வர்ணம் கலைந்(த்)த கிராமத்து கூத்து!

உள்ளூர் திருவிழாக்களின் மேல் படிந்திருக்கும் சாயம் சிறிது சிறிதாக வெளுத்திருந்தாலும், அதன் மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறைந்து போனதாகத் தெரியவில்லை. எங்கள் கிராமத்தில் சில வருடங்களாக கோவில் புனரமைக்கப்படும் பணி நடந்ததால் திருவிழா மோகம் அற்றுப்போயிருந்தது. சமீபத்தில் நடந்த குடமுழுக்குக்குப் பிறகு வரும் முதல் திருவிழா. ஆனாலும், சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த பாட்டியின் மறைவையொட்டி எங்கள் குடும்பத்திற்கு சில காலங்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதால், இந்த ஆண்டின் திருவிழா குறித்த கனவுகள் சுருண்டு படுத்துக்கொண்டது.

அந்தச் சூழலில் உறவினர் கிராமத்தில் திருவிழா, கெடா வெட்டு என அழைப்பு வர, ஆண்டெனா அந்த திசையை நோக்கி திரும்பிக்கொண்டது. மதியம் விருந்துக்குச் சாப்பிடப் போகலாம் என நினைத்து திட்டம் தீட்டும் போது, கெடாவெட்டு குடும்பத்திலிருந்து அழைப்பு வந்தது “அண்ணா, கூத்துப் பாக்கணும்னு ரொம்ப நாளாக் கேட்டீங்களே, இன்னிக்கு ராத்திரி இங்கே கூத்து நடத்துறாங்களாம்” 

கடகடவென நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப்பட்டு சொந்த கிராமத்திற்கு ஒரு எட்டு போய்விட்டு, மாலை கெடாவெட்டுக்கு போகலாம் என்ற திட்டத்தோடு, கெடாக்கறியை விட கூத்துதான் முக்கியம் எனும் அடிப்படையில் ”எதோ மிச்சம் மீதியிருக்கிறத எடுத்து வை ராசா, லேட்டா வந்து கவனிச்சுக்குறேன்” என முன்பதிவு செய்த பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பு வந்தது. ”காலையில இறக்கின ’பனம் பால்’ நீங்க வராதால தீர்ந்து(!!) போச்சு, மத்யானம் இறக்குறதையாவது ருசி பாருங்க” என்று. பனம்பாலின் ருசி குறித்த குஷி வேகவேகமா விரட்டியது அங்கே செல் என. 

ஒருவழியாய் உள்ளூரில் மதியம் உண்டு முடித்து, ஆடி அசைந்து கெடாவிருந்துக்குச் செல்லும் போது, வீடே காலியாக இருந்தது. எல்லாம் கழுவிக் கவிழ்த்திய நிலை, இருந்தாலும் ஆறுதலாய் ”தனியே எடுத்து வெச்சிருக்கோம், கவலைப்படவேணாம்” என வார்த்தைப் பாலை வார்த்துவிட்டு, மெதுவாய் கிணற்று மேட்டுக்குக்கு கடத்திப்போனார்கள். மூன்று மணிக்கு முட்டியைவிட்டு இடம்பெயர்ந்து வந்த பனம்பால் கொஞ்சம் புளிப்பேறும் முனைப்பில் காத்துக்கிடந்தது.

உதடுகளின் வழியே நரம்பு வரை சிலுசிலுத்த மின்சாரம், சித்தெறும்புக் கடியென சீண்டிப்பார்த்தது. இரவு விருந்தை முடித்து ”கூத்துப்பார்க்கப் போறோம்” என்றவர்களை விந்தையாகப் பார்த்தார்கள். ”இதென்னடாது, டவுன்ல இருக்கிறவங்க கூத்தெல்லாம் பாப்பீங்ளா”

ஒருவழியாய் கோவில் அருகே வந்தால் கூத்து நடப்பதற்கான அறிகுறி எதையும் காணவில்லை. சூழலைப்பார்க்கும் போது நிஜமாவே கூத்துதானா இல்ல பைப்ல ஷவர் செஞ்சு விடுற ரெக்கார்டு டேன்ஸா இருக்குமோ என கொஞ்சம் பயம் வந்தது. ”அட அந்த டேன்ஸா இருந்தா இந்நேரம் கூட்டம் பிச்சுக்காதா?, ஒரு பயலையும் காணோம் பாருங்க, இது கூத்துதான்” என்று உடன்வந்தவர்களின் வார்த்தை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.

