத்துக்கு நூறுதானே எடுக்க முடியும், திரும்பியும் வா ரெண்டு பேரும் கணக்குப் பரிச்ச எழுதலாம், நீ நிஜமாவே அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இருந்தா கரெக்டா 35 மார்க் மட்டும் எடுத்துக்காட்டுய்யா பார்க்கலாம் # அதும் சரியா 35 எடுத்தறக் கூடாது 33.5 எடுத்து, பேப்பர் திருத்துற வாத்தியார் பாவபுண்ணியம் பார்த்து ஒன்னரை மார்க் சேத்துப்போட்டு, நீ 35 எடுத்திருக்கனும்!

இந்த சவால் ரெண்ட்லயும் நீ ஜெயிச்சா இந்தக் கெடியாரத்த போனப் போகுதுன்னு நானே வெச்சுக்கிட்டு தெனம் தெனம் மணி பார்க்கும் போதெல்லாம் உன்னை திட்டுறதோட விட்டுடுறேன்!

மவனே நீ மட்டும் தோத்துப்போய்ட்டீன்னு வை ஒழுக்கமா உன்னோட தலைக்குள்ள இருக்குற கால்குலேட்டர கழட்டி போட்டுட்டு, இதுல எத்தன ஒம்பது இருக்கோ, அத்தனையும் பெருக்கி, மொத்தத்துக்கும் தோப்புக்கரணம் போடனும்…. சவாலுக்கு ரெடியா……………………!?


அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல!

நன்றியெல்லாம் கிடையாது


ஏகப்பட்ட எரிச்சலுடன்,
அப்பா அம்மா வெச்ச அதே பேர்தான்
-----------------------------
பொறுப்பி :  
* கடிகார வித்தியாசத்துக்காக மட்டுமே எழுதப்பட்ட கடுதாசி
* படஉதவி மின்மடல் வாயிலாக வானம்பாடிகள் தந்தருளியது
* ஐஸ்: அந்தக் கடியாரத்தைக் கண்டுபிடிச்ச கணக்குப் புலி பொறுத்தருள்வாராக!

-0-

விதி வலியது


அடிக்க கூடும் கைகளுக்கிடையே
வெறும் சப்தத்தை பிரசவித்துவிட்டு
தன் மரணத்தை தள்ளிப்போடுகிறது 
பறக்கும் கொசு!

-0-

பொரி அள்ளும் பிள்ளையை
சிந்தாமல் தின்றென அதட்டும்போதே
பிதுங்கிச் சிதறியோடுகிறது 
என் விரலிடுக்கில் சில

-0-

கல்லுக்குள் ஒளிந்துகிடக்கும் தன்னை
எந்தக் கடவுளும் ஈன்றெடுப்பதில்லை
செதுக்கிப் பிரசவிக்கும் சிற்பியை 
எவரும் கடவுளாய் நினைப்பதில்லை
  
-0-

எங்கோ எதற்கோ யாரிடமோ
ஏதாவது ஒரு பொய்
உதிர்ந்துகொண்டேயிருக்கிறது
சிலநேரங்களில் நம்மிடமே நாமும்

-0-

கடல் சுனாமியைவிடக் கொடியது சாயக்கழிவு சுனாமி

அங்கே நாங்கள் கண்ட காட்சிகளின் அவலம்... உலக மகா சர்வாதிகாரி ஹிட்லரையே கேவிக்கேவி அழ வைத்துவிடும். 'நவீன ஹிட்லர்' ராஜபக்ஷேவையும் ரத்தக் கண்ணீர் சிந்த வைக்கும்''

ஜூலை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் முதல் ஈரோடு வரை நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு மிதிவண்டிப் பயணத்தினிடையே இப்படி ஒலித்த குரல்... அனைவரையும் விதிர்விதிர்க்க வைப்பதாக இருந்தது!


நதிகள் மாசுப்படுத்தப்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவிவெப்பமயமாதல், நஞ்சில்லா உணவு மற்றும் இயற்கை விவசாயம் ஆகியவை தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், திருப்பூர், 'பசுமைப் பாதுகாப்பு இயக்கம்' சார்பில் இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.கருணாகரன், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் ஆடிட்டர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கொடி அசைத்து பயணத்தைத் துவக்கி வைத்தனர்.

