தகிக்கும் இளஞ்சிவப்பு

கல் நேர ரயில் பயணத்தில், பிஞ்சுக் குழந்தையொன்று அழுது கொண்டேயிருந்தது. பசி அழுகை முற்றியபடியே இருந்தது. அடங்குவதாகத் தெரியவில்லை.  முன்பதிவு பெட்டியில் பதிவு செய்யாதவர்களும் நின்றபடி கூட்டமாக. குழந்தையை சமாளிக்க முடியாத அம்மா, அணிந்திருந்த சுடிதாரின் மேலாடையை சுருட்ட ஆரம்பித்திருந்தார். குழந்தையின் அழுகை ஓய்ந்தது!

இதை முன்வைத்து ரயில் பெட்டிகளில், குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக முற்றிலும் மூடப்பட்ட ஒரு இருக்கையேனும் அமைப்பது அறிவுசார் சமூகத்தின் கடமையென ஃபேஸ்புக்கில் எழுதினேன். பாலூட்டும் பெண்களுக்கு இப்படியொரு வசதி தேவைதானே? இப்படி நினைப்பதே சமூகப் பொறுப்பாகவும் கருதப்படுகின்றது.

அந்தப் பதிவின் கீழ், பாலூட்டும் அம்மாக்கள் சுடிதார் அணியக்கூடாது, ஜிப் வைத்த ஆடை அணிய வேண்டும், துண்டு, போர்வை வைத்துக்கொள்ள வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்தனர். ஒரு ஆணாக பதிவெழுதிய எனக்கும், ஆண்களாக கருத்துத் தெரிவித்த அவர்களுக்கும் அதுதான் தீர்வெனத் தோன்றியிருக்கலாம். காரணம் பெண்ணாய் யோசித்தல் ஆணுக்கு அத்தனை சாத்தியமா என்ன?

தனி அறை / மறைவான பகுதினு ஒரு குழந்தை சாப்டறத இவ்ளோ சிரமப்படுத்தனுமா எனும் கேள்வியோடு வெளிநாட்டில் வசிக்கும் லாவண்யா வந்தார். அரசு அலுவலக காத்திருப்பு அறையில் நூற்றுக்கணக்கானோர் மத்தியில் தம் மகளுக்கு பாலூட்டிக்கொண்டே அந்தக் கேள்வியை எழுதுகிறேனெனக் குறிப்பிட்டிருந்தார். அந்த குழந்தை சாப்டறதஎனும் இரண்டு சொற்கள் மனதில் ஓங்கி அறைந்தாற்போல் இருந்தது.

*

மேற்கத்திய நடனக்காரியான மினால், தோழிகள் ஆன்ட்ரியா மற்றும் ஃபலாக் ஆகியோருடன் அடுக்கக வீட்டில் வசிக்கிறாள். தோழிகள் வேலைக்குச் செல்கிறவர்கள். பெற்றோருடன் வசிக்காமல், தோழிகளோடு வசிப்பது மினாலுக்கு சில சுதந்திரங்களைக் கொடுக்கிறது. ஆன்டிரியா மேகாலயா மாநிலத்தைச் சார்ந்தவள். மூவரும் நண்பர்களோடு விருந்துக்குப் போகிறார்கள். விருந்தில் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்த முயன்றவனை மினால் பாட்டிலால் தாக்கிவிடுகிறாள். அடிபட்டவன் அரசியல் பலமுள்ளவன். மிரட்டுகிறார்கள். புகார் கொடுக்கிறாள். பாலியல் ரீதியாக ஆதாயம் தேட, மிரட்ட, அவனைத் தாக்கியதாக கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறாள்.

அவள்களின் அன்றாடங்கள் விசாரனைகளில் வெகுவாய்த் திரிக்கப்பட்டு முறுக்கிப் பிழியப்படுகின்றன. யாரிடமும் அவர்களின் மாநிலம் குறித்துப் பேசப்படாதபோது ஆன்ட்ரியாவின் மாநிலம் குறித்து மட்டும் கேட்கப்படுகிறது. வீதிகளில் எந்தப் பெண் அவமதிக்கப்படுவதைவிடவும் வடகிழக்குப் பெண்ணாகிய தாங்கள் கூடுதலாய் அவமதிக்கப்பட்டிருக்கிறோம் எனும் ஆன்ட்ரியாவின் ஒற்றை வசனமே கூடப் போதும் பொது மனநிலையைக் கூறு போட.

