முகம் நனைத்த வெயிலின் தடயங்கள்என் கனவுகளின்
மீதமர்ந்து பறக்கும்
பட்டாம்பூச்சியின்
பூம் பாதங்களில்
ஒட்டி வருபவை
உன் நாட்களில் படிந்து
மலரத் துவங்கிய தினம்
நினைவில் இருக்கிறதா!

கடைசியாய் நீ மூடிச்சென்ற
அறையின் கதவைத் திறக்கிறேன்
தேங்கியிருந்த காற்றில் மிதக்கும்
பிரியத்தின் வாசனையை
தவிர்ப்பதெப்படி!

கைகளுக்குள் பொதித்துக்
கொடுக்கப்பட்ட
பிரத்யேக கதகதப்பை
தனக்கு வந்த பிரிக்கப்படாத
பரிசுப் பொதியொன்றை
அணைத்துறங்கும் பிள்ளை போல்
வருடிக் கொண்டேயிருக்கிறேன்

வெயிலில் ஊறி
நிழலில் ஒதுங்கையில்
முகம் நனைத்த வெயிலை
கையால்  துடைப்பது போலே
இடைவிடாது துடைத்தும்
முத்தங்களின் தடயங்கள்கூட
போவதாயில்லை!

-

அவளும் அவளும் அணைத்துக் கொண்டிருக்கிறார்கள்அவளும் அவளும்
அணைத்துக் கொண்டிருக்கிறார்கள்
பிரிவின் மொழியை
ஒருத்தி தம் மென் கரத்தால்
முதுகில் தட்டுவதும்
மற்றொருத்தி உணர்வதுமாய் இருக்கிறார்கள்

அவர்களும் இவர்களும்
முன்னும் பின்னும்
அவள்களைக் கண்டும் காணாமலும்
இடமும் வலமும் கடக்கிறார்கள்
மொழிந்திடத் தெரியாத பிரிவு
அவர்களின் முதுகிலும் கிடக்கலாம்

அவர்களிருவரும் பரிமாறும் பிரிவு
அவர்களுடையது மட்டுமல்ல
உலகம் யாவிலும்
விமான நிலையங்களில்
துறைமுகங்களில்
தொடர்வண்டி நடை மேடைகளில்
பேருந்துப் படிக்கட்டுகளில்
திருமணங்களில்
கல்விக் கூடங்களில்
மருத்துவமனைகளில்
ஆற்றங்கரைகளில்
வீட்டுத் திருப்பங்களில்
படிக்கட்டு வளைவுகளில்
உணர்த்தியும் உணர்த்த முடியாமலும் போன
அத்தனை பேரின் பிரிவுகளையும்
அவள்கள் தம் அணைப்பில் மொழிகிறார்கள்

வெட்கச் சிரிப்போடு
அவர்களை நோக்கும் மழலையொன்று
கடைசியாய் கை அசைத்து வந்த
பாட்டியின் பிரிவையும் சேர்த்தே
அவர்கள் மொழிகிறார்கள்

இதுகாறும் சுமந்துவந்த
பிரிவுச் சுமை யாவற்றையும்
அவர்கள் அணைப்பின் கதகதப்பில்

நானும் இறக்கி வைத்து நகர்கிறேன்.

111% ஜிஎஸ்டி

கனரக வாகன ஓட்டுனராக தேர்ச்சி பெற்ற அந்த இளைஞர், தன் கனவாக “ஐபிஎஸ்” என்றார். “என்ன படிச்சிருக்கீங்க!?” “பத்தாங்கிளாஸ்” “வயசு?” “25” “மேல ஏன் படிக்கல?” “குடும்பச் சூழல்” “சரி... ஐபிஎஸ் எப்படி? எப்போ?” “2018ல் நேரடியா +2 எழுதுவேன் 2021ல் டிகிரி முடிப்பேன். அப்புறம் மூனு வருசம் ப்ரிபேர் செய்து 2024ற்குள் ஐபிஎஸ் ஆகிடுவேன்” - வேறொரு சந்தர்ப்பத்தில் எம்.ஏ இறுதி ஆண்டு படிக்கும் மாணவரிடம் “அடுத்து என்ன செய்யப்போறீங்க!?” “ஐஏஎஸ்” “என்ன காரணம்!?” “அது ஒரு செம்ம கெத்து!” “எப்போ!?” “ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ!” “ப்ரிப்ரேசன்!?” “இனிமேதான்” அதன்பின் கேட்ட எந்தக் கேள்விக்கும் பொருத்தமான பதில் வரவில்லை. இறுதியாகத் தான் ஒரு உண்மை தெரிந்தது 'TNPSC / UPSC' என்பவற்றைக்கூட அவர் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. * இங்கு பெரும் அச்சுறுத்தலைத் தரும் கேள்வி “அடுத்தது என்ன... எதை நோக்கி!?” என்பதுதான். வாழ்க்கைச் சாலைகளில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். எந்த இடத்தை அடைவதற்கான பயணம் என எந்தத் தீர்மானமும் இல்லாமல், தீரத் தீர பெட்ரோல் நிரப்பி்க்கொண்டு ஓடும் பென்ஸ் கார்களும், சென்னை (அ) பெங்களூர் என இடத்தைத் தீர்மானித்துவிட்டு இரண்டாம் முறை எஃப்.சிக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் பழைய ஃபியட் கார்களும் சென்று கொண்டிருக்கின்றன. என் கவனம் அந்த ஃபியட் கார்கள் அடைய வேண்டிய இடங்களை அடைந்துவிட வேண்டும் அல்லது நெருங்கிவிட வேண்டும் என்பதுதான். அப்போ அந்த பென்ஸ் கார்கள்!? வேறென்ன அவைகளின் பெட்ரோலுக்கு மட்டும் 111% ஜி.எஸ்.டி போடச் சொல்ல வேண்டும்!

தூரத்து கட்டைவிரல்தயங்கி நிற்கையில்
மென் அழுத்தத்தில்
முன்தள்ளுவதும்
தடுமாறித் துவளுகையில்
தன் திறன் கூட்டி
மேலேற்றுவதும்
மனக் காயங்கள் மீது
மயிலிறகு கொண்டு
மருந்திடுவதும்
திகைத்து விழிக்கையில்
திசை கண்டு
நம்பிக்கையூட்டுவதும்
மேடையில் நிற்கையில்
தூரத்திலிருந்து
கட்டைவிரல் உயர்த்துவதும்
ஒடுங்கி நிற்கும்போது
ஒரு வாய்ப்பளியுங்குள் என
யாசிப்பதும்
நடுங்கும் விரல்களில்
பிரியத்தின்
கதகதப்பைப் பகிர்வதும்
மூழ்கியதிலிருந்து மீள்கையில்
வலித்தும்கூட பற்றிய கை
விடாமலிருத்தலும்
அவர்களே யோசிக்காதபோது
அவர்களுக்காக
யோசிப்பதும்
மிக எளிதுதான்!
யோசித்துச்
சொல்ல வேண்டுமெனில்...
சற்றுக் கடினம் தான்!
இன்னும்....
உண்மையாகச்
சொல்ல வேண்டுமெனில்
நட்பில் அது சாத்தியம் தான்!