சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட மெஸ் அது. சாலையோரம் வாயிலில் தோசைக்கல் போட்டு, உள்ளே இருக்கும் கூடத்தில் உணவு பரிமாறும் உணவகம். ஒட்டிய கட்டிடத்தில் டாஸ்மாக் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்.
புதிய உணவகம் என்பதால் கூட்டம் அதிகம் இருப்பதில்லை. இருக்கும் எட்டு மேசைகளுக்கும் சேர்ந்து ஆங்காங்கே ஆறேழு பேர் அமர்ந்து சாப்பிட்டாலே அதிகம். ஆனாலும் வீட்டுக்கு வாங்கிப்போவோர் எப்போதும் ஏழெட்டுப் பேர் நின்று கொண்டிருப்பார்கள்.
வீட்டுக்குச் செல்லும் வழியில் இருக்கும் உணவகம் என்பதால் இரவுகளில் வெளியில் சாப்பிடும் சூழல் வந்தால் அந்தக்கடையில் சாப்பிடுவது வழக்கம்.
பல நாட்களுக்குப் பிறகு இந்த முறை சென்றபோது, பரிமாற புதிதாக இரண்டு சிறுவர்கள் இருந்தனர். மெலிந்த தேகமாய் சின்னஞ் சிறுவர்களாக இருந்தனர். இருவருமே சில்வண்டு போல பரபரப்பாக இருந்தனர். டவுசர் போட்டால் சிறுவனாக தெரிவோம் என்பதலோ என்னவோ, லுங்கி இருவருமே லுங்கி கட்டியிருந்தனர்.
நான் அமர்ந்ததும் பளிச்சென இருந்த பையன் புன்னகைத்த முகத்தோடு ஓடிவந்தான் வேகமாக இலை போட்டு தண்ணீர் வைத்து
“அண்ணா என்னங்ணா சாப்ட்றீங்க” என்றான்
வாடிக்கையாய் இலையைப் போட்டு தண்ணீர் வைத்துவிட்டு நாமாக எதாவது சொல்லட்டும் என்று உயிர்ப்பில்லாப் பார்வையை வீசும் ஆட்களைப்பார்த்த எனக்கு, இது கொஞ்சம் புதிதாக, உற்சாகமா இருந்தது.
“தம்பி ரெண்டு பரோட்டா, ஒரு ஒன்சைட் ஆம்லெட்”
“போதுங்ளாண்ணா” என்றான் வெள்ளந்தியாய்.
என்னவோ உறவினர்கள் வீட்டில் ”அட இன்னும் கொஞ்சம் வெச்சுக்க” என உபசரிக்கும் உணர்வு மனதுக்குள் வந்தது.
குறும்புன்னகையோடு, ”போதுங்கண்ணு, உம்பேரென்ன”
”அண்ணா, விஷ்ணு பிரசாத்ண்ணா”
தோசைக் கல்லைப் பார்த்து ”ஒர்ர்ர்ரு ஒன்சைட் ஆம்ம்ம்ம்ளேட்” என கத்திவிட்டு பரோட்டாவை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு வந்தான்.
எனக்கு இடது பக்க மேசையில் இருந்த ஒரு போதைத் திலகம் சிறு தடுமாற்றதோடு இலையைக் குழப்பிக் கொண்டிருந்தது. தண்ணீர் டம்ளரை எடுப்பதும், கீழே வைப்பதுமாய் ஒரு போராட்டம் ஒரு ஒழுங்கோடு நடந்து கொண்டிருந்தது. நல்ல போதையில் இருக்கிறார் என்பதை தெளிவாகக் காட்டினார்.
“டேய்ய்ய்ய்ய்…. @@க்டி, இங்க வாடா”
போதைத் திலகம் அந்தச் சிறுவன் விஷ்ணுபிரசாத்தைக் கூப்பிட்டார்
”அண்ணா, என்னங்ணா” என்று சுணக்கம் எதுவும் காட்டாமல் ஓடிவந்தான்
”முறுவலா ஒரு கலக்கி சொல்லுடா”
தோசைக்கல் அருகே நகர்ந்தவன் “முறுவலா ஒரு கலக்கி” என்றான்
அங்கிருந்த ஆள் எதோ சொல்லியிருக்க வேண்டும்
உடனே போதைத் திலகத்திடம் ஓடி வந்து “அண்ணா, வெறும் கலக்கிதாங்ணா இருக்குதாம், முறுவலா கலக்கி வரதாம்”
”ஹெ ஹெ ஹெ” என சிரித்த போதை ”சும்மா சொன்னேண்டா, முறுவலா எப்படிடா வரும், கலக்கியாவே கொண்டா”
விஷ்ணுபிரசாத் வெட்கப் புன்னகையோடு நகர்ந்தான்
அடுத்த மேசை, ஆர்டர், தோசைக்கல்லை நோக்கி குரல் எனச் சிட்டாக ஓடிக்கொண்டேயிருந்தான்.
