Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Feb 14, 2019

அவங்களாப் பெத்தாங்க....!


நேற்று பகல் முழுவதும் சேலத்தில் ஆறு மிக முக்கியமான சந்திப்புகள், நீள் உரையாடல்கள். அதன்பின் ஒரு திருமண வரவேற்பில் அவசரமாக கலந்து கொண்டுவிட்டு, அடித்துப் பிடித்து அங்கிருந்து நாமக்கல்லிற்கு விரைந்து, டாடா மோட்டார்ஸ் வழங்கும் கல்வி ஊக்கத்தொகை நிகழ்வில் உரை.

வண்டியிலிருந்து இறங்கிய வேகத்தில் அரங்கிற்குள் ஓட, நான் வந்ததை அறிந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அந்த நொடியே பேச அழைக்க.... ஒரே ஒரு நிமிடம்கூட சுதாரிக்க அவகாசமில்லாத நிலை.

பெற்றோர், பிள்ளைகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் இருக்கும்அரங்கு என்பது மட்டுமே மனதில் இருந்தது. நாள் முழுக்க அலைந்து மிக அவசரமாக பயணித்து வந்ததால் மனதிற்குள் தயாரித்து வைத்திருந்தவை யாவும் கலைந்து போயிருந்தன.
ஆனாலும் சமீபத்தில் ஹலோ எஃப்.எம் பேட்டியில் குறிப்பிட்டிருந்த இன்றைய மாணவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்என்பதில் துவங்கி நூல் பிடித்தேன். என்னளவில் எனக்கு சற்று திருப்தி தராத சமாளிப்பு உரைதான் என்றாலும். பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்தது.

கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு நிகழ்வுகள் நிறைவடைந்ததும், உணவு வழங்கப்பட்டது. சாப்பிட்டுவிட்டு கை கழுவிக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் ஓடி வந்து, “அங்கிள் ஒரு செஃல்பி எடுத்துக்கட்டுமா?” எனக் கேட்டாள்.

கண்ணு எந்த க்ளாஸ் படிக்கிறே!

லெவன்த் அங்கிள்

எந்த ஸ்கூல்?”

இப்ப ________ ஸ்கூலில் படிக்கிறேன்

இப்ப இந்த ஸ்கூல்னா... புரியலையே!

அதையேன் கேக்குறீங்க. நான் படிக்காத ஸ்கூலே இல்ல!

அந்தப் பெண் அவ்வளவாக படிப்பு வராத மாணவியாக இருக்க முடியாது. முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவர்களுக்கே, இந்தக் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுவதால், அவள் நன்கு படிக்கும் மாணவியாகத்தான் இருக்க வேண்டும்.

ஏம்மா அத்தன ஸ்கூல்!?”

எனக்கென்ன தெரியும் அங்கிள், அவங்களாப் பெத்தாங்க, அவங்களா இங்க படி, அங்க படினு மாத்துனாங்க! அவங்களா அது படி, இது படினு சொல்றாங்க

ஒரு பெண் எங்கள் அருகில் புன்னகைத்தபடி வந்தார். இதா... எங்கம்மாக்கு நானு சி.ஏ தான் படிச்சே ஆவனுமாம்குழந்தைத்தனம் மாறாத அந்தப் பெண் சிரித்தபடியேதான் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய அம்மாவைப் பார்த்து ஏனுங்க... நீங்க சி.ஏ படிக்க ஆசைப்பட்டிருந்தீங்களாக்கும்!என்றேன்

மென்மையான வெட்கத்தோடு ஆமாங் சார்.... அதான் பாப்பாவையாச்சும் படிக்க வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா இன்னிக்கு உங்க பேச்சு கேட்டதும் மாத்திக்கிட்டேன், இனிமே அப்படி சொல்லப் போறதில்ல. நல்லாப் படிக்கிறவதான். அவ இஷ்டத்துக்குப் படிக்கட்டும்னு விட்றப்போறேன்என்றதும், அந்த மகள் அம்மாவை தாவியணைத்தபடி அம்மா.... நெசமாத்தான் சொல்றியா!என ஆச்சரியத்தில் இறுக்கிக் கொண்டிருந்தாள்.

மீண்டதும் அந்தப் பெண்ணோடு உரையாடல் தொடர்ந்தது.