தனி வீடு எடுத்து தங்கியிருப்போர், வடகிழக்கு மாநிலத்துப் பெண், விவாகரத்துப் பெற்றவருக்கு காதலியாக இருப்பவள் என்பதையெல்லாம் வைத்து பெண்ணை எடை போட்டுவிடுவது சமூகத்திற்கு மிக எளிதானது. வீட்டிற்கு தாமதமாகத் திரும்புதல், வீட்டுக்கு நண்பர்கள் வந்து செல்வது, விருந்திற்குச் செல்வது, நடனமாடுவது, மது அருந்துவது, ஆண்களிடம் சிரித்துப் பேசுவது, தொட்டுப் பேசுவது போதும்தானே ஒரு பெண் இப்படிப்பட்டவள்தான் என சமூகம் முடிவெடுக்க.

இப்படிப்பட்டவள் என்பதன் அர்த்தங்களில், தம் உடலை பகிரத் தயாராய் இருப்பவள் என்பதும் அடங்கும். ஒரு ஆணின் வழியே, இந்த சமூகத்தின் பொதுப் பார்வையாய், பைத்தியகாரன்கூட அப்படியான பெண்களோடு இருக்கும்போது பலவந்தப்படுத்த நினைப்பான் எனும் வசனத்தில் உணர்த்தப்படுகிறது.மினாலுக்காக வாதாடும் தீபக்சேகல் ஒரு பெண் தனியாகத் தங்கியிருந்தால்! அவள் வீட்டுக்கு நட்புகள் வந்து போனால்! அவள் தாமதமாக வீடு திரும்பினால்! அவள் மது அருந்தினால்! அவள் நடனமாடினால்! அவள் ஆண்களிடம் சிரித்துப் பேசினால்! அவள் நண்பர்களைத் தொட்டுப் பேசினால்! அவள் ஒரு ஆணோடு தனித்து இருக்க நேரிட்டால்! அவள் தம் உடலைப் பகிரத் தயாராக இருப்பதாய் அர்த்தமா!?” எனக் கேட்கும் நேரிடைக் கேள்விக்கு, ”இல்லைஎன்று சொல்லும்போதே, “ஆனால்என்று இழுத்துத் தொடரவே விரும்புகிறார்கள். இந்த இல்லைஎனும் பதிலுக்குள் ஆனால்எனும் வார்த்தையைப் போட இடம் கிடையாது என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

பெண் காசுக்காக தம் உடலைப் பகிர வந்திருந்தாலும், காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், அவளுக்கு விருப்பம் இல்லாதபோது இல்லைஎன்று சொன்னால் அதன் அர்த்தம் இல்லைதான். ”இல்லைஎன்கிற மறுப்புக்கு ஏன் என்பதுள்ளிட்ட எந்தக் கேள்வியையும் கேட்க முடியாது. காரணம்இல்லைஎன்பது ஒற்றைச் சொல்லல்ல. அதுவொரு வாக்கியம், ‘ஏன்?’ என எவரும் கேட்கும் கேள்விகளுக்கான பதிலைஉள்ளடக்கிய ஒரு வாக்கியம் அது.

பொழுதுபோக்கிற்காக, பொருளீட்டுவதற்காக, அதிலிருக்கும் கதாநாயகத் தன்மைக்காக என திரைப்படங்களை நினைப்பதையும், உருவாக்குவதையும் இங்கே யாருக்கும் தடுக்க உரிமையில்லை. ஆனால் பாடங்களாக விளங்கும் சில படங்கள் சவுக்கால் அடித்து உணர்த்தும் தன்மை வாய்ந்தவை. அப்படியானதொரு பாடம்தான் இந்தியில் 2016ல் தாப்சி, அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி, பல ஆனால்களை முனை முறித்துப் போட்ட பிங் (Pink) திரைப்படம்.


*

அந்த குழந்தை சாப்டறதஎனும் இரண்டு சொற்கள் செவிட்டில் அறைந்த கணத்தில் ஒருவர் இன்றைய அன்னையர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதே பெரிய ஆச்சரியம்தான். பெண்களே நாகரீக உடையால் எத்தனை சிரமங்கள்? நம் தமிழ் பாரம்பரிய உடை அணிவது அவமானம் அல்ல அது பல நேரங்களில் அவசியமானது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றனஎன்றவரின் அறிவுரை லாவண்யாவை சீண்டியதில் பெரும் நியாயமுண்டு.

ஒரு குழந்தை பால் குடிக்கும்போது மறைவாய்ப் போகவேண்டுமெனச் சொல்வோரே, நீங்க பிரியாணியோ பழைய சோறோ சாப்பிடும்போது பெட்சீட் போட்டு மூடிட்டு சாப்டுவீங்களா? இல்ல பசு மாடு பால் கறக்கும்போது உங்களுக்கு மோகம் வருமா?”

