வெறும் நான்கு நாட்கள் அவகாசத்தில் இலங்கை சுற்றுலா செல்ல ஒரு நிறுவனத்தின் மூலம் நண்பர் சார்பில் அந்த வாய்ப்பு கிடைத்தது. இலங்கையில் எங்கே என்றதற்கு, மூன்று நாளும் கொழும்புதான் என்று அறிய வர, நான் மட்டும் யாழ்ப்பாணம் வரை சென்று வர அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாமே என நினைத்தேன். ஆனால் தனியாக, எப்படி அந்த நாட்டின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்வது என்ற கேள்வி பெரிதாக எழுந்தது.
அதுநாள்வரை இலங்கையிலிருந்து என்னோடு, அதுவும் எப்போதாவது மின் அரட்டையில் உரையாடும் ஒரே பதிவர் சிதறல்கள் றமேஸ் மட்டுமே. றமேஸிடம் முதலில் கொழும்பு வருவதாகவும், அங்கிருந்து யாழ்ப்பாணம் வரை சென்று வர விருப்பம், அதற்கு என்ன செய்ய வேண்டும் என அரட்டையில் கேட்க, உடனே கைபேசிக்கு அழைத்தார். தான், கொழும்பில் இல்லையென்றும், அங்கிருக்கும் சக பதிவர் நண்பர் நா மதுவதனனை அழைக்கச் சொல்வதாகவும் கூறினார். சிறிது நேரத்தில் மதுவதனன் அழைக்க இலங்கை நட்பின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது. மது பதிவர் லோஷன் அவர்களோடு பேசி பயண விபரம் குறித்து திட்டமிடுவதாகச் சொல்ல, அதையொட்டி பதிவர்கள் மதுவதனன், லோஷன், தமிழ்நதி ஆகியோருக்கு கொழும்பு வந்தடையும் நாள் மற்றும் திரும்பும் நாள் ஆகியவற்றைக் குறித்து மின் மடலிட்டு பயணத்திட்டத்தை வகுத்துத்தர வேண்டினேன். அடுத்த சில மணி நேரத்தில் கனடாவில் இருக்கும் பதிவர் தமிழ்நதி, வவுனியாவில் இருக்கும் தனது சகோதரி மகன் செந்தூரனை என்னிடம் தொடர்பு கொள்வார் என மடலிட்டார். சில மணி நேரத்தில் செந்தூரன் அழைத்து, கொழும்பு வந்த பின் தொடர்பு கொண்டு விட்டு வவுனியா வந்துவிடச் சொன்னார். அடுத்தடுத்த நாட்களில் மது, லோஷன், தமிழ்நதி என மின்னஞ்சல்களிலேயே பயணத் திட்டம் ஒரு மாதிரியாக வகுக்கப்பட்டது.
ஒருமாதிரி புரிந்தும் புரியாத திட்டங்களோடு அக்டோபர் 21ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கொழும்புவில் எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதியை அடைந்தேன். என்னோடு வந்தவர்களில் ஓரிருவரைத் தவிர வேறு யாருக்கும் நான் தனித்து வெளியில் செல்வது பற்றித் தெரிவிக்கக்கூட இல்லை.
குளிரூட்டப்பட்ட அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் மிதந்து கொண்டிருந்த என்னை ஏழு மணிக்கு அதிர்ந்த கைபேசி எழுப்பிய போது அது மதுவாகத்தான் இருக்கும் என உணர முடிந்தது. அடுத்த சில நிமிடங்களில் மெலிந்த, சிவந்த, சுறுசுறுப்பான மதுவின் கைகுலுக்களில் அன்பு நிறைந்த வெப்பத்தை உள்வாங்க முடிந்தது. வேற்று மண்ணில் முதன் முதலாய் முகம் பார்த்திராத ஒரு நட்பின் அன்பை உள்வாங்கும் சுகம் மிக அலாதியான ஒன்று. பேச வாய் திறக்கும் போதெல்லாம் வார்த்தைகளுக்கு முன் சிரிப்புதான் சிதறி விழுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் உற்சாகமாய் பேசி, உடனிருந்து, வவுனியாவில் இருக்கும் செந்தூரனோடு பேசி, தெளிவான ஒரு பயணத் திட்டத்தை திட்டமிட்டார். முன்னரே இலங்கையில் பயன்படுத்த ஒரு தற்காலிக கைபேசி இணைப்பு கேட்டிருந்ததையொட்டி, தன்னுடைய கைபேசி இணைப்பு ஒன்றினை என்னிடம் கொடுத்து விட்டு, பதிவர் லோஷனோடு பேசி அடுத்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிவிட்டு விடைபெற்றார்.