அங்கிருந்த ஒருவரை நெருங்கி “ஏனுங்க, கூத்து ஆடுதுன்னு சொன்னாங்க, ஒன்னுமே காணோமே” எனக் கேட்டபோது அப்போதுதான் கூத்து ஆடுபவர்கள் வந்ததாகவும், கொஞ்ச நேரத்தில் ஆரம்பித்துவிடும் என்று கூறினார். கூத்து பார்த்து குறைந்தது 20 - 25 வருசம் இருக்குமென நினைக்கிறேன். ஆனாலும் புழுதி பறக்கும் அந்தக்கூத்து அவ்வப்போது மனதுக்குள் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றது.

கூட்டத்துக்குள் தூங்கும் குழந்தைகளைத் தூக்கிப் போவது, தூங்கி விழும் பெருசுகளின் காதில் துணியை முறுக்கி விடுவது என கோமாளி செய்யும் அலப்பறையும், குதர்க்கமாய்ப் பேசிப்பேசி, சாட்டையில் வாங்கும் அடி கோமாளியும், ஒத்து ஊதி, கூடவே பாடும் வாத்தியக் குழுவும், ஒவ்வொரு பாத்திரத்துக்கும் கொடுக்கும் அறிமுகப் பில்டப்பும், ஓங்கிய குரலில் முழங்கும் பாடலும் வசனமும், அந்த சிறிய சதுர இடைவெளிக்குள் எதுமில்லாமல் அவர்கள் நடத்தும் கதையின் களத்தை அப்படியே மனதுக்குள் படிய வைப்பதில் கூத்துக்கலைஞர்கள் என்றுமே வெற்றியடைந்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் சரிந்த மாதிரி கோணல்மாணலாக இழுத்துக்கட்ட பதாகைக்கு முன்பு, செங்கற்களை அடுக்கி உயரம் ஊட்டப்பட்ட பலகைகள் மேல் ஆர்மெனியம், தபலா, ஒத்து என கசங்கிய சட்டையும், லுங்கியுமாக சுதி சேர்த்துக்கொண்டிருந்தார்கள். மாரியம்மன் கோவில் பந்தலடியில் ஏற்கனவே கட்டியிருந்த குழல் விளக்குகளுக்கு அடியில் தோரயமான சதுரமாய் இடம் விட்டு ஆங்காங்கே சிறியது முதல் பெரியது வரை சாக்கு, ஜமுக்காலம் என விரித்து அமர்ந்திருந்தனர்.

பொறுமை தீரும் வரை, வெறும் சுதி மட்டுமே சேர்ப்பார்களோ, கூத்து துவங்காது போல என நினைக்கும் போதே, கோமாளி வெளியில் வந்தார். வழக்காமான கோமாளிகளின் உடையல்லாமல், புள்ளிபோட்ட சட்டையும், ஜிகு ஜிகு பேண்டுமாய் கோமாளிக்குரிய கோமாளித்தனமில்லாத உடை. முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அவர் தொண்டையிலிருந்து வெளிவரும் சப்தத்தை விட காற்றுதான் அதிகம் வந்தது. என்ன செய்தும் குரல் எட்டவில்லை. கொஞ்ச நேரத்தில் கோமாளிக்கு பேச்சு, ஏச்சுத் துணைக்கு தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு வந்த ஆள், கோமாளி பச்சை பச்சையாகப் பேச, அதற்கேற்றார் போல், வேண்டுமானவரை கோமாளியை சாட்டையில் அடிப்பது என நேரத்தை தின்று துப்பிக்கொண்டிருந்தார்களே ஒழிய கூத்தை முனைப்போடு முன்னெடுக்கும் முயற்சி அற்றிருந்தது.