சரிம்மா... செஃல்பி எடுத்துக்க, ஆனா நான் அழகாத் தெரியனும்என்றேன்.

அங்கிள் நீங்க அழகு அங்கிள்!என்றபடி என்னருகில் நெருங்கி, பதின் வயதுப் பெண்கள் செல்ஃபி எடுக்கும்போது செய்வதுபோலவே, ஒரு மாதிரி கண்களைச் சுருக்கி, உதடு இறுக்கி சுழித்தபடியே படம் எடுத்தாள்.

பாருங்க அங்கிள் சூப்பரா இருக்கீங்க!என என்னிடம் காட்டினாள். காலையில் இருந்து கழுவாத முகம் என்னுடையது. உண்மையில் அந்தப் பெண் மிக மிக அழகாக அந்தப் படத்தில் தெரிந்தாள்.

அலைச்சல், பதட்டம், விரைந்த பயணம், அவகாசமின்றி ஏறிய மேடை, மேடையில் எனக்கிருந்த திருப்தியின்மை ஆகியவையெல்லாம் காணாமல் போய், என்னவோ தெளிவாக, அமைதியாக, நிதானமாக குறிப்பாக நிறைவாக இருப்பதுபோல் அந்தப் படத்தில் நான் தெரிந்தேன்.


Aug 28, 2018

கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் கவனத்திற்கு


கல்லூரியில் முதலாம் ஆண்டில் நுழைந்திருக்கும் மாணவ, மாணவியர்கள் கவனத்திற்கு... ஈரோடு கதிர்




*
மிக நீண்ட பயணமான பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து வந்திருக்கிறீர்கள். முதலில் வாழ்த்துகள். அந்த நீண்ட பயணத்தை சற்றே திரும்பிப் பாருங்கள். நிகழ்ந்தவை அனைத்தும் இந்த இடத்திற்கு வருவதற்கான செயல்களே!. சும்மா போனால் போகிறதென்று, போகிற போக்கில் இங்கு வந்துவிட வில்லை.


*
கல்லூரிக்குள் விரும்பி வந்திருக்கலாம், அழைத்து வரப்பட்டிருக்கலாம், இழுத்தும் வரப்பட்டிருக்கலாம். அதற்காக நம்மிடம் மதிப்பெண், பணம் அல்லது சிபாரிசு என ஏதோவொன்று கூடுதலாய் இருந்திருக்கலாம். ஒரு உண்மையையும் உணரவேண்டும்... தகிப்பும், தேடலும், தேவையும் நிறைந்த யாரோ ஒருவர் ஏங்கிக்கொண்டிருக்கும் இடமாகவும் இந்த இடம் இருக்கலாம். அதையும் கவனத்தில் கொள்வோம்.


*
இனிவரும் நான்கு / மூன்று ஆண்டுகளை, இந்தக் கல்லூரி நாட்களை எவ்விதம் கடக்கலாம், என்னவெல்லாம் அறிந்து கொள்ளலாம் என்பது குறித்து தீர்மானியுங்கள்.


*
வந்திருப்பதை வெறும் கல்லூரியாக மட்டும் நினைத்தால், படிக்க வேண்டியதைப் படித்தால், இறுதியில் பட்டம் கிடைத்துவிடும். வெறும் பட்டம் மட்டுமே எதிர்காலம்எனும் பெரும் பயணத்திற்குப் போதுமா?


*
கல்லூரி என்பது பட்டம் மட்டுமே கொடுக்கும் இடமல்ல. நாம் யாரென நம்மைக் கருதுகிறோமோ, அதைச் செதுக்கித் தரும் சிற்பக்கூடமும்கூட. முடிந்தவரை உங்களை இந்தக் காலத்திற்குள் செதுக்கிக் கொண்டு வெளியேறுங்கள்.


*
எப்பொழுதாவது வீட்டில் இருந்து பைக் அல்லது கார் எடுக்கும்போது, எங்கு போகிறோம், எதற்குப் போகிறோம், எவ்ளோ நேரம் ஆகும் எனும் தெளிவில்லாமல் புறப்பட்டிருக்கிறோமா? அதற்கான பெட்ரோல் செலவு எவ்வளவு இருந்துவிடும்? ஒரு 100 ரூபாய் பெட்ரோல் செலவிற்கே அத்தனை யோசிக்கின்றோம். அப்ப அடுத்து வரும் வாழ்வின் மிக முக்கியமான நான்கு / மூன்று ஆண்டுகள் குறித்து தெளிவாகி விட்டோமா? ஏன், எதற்கு, எப்படி, எங்கு என்பதை உடனடியாக கண்டுபிடிக்கத் தொடங்குங்கள்.


