Nov 15, 2017

அவளும் அவளும் அணைத்துக் கொண்டிருக்கிறார்கள்



அவளும் அவளும்
அணைத்துக் கொண்டிருக்கிறார்கள்
பிரிவின் மொழியை
ஒருத்தி தம் மென் கரத்தால்
முதுகில் தட்டுவதும்
மற்றொருத்தி உணர்வதுமாய் இருக்கிறார்கள்

அவர்களும் இவர்களும்
முன்னும் பின்னும்
அவள்களைக் கண்டும் காணாமலும்
இடமும் வலமும் கடக்கிறார்கள்
மொழிந்திடத் தெரியாத பிரிவு
அவர்களின் முதுகிலும் கிடக்கலாம்

அவர்களிருவரும் பரிமாறும் பிரிவு
அவர்களுடையது மட்டுமல்ல
உலகம் யாவிலும்
விமான நிலையங்களில்
துறைமுகங்களில்
தொடர்வண்டி நடை மேடைகளில்
பேருந்துப் படிக்கட்டுகளில்
திருமணங்களில்
கல்விக் கூடங்களில்
மருத்துவமனைகளில்
ஆற்றங்கரைகளில்
வீட்டுத் திருப்பங்களில்
படிக்கட்டு வளைவுகளில்
உணர்த்தியும் உணர்த்த முடியாமலும் போன
அத்தனை பேரின் பிரிவுகளையும்
அவள்கள் தம் அணைப்பில் மொழிகிறார்கள்

வெட்கச் சிரிப்போடு
அவர்களை நோக்கும் மழலையொன்று
கடைசியாய் கை அசைத்து வந்த
பாட்டியின் பிரிவையும் சேர்த்தே
அவர்கள் மொழிகிறார்கள்

இதுகாறும் சுமந்துவந்த
பிரிவுச் சுமை யாவற்றையும்
அவர்கள் அணைப்பின் கதகதப்பில்

நானும் இறக்கி வைத்து நகர்கிறேன்.

No comments:

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...