மே-18 சொல்ல வார்த்தை இல்லை

இதுவும் ஒரு நாள் எனக் கடந்து போய்விடவே முடியாது இந்த கொடிய தினத்தை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரை வேரோடு பிடுங்கி, அந்த வேரின் மீது விசம் தோய்ந்த வெந்நீரை ஊற்றியவர்கள் இன்னும் அதையே செய்து கொண்டிருக்கும் கொடியதொரு சமூகச் சூழலில்தான் நமது நாட்களும் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் அவ்வப்போது ஆவணங்களாய் வெளிவரும் காட்சிகளில் தமிழின மக்கள் மேல் நிகழ்த்தப் பட்ட கொலை வெறித் தாக்குதலில் உலகத்தின் அத்தனை வக்கிரமும் குவிந்து கிடப்பதைக் காண முடிகிறது.

வக்கிரம் என்பதற்கு ஒரு அகராதி தயாரித்தால், அதற்கு ராசபக்சேவின் இராணும் கையாண்ட யுக்திகளை, அவர்கள் தமிழர்கள் சதை மேல் நிகழ்த்திய கோழைத்தன வக்கிரங்களின் படங்களை வைத்தால் போதும், அதைக் காண்பவன் கூட இனி அந்த வக்கிரத்தின் மேல் வெறுப்பு வந்து அதைக் கைவிட்டிடுவான்.

கடைசி யுத்தத்தில் மாண்டவர்கள், மறைந்தவர்கள், முகாமுக்குள் சிறைப்பட்டவர்கள், சிறைக்குள் ஒடுக்கப்பட்டவர்கள் என எதற்கும் சரியான கணக்கு இல்லை. அப்படியே கணக்கு காட்டினாலும் உண்மை வேறாகவே இருக்கின்றது. கடைசி யுத்தம் என்றுதான் அங்கிருக்கும் மக்களும் அதைச் சொல்கிறார்கள். இனியொரு யுத்தத்திற்கு யாரும் தயாரில்லை என்றபோதிலும் எஞ்சியிருக்கும் தமிழர்கள் மீது சிங்கள அரசாங்கம் நிகழ்த்தும் உளவியல் யுத்தம் முடிந்த பாடில்லை.

அநீதியாய்ப் போரை நிகழ்த்திய பாவத்தில் நிகழ்த்தியவனுக்கு மட்டும் பங்கில்லை, துணை புரிந்தவர்களுக்கும் பங்குண்டு என்பதை அவ்வப்போது ஏதேனும் சம்பவங்கள் ஆங்காங்கே நினைவூட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு லட்சிய வேட்கையோடு புறப்பட்ட இனம், சூழ்ச்சிகளாலும், நயவஞ்சகங்களாலும் சிதறிப்போனதை மனது ஒருபோதும் செரிக்க முடியாமல் தவிக்கிறது. இன்னும் முகாமுக்குள் அடைபட்டு சிதைந்து கொண்டிருப்பர்களுக்குச் சொல்ல வார்த்தையின்றி தொண்டை வறண்டு போகிறது. 

ஒரு இனத்தின் உரிமைக்கான போராட்டத்தை, இன அழிப்புப் போராக மாற்றி, வெற்றி கண்ட இந்தக் கரிய தினத்தில்...
விதையாய் வீழ்ந்த தியாக உள்ளங்களுக்கு வீரவணக்கங்களைச் சமர்ப்பித்து, நயவஞ்ச சூழ்ச்சியில் உயிர் நீத்த எம் மக்களின் ஆன்மாவிடம் அஞ்சலிகள் செலுத்தி, மன்னிப்பு வேண்டி, இன்னும் முகாமில் சிதைந்து கொண்டிருக்கும் சக உயிர்களுக்கு ஒரு நல்லது பிறக்க வேண்டும், தமிழர்கள் தமிழீழத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற மனம் உருகும் வேண்டுதல்களோடு இந்தக் கரிய தினத்தைக் கடந்து போகிறேன் மிகக் கனத்த மனதோடு!

-0-

9 comments:

Baiju said...

Nijamakave Solla Vaarthaikal Illai !!!!

சத்ரியன் said...

//இதுவும் ஒரு நாள் எனக் கடந்து போய்விடவே முடியாது//

முடியாதுதான் கதிர்.

Raji said...

:-(((

Chitra said...

மனம் கனத்து போகிறது.

வானம்பாடிகள் said...

:(

Anonymous said...

எத்தனை வருடங்கள் சென்றாலும் நினைவுகளை விட்டு அகல மறுக்கும் நாட்கள்...((

Anonymous said...

=((

Lakshmi said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம்
செய்திருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_11.html

குணசேகரன்... said...

மனிதனே மனிதனுக்கு எதிரி.வேறு என்ன சொல்லமுடியும்..