ஒரு வழியாய் போதைத் திலகம் தின்று முடித்து கை கழுவி வந்த போது கொஞ்சம் சோம்பு போட்ட தட்டில் பில்லோடு நீட்டினான் விஷ்ணுபிரசாத்.
“என்னடா ரேட்டு எல்லாம் ஜாஸ்தியா போட்ருக்கே”
”இல்லீங்னா, எப்பவும் அதே ரேட்தான்”
ஐந்து பத்து ரூபாயைக் கொடுத்த போதைத் திலகம், ”எவ்வளவுடா பில்” என்றது
”நாப்பத்தொன்னுங்ண்ணா”
“மிச்சம் ஒம்பது ரூவாய நீயே வெச்சிக்டா” என அவன் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளி “வரட்டுமாடா மாப்ள?” எனத் தடுமாற்றத்தோடு போதை நகர்ந்தது.
கல்லாவை நோக்கி நகர்ந்தவன் உடல் முழுக்க பூத்த சந்தோசம் பூத்திருந்தது.
கல்லாவில் இருந்தவரிடம் சிரித்துக்கொண்டே ஏதோ சொன்னான். அவரும் சிரித்துக்கொண்டே தலையாட்டினார்.
பத்து ரூபாயைச் சட்டைப்பையில் திணித்தவாறு சந்தோசமாக ஒன் சைட் ஆம்ளெட்டோடு என் இலைக்கு வந்தான்
“இந்தாங்ண்ணா”
புன்னகைத்தேன், என்னைப் பார்த்து சிரித்தவன் சிரிப்பில் அந்த பத்து
ரூபாய் நோட்டின் காந்தி சிரிப்பது போல் தோன்றியது.
“உன்னட வயசு என்ன?”
அவன் முகம் லேசாய் கருத்தது
“பன்னண்டுங்ணா”
“வீடு எங்கப்பா? பள்ளிக்கூடம் போகலையா”
”நான் தேவகோட்டைண்ணா” என்றவன் கொஞ்சம் யோசித்துத் தடுமாறி “ஸ்கூல் லீவுண்ணா, லீவுல வேலைக்கு வந்திருக்கேன்” எனச் சொல்லும் போதே முகம் வெளுத்திருந்தது.
நகர்ந்தவன் முகத்தில் வாட்டம் அலையலையாய் படிந்து கொண்டிருந்தது.
சாப்பிட்டுவிட்டு கை கழுவும் போது, அருகில் நின்று பழைய செய்தித்தாளின் கிழித்த பாதியைக் கை துடைக்க நீட்டினான்.
கைக் குட்டையை எடுத்துக்கொண்டு செய்தித்தாளைத் தவிர்த்தபோது கவனித்தேன், கொட்டையெழுத்தில் தலைவர்களின் மே தின வாழ்த்து செய்திகள் தெரிந்தது.
ஆமாம் யார் இந்த தலைவர்கள். தலைவர்கள் என்ற பெயரில் இன்று இயக்கங்களா நடக்கிறது. இயக்கம் என்ற அடிப்படையில் துவங்கிய கட்சிகள் எல்லாமே இன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் போல் மாறிவிட்டனவே. இயக்கம், கொள்கை எனக் கட்சியைப் பின் தொடர்ந்த தொண்டர்கள், காலப்போக்கில் நிறுவனங்களின் ஊழியர்கள் போல் கட்சி எனும் கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து ஊதியத்தையோ, கையூட்டுகளையோ நினைத்துதானே மந்தைகளாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் தலைவர்களின் வாழ்த்து தங்கள் தொண்டர்களுக்காவாது எதும் மகிழ்ச்சியைத் தருமா?
