Showing posts with label அரிமா சங்கம். Show all posts
Showing posts with label அரிமா சங்கம். Show all posts

Dec 6, 2011

நேர்மைக்கும் நேசிக்கப்படுவதற்கும்


சமீப காலத்தில் நேர்மை எனும் வார்த்தையை எங்காவது வாசிக்கும்போதோ, கேட்கும்போதோ, பேசும்போதோ என்னையறியாமல் மனதிற்குள் வந்து சம்மணமிட்டு அமரும் பெயர் சகாயம் என்பதுதான். நாமக்கல் மாவட்டத்தில் நிகரற்ற பணி, மதுரையில் சிறப்பான தேர்தல்கால செயல்பாடுகள், அதன் பின்னரும் தொடரும் சிறந்த நிர்வாகம் என எப்போதுமே அவர் குறித்து வரும் செய்திகள் மகிழ்ச்சியை உருவாக்கிக்கொண்டேயிருக்கும். 

இந்நிலையில் நாமக்கல்-மோகனூர் சுப்பிரமணியம் கலைக்கல்லூரியின் தாளாளரும் நண்பருமான திரு. பழனியாண்டி அவர்கள், சில நாட்களுக்கு முன் தங்கள் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு அழைப்பிதழ் வடிவமைக்க வேண்டுமெனக் கேட்டபோது. எதேச்சையாக ”இந்த ஆண்டு சிறப்புவிருந்தினர் யாரெ”னக் கேட்டேன். ” கலெக்டர் சகாயம்ங்க” என்றபோது மனதிற்குள் ஒரு மின்னல் அடித்தது. “ஆஹா, கண்டிப்பா நானும் வர்றேங்க, அழைப்பிதழை நானே அமைத்துக்கொடுக்கிறேன்” என மகிழ்ச்சியோடு தெரிவித்தேன்

சனிக்கிழமை (03.12.2011) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு நிச்சயம் செல்லவேண்டும் என ஒரு வாரமாக மனதில் குறித்துவைத்திருந்தது, சனிக்கிழமை திடீரென முளைத்த ஒரு தவிர்க்க முடியாத பணியால் தடைபட்டுப்போனது. மிகுந்த மனவருத்தத்தோடு அன்றைய நாளைக் கடத்திக்கொண்டிருக்கும்போது, முன் மதிய நேரத்தில் நாமக்கல் நகர அரிமா சங்கத்தின் தலைவர் நண்பர் ’சாந்தி’ மணி அவர்கள் திடீரென கைபேசியில் அழைத்தார். “இன்னிக்கு சாயந்திரம், எங்க அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் தினம், சகாயம் கலெக்டர் வர்றார். ஈரோட்ல இருந்து தனபாலன் வர்றார், அவரோடு நீங்களும் கட்டாயம் வரவேண்டும்” என அழைத்தார். அதுவரை இருந்த மனச்சோர்வு மாயமாகிப்போனது.

சகாயம் உரை. மேடையில் பழனியாண்டி, சந்திரசேகரன், ’சாந்தி’மணி
 

இதற்குமுன் சகாயம் அவர்கள் கூட்டத்தில் பேசியதைக் கேட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிறது. முன்பு இருந்ததைவிட இளைத்துக்காணப்பட்டார். ஆனால் இதற்குமுன் கண்டதைவிட அதி உற்சாகமாய்த் தெரிந்தார். நாமக்கல் நகரத்தில் இருப்பதில் கொஞ்சம் கூடுதல் சந்தோஷமாய் இருக்கிறார் என்பதும் புரிந்தது.

ஒலி வாங்கி அவர் வசம் சென்றது. இதற்குமுன் பலமுறை உரை நிகழ்த்தியைப் பார்த்திருக்கிறேன். இம்முறை பேசும்போது உடல்மொழி மிகச்சிறப்பாக தாண்டவமாடியது. நாமக்கல் ஆட்சியராக பணியாற்றிய போது நிகழ்ந்த சிறப்பான நிகழ்வுகள் குறித்து, அதில் மாவட்ட மக்களின் ஒத்துழைப்பு குறித்து நினைவுகூர்ந்து நிறைய செய்திகளைப் பகிர்ந்தார். நாமக்கல்லில் நம்பிக்கை இல்லம்” உருவாக்கப்பட்டதின் பின்னனியில் இருந்த வலிமிகுந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார். அந்த இல்லம் திறம்படச் செயல்பட முன்கூட்டியே உருவாக்கிய திட்டம் குறித்துப் பேசினார்.