குழந்தைக்கு பாலூட்டுதல் என்பது பசி தொடர்பானது மட்டுமல்ல, நம்பிக்கையை, உறவைக் கட்டமைக்கும் செயல். பிறந்த குழந்தையின் கண் பார்வை மார்பிலிருந்து அம்மா முகம் வரை தான் பாக்க முடியும். அம்மாவுடன் மட்டுமே பார்வையால் உறவு வைத்துக் கொள்ள முடியும். அந்த நிலை, வாய்ப்பு, தாய் சேய் இருவருக்குமே முக்கியமானது. குழந்தை தூங்கிவிட்டதா, வேர்க்குமா என்பதெல்லாம் பார்க்க வேண்டும். சற்று பெரிதான குழந்தை பால் குடிக்கும் போது சுற்றிலும் இருப்பதை வேடிக்கை பார்க்கும். உண்டது பிடித்திருந்தால் அம்மாவிடம் சொல்வது போல் சிரிக்கும். இவை யாவும் இயற்கையாக நடக்கின்ற, நடக்கவேண்டிய காரியங்கள். துணி போர்த்தினால் அது இயலாது. மற்றவர்களின் பார்வைக்காக இதைத் துறக்க முடியாது.

நம்மூரில் குழந்தைப் பிறப்பென்பது நியாயமில்லா, சமனில்லாத ஒரு பொறுப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஓடியாடிக் கொண்டிருந்தவள் அம்மாவானதும், குழந்தையோடு அறைக்குள் அல்லது வீட்டிற்குள் முடக்கி அடிக்கடி பாலூட்டு எனச் சொல்கிறோம். பாலூட்டுபவளின் அருகில் அமர்ந்து பேச மனமிருப்பதில்லை. அவளுக்கு தாகம் எடுக்கும். பழச்சாறு கொடுக்க வேண்டும். குடும்பத்தில் உறவுகளோடு அமர்த்தி பாலூட்டச் செய்ய வைத்து, அதை இலகுவாக்க வேண்டும்.

தந்தைகளின் கடமை சம்பாதிப்பது, குழந்தைகளை கொஞ்வதோடு நிறைந்து விடுமா? எத்தனை பேர் தம் பிள்ளை பாலருந்துவதை பார்த்திருக்கப் போகிறார்கள், அதை சங்கடமாக நினைக்க என்ன இருக்கு? எந்நேரமும் பிஞ்சுக் குழந்தையோடு, ஒரு அறைக்குள் முடங்கி, சமூக உறவாடல் இல்லாமல் இருப்பது எளிதானதா? இது குறித்து எந்த பிரஞ்னையும் இன்றி மறைப்பு, புடவை, போர்வை என எத்தனை காலம் சொல்லப் போகிறீர்கள். பாலியல் பண்டமாக பெண்களின் மார்புகளைப் பார்ப்பதைக் கடந்து, எப்போது அது குழந்தையின் உணவின் பாத்திரமாக, குழந்தைக்கும் அம்மாவிற்குமான உறவின் மொழியென உணரப்போகிறீர்கள்?

நான் வசிக்கும் ஐரோப்பாவில் பேருந்து, ரயில், அங்காடிகள், வங்கி என எங்கும் பாலூட்டலாம். ஆனால் இந்திய நண்பர்களைச் சந்திக்கும்போது என்னவோ ஒரு மனத்தடை வருது. நான் அறைக்குள் செல்ல வேண்டும் அல்லது அவர்கள் வெளியில் செல்ல வேண்டும். அதனாலேயே சில நேரங்களில் பாலூட்டுவதைத் தவிர்க்கிறேன்.  தண்ணீர் அல்லது நொறுக்குத் தீனி கொடுக்கிறேன். பிரச்சனை எங்கேயிருக்குனு தெரியுதா!?

இவை லாவண்யாவின் கருத்து மற்றும் என்னோடு நிகழ்த்திய உரையாடல். இவற்றை வாசித்தபோதும், பிங் படத்தின் வழியே பாடம் படித்தபோதும் ஒரு ஆணாக இதுவரையிலுமான என்  முன்முடிவுகளுக்கும், அறியாமைகளுக்கும், தவறுகளுக்கும் வெகுவாய் வெட்கப்பட்டேன்.


இனி நம் எந்தச்செயலும் இம்மாதியாரியான வெட்கத்தைச் சுமப்பதாய் இருக்க வேண்டுமா என்பதைச் சிந்திப்பதே அறிவார்ந்ததாய்க் கருதும் இந்தச்சமூகத்தின் அவசியத் தேவை!

-

”அயல் சினிமா” செப்டம்பர் இதழில் வெளியான கட்டுரை

1 comment: