கிளி

ரைப் பரிட்சை லீவு முடிந்து பள்ளிக்கூடம் திறந்ததில் குமார் திடீர் கதாநாயகன் ஆகிவிட்டான். லீவில் அத்தை வீட்டுக்குப் போய் வந்த குமார், அத்தை பையன் வளர்த்து வரும் கிளி பற்றியே எப்போதும் புராணம் பாடிக்கொண்டிருந்தான். கண்கள் விரிய அவன், கிளி பற்றிச் சொல்லும் கதைகளைக் கேட்க கூட ஒரு கூட்டமே இருந்தது. யார் என்ன பேசினாலும் கிளி அதைத் திருப்பி பேசுவதாகச் சொன்னான். இவனை "துமாரு..துமாரு"ன்னு கூப்பிடுவதாக பெருமை வேறு அடித்துக் கொண்டேயிருந்தான்.

அந்தக்கிளி குஞ்சு பொறித்ததும் அவன் அத்தை பையன் குமாருக்கு ஒன்று தருவதாகச் சொன்னானாம். கிளிக்குஞ்சு வந்தவுடன் குமாரும் ஒரு கூண்டு செய்து அதில் வளர்த்துவேன், கட்டிலுக்கு பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தூங்குவேன், ஒரு நாளைக்கு பள்ளிக்கூடம் கொண்டுவந்து காட்டுவேன் என  பந்தா விட்டுக் கொண்டிருந்தான்.

அவன் கிளி பற்றிய பேச ஆரம்பித்த பிறகு மைதிலி குமாரிடம் மட்டும் அதிகம் பேசுவதாகத் தோன்றியது. அதென்னவோ மைதிலி குமாரிடம் போசும் போது கோபம் கோபமாய் வந்தது.

குமார் ஆரம்பித்த பிறகு மற்ற பசங்களும் கிளிகள் குறித்து விதவிதமாய் சொல்லும் விசயங்கள் ஒரு அதிசயக் கோர்வையாய் எப்போதும் மனதுக்குள் குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது. நாட்கள் போகப்போக கிளி வளர்க்க வேண்டும் என்ற ஆசை மனதுமுழுதும் அடைக்கத்தொடங்கியது. 


ப்போதாவது ஊருக்குப்போகும் போது பேருந்து நிலையங்களில் பெட்டிக்குள் இருந்து அவ்வப்போது கிடைக்கும் ஒரு சில நெல்மணிகளுக்காக பொறுப்பாக சீட்டெடுத்துப்போடும் கிளிகள் ஒரு போதும் அழகாய்த் தோன்றுவதில்லை. அழுக்கான கிளி ஜோசியக்காரனின் பிம்பமாகவே அந்தக்கிளிகள் தோன்றும். கீச் கீச்சென மெலிதாய் அலறும் அந்த குரல்களின் ஈர்ப்பால், எப்போதாவது பார்த்தாலும், உடனே அந்தக் கிளிகள் மீது ஒரு அந்நியத்தன்மை வந்து அமர்ந்துகொள்ளும்.

அவ்வப்போது திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும், வண்ண அச்சில் வரும் படங்களிலும் பார்த்துப் பார்த்து மனதிற்குள் உருவேறிப்போய்விட்டது. வாழ்நாளில் ஒரேயொரு கிளியாவது வளர்க்க வேண்டும் என்பதும் லட்சியத்தில் ஒன்றாய் இருந்தது. இந்த நிலையில் குமாரின் கிளி குறித்த பந்தா லட்சியத்தை உருவேற்றியது.

கிளி எங்கே கிடைக்கும், எந்தக் கடையில் கிடைக்கும் என்ற நச்சரிப்பிற்கு வீட்டில் ஒருவரும் மதித்துப் பதில் சொல்லவேயில்லை.

அப்பா மட்டும் ”கடையிலெலாம் கெடைக்காது, குருவி புடிக்கிறவன் வந்தா சொல்லி புடிச்சுத்தரச்சொல்றேன்”னு சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

குருவி புடிக்கிறவங்க எப்போ வருவாங்க என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. கிளி பற்றியே பேசிக்கொண்டிருந்தது ஏனோ அம்மாவுக்குப் பிடிக்கவில்லை, அப்படியே கிளி கிடைத்தாலும் வீட்டில் வளர்த்த விடமாட்டேன் என அம்மா திட்டியது கொஞ்சம் பயமாக இருந்தது. 