பணிக்கு வந்த 19 வருடங்களில் சந்தித்த 18 பணியிட மாற்றங்கள் குறித்துப் பேசும்போது, அதுவே அவர் நேர்மையாக இருப்பதற்கான அடையாளம் என்பது புரிந்தது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஒருமுறை நெடுஞ்சாலையில் தன் வாகனத்திற்கு முன் இருசக்கரவாகனத்தில் தடுமாற்றத்தோடு சென்ற குடிகாரர்களை மடக்கி விசாரித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்கச் சொன்னபோது, அந்தக் குடிகாரர்களில் ஒரு ஆள் தன் சட்டைப்பையில் இருந்து 100 ரூபாய் எடுத்து நீட்டி லஞ்சமாக வைத்துக்கொண்டு தன்னை விடுவிக்ககோரியதை நினைவு கூர்ந்தார். “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” என சொல்லிக்கொண்டிருக்கும் தன்னிடமே லஞ்சம் அளிக்கப்பட்டதைக் குறிப்பிட்டதோடு, “வாகனத்தை இயக்கமுடியாமல் தடுமாறும் குடிகாரனுக்கும் கூடத் தெரிந்திருக்கிறது காசு கொடுத்தால் காரியம் சாதித்துக்கொள்ளலாம்” எனக்கூறியபோது நிஜம் சுட்டது.

பட்டயநாள் விழா கேக்

பயிற்சிக்காக வடஇந்தியாவிற்கு அனுப்பப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து தன்னை பணிமாற்றம் செய்த  போது, பிள்ளைகளின் படிப்பு, பயிற்சியிலிருந்து உடனே திரும்பமுடியாத நிலை. புதிய ஆட்சியர் பொறுப்பேற்றதால் வீட்டைக் காலி செய்யவேண்டிய சூழல் என குடும்பம் சற்றே சிரமப்பட்டிருக்கின்றனர். 45 நாட்கள் கழித்தே பயிற்சியிலிருந்து திரும்பியிருக்கிறார். அதன்பின் புதுதிருப்பூர் திட்டக்குழுமத்தின் அதிகாரியாகப் பணியாற்றும் வேளையில், ஒரு முன்னிரவுப் பொழுதில் அலைபேசி அழைக்கிறது. எடுத்தால் மறுபக்கம் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவின்குமார். 

”சகாயம் நீங்கள் மதுரைக்குச் செல்லவேண்டும்”

“எதற்கு அய்யா என்ன விசயம்”

“அங்கு சென்று ஆட்சியராகப் பொறுப்பெடுத்துக்கொள்ளுங்கள். இது மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆணை”

அடுத்த நான்கைந்து நாட்களில் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். அதன்பின் நடந்தவைகளை பரபரப்பாக அவ்வப்போது செய்திகளில் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். மதுரையில் சிறப்பாகச் செய்துவிட்டீர்கள் என யாராவது புகழ முற்பட்டால், சிறுபுன்னகையோடு மறுத்துவிட்டு, ”சட்டம் பெரிது, அதன்படி செயல்படுகிறேன்” என்கிறார் உறுதியான பார்வையோடு.

உற்சாகமான உரை

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு நகரத்தில் அறிமுகம் செய்த உழவர் உணவகங்களில் 11 மாதங்களில் 1 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்ததைப் பெருமையோடு நினைவுகூறும்போது, அதில் பயன்பெற்ற விவசாயிகளின் பெயர்களைக்கூட பட்டியலிடுகிறார். வெண்ணந்தூரில் பத்தாம் வகுப்பில் 491 மதிப்பெண்கள் எடுத்து, மாவட்டத்தில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த இரண்டு அரசுப்பள்ளி மாணவர்கள், உயர்கல்விக்கு அரசு அளித்த நிதியைப் பெற மறுத்து, அதே அரசுப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிப்போம் என்று கூடுகின்றனர். இந்த ஆண்டு 1174, 1164 மதிப்பெண்கள் பெற்று இருவரும் மருத்துவக் கல்லூரியில் இணைந்திருப்பது வரை தகவல்களைப் பகிரும்போது ஆச்சரியமாக இருக்கின்றது.