*
ஏன் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தோம்!?” எனும் காரணத்தை, நீங்களாகக் கண்டுபிடிக்கும்வரை, “ஏன்டா இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தோம்!?” எனும் மனநிலை இருக்கவே சாத்தியங்கள் அதிகம்.


*
உங்களை வழிநடத்த பொருத்தமான Mentor யார் என்பதைத் தேடிக் கண்டுபிடித்துவிடுங்கள். அவர் இனிமேலெல்லாம் பிறக்க வேண்டியதில்லை. ஏற்கனவே பிறந்து உங்களுக்கு முன், எட்டும் தொலைவில் சென்று கொண்டிருப்பவரே. மூத்த மாணவர், படித்து முடித்து வெளியேறியவர், பேராசிரியர், கல்லூரிப் பேருந்து ஓட்டுனர், தந்தை, தாய், உறவு, கல்லூரிக்கு வரும் விருந்தினர், பயிற்சியாளர் உள்ளிட்ட இவர்களில் யாரோ ஒருவராக அவர் இருக்கலாம். இவற்றில் இல்லாமல் வெளியிலும்கூட இருக்கலாம். தேடிக் கண்டடைய வேண்டியது உங்களின் உடனடிக் கடமை.


*
எல்லாம் யாரோ பார்த்துக்குவாங்க, நான் ஜஸ்ட் ஸ்டூடண்ட் தானே!என்றெல்லாம் தப்பிக்க நினைக்க வேண்டாம். தனக்கானதைத் தேடி அடையும் தெளிவும், திறனும், அறிவும் கொண்டவர்கள்தான் இந்தத் தலைமுறை மாணவ மாணவியர்கள்.


*
கல்லூரி முடித்து வேலைக்குப் போகலாம், தொழில் துவங்கலாம், நிறுவனம் ஆரம்பிக்கலாம்... அதில் எதுவென இப்பொழுதே சிந்திக்க ஆரம்பியுங்கள். கல்வியின் கடைசி, கால் பங்கு காலத்தில் இருக்கின்றோம். இனியும் தாமதிக்க காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள்.


*
உங்களுடைய Bio-Dataவில் என்னவெல்லாம் கூடுதலாக இணைக்க முடியும் என்பதை இப்போதிருந்தே சிந்திக்கத் துவங்குங்கள்.


*
நட்பையும், உங்களின் குணத்தையும் செழுமைப் படுத்துங்கள். எவருடனும் சொற்கள், செயல்களில் கவனம் இருக்கட்டும்.


*




Feb 6, 2015

பாடங்களை நினைவில் நிறுத்த 10 யோசனைகள்



பள்ளி செல்லும் சிறுவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை என்றால், அது நினைவாற்றல் குறைபாடுதான். ஒரு வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பாடத் திட்டம்தான். பாடம் நடத்துபவர் ஒரே ஆசிரியர்தான். கேள்வித்தாளும் ஒன்றேதான். விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியரும்கூட ஒருவரேதான். ஆனாலும் ஒரு வகுப்பில் படிக்கும் அனைவரும் சமமான ஒரே மதிப்பெண்களைப் பெற்றுவிடுவதில்லை. அனைத்து மாணவர்களும் சமமான மதிப்பெண்களை பெறாமல் போவதற்கு பற்பல காரணங்கள் இருந்தாலும், அதில் மிக முக்கியமானது படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் மறந்துபோவது. பல ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த எளிய யோசனைகள் நம் செல்லங்களுக்கு உதவும்

முக்கியமான சொற்கள்:
பொதுவாக பாடத்தில் இருக்கும் மொத்தப் பகுதியையும் படித்து நினைவில் வைத்துக்கொள்ளுதல் அவசியம். சிலருக்கு முழுவதுமாக மனனம் செய்யப்பட்டு நினைவில் இருக்கும், ஆனால் முதல் வார்த்தை நினைவுக்கு வராமல் தடுமாற்றம் ஏற்படும். ஒட்டுமொத்தமாக நினைவில் இருக்கும் பாடத்தை எளிதாக மீட்டெடுக்கும் வழிதான் முக்கியமான வார்த்தைகளைத் (keywords) தெரிவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ளுதல். அப்படி நினைவில் வைத்திருக்கும் சொற்களை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டால், குறிப்பிட்ட பகுதி எளிதில் எளிதில் நினைவில் வந்துவிடும்.