அடுத்து வந்த கூத்து வாத்தியார் இது என்ன கூத்து என விளக்குகிறேன் என கொஞ்சம் பேசி நிறையப்பாடிவிட்டு மறக்காமல் கோமாளியையும் நாலு சாத்து சாத்திவிட்டுச் சென்றார்.  ஒரு காலத்தில் கூத்தில் கோமாளியை அடித்தால் விழுந்து விழுந்து சிரிக்கும் கூட்டம், இப்போது அதற்கெல்லாம் ஒன்றும் அசந்ததாகத் தெரியவில்லை.

சரி எப்போதான் கூத்து ஆரம்பிக்கும் என நெளிந்து கொண்டிருந்த போது, 
பின்பக்கம் இருந்த ஒப்பனைப் பகுதி தடுக்குகளின் இடைவெளியில் முழுதாய் அரச வேடமிட்ட ஒரு ஆள் ”பக் பக்” என பீடியை இழுத்துக்கொண்டிருப்பது கொஞ்சம் விநோதமாகப்பட்டது. வேசமிட்டவனை அந்த ராசாவாகவே மனதில் வரிந்து கொள்ளும் பொதுப்புத்தி மனதுக்கு, பீடி இழுப்பதை ஏனோ ஏற்றுக்கொள்ளச் சிரமமாக இருந்தது.

ஒருவழியாய் கோமாளியும் கூத்து வாத்தியாரும் என்ன கூத்து என்று சொல்லி முடிக்கவும், உள்ளேயிருந்து ஓங்காரமான குரலில் வந்தார் துரியோதன மகராஜாவான அந்த பீடிப் பார்ட்டி! என்னதான் ஓங்காரம் போட்டாலும் குரல் தேய்ந்துதான் வந்தது, கூடவே வெளியேறிய வார்த்தைகளுக்கும் நிகராக மூச்சும் வாங்கியது. விடியும் வரை துரியோதனன் என்ன பாடுபடப்போராறோ என்ற நினைப்போடு என்னுடன் வந்தவர்களைப் பார்க்க, இனம் புரியாத ஒரு கொலை வெறியை என் மேல் செலுத்த விரும்பாமல் சமாளித்தபடியே இருப்பது புரிந்தது. நானே வலிய அழைத்தேன் “ஒரு டீ சாப்ட்டு வரலாமா” துள்ளி எழுந்தன உடன்பிறப்புகள்.
அப்படியே ஒதுங்கி திருவிழாவிற்காக முளைத்த கட்டில் கடைகளை ஒட்டிய டீக்கடையில் டீ கேட்க ”சில்வர் கிளாசா, இல்ல ப்ளாஸ்டிக் கிளாசா” எனக் கேட்க, ப்ளாஸ்டிக்கிற்கு எதிரானா கொம்பு சர்ரென நீண்டது. உடனிருந்தவர் ”பரவால்ல சில்வர் டம்ளர்யே குடுங்க, புழங்குற சாதிதான்” என்றார். அப்போதுதான் சுருக்கென தைத்தது, ”அடப் பன்னாடைகளா இது ரெட்டைக் குவளை வெங்காயம் போல” என.

தேநீர் உறிஞ்சி முடிக்கும் போது துரியோதன் உள்ளே சென்றிருக்க, மஞ்சள் பைஜாவும் லுங்கியுமாக(!!) அடுத்த ஆள், தேங்காய் நாரை வண்டி மையில் நனைத்தது போல் மீசை, தாடி தலைமுடியென உலகமகா(!!!) ஒப்பனையில் வீராவேசமாக ஏதோ கதை சொல்லி சவால் விட்டுக்கொண்டிருந்தார். அருகில் இருந்தவரிடம் இது யார் எனக் கேட்டேன் “சகுனி மகாராசா” என்றார். கைபேசியை எடுத்துப் பார்த்தேன் ஒரு மணிக்கு அருகாமையில் காட்டியது, உடன் வந்தவர்களைப் பார்த்தேன், என்னைப் பரிதாபமாகப் பார்த்தபடி தலையை அசைத்தார்கள். அடுத்த முக்கால் மணி நேரத்தில் ஈரோட்டில் வீட்டில் நிதானமில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தோம். கனவில் கூத்தின் மேல் இருந்த வர்ணம் கலைந்தோடியது, விடிந்து எழும் போது, எல்லாம் கனவு போல் தோன்றியது!