நாமக்கல் மாவட்டத்தை விட்டுச் சென்று ஆண்டுக் கணக்காகின்றது. மதுரை மாவட்டத்தில் நிறைய உழைத்து, உழைத்தும் கொண்டிருக்கிறார். ஆனாலும் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த நிகழ்வுகளை, அதில் இருந்த நபர்களின் பெயர்களோடு எந்தக் குறிப்பும் இல்லாமல் படபடவெனச் சொல்லிக்கொண்டே போவதைக் காணும் போது ஆச்சரியத்தில் விழிகள் விரிகின்றன. மனம் மலர்கின்றது.

அரிமா தனபாலன் உரை


அவருக்குப் பின் சில அரிமா சங்கத் தலைவர்கள் பேசுவதைப் பொறுமையோடு கேட்கிறார். கூட்டம் நிறைவடைகின்றது. அரங்கை விட்டு வெளியேவந்து மிக இயல்பாக உரையாடிக்கொண்டே தட்டைக் கையில் ஏந்திக்கொண்டு சகஜமாக எல்லோரோடும் உணவருந்துகிறார். இருநூறுக்கும் மேற்பட்டிருந்த அரிமா சங்க உறுப்பினர்களும், ஏனையோரும் அவரையே சூழ்ந்து சூழ்ந்து நகர்ந்து தங்கள் உணவை உண்கின்றனர். அவரை நெருங்கும் ஒவ்வொரு மனிதனிடமும் மிகப்பெரிய நேசம் வழிந்தோடுகிறது.

எல்லோரின் வாய்களும் உணவை மட்டும் மெல்லவில்லை, உடன் சகாயம் குறித்த வார்த்தைகளையும் மென்றுகொண்டிருப்பதை உணரமுடிகின்றது. அவரைக்குறித்துப் பேசும் முகங்களில் ஒருவித துள்ளல் தாண்டவமாடுகிறது.

நாமக்கல் நகர அரிமா சங்க அமைப்பினர் திரு.சகாயம் அவர்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்துவந்துவிட ஆறுமாதங்களுக்கு மேலாக முயற்சித்திருக்கின்றனர். மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் கிராமத்தோப்பு அமைக்க அரிமா சங்கத்தினர் பெரிதும் துணைநின்றதால், அவராலும் தட்டமுடியவில்லை. எனினும் பணிச்சூழலில் காலம் தாழ்த்தி தற்போது வந்திருக்கிறார். அப்படி வந்தவர் மேல் அவர்கள் காட்டிய அன்பும், நேசமும் அவ்வளவு எளிதில் ஒரு மனிதனுக்கு கிட்டிவிடாது.

உணவு முடித்து கிளம்பும் தருணம் வந்த போதிலும் மக்கள் மொய்த்துக் கொண்டேயிருந்தனர். மிகப்பொறுமையாக அவர்களோடு உரையாடினார். அவ்வப்போது அழைக்கும் அலைபேசிக்குப் பதிலளித்தார். பின்னிரவு நேரத்திலும் அந்த மனிதர்களின் பிணைப்பிலிருந்து விடுபட அவர் ஆழ்மனமும் இடமளிக்கவில்லையென்றே தோன்றியது. அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடுவதை உணர்வுப்பூர்வமாக அவர் விரும்பி அனுபவிப்பதை அவரின் உடல்மொழியில் புரிந்துகொள்ள முடிந்தது. 

ஒருவழியாய்ப் புறப்பட்டு, வாகனத்தை நோக்கி நகர, பெருங்கூட்டம் அப்படியே அந்த திசையில் நகர்ந்தது. வாகனத்தில் ஏறி அமர்ந்து, வாகனம் வேகம் பிடிக்க கூட்டம் நெகிழ்ச்சியோடு தளும்பிக்கொண்டிருந்தது.

இதுபோல் பற்பல கூட்டங்களில், முக்கியப் பதவி வகிப்போரை, எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, அரசியல் தலைவர்களை என விதவிதமாய் நேசிக்கும் கூட்டத்தினரை பலவிதங்களில் கண்டதுண்டு. ஆனாலும் இங்கு வழிந்தோடிய அடர்த்தியான நேசிப்பு எனக்கு, இது ஒரு புதுவிதமான, இதுவரைக் காணாத ஒரு அனுபவமாகவே பட்டது.