முழுமையாகப் படித்தல்:
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி முடித்தபின், தனக்கு முழுவதுமாக புரிந்துவிட்ட பாடமாக இருந்தாலும் கூட, அன்றே அந்தப் பாடத்தை முழுமையாக ஒருமுறை படித்து நினைவில் நிறுத்திக்கொள்ளுதல் முக்கியம். ஆசிரியர் நடத்தி, தெளிவாகப் புரிந்த பாடத்தை முழுமையாக மீண்டும் ஒருமுறை படிக்கும்போது, அப்பாடம் ஆழமாக மனதில் பதிந்துவிடும்.

எழுதிப்பார்த்தல்:
படித்த பாடத்தை, புரிந்துகொண்ட பாடத்தை, நினைவில் வைத்திருக்கும் பாடத்தை இறுதியாக தேர்வில் நாம் எழுதிக்காட்டித்தான் வெளிப்படுத்தப் போகிறோம். ஆகவே படித்த, புரிந்த, நன்கு நினைவில் இருக்கும் பாடத்தை அவ்வப்போது எழுதிப் பார்ப்பது பலமுறை படிப்பதற்குச் சமம்.

சந்தேகம் கேட்டல்:
ஆசிரியர் பாடம் நடத்தும்போதே கூர்ந்து கவனித்தல் மிக முக்கியம். அதோடு ஆசிரியர் நடத்தும் பாடத்தில் வரும் மிகச்சிறிய சந்தேகங்களையும் உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டு அல்லது சக மாணவர்களிடம் விவாதித்து தெளிவு படுத்திக்கொள்ளுவதும் மிக மிக முக்கியம். இவ்வாறு ஆசிரியரிடம் சந்தேகம் கேட்டு தெளிவு பெற்ற பாடங்கள் மிகத் தெளிவாக மனதில் பதிந்துவிடும். எளிதில் மறக்காது

மீண்டும் மீண்டும் படித்தல்:
பிடித்த ஒரு சினிமா படத்தையோ, பாடல் காட்சியையோ ஒரே ஒரு முறை பார்ப்பதோடு நிறுத்தி விடுகிறோமா? பொழுதுபோக்கு அம்சமாய் இருக்கும் திரைப்படம், பாடல் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை குழந்தைகள் அளிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் பாடத்தை ஒருமுறை மட்டுமே படிப்பது எப்படி போதுமானதாக இருக்குமா? மனதில் ஆழமாகப் பதிந்த பாடமாகவே இருந்தாலும், நினைவில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, அந்தப் பாடத்தை மீண்டும் மீண்டும் படித்து நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். பாடங்களை மீண்டும் மீண்டும் வாசிக்க, ஒரு கால அட்டவணையைத் தயாரித்துக்கொள்ள வேண்டும். அந்த அட்டவணைப்படி பாடத்தை குறிப்பிட்ட இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் படித்தல் அவசியம்.

உணவு மற்றும் ஓய்வு:
தேர்வு சமயங்களில் எளிமையான சத்தான உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவு என்ற வகையில் அதிகப்படியான பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை முடிந்தவரையில் தவிர்த்தல் நலம். தனது உடலுக்குத் தேவையான அளவிற்கு நிச்சயம் தூங்க வேண்டும். அதேபோல் தேர்வை நினைத்து பயப்படாமல், மனதையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வு எழுதுவது குறித்து திட்டமிட்டுக்கொள்ளலாம். ஆனால் பயப்படத் தேவையில்லை.

ஆசிரியராக மாறுதல்:
தனக்குப் புரிந்த, நினைவில் இருக்கும் பாடத்தை நண்பர்களிடம் விவரிப்பது போல தனக்குத் தானே ஆசிரியராக மாறி, ஒரு வகுப்பு எடுத்தல் இன்னும் நல்ல பலன்களைத் தரும். தானே மாணவனாகவும் தானே ஆசிரியராகவும் மாறி ஒரு பாடத்தை விளக்கிவிட்டால் அது மறந்து போகுமா என்ன?