அன்னூர், அவினாசி வழியாகச் சென்ற மிதிவண்டி பயணக் குழுவினருக்கு பழச்சாறு, இளநீர் போன்றவற்றைக் கொடுத்து ஆங்காங்கே உற்சாகப்படுத்தி வழி அனுப்பிவைத்தனர் மக்கள்.

'நதிகளைக் காப்போம், நொய்யலை மீட்போம்’ என்கிற கோஷம் முழங்க. திருப்பூர் நகருக்குள் சுமார் 18 கி.மீ. தூரம் பயணம் தொடர்ந்தபோது... சாயப்பட்டறை பிரச்னை காரணமாக பலரும் வேலை இழந்திருப்பதால், திருப்பூர் வெறிச்சோடிப் போயிருக்கும் அவலத்தை உணர்ந்த பயணக் குழுவினர், முதல் நாள் இரவு ஊத்துக்குளியில் தங்கினர்.

இரண்டாம் நாள் பயணம்... திருப்பூரின் சாயக் கழிவுகள் காரணமாக நோயுற்றுக் கிடக்கும். ஒரத்துப்பாளையம் அணைப் பகுதியை நோக்கிப் புறப்பட்டது. அங்கேதான் ஒலித்தன... கட்டுரையின் ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த வரிகள்.

அப்படிக் குமுறிய கொங்கு இளைஞர் பேரவையின்  நிறுவனர்  குமார. ரவிக்குமார், ''திருப்பூரின் சாயக்கழிவு நீர் இப்பகுதியில் ஏற்படுத்திய பாதிப்பு... சமுத்திரத்தில் கிளம்பும் சுனாமியை விட, பலநூறு மடங்கு கொடுமையை விதைத்திருக்கும் 'சாயச் சுனாமி'. கடல் சுனாமி... ஒரு நாள் நிகழ்வு. இந்தச் சாயச் சுனாமியோ... தினம் தினம் மக்களைக் கொன்று போட்டுக் கொண்டிருக்கிறது. சாயக் கழிவு என்ற பெயரில் நொய்யல் ஆற்றில் கலக்கிவிடப்பட்ட விஷம்... அந்த ஆற்றங்கரையோர மக்களை நடைபிணமாக மாற்றி வைத்துள்ளது. மண் காற்று, நீர் அனைத்தும் நஞ்சாகிப் போயுள்ளது.

ஒரத்துப்பாளையம் அணைப் பகுதியில் கிணறுகள் அனைத்தும் ததும்பும் அளவுக்குத் தண்ணீர் இருக்கின்றது. ஆனால், அதை கால்நடைகள்கூட குடிக்க முடியவில்லை. அங்கே விளைந்திருக்கும் தென்னை இளநீர்கூட மக்கள் பருக முடியாத அளவுக்கு விஷமாகிப் போயிருக்கும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது. நாங்கள் மிதிவண்டியை உருட்டிச் சென்ற முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுதான் நிதர்சன நிலைமை!

ஒரு குடம் குடிநீருக்காக 5 கி.மீ. தூரம் போக வேண்டிய அவலத்தில் உள்ளார்கள் இம்மக்கள். ஆண், பெண் மலடு, புற்றுநோய், தோல் வியாதி என்று பெரும்பாலானவர்கள் நோய்களுடன்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமை... பவானி, அமராவதி என்று மற்ற ஆற்றுப் பிரதேசத்தையும் தாக்க ஆரம்பித்திருப்பது இன்னும் கொடுமை'' என்று கவலை பொங்கக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சென்னிமலை வழியாகச் சென்ற மிதிவண்டிப் பயணம், மாலை 6 மணிக்கு ஈரோட்டில் நிறைவுற்றது. மொத்தம் 180 கி.மீ. தூரம் பயணித்து, ஈரோட்டை அடைந்த பயணக் குழுவை... நொய்யல் ஆற்று பாசன சபைத் தலைவர் அ.பொ.கந்தசாமி, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர். செ. நல்லசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

”விஷச் சாயம்” என்றே ஆகிவிட்ட இன்றைய விவசாயத்தைக் காப்பாற்றவும், நாசப்படுத்தப்படும் நதிகளை மீட்கவும், வனங்களைப் போற்றவும், மண்ணை மதிக்கவும் வலியுறுத்தி நடந்த இப்பயணம், பல ஆயிரம் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதுதான் இந்த முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி'' என்று பெருமிதத்தோடு சொன்னார். புரட்சிகர விவசாயிகள் முன்னணி அமைப்பாளர் முகிலன்.