திரும்பும் வழிநெடுகிலும், அவர் மீது மக்கள் கொண்டிருந்த நேசம் குறித்தே பேச்சும் சிந்தனையும் ஓடிக்கொண்டிருந்தது. யார் இவர்? ஒரு அரசு அதிகாரிதானே? அதுவும் மாவட்டத்திலிருந்து வருடத்திற்கு முன்பே மாற்றலாகிப்போய்விட்ட ஒருவர். அதிலும் அங்கு கூடியிருந்தவர்களில் யாருமே அவரிடம் நேரிடையாகப் பயன்பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்காது எனவும் தோன்றியது. ஆனாலும் இப்படி ஒட்டுமொத்த நேசிப்புக்கு உகந்த மனிதனாக எப்படி மாறிப்போனார்.

சிறப்பான செயல்பாடுகள் மூலம் நேசிப்புக்கு உகந்தவராக மாறுவதற்கு இவர் ஒரு நிஜமான உதாரணம் எனத் தோன்றியது. நேர்மையாக இருப்பதற்கும், நேசிக்கப்படுவதற்கும் இவரே சரியான ஒரு முன் மாதிரி எனவும் தோன்றியது. இன்னும்கூட அவ்வாறே தோன்றிக்கொண்டிருக்கிறது.

~



Jul 13, 2011

பகிர்தல் (13.07.2011)


வெற்றி பண்பலைக்கு நன்றி:

இலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் வெற்றி வானொலியின் விடியல் நிகழ்ச்சியில் ”நாள் ஒரு தளம்” என்ற தலைப்பில் பல தரப்பட்ட இணையதளங்களை, வலைப்பக்கங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்! 
 

அதில் ”கசியும்மௌனம்” வலைப்பக்கத்தை 10.06.2011 அன்று அறிமுகப்படுத்திய இனிய நண்பர் பதிவர் லோஷன் அவர்களுக்கும் வெற்றி வானொலிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.


படம் காட்டலில் உதவி : வானம்பாடிகள்

அழகாய்ச் சிறப்பித்த அரிமா சங்கம்:

நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் வழக்கமான செயல்பாடுகளிலிருந்து சற்று வித்தியாசமாக ஒவ்வொரு செயலையும் தொடர்ந்து செய்துவருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக பாரதிகிருஷ்ணகுமார், எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், பெருமாள்முருகன், ச.தமிழ்செல்வன், கண்மணி குணசேகரன், லஷ்மணப்பெருமாள், ஆதவன்தீட்சன்யா என படைப்பாளர்களையே முன்னிருத்தும் எங்கள் சங்கம் இந்த முறை எழுத்தாளர் பவா. செல்லத்துரை அவர்களை அழைத்திருந்தது.

நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களை தவிர, வேறு யாரையும் இதுவரை மேடைக்கு அழைப்பதில்லை என்பதிலும், திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலில் எதன்பொருட்டும், சமரசம், மாற்றம் செய்துகொள்வதில்லை என்பதிலும் உறுதியாக நிற்கும் சங்கம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சு,வெங்கடேசன் அவர்களின் உரையை கேட்க திடீரென, விழாவிற்கு வந்த மாவட்ட ஆட்சியரைக்கூட முன் வரிசையில் மட்டுமே இருக்கை ஒதுக்கி அமரவைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்சியரும் அதை மிக நல்லவிதமாகவே எடுத்துக்கொண்டு, உரை முடிந்தவுடன் சென்றுவிட்டார்.



இந்த முறை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த பவா.செல்லத்துரை தனது மனைவி கே.வி.சைலஜா-வுடன் வருகை தந்திருந்தார். எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் பவா.செல்லத்துரையை மேடைக்கு அழைக்கும்போது, அவர் மனைவியையும் மேடைக்கு அழைத்து அமர வைத்து பெருமைப்படுத்தினர். "ஏன் தம்பதிகளாக மேடைக்கு அழைத்தோம்" என்பதை தனது உரையின் போது முன்னாள் ஆளுநர் அரிமா தனபாலன் விளக்கினார். எங்கள் அரிமா சங்கம் குறித்து பெருமையும், பெருமகிழ்வும் அடைகிறேன்.