உழைக்கும் மக்களுக்கு என்ற அடைப்புக்குறிக்குள் தலைவர்கள் சொன்ன அந்த வாழ்த்து விஷ்ணுபிராசாத்துக்கும் சேர்த்துத்தானா? அவன் அதை வாசித்திருப்பானா?, அந்த வாழ்த்து அவனுக்கு எதும் மகிழ்ச்சியைத் தந்திருக்குமா?
வெளியேறும் போது எதேச்சையாய் உள்ளே திரும்பிப் பார்த்தேன். விஷ்ணுபிரசாத்தும் சரியாக என்னைப் பார்த்தான். இவன் இனி நிஜமாய்ப் பள்ளிக்கூடம் போவானா? போதை ஊட்டத் துவங்கியுள்ள அந்த பத்து ரூபாய் சில்லறைத் தாட்களின் மோகம், அவன் படிப்பை இனியும் தொடர அனுமதிக்குமா என்ற நினைப்போடு படியிறங்கினேன். இன்னொரு போதைத் திலகம் என் தோளில் லேசாய் உரசிக்கொண்டே படியில் ஏறிக்கொண்டிருந்தது.
சாப்பிட்ட பரோட்டாவும் ஒன்சைடு ஆம்ப்ளெட்டும் செரிக்குமா என்ற எண்ணம் வயிற்றில் கனக்கத் தொடங்கியது!
-0-
16 comments:
என் அலுவலகம் அருகே ஒரு ஹோட்டல் இருக்கிறது. மிகச் சிறியது. அங்கு பேருக்கு ஒரு பெரியவர், சமையல் காரர் தவிர அனைவரும் சிறுவர்களே. லேசாக மீசை அரும்புகட்டினால் வேலை கிடையாது. 25 வருடமாக நடந்துக் கொண்டிருக்கிறது ஓட்டல். எதுவும் மாறவில்லை.
காசின் ருசி அறிந்துவிட்டானெனில் படிக்கப் போவது கடினம்:(
படிக்கிறப்போல்ல்லாம் மனச கனக்க வச்சு ஏதோ ஒரு கேள்விய மண்டைக்குள்ள குடைய விட்டுடறீங்க..
போதை ஊட்டத் துவங்கியுள்ள அந்த பத்து ரூபாய் சில்லறைத் தாட்களின் மோகம், அவன் படிப்பை இனியும் தொடர அனுமதிக்குமா //
கொஞ்சம் கஷ்டம் தான்...
நல்ல பதிவு கதிர்.
சின்ன வயசில உணவும் காசும் கையில வந்தா படிப்பில கவனம் தேவைன்னாலும் வருவது கடினம்.
நிறைய எடத்துல இப்படி இருக்காங்க.. அப்புறம் வாலிப வயசு வந்துட்டா மீதிப் பழக்கங்களும் வந்துரும்.. :(( எங்க படிக்கப் போறாங்க?
சிறுவர்களை வேலைக்கு வைக்கும் அவலம் எங்கும் தொடரவே செய்கிறது. குறிப்பாக பத்திலிருந்து பதிமூணு வயது சிறுவர்கள் பேப்பர் போட பயன்படுத்தப் படுகிறார்கள்.
"போதை ஊட்டத் துவங்கியுள்ள அந்த பத்து ரூபாய் சில்லறைத் தாட்களின் மோகம்,"
யோசிக்க வைக்கும் கருத்து..
ஒரு விசயம் கவனிச்சிங்கன்னா தெரியும், பெரியபெரிய உணவகங்கள் தவிர்த்து பெரும்பாலான சிறு உணவங்கங்களில் சிறுவர்களைதான் வேலைக்கு வைத்திருக்கிறார்கள். குடும்பம், வறுமை இத்யாதிக் காரணங்களைத் தவிர்த்து இந்த போதையும் ஒரு காரணம். ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்ப லீவு நாள்ல எதாச்சும் கடைக்கு வேலைக்குப்போறேன்னு சொன்னா எங்கப்பா திட்டுவாரு. நாலு காசு கைல பாத்துட்டா அது பழக்கமாவுமேத்தவிர படிப்பு ஏறாதுன்னு.. உண்மை..
மிகவும் சரி...
இதே நிலமைதான் ஊர்ப்புற டாஸ்மாக் பார்களிலும் நடக்கிறது...