-------
பொறுப்பி:

பசுமை விகடன் இதழில் திரு ஜி.பழனிச்சாமி(9940651071) அவர்கள் எழுதிய கட்டுரை. 

நன்றி : பசுமை விகடன், ஜி.பழனிசாமி

-0-

ஈரோடு புத்தகத் திருவிழா 2011 - அழைப்பு

ஈரோடு என்றால் சட்டென நினைவிற்கு வருவது பெரியார், மஞ்சள், உபசரிப்பு எனும் பட்டியலில் சமீப வருடங்களில் இடம் பிடித்திருப்பது “ஈரோடு புத்தகத் திருவிழா”. ஒரு திருமண மண்டபத்தில் பல சிரமங்களுக்கிடையே தொடங்கப்பட்ட இந்தப் புத்தகத் திருவிழா ஆண்டுக்காண்டு பல சிறப்புகளை உள்ளடக்கி வளர்ந்துகொண்டே வருகிறது. 



கோடிக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றுத்தீர்வதும், லட்சக்கணக்கானோர் புத்தகத் திருவிழாவிற்கு வருவதும், ஒவ்வொரு நாள் மாலையிலும் நிகழ்த்தப்படும் உரையினை பல்லாயிரக்கணக்கான மக்கள் செவியுறுவதும் என புத்தகத் திருவிழா இப்பகுதி மக்களுக்கான ஒரு அற்புத அறிவுத் திருவிழா!



அன்பிற்குரிய திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் அயராத முயற்சியில், ”மக்கள் சிந்தனைப்பேரவை”யின் சார்பில் நடத்தப்படும் இந்த ”ஈரோடு புத்தகத் திருவிழா-2011”  ஜூலை 29ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 9ம் தேதி முடிய ஈரோடு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு 200 கடைகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் மாலையில் அரங்கின் மையத்தில் சிறப்பு அழைப்பாளர்களின் உரைவீச்சு நடைபெறும்.. உரையைக் கேட்க தவறியவர்களுக்கு அடுத்த நாள் முதல், மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலகத்தில் குறுந்தகட்டில் உரை விற்பனைக்கு கிடைக்கும்.

மேலதிக விபரங்களுக்கு  புத்தகத் திருவிழா இணையத்தை அடைக...



கடந்த ஆண்டுகளின் நடந்த புத்தகத் திருவிழா குறித்த சுட்டிகள்:





அனைத்து நண்பர்களையும் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு அன்போடு எங்கள் ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாகவும் வரவேற்கிறேன்.

-0-

ரயில் பயணங்களில் - ஆனந்தவிகடனில் வெளியான கவிதை



அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு
அசையும் எல்லாக் கைகளிலும்
அப்பிக்கொள்கிறது பிரிவு.

பதிந்து வைத்த இருக்கையெனினும்
பரபரப்பாய்த் தேடியலைந்து
கண்டடையும்போது பரவும் நிம்மதி.

நடன லயத்தில் நகரும் பெட்டியில்
இடறி நடப்பவர்கள் இடைவிடாது
விதைக்கிறார்கள் மன்னிப்பை.

காலை ரயிலில் சாப்பிடுபவர்கள்
அருகில் இருப்பவர்களுக்கு
ஊட்டுகிறார்கள் பசியை

எல்லாப் பயணங்களோடும்
ஓடும் ரயில் பெட்டிகளுக்கு
உள்ளேயே
குறுக்கும் நெடுக்குமாய்
ஓடும் ஏதாவதொரு குழந்தை
மறக்கவைக்கிறது வயதை.



---------
குறிப்பு: இந்த வார (20.07.11) ஆனந்தவிகடன்  ”சொல்வனம்” பகுதியில் வெளியான கவிதை
- நன்றி ஆனந்த விகடன், சுகுணா

-0-

பகிர்தல் (13.07.2011)


வெற்றி பண்பலைக்கு நன்றி:

இலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் வெற்றி வானொலியின் விடியல் நிகழ்ச்சியில் ”நாள் ஒரு தளம்” என்ற தலைப்பில் பல தரப்பட்ட இணையதளங்களை, வலைப்பக்கங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்! 
 

அதில் ”கசியும்மௌனம்” வலைப்பக்கத்தை 10.06.2011 அன்று அறிமுகப்படுத்திய இனிய நண்பர் பதிவர் லோஷன் அவர்களுக்கும் வெற்றி வானொலிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.