 |
| பதிவர் லோஷன், அவர் நண்பர் விமல் |
பதினொரு மணி சுமாருக்கு விடுதி வாசலில் நின்று கொண்டிருக்க, வாகனம் ஒன்று நின்று நிதானித்து, கடந்து விடுதியின் வாகன நிறுத்தப் பகுதிக்குச் சென்றது. ”ஒருவேளை இது லோஷனாக இருக்குமோ” என்று நினைத்தேன், நினைத்தபடியே அது லோஷன் தான். ஊடகத்துறையில் இருப்பதால் பணி நிமித்தம் பரபரப்பாக இருப்பவர் என மது சொல்லிருந்தார். ஆனாலும் எந்த வித பரபரப்பும் காட்டாமல் இடம் தேடி வந்து அழைத்துக் கொள்ள, கொழும்பு நகர வீதி வழியாக கோட்டை பேருந்து நிலையம் நோக்கி பயணப்பட்டோம். செல்லும் வழியில் அவருடைய நண்பர் விமல் அவர்களும் இணைந்து கொண்டார்.
பதிவுலகம் குறித்து, ஈழத்தில் இந்திய அரசியல் குறித்து, கொழும்பு நகரத்தில் இருக்கும் கைபேசி விளம்பரங்களில் அசின் ஆங்காங்கே தென்படுவது குறித்து, அவர் இந்தியா வந்திருந்த பயணம் குறித்து என நிறைய வழி நெடுகப் பேசிக்கொண்டேயிருந்தோம். யாழ்ப்பாணம் செல்ல பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டி, கடவுச்சீட்டின் பிரதியை பெற்றுக் கொண்டு, அனுமதிக் கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்புவதாகத் தெரிவித்து விட்டு என்னை மிகப் பத்திரமாக வவுனியா செல்லும் பேருந்தில் ஏற்றி அமர்த்திவிட்டு விடைபெற்றார்.
 |
| வவுனியா சென்ற பேருந்து... (நம்ம ஊரு அசோக் லைலேண்ட் பேருந்து) |
வவுனியா பேருந்து ஏறியது முதல் செந்தூரன் என்னை முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டார். ஏழுமணி நேரப் பயணம், இரவு ஏழு மணிக்குத்தான் வவுனியா சென்றடைவேன் என்றாலும், குறைந்தது 15 முறையாவது அழைத்து நான் எந்த இடத்தில் வருகிறேன் என்பதை தொடர்ச்சியாக கேட்டறிந்து கொண்டேயிருந்தார். முகம் தெரியாத இருட்டு கவிழ்ந்த பொழுதில் சிலுசிலுக்கும் குளிரோடு வவுனியா பேருந்து நிலையத்தின் எதிரில் பேருந்திலிருந்து இறங்கித் திரும்பிய நொடி, சிநேகமாய் கை அசைத்தார் செந்தூரன். முதல் பார்வையிலேயே சிநேகம் கொப்பளித்தது. கை பற்றிப் பயணம் குறித்து கேட்டு புறப்பட எத்தனித்தபோது எங்கே என்று கேட்டேன், வீட்டுக்கு என்றார்.
 |
| இளவேனில் - தமிழ்நதி வீடு |
நகரத்தின் வீதிகளைக் கடந்து, காற்று சிலுசிலுக்க தமிழ்நதி அவர்களின் இளவேனில் வீட்டிற்கு சென்றடைந்தேன். அந்நிய தேசம், முன்பின் அறியாத அந்நிய மனிதன் என்ற உணர்வு ஏதுமின்றி அன்பு நிறைய அந்த வீட்டின் பிள்ளைகள் என்னை வரவேற்றனர். புதிய ஊர், முன்பின் அறியாதவர்களின் வீடு என்ற உணர்வும் துளியும் இல்லாமல், என்னால் சட்டென அந்த இல்லத்து மனிதர்களோடு மிக இயல்பாக பழக முடிந்ததுவும் ஆச்சர்யமாகவே இருந்தது.