அங்கு பார் அட்டன்டர்களாக லுங்கி அணிந்த சிறுவர்கள்தான் நடமாடிக்கொண்டிருப்பார்கள்...
:-(
பெரும்பாலான சிறுவர்கள் காசு ருசி பார்த்துவிட்டால் மேற்கொண்டு படிப்பு ஏறாவிட்டாலும் பொழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கத் தோன்றிவிடும். சிலர் மட்டும் விதிவிலக்காக இருக்கலாம்.
சதீஸ் நினைவு வருது கதிர். பார்' -ல் இருக்கிறான். கிட்டத்தட்ட இந்த சிறுவனின் வயதில் அறிமுகமானான். எனக்குத் தெரிந்து எட்டுப் பத்து வருடமாக அந்தப் பாரில் வேலை பார்க்கிறான். இந்தப் பயணத்தில் லுங்கியெல்லாம் கட்டி பயலுக்கும் மனுஷனுக்கும் நடுவாந்திரமாக இருந்தான்.
'ஒரு அக்காவுக்கும், ஒரு தங்கச்சிக்கும் கல்யாணம் பண்ணிட்டேன் ராஜாண்ணே' என்று சிரித்தான். என்ன செய்யலாம் கதிர் இந்த சதீஸ் மாதிரிப் பயல்களை எல்லாம்? வேறு வழி இல்லாமல் வாழ்க்கை எவ்வளவு அழகா இருக்கு பாருங்க.
நமக்கும் வேறு வழி இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
ஆமாம் யார் இந்த தலைவர்கள். தலைவர்கள் என்ற பெயரில் இன்று இயக்கங்களா நடக்கிறது. இயக்கம் என்ற அடிப்படையில் துவங்கிய கட்சிகள் எல்லாமே இன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் போல் மாறிவிட்டனவே. இயக்கம், கொள்கை எனக் கட்சியைப் பின் தொடர்ந்த தொண்டர்கள், காலப்போக்கில் நிறுவனங்களின் ஊழியர்கள் போல் கட்சி எனும் கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து ஊதியத்தையோ, கையூட்டுகளையோ நினைத்துதானே மந்தைகளாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் தலைவர்களின் வாழ்த்து தங்கள் தொண்டர்களுக்காவாது எதும் மகிழ்ச்சியைத் தருமா?
உழைக்கும் மக்களுக்கு என்ற அடைப்புக்குறிக்குள் தலைவர்கள் சொன்ன அந்த வாழ்த்து விஷ்ணுபிராசாத்துக்கும் சேர்த்துத்தானா? அவன் அதை வாசித்திருப்பானா?, அந்த வாழ்த்து அவனுக்கு எதும் மகிழ்ச்சியைத் தந்திருக்குமா?
ரைட்டு...
வண்டி பல வளைவுகளில் திரும்பி லேசான குலுக்களுடன் பல ,மேடு பள்ளங்களைக்கடந்து சரியான திசையில் மித வேகத்துடன் பயணிக்க துவங்கியிருந்தது....
பார்ப்போம்....
காசு கிடைப்பதால் போதை ஏறும்..
இந்த மாதிரி வேலைக்கு வைக்கும் ஆட்களை தான் முதலில் தண்டிக்க வேண்டும் ,சிறுவர்கள் பாவம் இந்தமாதிரி முதலாளிகள் பெரிய ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கவே வக்குஇல்லையெனில் பிச்சை எடுக்க போக வேண்டியதுதானே ?
தயவு செய்து இந்த கடைகளில் உணவருந்துவதை தவிருங்கள் நண்பர்களுக்கும் அறிவுறுத்துங்கள் .
சிறுவர்களுக்கு மீன் பிடிக்க கற்றுத்தராமல் சிதறுவதை பொறுக்கி தின்ன கற்று தரும் கயவாளிகள் .
"போதை ஊட்டத் துவங்கியுள்ள அந்த பத்து ரூபாய் சில்லறைத் தாட்களின் மோகம்,"
யோசிக்க வைக்கும் கருத்து..
வாழ்வின் பாரம் எழுத்துக்களில்.
நாகராஜின் யோசனை வரவேற்புக்குரியது.இவர்களைத் தவித்துவிட முயல்வோம்.
இது (சிறு)கதையல்ல..நிஜம்..!
Post a Comment