படம் காட்டலில் உதவி : வானம்பாடிகள்

அழகாய்ச் சிறப்பித்த அரிமா சங்கம்:

நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் வழக்கமான செயல்பாடுகளிலிருந்து சற்று வித்தியாசமாக ஒவ்வொரு செயலையும் தொடர்ந்து செய்துவருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக பாரதிகிருஷ்ணகுமார், எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், பெருமாள்முருகன், ச.தமிழ்செல்வன், கண்மணி குணசேகரன், லஷ்மணப்பெருமாள், ஆதவன்தீட்சன்யா என படைப்பாளர்களையே முன்னிருத்தும் எங்கள் சங்கம் இந்த முறை எழுத்தாளர் பவா. செல்லத்துரை அவர்களை அழைத்திருந்தது.

நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களை தவிர, வேறு யாரையும் இதுவரை மேடைக்கு அழைப்பதில்லை என்பதிலும், திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலில் எதன்பொருட்டும், சமரசம், மாற்றம் செய்துகொள்வதில்லை என்பதிலும் உறுதியாக நிற்கும் சங்கம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சு,வெங்கடேசன் அவர்களின் உரையை கேட்க திடீரென, விழாவிற்கு வந்த மாவட்ட ஆட்சியரைக்கூட முன் வரிசையில் மட்டுமே இருக்கை ஒதுக்கி அமரவைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்சியரும் அதை மிக நல்லவிதமாகவே எடுத்துக்கொண்டு, உரை முடிந்தவுடன் சென்றுவிட்டார்.



இந்த முறை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த பவா.செல்லத்துரை தனது மனைவி கே.வி.சைலஜா-வுடன் வருகை தந்திருந்தார். எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் பவா.செல்லத்துரையை மேடைக்கு அழைக்கும்போது, அவர் மனைவியையும் மேடைக்கு அழைத்து அமர வைத்து பெருமைப்படுத்தினர். "ஏன் தம்பதிகளாக மேடைக்கு அழைத்தோம்" என்பதை தனது உரையின் போது முன்னாள் ஆளுநர் அரிமா தனபாலன் விளக்கினார். எங்கள் அரிமா சங்கம் குறித்து பெருமையும், பெருமகிழ்வும் அடைகிறேன்.

பாடாய்படுத்தும் பாதாள சாக்கடைகள்:

ஈரோடு நகரின் குடியிருப்புப் பகுதி வீதிகளை, பாதாளச் சாக்கடைக்காக தோண்ட ஆரம்பித்து ஓராண்டுக்கும் மேலாகிறது. இப்போதைக்கு அது நிறைவடைவதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லா வீதிகளுமே வயிற்றைக் கிழித்து கடனே என்று தையல் போட்டது போல் காட்சியளிக்கின்றன. தோண்டி மூடப்பட்டவைகளில் 99% வீதிகள் இன்னும் தார் போடப்படாமல் இருக்கின்றன. எந்த வீதியிலும் தைரியமாக திரும்ப முடிவதில்லை, பெரும்பாலான வீதிகளில் பாதிவரை சென்றுவிட்டு வேறு வழியில்லாமல் திரும்பி பின்னால் வந்து, வேறு எந்தவீதி வழியாக  தேவையான இடத்தை அடைவது என பட்டிமன்றம் நடத்தும் ஆட்களை ஆங்காங்கே வீதிகளின் பிரிவுகளில் காணலாம்! இந்தக் கொடுமை எப்போது முடியுமென்று தெரியவில்லை!


நேரலைக் கொலை:

”சண்டையில் கிழியாத சட்டை உண்டா” என்பது போல, ”போதையில் நிகழாத கொலைகள் உண்டா” என்பதை சமீபத்திய கோவைக் கொலை நிரூபித்திருக்கிறது. சாய்பாபா காலனி காவல் நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் முன்பு நடுச்சாலையில் நிமிடநேரத்தில் நான்கு பேரால், நிகழ்த்தப்பட்ட கொலைத்தாக்குதல், இறந்தவரோடு சேர்ந்து ஐந்து குடும்பங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வன்மத்தை கீழே கிடப்பவனின் மேல் கல்லைத் தூக்கிப்போடுவதில் தெரிகிறது.


