தூரிகையும் சித்திரமும் என் இதயமும்




எதிர்பாராத தருணத்தில்
மேகத்திற்குப் பிரசவம் நடந்தது
அந்த ரயில் நிலையத்தில்

தெறிக்கும் சாரல்களில் ஆசிர்வதிக்கப்பட்டு
ஒரு சித்திரமும் தூரிகையும்
கைகள் பற்றி நின்றிருந்தன

தாமதமாய் வந்த ரயில் வண்டி
கொட்டும் பெரு மழைக்குள்
பெருமூச்சுவிட்டபடி நீண்டு கிடந்தது

தூரிகையிடம் விடைபெற்று
சித்திரம் மட்டும் ஓடி ஏறியது
ஒரு முன்பதிவு பெட்டியில்!

சாரல் தெறிக்கும் படியில் நின்று
மழைச்சரங்களை ஊடுருவி
அவனோடு விழிகளால் கதைத்துக்கிடந்தது

ஆயிரம் அபிநயங்கள் பேசிய
அவள் விழிக் கத்திக்கு முன்
அவன் விழிகள் உயிரற்றுக் கிடந்தன

கண்ணைத்துடை என்ற சாடையோடு
கைப்பையை தலைக்குப்பிடித்து
அவனருகே ஓடிவந்து ஏதோ கிசுகிசுத்தாள்
வர்ணத்தோடு நிமிர்ந்து மலர்ந்தது தூரிகை

திரும்பியவள் படியில் பாதம் பதிக்கும்முன்
மழைத்துளிகள் சொட்டச் சொட்ட
ஒரு முறை திரும்பி புன்னகையை உதிர்த்தாள்
கண்ட உயிர்களுக்குள் எல்லாம் பூ பூத்தது

மழையும் விடவில்லை வண்டியும் நகரவில்லை
புருவங்களை அசைத்து விழிகளால் கதைத்தவள்
மெதுவாய் விழி மூடி அவனை அருகே அழைத்தாள்

புத்துயிர்கொண்ட அந்தத் தூரிகையையும்
அழகாய் தீட்டியிருக்கும் அந்தச் சித்திரத்தின்
அருகில் வண்ணக்குழம்போடு ஆசையாய் ஓடியது

அவன் கைக்குள் கையைப் பொருத்தி
ஏதேதோ காதில் கிசுகிசுத்தாள்
அவன் விரல்களை அழுத்திப் பிசைந்தாள்

கதவோரம் ஒடுங்கி நின்றவள்
விழிமூடி இழுத்த சுவாசத்தில்
அவனைப்பிடுங்கி அவளுக்குள் நட்டுக்கொண்டாள்

வண்டி ஒரு குலுங்கலோடு நகர முற்பட
அவன் முதுகில் அழுந்தக் கை பதித்து
பிரசவம் போல் வெளியே தள்ளிவிட்டாள்….

தூரிகை மழையில் கரைந்து போனது
சித்திரம் உள்ளே காணாமல் போனது
நகரும் சக்கரங்களில் என் இதயம் கசங்கியது

கை நீட்டி ஒரு மழைத்துளியை கையகப்படுத்தி
விரல் மூடி மெதுவாய் விரித்துப் பார்த்தேன்
மொட்டாய் சிரித்த மழைத்துளி கண்சிமிட்டி
காதலித்துப்பார் என்றது கிசுகிசுப்பாய்

-0-

9 comments:

Unknown said...

காதல் ஓவியம்....

ஓலை said...

அலை பாயும் கதிர் வீச்சு.

Unknown said...

இனிமேல் எங்கண்ணே காதலிக்க???

ஹேமா said...

புகையிரத ஓவியம் கவிதையாகியிருக்கிறது அழகாய் !

dheva said...

காதலில் நனைந்தேன்!

vasu balaji said...

தூரிகை வரைந்த சித்திரம்
சில்லென்ற நனவுதாங்கிய இதயம்
இதயம் பொழிந்த கவிதை மழை
இதழோரச் சிரிப்பு மலர்த்தும் குறும்படம்.

VELU.G said...

காதல் காவியம் அருமை


//விரல் மூடி மெதுவாய் விரித்துப் பார்த்தேன்
மொட்டாய் சிரித்த மழைத்துளி கண்சிமிட்டி
காதலித்துப்பார் என்றது கிசுகிசுப்பாய்
//
இந்த வயதிலா? என்றது
காதோர நரைமுடி

Thenammai Lakshmanan said...

புத்துயிர்கொண்ட அந்தத் தூரிகையையும்
அழகாய் தீட்டியிருக்கும் அந்தச் சித்திரத்தின்
அருகில் வண்ணக்குழம்போடு ஆசையாய் ஓடியது /// அட அழகா இருக்கு இது..:)

meens said...

உன்னை காணும் வரை
தெரியவில்லை
ஓவியம் வரைய
தூரிகை தேவை இல்லை
கை எனும் தூரிகை
எனை கட்டி அணைத்தது
கேசம் எனும் தூரிகை
கன்னத்தில் வரைய
இதழ் என்னும் தூரிகை
கொண்டு வர்ண ஜாலங்கள்
வரைந்தாய் ....
மௌனமாய் அனுமதித்த
எனை மௌனம் வலி
என்கிறாயே நியாயமா