 |
| மரங்கள் சூழ அழகியதொரு வனமாய் |
இளவேனில் இல்லம், ஒரு மிக அழகியதொரு பறவைக் கூடு. தமிழ்நதி அவர்களின் சகோதர உறவுகளின் பிள்ளைகள் செந்தூரன், தீபா, சாந்தினி, கோபி என சிறகடிக்கும் அன்புப் பறவைகள். எல்லா வார்த்தைகளிலும், எல்லா நடத்தைகளிலும் அந்தப் பிள்ளைகளிடம் அன்பு கொப்பளித்தது. முதல் நாள் இரவு முழுக்க பயணம், அடுத்து பகல் முழுதும் பயணம் என்று களைத்துக்கிடந்த உடம்பை அந்தப் பிள்ளைகளின் உற்சாகப் பேச்சு மனதை குதூகலிக்கச் செய்து, தொடர் அரட்டையில் நடுநிசி வரை நகர்த்தி உறங்கவிடாமல் உற்சாகமாகவே வைத்திருந்தது.
 |
| தீபாவின் கை வண்ணம் |
செந்தூரன் உட்பட அவர்கள் அனைவருமே சில வருடங்கள் சென்னையில் தமிழ்நதியோடு வசித்திருக்கிறார்கள். நிறைய தமிழகத்து எழுத்தாளர்களை, பதிவர்களைச் சந்தித்த அனுபவம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. தீபாவிடமிருந்து புத்தகங்கள் குறித்து, சென்னையில் நடந்த சில விழாக்கள் குறித்து, தமிழ்நதி குறித்து, அவர்களின் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் குறித்தென பேச்சு அருவியாய் விழுந்து கொண்டேயிருந்தது. ஆச்சரியமாய் அவதானித்துக் கொண்டிருக்க மட்டுமே செய்தேன், காரணம் தீபா குறிப்பிட்ட அளவிற்கு எனக்கு பரிச்சயம் இல்லை என்பதுவும் ஒரு காரணம்.
 |
| புத்தகம், காஃபி - உபசரிப்பு |
”மாமிய (தமிழ்நதி) சென்னையில் கண்டுறீக்கீங்கதானே”? என தீபா கேட்டபோதுதான் இதுவரை தமிழ்நதியிடம் நான் பேசியது கூட இல்லை, சில மாதங்களுக்கு முன் கானல் வரி வாசித்துவிட்டு மின்னஞ்சல் இட்டது, தற்போது இலங்கைப் பயணத்திற்காக மின்னஞ்சல் அனுப்பியதையும் கூறினேன். அங்கு தங்கியிருந்த தினத்தன்று தமிழ்நதி செந்தூரனை கைபேசியில் அழைத்த போதுதான் முதன்முறையாக அவர்களிடம் பேசினேன். நீங்கள் வழக்கமாக சாப்பிடு உணவுகள் வேண்டாம் என, நான்கு வேளைகளும் இலங்கை உணவு வகைகள் என மிகச் சிரத்தையாய் உணவு பரிமாறி, இந்த புத்தகம் வாசிங்க, அந்தப் புத்தகம் வாசிங்க என, ஒவ்வொரு செய்கையிலும் அன்பால் அந்தப் பிள்ளைகள் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார்கள்.
அடுத்த நாள் மதியம் வரை யாழ்ப்பாணம் பயணத்திற்கு முயன்று அனுமதி கிட்டாததால் மாலை வீட்டிற்கு திரும்பினோம். கொழும்புவிற்கு அன்று இரவே திரும்பலாமா? அல்லது அடுத்த நாள் அதிகாலை புகையிரதத்தில் கிளம்பலாமா என குழப்பத்தோடு யோசித்த நேரத்தில் மது அழைத்தார்.
இரவு கிளம்பி அதிகாலை கொழும்பு அடைவதுதான் சிறப்பு என்று வழிநடத்தத் துவங்கினார். ஆனால் அதே இரவு மது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லப் பயணம் துவங்கினார். நான் வவுனியாவிலிருந்து கொழும்பு கிளம்பினேன். தான் கொழும்பில் இல்லாவிட்டாலும், நான் கொழும்பை வந்தடையும் அதிகாலை நேரத்தில் தனது நண்பர் நிமல்ராஜ் மூலம் கொழும்பில் இறங்கும் பேருந்து நிறுத்தத்திலிருந்து நான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் நிமல் ராஜ் அழைத்து ”காலை ஐந்து மணி சுமாருக்கு கொழும்பு நகரை அடைவீர்கள், பேருந்திலிருந்து இறங்கும் முன் பத்து நிமிடங்களுக்கு முன்பாக என்னை அழையுங்கள், நான் அழைத்துக்கொள்கிறேன்” என்றார்.