நண்பர்களிடம் விவாதித்தல்:
தனக்கு முழுவதுமாகப் புரிந்துவிட்டது, அதனால் இனி பிரச்சனைகள் இருக்காது என நினைப்பதுதான் சில நேரங்களில் பூதாகரமான பிரச்சனையாக மாறிவிடுகிறது. புரிந்துகொண்ட பாடத்தை, மீண்டும் மீண்டும் படிப்பதோடு, தான் படித்த, புரிந்துகொண்ட பாடத்தை, சக மாணவர்களிடம் விவரிப்பது என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி.

தன்னம்பிக்கை:
பொதுவாக பிடித்த பாடம் பிடிக்காத பாடம் என்பதே புரிதலின் அடிப்படையில் உருவாகும் ஒன்று. புரிந்துகொண்ட பாடங்கள் அனைத்தும் பிடித்த பாடங்களாகவே அமைந்துவிடும். அடுத்து பாடங்களைப் படிக்கும்போது இதை நான் எளிதில் புரிந்துகொள்வேன், எனக்கு நினைவில் நிற்கும், தேர்வில் கேள்விகளுக்கு மிகச்சிறப்பாக விடை எழுதுவேன் எனும் தன்னம்பிக்கையோடு படிக்க வேண்டும். தன்னம்பிக்கைக் குறைவுதான் பெரும்பாலும் தேர்வு நேரங்களில் வீணான பதட்டத்தைக் கொண்டுவந்து பாடங்களை மறந்துபோகச் செய்கின்றது.

வழிமுறை அட்டவணை:
பொதுவாக ஒரு பாடத்தை மனதிற்குள் ஒரு வரைபடம்போல் வரைந்துகொள்ள வேண்டும். Flowchart எனப்படும் வழிமுறை அட்டவணை முறையில், பாடத்தில் இருக்கும் முக்கியச் சொற்களை அட்டவணைப் படுத்திக்கொண்டால் மிக எளிதாக முழுப் பாடத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.





-

செல்லமே பிப்ரவரி இதழில் வெளியானது. நன்றி செல்லமே

Jan 8, 2014

பண்ணைப் பள்ளிகளும் கள்ள மௌனமும்



பெரும்பாலும் மௌனத்தை அடைகாப்பதும், அடைகாத்த அத்தனை மௌனங்களுக்கும் சேர்ந்தார்ப்போல் எப்போதாவது முழங்கிவிட்டு ஓய்வதுமாக இந்த சமூகம் மாறிவிட்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா சீரழிக்கப்பட்ட போது ஒட்டுமொத்த இந்தியாவும் பதறியது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அரசும் தன் பங்கிற்கு அவரை சிங்கப்பூருக்கு சிகிச்சையளிக்க அழைத்துச் சென்றது. குற்றவாளிகளில் ஒருவன் இறந்துபோகவும் சிறைச்சாலை எளிதில் வாய்ப்பளித்தது. வழக்கின் தீர்ப்பு கூட விரைந்து வெளியானது. அதே வாரத்தில் தூத்துக்குடியில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலையான ஒரு ஏழை பள்ளி மாணவி குறித்து, டெல்லி சீரழிவுக்கு தமிழக வீதிகளில் கருப்பு உடையணிந்து தட்டிகளைப் பிடித்து நடந்த மகளிர் அமைப்புகள் கூட பெரிதாகக் குரல் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். இதோ இப்போது, காரைக்காலில் ஒரு பெண் குழுவாக வன்புணர்வு செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டதில்கூட அங்கிருந்த காவல்துறை பெண் உயரதிகாரி நேரடியாக தலையிட்டு எடுத்த கைது நடவடிக்கைகளால் ஓரளவு கவனம் பெற்றுஉச்கொட்ட வைத்திருக்கிறது.

சென்னையில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், வகுப்பறையில் ஆசிரியை ஒருவரை குத்திக் கொலை செய்தபோது ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுகளால், வெகுண்டு பதட்டப்பட்டது, பயம் கொண்டது. சில மாதங்கள் கழித்து  தூத்துக்குடியில் கல்லூரி முதல்வரை மூன்று மாணவர்கள் வெட்டிக் கொலை செய்தபோது அய்யய்யோவென பதட்டப்பட்டது, ஆனாலும் அந்தப் பதட்டம் வகுப்பறை ஆசிரியை கொலை அளவுக்கு பதட்டமில்லை.  ஏனெனில் ஒன்பதாம் வகுப்பு மாணவனே கொலை செய்யும் போது, கல்லூரி மாணவன் செய்வது சாதாரணம் எனும் மனப்போக்கு வந்திருக்கலாம்.