-0-

13 comments:

அகல்விளக்கு said...

புராதனங்களையும், கலாச்சாரத்தையும் நாம் உணர்வுகளாகத்தான் பார்த்துப் பழகி வந்திருக்கிறோம்...

அவற்றின் தொன்மை மாறினாலும் ஏதோவொரு வகையில், ஒரு சின்னமாகவாவது நாம் காத்துவராவிடில் அவை களையிழந்து போவது உறுதி..

"என்ன கூத்து இது?" என்ற சொல்லாடல் அளவில் மட்டும்தான் நிறைய இளையோருக்கு கூத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது...

:-(

துளசி கோபால் said...

சரியான கூத்தா இருக்கே:(

ஒரு சமயம் சென்னையில் (மயிலை) சபாவில் கூத்து ஒன்னு பார்த்தேன்.

நகரத்துக்காக நிறைய மாற்றங்கள் செஞ்சுருந்தாங்க.

துளசி கோபால் said...

நேரம் கிடைச்சால் இங்கே பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2009/11/blog-post_27.html

ராமலக்ஷ்மி said...

நலிந்து வரும் கலை:(. வலி மிகுந்த அவர் வாழ்வைச் சொல்லும் பகிர்வு.

ராமலக்ஷ்மி said...

நேரமிருந்தால் இதையும் பார்க்க: பவனி

ஓலை said...

கூத்து என்ற வர்ணக் கலவையை நன்கு களைந்து எடுத்திருக்கீங்க.

உங்க மாப்பு இங்க தேர்தல் முடிவ பார்த்து அரண்டு/அசந்து அல்லாடிக்கிட்டு இருக்காரு. நீங்க ராமன் ஆண்டான் என்ன ராவணன் ஆண்டா என்னனு, இந்த கூத்த விட அந்த கூத்த பார்க்கப் போயிட்டீக! தேர்தல் முடிவு அருமையா இருக்கு.

மதுரை சரவணன் said...

கூத்து கலை அழிந்து வரும் நிலையில் நினைவு படுத்திய இப்பதிவுக்கு வாழ்த்துக்கள்

vasu balaji said...

பனம்பாலும் சரியில்ல, கெடாவெட்டும் ருசிக்கல்ல,கூத்தும் சொதப்பிருச்சி, குடிச்ச டீயும் கலக்கிருச்சி..நீதி: கூத்துப் பாக்க போனாலும் கூடி வரணும் எல்லாம். :))

*இயற்கை ராஜி* said...

நெனப்பெல்லாம் தவறிப்போன கெடாவெட்டுலயே இருந்து இருக்கும்..அப்புறம் எப்படி கூத்து,டீ எல்லாம் ருசிக்கும்:-)

*இயற்கை ராஜி* said...

ச்சே... இந்த கூத்து நெலமை தெரியாம நான் வேற அன்னிக்கு உங்க மேல வயித்தெரிச்சல் பட்டேன்:-)))

பழமைபேசி said...

அமெரிக்காவுல, FeTNA வுல நடந்த கூத்துதான் நினைவுக்கு வருதுங்க மாப்பு... கிராமியக் கலைகள் என்றுமே மனம் நிறையச் செய்பவை!!

அன்புடன் அருணா said...

ந்ல்ல் கூத்து போங்க!

ஸ்ரீராம். said...

கூத்து கேள்விப் பட்டிருப்பதோடு சரி...பார்த்ததில்லை. ஆனாலும் வேஷம் கட்டுபவர்கள் மேக் அப் உடம்பில் ஏறியதும் அந்தந்த வேடங்களுக்குரிய மரியாதைகளை காக்கும் வண்ணம் விரதம், செருப்பு போடாமை என்றெல்லாம் இருப்பார்கள் என்று கேள்விப் பட்டதுண்டு. பீடி இழுக்கும் ராஜாவில் தெரிகிறது அவர்கள் டெடிகேஷன்! அந்த அளவில்தான் இருக்கும் கூத்தின் தரமும்!