எதேச்சையாக சிக்னலில் இருக்கும் காவல்துறை கேமரா வழியே இந்தக் கொலைக்காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் நேரலையில் தெரியவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்:

பதவி விலகல் அதிர்ச்சியோடு தயாநிதிக்கு மத்திய புலனாய்வுத் துறை விசாரணை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை. எதிர்பாராத விதமாக விமான நிலையத்திலேயே சக்சேனா கைது, அதோடு குவியும் அடுக்கடுக்கான புகார்கள். விசாரணைக்கு கலாநிதி மாறன் அழைப்பு என தின்ற உப்புக்கு கொஞ்சமாய் தண்ணி குடிக்கத் துவங்கியிருக்கிறது சன் நெட்வொர்க் குழுமம்.

இந்நிலையில், வீடியோ ஒளிபரப்புக்குப் பிறகு ஊர் ஊராய் ஓடி ஒளிந்த நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் சன்டிவிக்கு எதிராக புகார் கொடுக்கும் மொக்கைத் தருணமாகவும் மாறியிருக்கிறது. கதவைத்திற காற்றுவரும் என்று சொன்னவனுக்கு ”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது புரியாதா என்ன?

குறுந்தகவலில் வந்தது:

சராசரியாக ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 4 பொய் சொல்கிறோம். வருடத்திற்கு 1460. அதில் அதிகமாகச் சொல்லும் பொய் “I am fine” 


-0-

படக்கவிதை


குழந்தைகளை
நிழற்படக் கருவிக்குள்
அடைக்கும் பொழுது...
கூடவே தேவதைகளும்
குடிபுகுந்து கொள்கின்றன...
----------------------------------------------------------------------------------------

இரவு முழுதும்
வெளிச்சம் இருளையும்
இருள் வெளிச்சத்தையும்
மாறிமாறித் தின்று தீர்க்கின்றன

ஒன்றுமே..... ஒரு நாளில்
பசியாறிவிடுவதில்லை!!!
----------------------------------------------------------------------------------------


ஆயுதங்கள்....
அவர்களைக் காக்கவா,
நம்பியவர்களைக் காக்கவா!?
 
----------------------------------------------------------------------------------------

 

ஒவ்வொரு முறையும்
ஒற்றைப் பனை
உதிர்த்துக் கொண்டேயிருக்கிறது
ஏதோ ஒரு கவிதையை!
----------------------------------------------------------------------------------------




தென்னமரத்தடியில்
உட்கார்ந்து
தேநீரும்
குடிக்கலாம்!!!!
 

----------------------------------------------------------------------------------------


நண்பனை தவறுதலாக
மாற்றி அழைத்துவிட்டு..
மாற்றித்தான் அழைத்து விட்டேன்
எனச் சொல்லும் உண்மையில்
ஒரு நிம்மதி நிலவுகிறது!
----------------------------------------------------------------------------------------
 

சட்டென புகழும் மனது,
புகார் சொல்லவும்
அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை

 ----------------------------------------------------------------------------------------

 

தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது
யாரோ ஒரு சிலரிடம் மட்டும்
சட்டென ஒத்துக்கொள்ளத்
தோன்றுகிறது!

 ----------------------------------------------------------------------------------------
 

வீடு - அலுவலம் - வீதி - மனது.....
என எல்லாக் குப்பைத் தொட்டிகளும்
வேகமாய் நிரம்பி வருகின்றன.
கொஞ்சம் மக்கும் குப்பை
நிறைய மக்காத குப்பை.....

----------------------------------------------------------------------------------------

தோல்விகளின் வலியை விட
தோல்விகளை
ஒப்புக்கொள்வதன் வலியே
கொடூரமானது!
 
 ----------------------------------------------------------------------------------------


என்றாவது ஒரு நாள் நடக்கும் என்பது......
நியதியெனினும்,
அது இன்றே நடந்தால்
ஏற்றுக்கொள்ளத் தடுமாறுகிறோம்!
----------------------------------------------------------------------------------------

தாங்க முடியாத
தண்டனைகள் கிடைக்கும் போதுதான்,

போகிற போக்கில் விதைத்த
குற்றங்களின் கொடூரம் உரைக்கிறது.
 
----------------------------------------------------------------------------------------
 

பறக்கும் தட்டுகள் குறித்த
கதைகள் - செய்திகள்
ஆச்சர்யத்தை,
நம்பிக்கையின்மையை,
பயத்தை
ஒருசேர விட்டுச்செல்கிறது.
 