வன்புணர்வு மற்றும் வகுப்பறை, வளாகக் கொலைகளுக்கு நிகராக, தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பவை மாணவர்களின் தற்கொலைகள். அதிலும் அவ்வளாக வெளியில் தெரிந்தும் தெரியாமலும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பவை தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே நிகழும் தற்கொலைகள். இந்த மாதிரி படிப்புச் சுமையும் வெகு அரிதாக வயிற்றுவலி அல்லது குடும்பச் சிக்கல்கள் மட்டும்தான் காரணமா?

ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, இன்றைய தமிழகத்தில் நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகள் தான் 11, 12ம் வகுப்பு கல்விக்கான சிறப்பிடமாக, புகலிடமாகத் திகழ்கின்றன. 10 வகுப்புத் தேர்வு முடியாகும் நாளுக்கு முந்தைய இரவு பெற்றோர்களால் பள்ளி வளாகம் நிரம்பி வழியும். அவர்களுக்காக ஸ்பெஷல் கடைகள் தோன்றுவதாகக் கூட கேள்விப்படுவதுண்டு.  அதே நாமக்கல்தான் கோழிப்பண்ணைகளுக்கும், முட்டைகளுக்கும் புகழ் வாய்ந்தது என்பது ஆச்சரியமான ஒற்றுமை. ஆண்டுதோறும் மாநில அளவிலான இடங்களை இந்தப் பகுதி பள்ளிகள் எப்படியோ பிடித்துவிடுகின்றன. பத்தாம் வகுப்பில் 470-490 க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை சலுகைகள் கொடுத்தும், கட்டணம் இன்றியும், ஊக்கத் தொகை கொடுத்தும் தங்கள் பள்ளிக்கு பிடித்துவரும் நிர்வாகத்தின் நோக்கம் 12ம் வகுப்பில் மாநில அளவிலான தரவரிசையில் ஓரிரு இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்பதுதான். அப்படி ஒருமுறை பிடித்துவிட்டால் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு சேர்க்கை நிரம்பி வழியும், கட்டணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்.

பெற்றோர்களுக்கும் மகனாக, மகளாக இருந்த பிள்ளைகள் 8-ம் வகுப்பு தாண்டியவுடன் மாணவனாக, மாணவியாக மாறிவிடுகின்றனர். பிள்ளைகளின் விருப்பம் என்னவாக இருக்கிறது என்பது பெரும்பாலும் நீர்த்துப்போய் என்ன செய்தாவது 10-ம் வகுப்பில் 470,480 மதிப்பெண்கள் எடுத்து, 12-ம் வகுப்பில் பொறியியல், மருத்துவத்திற்கு தேர்வு பெறும் மதிப்பெண்ணை எடுக்கவைக்கும் தமிழகத்தில் ஏதாவது ஒரு மூலையில் இருக்கும் ஒருபண்ணைப் பள்ளி”யில் சேர்த்துவிட வேண்டும். ”பண்ணைப் பள்ளி” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் இந்த இடத்தில் எனக்கு தயக்கமும், தடுமாற்றமும் ஏதுமில்லை.

கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கெடுத்த, குறிப்பாக நாமக்கல் மாவட்டப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்கள் கூறியதைக் கேட்டபோது இரத்தம் உறைந்துபோனது. ஒரு மதிப்பெண் வினாவிற்கு ஏ,பி,சி,டி என நாலில் ஒரு பதிலைத் தேர்ந்தெடுக்கையில் கேள்வியைப் பார்ப்பதற்கு முன் கீழிருக்கும் நான்கு பதில்களைப் பார்த்து அதில் ஒன்றை டிக் செய்துவிட்டுத்தான் கேள்விகளையே பார்ப்போம் என்ற அளவுக்கு மனப்பாடம் செய்யவைக்கப்படுகின்றனர் என ஒரு மாணவர் சொல்கிறார். சாப்பிடும் அறை உட்பட விடுதிகளின் எல்லாத் தூண்களிலும் பதில்கள் ஒட்டப்பட்டிருக்கும் என்பதும், விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒரு மாணவன் விடைகளைக் கண்டே தீரவேண்டும் என்ற நிலையில் உட்படுத்தப்படுகின்றனர்.