பழுத்த கோவைப்பழத்தைத் தேடி கிளிகள் கூட்டமாய் வரும் என முத்தாயிப்பாட்டி சொன்ன பிறகு, பள்ளிக்கூடம் போகவர வாய்க்காக்கரைமேல் சைக்கிள் மிதிக்கும் போது, அக்கம்பக்கம் மரங்களில் கோவைப்பழச்செடி படர்ந்திருக்கிறதா என்பதையும், அதில் கிளி இருக்கிறதா எனத் தேடுவதும் வழக்கமாகிவிட்டது. என்ன தேடியும், கிளிகள் மட்டும் கண்ணில் படவேயில்லை! பாட்டியிடம் கோவைப்பழச்செடி இருக்கிற மரத்திற்கு கிளிகள் வருவதேயில்லைபோல என்று சொன்னபோது,

”நல்லாத் தேடிப்பார்றா பையா, பழுத்த பழமிருந்துச்சுன்னா கிளி கண்டீப்பா வரும்” என பாட்டி சொன்னது.

டுத்த நாள் பள்ளிக்கூடம் போகும் போது, பசங்களை முன்னால் அனுப்பிவிட்டு, அடர்த்தியாய் கோவக்கொடி பிண்ணிப்பிணைந்து கிடந்த அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றித் தேடிப்பார்த்தான். முழுதும் குடைந்த வெறும் தொல்லியாய் மட்டும் ஓரிரு கோவைப்பழங்கள் கீழே கிடந்தன. அண்ணாந்து பார்த்துப் பார்த்து தேடியும் ஒரு கிளிகூட தென்படவில்லை.

வாய்க்கால் கரைமேல் யாரோ பரபரப்பாய் மணியடிக்கும் சப்தம் கேட்டது. வழக்கமாய் பள்ளிக்கூடத்திற்கு லேட்டாகவே வரும் துரையின் சைக்கிள் பறந்து கொண்டிருந்தது. போகும் வேகத்தில் “பள்ளிக்கோடம் வரமா என்றா பண்றே” என்பது காதில் விழுந்து. “வரேன் நீ போடா” என்று சொன்னது அவன் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லையென்று தோன்றியது.

கழுத்து வலிக்கத் தேடியும் கிளிகள் இருப்பதற்கான சுவடே இல்லை. ஆடு ஓட்டிப்போகும் ஒரு அம்மா கேட்டது, “ஏண்டாகண்ணு இங்க நின்னுக்கிட்ட? சைக்கிளுகீது பஞ்சராப்போச்சா கண்ணூ?” என்று. யோசிக்காமல் ஆமாம் என்று சொன்னான். ஆடுகள் எல்லாம் கடந்து போன பிறகு யோசிக்க ஆரம்பித்தான், அந்தக் கேள்வி பிடித்துப்போனது, சைக்கிள் பஞ்சராக இருந்தால் பள்ளிக்கூடம் போகாமல் கட்டடித்துவிடலாம் என்ற நினைப்பு வந்தது.

முள் எதாவது தென்படுகிறதா என்று தேடிப்பார்த்தான். கண்ணாடிமுள் கொத்து ஒன்று வேலியோரம் கிடப்பது தெரிந்தது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மெதுவாய் நகர்ந்து ஒரு விழுது முள் ஒடித்தான். எந்தச் சக்கரத்தில் குத்தலாம் என்ற யோசனையில் தடுமாறிக்கொண்டிருந்தான். ஒரு வழியாய் முன்சக்கரம் என முடிவெடுத்து டயரில் வைத்து அழுத்த நுனி சிதைந்து பின் முள் இரண்டாக உடைந்தது, அடுத்த முள்ளில் முயற்சி செய்ய அதுவும் நுணுங்கியது. கிடைக்காத கிளி, ஏறாத முள் என கோபம் மட்டும் கொப்பளித்து வந்தது. கண்ணாடி முள் ஆகாது என்று கண்களை வலை வீசியதில் பச்சை வேல மரம் கண்ணில் பட்டது. துரதிருஷ்டம் எல்லா முள்ளும் பச்சையாக மட்டுமே இருந்தது. 