பேருந்து கிளம்பும் போது, என் கைபேசி உரையாடல்களைக் கவனித்த திருகோணமலையைச் சார்ந்த நபர் ”என்ன சார் தமிழ்நாடா” என விசாரித்து, காலை எங்கு இறங்குவது, அந்த நண்பரை எங்கு வரச்சொல்வது என்று வழிநடத்தத் துவங்கினார். காலை கொழும்பை அடைந்து நான் இறங்க வேண்டிய இடத்தில் அவரும் இறங்கிக் கொண்டார். மதுவின் நண்பர் நிமல்ராஜ் வந்து என்னை அழைத்துக் கொள்ளும் வரையில் கூடவே இருந்து அவரோடு அனுப்பிவிட்டுச் சென்றார். நிமல்ராஜ் என்னை அழைத்து விடுதியில் சேர்த்தார்.
 |
| கன்கோன் கோபியுடன் நான்! |
பயண அலைச்சலை கொஞ்சமாய் விடுதி அறையில் கரைத்துக் கொண்டிருந்த வேளையில், அமைதியாய் அறைக் கதவைத் தட்டி, அன்றைய பொழுதை அர்த்தமுள்ளதாக்க வந்தார் கன்கோன் கோபி, எது கேட்டாலும் சிரிப்பு, அதையொட்டி சன்னமான குரலில் ஒரு சின்ன பதில். பதிவுலகில் கிரிக்கெட் சுரங்கம் லோஷன் என்று சொன்னால், கான்கோன் கோபி லோசனின் வாரிசு என்று சொல்லலாம் அப்படியொரு கிரிக்கெட் ஆர்வம். நீண்ட நேரம் எங்கள் கடிகளைத் தாங்கிக் கொண்டிருந்ததை, சில கணங்களில் பார்க்க பாவமாகவும் இருந்தது.
இந்தப் பயணத்தில், சந்திக்க பெரிதும் விருப்பப்பட்ட றமேஸ் கொழும்பு வரும் திட்டத்தில் சில தனிப்பட்ட சிரமங்கள் ஏற்பட, அவரால் வரமுடியாமல் போனது வருத்தமாய்ப் பதிந்தது. மீண்டும் யாழில் அல்லது கொழும்பில் சந்திப்போம் என நினைத்து கை அசைத்துப்போன மது நான் கொழும்பு வந்த நாளில், யாழ்ப்பாணம் சென்றுவிட மதுவையும் மீண்டும் சந்திக்க முடியவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம். மூன்று நாட்களாக, இலங்கை இந்தியா எனப் பேசித்தீர்த்து கைபேசி இணைப்பை திருப்பியளிக்கும் போது, எவ்வளவோ வற்புறுத்தினாலும் முதல் சந்திப்பில் பணத்தை முன்னிறுத்தக் கூடாது என மதுவதனன் அதற்கான செலவுகளைப் பெற மறுத்தது மட்டும் சமாதானமாக முடியாததாக இருந்தது.
இரண்டு இரவு, மூன்று பகல் என அழகான, அர்த்தமுள்ள 60 மணி நேரம், இதயத்துக்கு மிக நெருக்கமாய் அமர்ந்து வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத மாதிரி அன்பை சொட்டுச் சொட்டாய் சுரக்கச்செய்த இந்த மனித உள்ளங்களை, நினைக்கும் நேரமெல்லாம் நெஞ்சம் முழுதும் நிறைந்து துள்ளுகிறார்கள்.
அளிக்கும்போது அன்பைப் போல் இலகுவானதாகவும்
பெறும்போது அன்பைப்போல் கனமானதாகவும் எதுவும் இல்லை.
அன்பிற்கு ’நன்றி’ என்ற ஒற்றை வார்த்தை போதுமா என்று தெரியவில்லை, அதையும் தாண்டி அந்த அன்பை சக மனிதர்களிடம் இறக்கிவைப்பதே நியாயமான தீர்வாகவும் இருக்க முடியும்.
சந்திக்கும் வரை சற்றும் நேரிடைப் பரிச்சயம் இல்லாமல், பார்த்த கணத்தில் பாசத்தால் கட்டி இழுக்கும் இந்த நட்புள்ளங்களை நினைத்துப் பார்க்க…. 24.11.2008-ல் பதிவுலகத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் கனிணி விசைப்பலகையில் எழுத்துகளைத் தேடி விரல்கள் பாயும் இந்த நேரமே ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
______________________