12ம் வகுப்பில் 1050 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த ஒரு பெண் விஷுவல் கம்யூனிக்கேசன் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார். முதல்நாள் வகுப்பறையில், ” விஷுவல் கம்யூனிகேசன் படிப்பைத் தேர்தெடுத்தற்கான காரணம் என்ன!?” என்ற கேள்விக்கு பதில் எழுதத் தெரியாமல் முக்கால் மணி நேரம் முழித்திருக்கிறார். காரணம் ”இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்டால் அது குறித்து யோசிக்கும் தன்மைகூட அற்றுப் போயிருந்தேன்” என்கிறார்.

படிப்பு என்பதைத் தவிர வேறு எதையும் சிந்திக்கும் சூழல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முடக்கப்படுகின்றன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் சமயத்தில் உட்சபட்ச அழுத்தங்களுக்கும் ஆட்படுத்தப்படுகின்றனர்.
 
இவ்வாறு வெளியேறும் மாணவர்களின் நிலையை, நாமக்கல் மாவட்டத்தின் புகழ் பெற்ற கோழிப் பண்ணைகளோடு ஒப்பிடத்தான் தோன்றுகிறது. குஞ்சு பொறித்து குறிப்பிட்ட நாட்களுக்குள் குறிப்பிட்ட எடையை கறிக்கோழி எட்டிவிட வேண்டும் என்பது மட்டுமே பண்ணையாளர்களின் நோக்கம். அப்படி எடை கொண்டுவர என்ன மாதிரியான உணவு, மருந்துகள் அளிக்கப்படுகின்றன என்பது குறித்து பண்ணையாளர்களுக்கும், அந்தக் கறியை வாங்கி ருசிப்பவர்களுக்கும் கவலையிருப்பதில்லை. அப்படிப்பட்ட இறைச்சியை உண்பவர்கள் புதிது புதிதான நோய்களுக்கும் வாதைகளுக்கும் உள்ளாகும் சூழல் பெருகி வருவதையும் மறுப்பதற்கில்லை.

இந்தப் பண்ணைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எப்படியாவது நல்ல மதிப்பெண் வாங்கி சிறந்த கல்லூரிகளில் கட்டணமின்றி இடம் பிடிக்க வேண்டும் என பெற்றோரும், எப்படியாவது மாநில அளவிலான தரவரிசையில் இடம் பிடிக்க வேண்டும் என நிர்வாகமும் இணைந்து தரும் நெருக்கடிகளில், சிதறும் மாணவர்கள் கொடியதொரு முடிவாக சிக நேரங்களில் தற்கொலை அமைகிறது. பொதுவாக சட்டம் தற்கொலையை தற்கொலையென்று மட்டுமே எடுத்துக் கொண்டாலும், தார்மீகமாக அவற்றை கொலைகள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். பதின்வயதில் ஒருவன்(ள்) தன்னை சுயமாய் மாய்த்துக்கொல்லசிலபல கொலைகளைச் செய்வதைவிட கூடுதல் வலிமை வேண்டும்.

இதுபோன்ற தற்கொலைகளை அரசல்புரசலாக தேர்வு நெருங்கும் சமயங்களில் சற்றே அதிகமாகக் கேள்விப்படுவதுண்டு. எனினும்கூட சின்ன சலனங்களோடு, சகமாணவர்களின் பெற்றோர்களும் இம்மரணங்களைக் கடந்து போய்விடுவது வழக்கம். அதற்கு மிகமுக்கியக் காரணம் தன் மகன் / மகள் எப்படியாவது அந்த வருடம் படிப்பை நல்லபடியாக முடித்துவிட்டு வந்துவிட வேண்டும் என்பது மட்டுமே.