கடந்து போன பக்கத்தூர் ஐஸ்காரர் அண்ணன் எம்-80யை நிறுத்தி, ”ஏண்டா தம்பி, பள்ளிக்கூடம் போகாம இங்கே ஏன் நின்னுக்கிட்டே?” என்றார்

”சைக்கிளு பஞ்சர்ணா”

”அடக்கெரவமே, எந்தச் சக்கரம்ட, பள்ளிக்கோடத்துக்கு நேராயிருக்குமே”

”முன்னாடி வீலுண்ணா”

சட்டென பார்வையை அங்கு ஓட்டியவர்

”என்றா பஞ்சர்ங்கிற, காத்து ஃபுல்லா இருக்ற மாதர தெரியுது”

திக்கென்றது அவனுக்கு திருதிருவென முழித்தான்.

“இல்லண்ணா பஞ்சர் தான்” என்றவன் முகமெல்லாம் வெளுத்தது!

இவனுடைய பதட்டமும், திருதிருமுழியும் ஐஸ்காரருக்கு சந்தேகத்தை வரவழைத்தது!

”என்னடா சிகரெட்கீது குடிக்றதுக்கு நிக்கிறியா” என்றவாறு வண்டியை நிறுத்திவிட்டு அருகில் வர ஒரு மாதிரி இவனுக்கு உடம்பு நடுங்கியது. முள் சதி செய்ததில் பஞ்சர் ஆகாத சக்கரம் குறித்து கூடுதல் கோபமும் அதையொட்டிப் பதட்டமும் வந்தது.

அருகில் வந்த ஐஸ்காரர் முன் சக்கரத்தை அழுத்திப்பார்த்துவிட்டு, ”என்னடா காத்து ஃபுல்லா இருக்குது” என்றவாறே பின்சக்கரத்தையும் அழுத்திப்பார்த்தார்.

திருதிருவென முழித்தவனைப் பார்த்தவரின் பார்வையில் கடுமை ஏறியிருந்தது.

”இல்லீங்ணா, காத்து கம்மியாயிருந்துச்சு, பஞ்சர்னுதான் நிறுத்தினேன்”

“டேய் என்னமோ மொள்ளமாறித்தனம் பண்றே நீ, இரு இரு ங்கொப்பாகிட்ட சொன்னாத்தான் சரிப்படுவே”

”அதெல்லாம் ஒண்ணுமில்லீங்ணா”

“செரிடா நீ கெளம்பு பர்ஸ்டு, பள்ளிக்கோடத்துக்கு நேரமாச்சு பாரு”

ஒன்றும் புரியவில்லை அவனுக்கு, அவனையறியாமல் சைக்கிள் ஸ்டேண்டைத் தள்ளி, ஏறி மிதிக்க ஆரம்பித்தான்.

கீழே கிடந்த காலி கோவைப்பழம், வராத கிளி, உடைந்த கண்ணாடி முள், பச்சவேல மரம் என ஒவ்வொன்றும் பகையாய்த் தோன்றியது. குமார்  ஏனோ மனதுக்குள் மிகப்பெரிய எதிரியாய் விஸ்வரூபம் எடுத்து நின்றான். இனம் புரியா வன்மம் குமார் மேலும், இனம்புரியா ஆசை கிளி மேலும் தோன்றியது.

பள்ளிக்கூடத்தை அடையும் போது, ப்ரேயர் முடிந்து சாரை சாரையாய் வகுப்பறைக்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

பி.டி வாத்தியார் பிரம்போடு கேட் அருகே நின்று கொண்டிருந்தார். தாமதமாக வந்த பசங்க நிற்பது தெரிந்தது. அதில் துரையும் இருப்பது நினைத்து மனதுக்குள் பூவின் ஒரு இதழ் பூத்தது!

“ஏண்டா லேட்டு…” என்ற  பி.டியின் குரல் மனதைக் கிடுகிடுக்க வைத்தது. துரை பார்ப்பது கூடுதல் அவமானமாய்த் தோன்றியது

“சார்…. வந்துங்க சார், சைக்கிள்லைங்க் சார்… காத்துங்க சார்ர்ர்ர்ர்ர்” என என்னவோ உளறும் போது துரை பாக்கிறானா என்றும் பார்த்தான்! விஷ்க்கென பின்னாடி விழுந்தது ஒரு பிரம்படி,

“ராஸ்கெல் இனிமே லேட்டா வந்தா, தோல உறிச்சுப்புடுவேன், ஓட்றா கிளாசுக்கு” என்றவாறு ஆளுக்கொன்று விஷ்க் விஷ்கென பிரம்பால் வீசினார்.