பாடாய்படுத்தும் பாதாள சாக்கடைகள்:

ஈரோடு நகரின் குடியிருப்புப் பகுதி வீதிகளை, பாதாளச் சாக்கடைக்காக தோண்ட ஆரம்பித்து ஓராண்டுக்கும் மேலாகிறது. இப்போதைக்கு அது நிறைவடைவதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லா வீதிகளுமே வயிற்றைக் கிழித்து கடனே என்று தையல் போட்டது போல் காட்சியளிக்கின்றன. தோண்டி மூடப்பட்டவைகளில் 99% வீதிகள் இன்னும் தார் போடப்படாமல் இருக்கின்றன. எந்த வீதியிலும் தைரியமாக திரும்ப முடிவதில்லை, பெரும்பாலான வீதிகளில் பாதிவரை சென்றுவிட்டு வேறு வழியில்லாமல் திரும்பி பின்னால் வந்து, வேறு எந்தவீதி வழியாக  தேவையான இடத்தை அடைவது என பட்டிமன்றம் நடத்தும் ஆட்களை ஆங்காங்கே வீதிகளின் பிரிவுகளில் காணலாம்! இந்தக் கொடுமை எப்போது முடியுமென்று தெரியவில்லை!


நேரலைக் கொலை:

”சண்டையில் கிழியாத சட்டை உண்டா” என்பது போல, ”போதையில் நிகழாத கொலைகள் உண்டா” என்பதை சமீபத்திய கோவைக் கொலை நிரூபித்திருக்கிறது. சாய்பாபா காலனி காவல் நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் முன்பு நடுச்சாலையில் நிமிடநேரத்தில் நான்கு பேரால், நிகழ்த்தப்பட்ட கொலைத்தாக்குதல், இறந்தவரோடு சேர்ந்து ஐந்து குடும்பங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வன்மத்தை கீழே கிடப்பவனின் மேல் கல்லைத் தூக்கிப்போடுவதில் தெரிகிறது.


எதேச்சையாக சிக்னலில் இருக்கும் காவல்துறை கேமரா வழியே இந்தக் கொலைக்காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் நேரலையில் தெரியவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்:

பதவி விலகல் அதிர்ச்சியோடு தயாநிதிக்கு மத்திய புலனாய்வுத் துறை விசாரணை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை. எதிர்பாராத விதமாக விமான நிலையத்திலேயே சக்சேனா கைது, அதோடு குவியும் அடுக்கடுக்கான புகார்கள். விசாரணைக்கு கலாநிதி மாறன் அழைப்பு என தின்ற உப்புக்கு கொஞ்சமாய் தண்ணி குடிக்கத் துவங்கியிருக்கிறது சன் நெட்வொர்க் குழுமம்.

இந்நிலையில், வீடியோ ஒளிபரப்புக்குப் பிறகு ஊர் ஊராய் ஓடி ஒளிந்த நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் சன்டிவிக்கு எதிராக புகார் கொடுக்கும் மொக்கைத் தருணமாகவும் மாறியிருக்கிறது. கதவைத்திற காற்றுவரும் என்று சொன்னவனுக்கு ”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது புரியாதா என்ன?

குறுந்தகவலில் வந்தது:

சராசரியாக ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 4 பொய் சொல்கிறோம். வருடத்திற்கு 1460. அதில் அதிகமாகச் சொல்லும் பொய் “I am fine” 


-0-

Apr 14, 2010

கோடியில் இருவர் - பாராட்டு விழா

நான் சார்ந்திருக்கும்
ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்
சார்பில் 15.04.2010 வியாழன் இரவு 8.00  மணிக்கு
ஈரோடு சிவில் இன்சினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங்கில்
மரம் வளர்ப்பதை வேள்வியாகக் கொண்ட




 திரு. அய்யாசாமி
மற்றும்
  

திரு. நாகராஜன்
ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்கள்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவும்

அரிமா. தூ.சு.மணியன்
பட்டயத் தலைவர், நாமக்கல் அரிமா சங்கம்
வாழ்த்துரை வழங்கவும் இசைந்துள்ளனர்.



பதிவர்கள், வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை விழாவில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றேன். கலந்து கொள்ள விரும்புவோர் தயவுசெய்து என்னுடைய அலைபேசி எண்ணில் (98427-86026) தகவல் தெரிவித்துவிட்டு வருகை தர அன்புடன் வேண்டுகிறேன்.


_______________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...