----------------------------------------------------------------------------------------
 

25 பைசா காசும்
இனி இறந்து போகப் போகிறதாம்!

ஒவ்வொரு காசுக்கும்
ஒரு கதை இருக்கு நமக்குள்ளே!

பத்து பைசா விளிம்பு போல்
வளைந்த முடி என்று
வர்ணிக்கப்பட்ட பெண்ணும்
வர்ணித்த நண்பனும்
பழைய பத்துப் பைசாவைப்
பார்க்கும் பொழுதெல்லாம்
நினைவுக்குள் அலையடிப்பதுண்டு...!!!
 
----------------------------------------------------------------------------------------
சோறாக்கும் கேஸ் சிலிண்டருக்கான
மானியத்தை நிறுத்தும் வெண்ணைகள்
அந்த சிலிண்டருக்கு வரி வாங்குவதையும்
நிறுத்துவாங்களா!?

----------------------------------------------------------------------------------------


பகல் பொழுதிலும்
திறக்கப்படாதா கடைக் கதவுகள்

கடந்து செல்பவனின் உற்சாகத்தையும்
தனக்குள்ளே பதுக்கிக்கொள்கிறது!
 

----------------------------------------------------------------------------------------



இப்படியே இனிப்ப திணிங்க
ஒருநாள் இல்லாட்டி ஒருநாள்
சக்கரைவியாதி வந்துடும்னு சொல்லி
எம்ஜிஆர் ரெட்டை வெரல
ரெண்டு கண்ணுலயும் விட்டு
நோண்டப்போறாரு பாருங்க! :))))
----------------------------------------------------------------------------------------




-0-

வீடு







 



வேப்பமரத்தைத் தழுவி சாளரத்தில் சலசலக்கும் காற்று
கதகதப்பைக் கசியவிடும் சுவர் சில்லிடும் தரை
குதறும் குடும்பச் சண்டைகளை தின்று தீர்க்கும் கதவு
இடி மழை வெப்பம் குளிர் எதையும் செரிக்கும் கூரை
களைத்து வீடடைய தாயாய் தழுவும் தாழ்வாரம்
நேசித்துக் கொண்டாட ஒன்றா ரெண்டா ஒரு வீட்டில்

சமையலறை முகப்புச்சுவர் சாவி மாட்டுமிடம்
ஓய்வெடுக்கும் கொசுவை சுவரோடு ஓங்கியடித்த இரத்தக்கறை
காற்றில் தூரியாடும் மாத நாட்காட்டியின் அடிப்பக்க பிறை
சுவற்றில் கால் வைத்து ஓய்வெடுத்ததன் சாட்சியாய் குதிகால் சுவடு
நடக்கப் பழகிய பிள்ளை தாறுமாறாய்த் தீட்டிய கிறுக்கல்கள் என
கறைகள் படியா சுவர்கள் ஆன்மாவைத் தொலைத்தவை

உறங்கவும் புழங்கவும் புணரவுமான வெற்றுக்கூடா வீடு
பிறந்த மனிதர்களை அடைகாக்கும் கருவறைதானே வீடு





-0-

உயிருக்குள் ஊட்டுவது



வெள்ளி தலைக்குளியலில்
அடங்காமல் பறக்கும் முடியை
கழுத்தோரம் காதோரம் கடத்திவிட்டு
என் நாசிதேடும் உன் வாசக்காற்றும்
 
என்னுள் வேர்விட்டு கிளைபரப்பி
சொட்டுச்சொட்டாய் உயிர்திருடி
வெண்வரிகளோடு உன் புடவையில்
அடர்த்தியாய்ப் பூத்த செம்பருத்திப்பூக்களும்


கண் சிமிட்டிச் சிமிட்டி
உதடுகளைச் சுழித்துப்பிசைந்து
காதுவழியே கரைத்து ஊற்றும்
வார்த்தைக் கவிதைகளும்

என்னிடமிருந்து என்னைப்பறித்து
விடைபெறும் தருணங்களில்
வலிக்காமல் செல்லமாய்க் கிள்ளும்
நகத்தில் பிறக்கும் பிறைவடிவமும்

என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்
இருந்தும் எதுவும் அலுக்கவில்லை
உயிருக்குள் ஊட்டுவது நீ என்பதாலும்
ஏந்திக்கொள்வது நான் என்பதாலும்

-0-