வகுப்பறை கதவுக்கு அருகில் வரும்போது, வகுப்பாசிரியர்  பெயர் கூப்பிட்டிக்கொண்டிந்தார். இவன் தலையைப் பார்த்தவுடன், வா என்று தலையை ஆட்டிவிட்டு பெயர்களைத் தொடர்ந்தார்!

அவன் இடத்தில் அமர்ந்தவன், வன்மத்தோடு குமார் இருக்கும் இடத்தைப் பார்த்தான். குமார் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

மைதிலி மட்டும் ஒருமுறை இவன் பக்கம் திரும்பி என்னவோ சொன்னாள். அவள் மீதும் போதும் கோபம் கனன்றது! மீண்டும் திரும்பிப் பார்த்தாள், அவள் முகபாவம் எதோ சொல்ல முயல்வதுபோல் இருந்தது. கடுப்பில் ஒன்றும் புரியவில்லை!

ஒரு காகித மடிப்பை இவன் மேசைக்குத் தள்ளினாள். மடிப்பைப் பிரித்தான் “குமார் அத்தை பையனோட கிளி செத்துப்போச்சாம்” அவள் கையெழுத்தில் அவனுக்கு கிளி சிரித்தது.

”ஹைய்யா, அப்போ குமாருக்கு கிளிக் குஞ்சு கிடைக்காது” என்ற மகிழ்ச்சி குப்பென ஒரு நிம்மதியை மனதிற்குள் பூக்கச்செய்தது. கொஞ்ச நாட்களாக அவனுக்குள் முளைத்திருந்த கிளியின் சிறகுகள் உதிரத் தொடங்கியது. மனசு முழுதும் பசுமையாய் சிறகடித்துக் கொண்டிருந்த கிளியின் அடர்இளம்பச்சை நிறம் வெளுக்கத் துவங்கியது!

-0-



12 comments:

அகல்விளக்கு said...

மிக இயல்பான சாரம்
அருமையாக வந்திருக்கு... :-)

vasu balaji said...

அறியாத வயதின் இயல்பான உணர்வுகள்.
/”ஹைய்யா, அப்போ குமாருக்கு கிளிக் குஞ்சு கிடைக்காது” என்ற மகிழ்ச்சி குப்பென ஒரு நிம்மதியை மனதிற்குள் பூக்கச்செய்தது. /
க்ளாஸ்

பழமைபேசி said...

அட... குழந்தையா மாறுறதுல எவ்வளவு லேசாகிப் போகுது மனசு?!!

ஆமா, அண்ணன் ஏன் எப்பவும் க்ளாசு கேட்டுகிட்டே இருக்காரு?

vasu balaji said...

/க்ளாசு கேட்டுகிட்டே இருக்காரு?/

இது படிச்சிக்கிடுற கிளாசு:)))

ஸ்ரீராம். said...

மிக அருமையான கதை. இந்த மனோபாவம் சிறுவயதில் மட்டுமில்லை, மனிதர்களுக்குள் வளர்ந்தபின்னும் இருக்கிறது

ஹேமா said...

வட்டார மொழியில் கதை பிடிச்சிருக்கு !

ஓலை said...

Kilikku rekka mulaichuduthu ... Parnthu poyiduththu .... Stylil irukkumnu ninaichchen. Arumaiyaa vanthirukku kathir.

ராமலக்ஷ்மி said...

கதை களமும் முடித்த விதமும் மிக அருமை. ஸ்ரீராம் சொல்லியிருப்பதையும் வழிமொழிகிறேன்.

க.பாலாசி said...

அந்த பால்யத்துக்கே உரிய வன்மம், பொறாமை, கோபம்... நாங்கூட இந்தமாரி இருந்திருக்கேன்.. ஆனா சப்ஜெக்ட் வேற அவ்ளோத்தான்... அருமையான கதை...

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

கிளி கதை அருமை...

SELECTED ME said...

அருமை

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - கதை அருமை - இயல்பான நடை - இயல்பான சொற்கள் - கரு அருமையாக அமைந்ததனால் கதையும் அருமைய்ஆகி விட்டது. இரசித்துப் படித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா