பெருநகரத்தின் தழும்புகளான லைன் வீட்டுக்குள்
விதியால் வீழ்த்தி முடக்கிப்போடப்பட்ட
கிராமத்தின் வாடை இன்னும் வடியாத
வெள்ளைப் புடவைக்கு இணையாய் நரைகூடிய
அந்தக் கிழவி வாசலைப் பெருக்குகிறாள்
நிமிடத்துக்கு நிமிடம் பொறுமை தீர்ந்து
வாழ்க்கை தின்று தீர்த்ததில் வறண்டு தொங்குகின்றன
பருவ காலத்தில் எவரெவரோ கொண்டாடிய மார்புகள்
வெற்றுநெஞ்சின் நடுவே சுருண்டுபுரளும் மாராப்பு தாண்டி
படியும் பார்வையைவிட மேலதிக அழுக்குப் படிந்த
கண்ணாடியின் சட்டங்களில் எண்ணைப்பசையேறிய
நூல்சுருளில் உறங்கும் சிக்கு வாடை மறத்துப்போய்விட்டது.
எப்போதாவது விழும் மழைத்தூறலில் உயிர்த்தெழும்
தார்சாலையில் உரசித்தேய்ந்த டயர்களின் எச்சக்கவிச்சி பழகிப்போய்விட்டது
விதி வெக்கை புழுக்கம் புழுதி வெறுமையென எல்லாமே
அவளின் முனகலுக்குள் சுருண்டு பசியாறுகின்றன
தார் சாலையில் தலைவைத்துத் தூங்கும் தன் வாசலை
குறிப்பிட்ட இடைவெளியில் குனிந்து குனிந்து கூட்டுகிறாள்
எவரொருவரும் தன் வாசலில் குப்பையைத் தொலைப்பதை
நிறுத்தப் போவதில்லை என்பதை அறிந்திருந்தும்!
-0-
6 comments:
Nice one:)
அருமையாக எழுதி இருக்கீங்க.
அ....
Nice.
SIMPLY SUPERB
சில நிகழ்வுகள் கவிதையாய் வாசிக்கும் போது மனதை அசைக்கும்
இதுவும் அதில் ஒன்று ...அருமை கதிர்
Post a Comment