கடந்த வாரத்தில் நாமக்கல் பள்ளி ஒன்றில் தற்கொலை செய்து  கொண்ட மாணவன் உடலை வாங்க மறுத்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் வரை சென்றுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் அந்த செய்தி அமுங்கிவிட்டது. தற்கொலை குறித்து நிர்வாகமும் பெற்றோரும் சொல்லும் காரணங்கள் விருமாண்டி சினிமாவை நினைவூட்டுகின்றன. பள்ளி சார்பில் சொல்லப்பட்டு செய்தித்தாள் வழியே அறிவது, அம்மாணவன் ஏற்கனவே ஒரு மாணவனோடு சண்டையிட்டு எச்சரிக்கப் பட்டதாகவும், வேறொரு ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கி எச்சரிக்கப்பட்டதாகவும், இம்முறை குறிப்பிட்ட ஒரு ஆசிரியைக்கு கை குலுக்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதனால் ஒழுங்கு நடவடிக்கையாக விடுதியைவிட்டு வெளியேறுமாறு தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. பெற்றோர் சார்பில் தெரிவிக்கப்பட்டதில் அந்த மாணவன் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என உடனடியாக மாணவனின் தந்தை முதல்நாள் இரவு அழைக்கப்பட்டதாகவும், அடுத்தநாள் பள்ளி நிர்வாகம் மாணவனின் உடல் நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்தாகவும் பின்னர் மாணவன் இறந்துபோய் விட்டதாக தகவல் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

மாணவனின் ஒழுங்கீனமான சில செயல்கள் என பள்ளி சொல்பவை, சக பெற்றோர்களாலும், பெரும்பான்மை சமூகத்தாலும் குற்றமாகவே பார்க்கப்படும் அவலத்துக்குரியவை. காரணம் அப்படிப்பட்ட செயல்கள் தம் பிள்ளையை பாதித்துவிடக்கூடாது என்பது. அதென்ன படிக்கும் வயதில் இப்படிப் பட்ட செயல்கள், அதுவும் இப்படிப்பட்ட சில்லறைத்தனமான செயல்கள் என்று கூட விமர்சிக்கப்படும். மற்ற மாணவர்களின் நிலை கருதி, இது மாதிரியான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நாங்கள் கடுமையாக தண்டிக்கத்தான் வேண்டிவரும் என பள்ளி நிர்வாகம் சொல்லும் சாத்தியமுண்டு. அதுவரை மகனை மாணவனாகப் பார்த்த பெற்றோர், அவன் உடலை வைத்துக்கொண்டு அதை தம் பிள்ளையாகப் பார்த்து கதறும் சாத்தியமுண்டு. தம் பிள்ளையின் தற்கொலை, நிர்வாகத்தின் கெடுபிடியால், அச்சுறுத்தலால் திணிக்கப்பட்ட கொலையாகவே கருதும் சாத்தியமுண்டு.

இன்றைய கல்வி வியாபாரம் என்பது, மெக்காலே கொடுத்ததை சீர்தூக்கிப் பார்க்காத கையாளாகாத்தனமும், பேராசையை நியாயப்படுத்தும் பெற்றோரும், வியாபாரமாக கருதும் பள்ளி நிர்வாகமும், கல்விக் கடிவாளத்தை தன் கையைவிட்டு விடுவித்துக்கொண்டு கண்டும் காணாமல் இருக்கும் அரசாங்கமும் இணைந்து நடத்தும் கோழைத்தனமான போர். இதில் இலக்காகச் சிக்கி அடிபட்டு, வதைபட்டு, தனித்திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு, அளப்பரிய திறன் கொண்ட மூளையை வெறும் நூறு ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு மெமெரி கார்டுக்கு நிகரான ஒரு சேமிப்புக் கருவியாக மாற்றப்பட்டு, சுதந்திரம் மறுக்கப்பட்டு, உணர்வுகள் துண்டிக்கப்பட்டு வீழ்ந்துபோவது, அரிதாக மடிந்துபோவது பதின் பருவப் பிள்ளைகளே!

ஓடும் பேருந்தில் நிகழ்ந்த பாலியல் வன்புணர்வைவிட வித்தியாசமானதொரு வன்புணர்வு நிகழும் வரை, கொடூரமானதொரு வகுப்பறைக் கொலை அரங்கேறும்வரை, இன்னொரு மாணவனின் தற்கொலை கோரமாக நிகழும்வரை சமூகத்தின் பொத்தாம் பொதுவான கள்ள மௌனம் கால்மேல் கால் போட்டவாறு அவரவர் வீட்டுத் திண்ணையில் சொகுசாய் அமர்ந்திருப்பது தொடர்ந்தே தீரும்!


-

நன்றி : தி இந்து

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...