வெற்றி பண்பலைக்கு நன்றி:
இலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் வெற்றி வானொலியின் விடியல் நிகழ்ச்சியில் ”நாள் ஒரு தளம்” என்ற தலைப்பில் பல தரப்பட்ட இணையதளங்களை, வலைப்பக்கங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்!
அதில் ”கசியும்மௌனம்” வலைப்பக்கத்தை 10.06.2011 அன்று அறிமுகப்படுத்திய இனிய நண்பர் பதிவர் லோஷன் அவர்களுக்கும் வெற்றி வானொலிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
படம் காட்டலில் உதவி : வானம்பாடிகள்
அழகாய்ச் சிறப்பித்த அரிமா சங்கம்:
நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் வழக்கமான செயல்பாடுகளிலிருந்து சற்று வித்தியாசமாக ஒவ்வொரு செயலையும் தொடர்ந்து செய்துவருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக பாரதிகிருஷ்ணகுமார், எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், பெருமாள்முருகன், ச.தமிழ்செல்வன், கண்மணி குணசேகரன், லஷ்மணப்பெருமாள், ஆதவன்தீட்சன்யா என படைப்பாளர்களையே முன்னிருத்தும் எங்கள் சங்கம் இந்த முறை எழுத்தாளர் பவா. செல்லத்துரை அவர்களை அழைத்திருந்தது.
நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களை தவிர, வேறு யாரையும் இதுவரை மேடைக்கு அழைப்பதில்லை என்பதிலும், திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலில் எதன்பொருட்டும், சமரசம், மாற்றம் செய்துகொள்வதில்லை என்பதிலும் உறுதியாக நிற்கும் சங்கம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சு,வெங்கடேசன் அவர்களின் உரையை கேட்க திடீரென, விழாவிற்கு வந்த மாவட்ட ஆட்சியரைக்கூட முன் வரிசையில் மட்டுமே இருக்கை ஒதுக்கி அமரவைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்சியரும் அதை மிக நல்லவிதமாகவே எடுத்துக்கொண்டு, உரை முடிந்தவுடன் சென்றுவிட்டார்.
இந்த முறை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த பவா.செல்லத்துரை தனது மனைவி கே.வி.சைலஜா-வுடன் வருகை தந்திருந்தார். எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் பவா.செல்லத்துரையை மேடைக்கு அழைக்கும்போது, அவர் மனைவியையும் மேடைக்கு அழைத்து அமர வைத்து பெருமைப்படுத்தினர். "ஏன் தம்பதிகளாக மேடைக்கு அழைத்தோம்" என்பதை தனது உரையின் போது முன்னாள் ஆளுநர் அரிமா தனபாலன் விளக்கினார். எங்கள் அரிமா சங்கம் குறித்து பெருமையும், பெருமகிழ்வும் அடைகிறேன்.
பாடாய்படுத்தும் பாதாள சாக்கடைகள்:
ஈரோடு நகரின் குடியிருப்புப் பகுதி வீதிகளை, பாதாளச் சாக்கடைக்காக தோண்ட ஆரம்பித்து ஓராண்டுக்கும் மேலாகிறது. இப்போதைக்கு அது நிறைவடைவதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லா வீதிகளுமே வயிற்றைக் கிழித்து கடனே என்று தையல் போட்டது போல் காட்சியளிக்கின்றன. தோண்டி மூடப்பட்டவைகளில் 99% வீதிகள் இன்னும் தார் போடப்படாமல் இருக்கின்றன. எந்த வீதியிலும் தைரியமாக திரும்ப முடிவதில்லை, பெரும்பாலான வீதிகளில் பாதிவரை சென்றுவிட்டு வேறு வழியில்லாமல் திரும்பி பின்னால் வந்து, வேறு எந்தவீதி வழியாக தேவையான இடத்தை அடைவது என பட்டிமன்றம் நடத்தும் ஆட்களை ஆங்காங்கே வீதிகளின் பிரிவுகளில் காணலாம்! இந்தக் கொடுமை எப்போது முடியுமென்று தெரியவில்லை!
நேரலைக் கொலை:
”சண்டையில் கிழியாத சட்டை உண்டா” என்பது போல, ”போதையில் நிகழாத கொலைகள் உண்டா” என்பதை சமீபத்திய கோவைக் கொலை நிரூபித்திருக்கிறது. சாய்பாபா காலனி காவல் நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் முன்பு நடுச்சாலையில் நிமிடநேரத்தில் நான்கு பேரால், நிகழ்த்தப்பட்ட கொலைத்தாக்குதல், இறந்தவரோடு சேர்ந்து ஐந்து குடும்பங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வன்மத்தை கீழே கிடப்பவனின் மேல் கல்லைத் தூக்கிப்போடுவதில் தெரிகிறது.
எதேச்சையாக சிக்னலில் இருக்கும் காவல்துறை கேமரா வழியே இந்தக் கொலைக்காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் நேரலையில் தெரியவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்:
பதவி விலகல் அதிர்ச்சியோடு தயாநிதிக்கு மத்திய புலனாய்வுத் துறை விசாரணை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை. எதிர்பாராத விதமாக விமான நிலையத்திலேயே சக்சேனா கைது, அதோடு குவியும் அடுக்கடுக்கான புகார்கள். விசாரணைக்கு கலாநிதி மாறன் அழைப்பு என தின்ற உப்புக்கு கொஞ்சமாய் தண்ணி குடிக்கத் துவங்கியிருக்கிறது சன் நெட்வொர்க் குழுமம்.
இந்நிலையில், வீடியோ ஒளிபரப்புக்குப் பிறகு ஊர் ஊராய் ஓடி ஒளிந்த நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் சன்டிவிக்கு எதிராக புகார் கொடுக்கும் மொக்கைத் தருணமாகவும் மாறியிருக்கிறது. கதவைத்திற காற்றுவரும் என்று சொன்னவனுக்கு ”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது புரியாதா என்ன?
குறுந்தகவலில் வந்தது:
சராசரியாக ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 4 பொய் சொல்கிறோம். வருடத்திற்கு 1460. அதில் அதிகமாகச் சொல்லும் பொய் “I am fine”
-0-